ஆசிரியர்கள்
வாசிப்பு – 007
(நல்ல
நூல்களைத் தேடி…)
மு.சிவகுருநாதன்
பொருளாதாரம் சார்ந்த நூல்கள்
31. நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன்
முரண்பாடுகளும்
ஜீன்
டிரீஸ், அமர்தியா சென்
(தமிழில்)
பேரா.பொன்னுராஜ்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 432, விலை: ரூ. 350
முதல் பதிப்பு: டிச.
2016
“An
Uncertain Glory: India and its contradictions” என்னும் நூல் நமது நாட்டின்
பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர்
ஜீன் டிரீஸ் - ம் இணைந்து எழுதியது. இந்நூலின்
இணையாசிரியர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரீஸ் இந்தியாவில் வசிக்கிறார்;
அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியர். இந்நூல் இப்போது பாரதி
புத்தகாலய வெளியீடாக தமிழிலும் கிடைக்கிறது. “நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன்
முரண்பாடுகளும்”, (ஜீன் டிரீஸ், அமர்தியா சென்) என்னும் இந்நூலை பேரா.பொன்னுராஜ்
தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்புப் பொருளியல்
பாடப்பகுதியில் இந்நூலின் கருத்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. நிலைத்த
வளர்ச்சி, இந்தியப் பொருளாதார வீழ்ச்சி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் பிற
மாநிலங்களுடன் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியன பற்றி
இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.
10 அத்தியாயங்களில் இந்தியப் பொருளாதாரச்
சூழல்களை விரிவாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் நிறைய புள்ளிவிவரங்கள்
வழியான இந்த ஒப்பீட்டை நிகழ்த்துகிறது. “இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுப்
பிரச்சினைகளை சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தேவைகளின் பின்புலத்தில்
பார்க்கப்படவேண்டிய”, தேவையை
நூலாசிரியர்கள் முன்னுரையில் எடுத்துச் சொல்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி, மருத்து வசதிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில்
“கற்பி, கலகம் செய், அணி திரட்டு என்கிற அம்பேத்கரின் அறைகூவலுக்கு ஜனநாயகத்தில்
சாத்தியமுண்டு”, என்றும் கல்வி, மருத்து வசதிகளில் சீனாவை முந்த “இன்னும் அதிகமான
ஜனநாயக நடைமுறைகளை பயன்படுத்தவும்”, வலியுறுத்தப்படுகிறது.
“1.
மேம்பாடு, வளர்ச்சி இரண்டையும் ஒரு சேரப் பார்க்கக்கூடிய நிறுவனங்களின் அவசியம்.
2. வளர்ச்சியின் பயன்களை மக்களின் மேம்பாடாகவும் வளமாகவும் மாற்றக்கூடிய நிறுவனத்
தேவை – இந்த இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ளவேன்டும். வேகமான பொருளாதார
வளர்ச்சிக்கான நிறுவனங்களோடு மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்தும் அமைப்புகளும்
இணைந்து செயல்பட வேண்டும்”, என்பது வலியுறுத்தப்படுகிறது. (பக். 46)
வளர்ச்சி என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தெற்காசியாவின் தர
வரிசையில் இந்தியாவின் இடம் மிக மோசம். மிகவும் பின்தங்கிய நாடாகக் கருதப்படும்
பங்களாதேஷின் முன்னேற்றம் இந்தியாவை விஞ்சக்கூடிய வகையில் உள்ளதும் அதில்
பெண்களின் பங்கும் பாலினச் சமத்துக்
குறியீடுகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன.
ஜனநாயக வளர்ச்சியுடன் இணைந்த பொருளியல் வளர்ச்சிப் பாதை கோடிட்டுக்
காட்டப்படுகிறது.
இதைப்போலவே பிற மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீடுகளை ஒப்பீடும்போது
தமிழ்நாட்டின் வளர்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது. ஒப்பீட்டளவிலான இந்தப் பாராட்டை
பெரிய விருதாகக் கருதி இருந்துவிட்டால் இன்னும் பின்னணிக்குச் செல்லும் வாய்ப்பு
இருப்பதையும் உணர வேண்டும்.
BRICS நாடுகளை எடுத்துக்கொண்டாலும் பிரேசிலை விட கீழான நிலையே நமக்கு.
ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, ‘வல்லரசுக் கனவுகளை’ விதைத்து, ராணுவ ஆயுத
வலிமையை மட்டும் பெருக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு
இந்தியப் பொருளாதாரத்தை விட சிறந்த எடுத்துக்காட்டு உலகில் இருக்க முடியாது.
ஒரு
புதிய இந்தியா?, மேம்பாட்டோடு இணைந்த வளர்ச்சி, இந்தியா – ஓர் ஒப்பீட்டுப்
பார்வையில், பொறுப்புணர்வும் ஊழலும், கல்வியின் மையமான பங்கு, நெருக்கடியில்
தவிக்கும் இந்திய சுகாதாரம் மற்றும் உடல்நலப் பராமரிப்பு, ஏழ்மையும் சமூக ஆதரவும்,
அசமத்துவத்தின் பிடியில், ஜனநாயகம் அசமத்துவம் – பொதுவிவாதம், இனி பொறுப்பதில்லை
என 10 அத்தியாங்களையும் வாசித்து முடிக்கையில் பொருளாதாரம் குறித்த புதிய
பார்வைகளும் திறப்புகளும் நமக்குச் சாத்தியப்படலாம்.
ஏனெனில் நமது நாட்டில் பொருளாதார அறிஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
கார்ப்பரேட் சேவகம் செய்யும் பெரும் கூலிப்படையினர் பொருளியல் அறிஞர்கள் என்னும்
போர்வையில் நாள்தோறும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வலம் வருகின்றனர்.
இவர்களது வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதரவு கருத்துத் திணிப்புகளை அன்றாடம்
பார்த்துப் படித்து இந்திய நடுத்தர வர்க்கம் உண்மை என்று நம்பிக் கொண்டுள்ளது.
வழக்கறிஞர் தொழிலில் பிரசித்தி பெற்றவர்கள் நிதியமைச்சர்களாக ஆகும்போது பொருளாதார
வல்லுநர்களாக பரிணாமடைகின்றனர். இவர்களது ஒற்றைப் பார்வையை வேதவாக்காகக் கொண்டு
பலர் பேசிவரும் நிலையில் மாற்றுப் பொருளியல் சிந்தனைகளை வழங்கும் இந்நூலை அனைவரும்
வாசிக்க வேண்டும்.
32. இந்தியாவில் பொருளாதார தேசியத்தின்
தோற்றமும், வளர்ச்சியும்
(இந்திய தேசியத் தலைமையின்
பொருளாதாரக் கொள்கைகள் 1880 – 1905)
பிபன் சந்திரா
(தமிழில்)
ச.சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்.: 671,
விலை: ரூ. 490
முதல் பதிப்பு:
நவ. 2012
பிபன் சந்திரா புதுதில்லி ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்திய வரலாற்றுப்
பேரவை, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். மே 27, 1928 இல்
பிறந்த இவர் ஆகஸ்ட் 30, 2014 இல் காலமானார். Indian National Movement: The Long term
Dynamics, Ideology and Politics in Modern India, Nationalism and Colonialism in
Modern India, In the Name of Democracy: J.P. Movement and the Emergency போன்ற பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். Communalism
in Modern India என்னும் நூல் நவீன இந்தியாவில் வகுப்புவாதம் என்ற பெயரில் என்.சி.பி.எச்.
நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்
தேசியத்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆய்வு செய்யும் இந்நூலில் விளக்கங்கள், குறிப்புகள்,
மேற்கோள்கள், துணை நூற்பட்டியல் என மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
வணிகம், தொழில், நிதித்துறை
ஆகியவற்றில் நடைபெற்ற பொருளாதாரச் சுரண்டல்களைக் கண்டறிந்தது, கச்சாப்பொருள்களை உற்பத்தி
செய்யவும் ஆங்கிலப் பொருளுக்கான சந்தையாக்குவதுமான காலனியப் பொருளாதாரத்தை எதிர்த்தது,
இத்தகைய எதிர்ப்பின் ஊடாக சுதந்திர இந்தியாவின் தேசியப் பொருளாதாரக் கொள்கை வேர்விட
உதவியது என்கிற மூன்று அம்சங்கள் இந்த ஆய்வில் வெளிக்கொண்டு வருவதை முன்னுரையில் பேரா.
க. அ. மணிக்குமார் குறிப்பிடுகிறார். (காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்
– முன்னுரை)
- இந்தியாவில் வறுமை
- தொழில் I
- தொழில் II
- அயல்நாட்டு வர்த்தகம்
- ரயில்வே
- வரிக்கொள்கை
- பணமும், பரிவர்த்தனையும்
- தொழிலாளர்கள்
- விவசாயம் I
- விவசாயம் II
- பொதுநிதி I
- பொதுநிதி II
- செல்வம் வடிந்து செல்லல் (Drain)
- இந்திய அரசியல் பொருளாதாரம்
- பொருளாதாரத் தேசியம்
ஆகிய 15 தலைப்புகளில் இந்த விரிவான ஆய்வு நிகழ்த்தப்படுகிறது.
காலனியப் பொருளாதாரம் குறித்த பார்வைகளையும் அன்றைய
நிலையில் பெற்றிருந்த வளர்ச்சி, மாற்றுச் சிந்தனைகள் ஆகியவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன.
“இந்தியாவில் வறுமை” (1876) என்னும் நூல் மூலம்
தொடர்ந்து இந்தியாவின் வறுமை பற்றிப் பேசி
வந்தவர் தேசியத் தலைவர் தாதாபாய் நௌரோஜி. மேலும் முதன்முதலில் சராசரி தனிநபர் வருமானத்தைக்
கணக்கிட்ட பெருமையும் இவரைச் சாரும். இந்த முடிவுகள் தோரயமானவை என்ற போதிலும் 1867-68
இல் இந்தியாவின் மொத்த வருமானம் 3.4 பில்லியன் ரூபாய், மக்கள் தொகை 170 மில்லியன் என்ற
அடிப்படையில் சராசரி தனிநபர் வருவாய் ரூ. 20 எனக் கணக்கிட்டார். (பக். 34)
1875 இல் பம்பாய்த் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின்
நிலையை ஆராய்ந்து, அதை முன்னேற்ற, குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவின் 7 உறுப்பினர்களில்
6 பேர் பஞ்சாலைகளில் முதலீடு செய்தவர்கள். பெரியவர்களுக்கு 1 மணி நேர ஓய்வை உள்ளடக்கிய
12 மணி நேர வேலை, வார விடுமுறை, 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பணியமர்த்தத் தடை, 8 முதல்
14 வயதுள்ள குழந்தைகளின் வேலை நேரத்தை 8 மணியாகக் குறைத்தல் ஆகிய பரிந்துரைகள் ஒருவரைத்
தவிர பிறரால் ஏற்கப்படவில்லை. (பக். 299)
பம்பாய் தொழிற்சாலைகள் கமிஷன் 1885, தொழிற்சாலைகள்
கமிஷன் 1890 –ன் பரிந்துரைகள், தொழிற்சாலைகள் 1891 ஆகியவற்றிற்கு முதலாளிகள் பெரும்
ஆதரவு தந்த நிலையில், அவற்றைத் தேசியவாதிகள் எதிர்த்தது, ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசமாக’ப்
பதிவு செய்யப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ‘ஹிந்து’வின் ஆசிரியராக இருந்த
ஜி.சுப்ரமணிய அய்யர் தொழிலாளர் நலனைக் கண்டு கொள்ளவில்லை. (பக். 317)
நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்காரர்கள்
என மூன்று பேரிடர்கள் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அதனால், இருக்கக் கூடிய
நில உறவுகளுக்கு மாற்றாக, தனியான, சுதந்திரமான சொத்தின் அடிப்படையிலான நில உறவுகள்
ஏற்படுத்தப்படவேண்டும் என்று ரானடே கூறினார். (பக். 421)
ஆங்கிலேயர்கள், இந்திய தேசியவாதிகளிடையே வரிச்சுமை
பற்றிய விவாதம் எழுந்தது. வரிச்சுமை என்று தேசியவாதிகள் குரலெழுப்ப அதை கர்சன் போன்றோர்
தீவிரமாக மறுத்தனர். “இந்தியாவில் வரியிலிருந்து எதுவும் தப்பவில்லை. மரத்திலிருந்து
அதிரும் சருகுகளுக்குக் கூட வரி விதிக்கப்படுகிறது”, என்று திலகரின் கேசரி சொன்னது.
(பக். 447)
அன்றைய நாளில் நிலவரி, உப்பு வரி, அபின் வரி, கலால்
வரி, சுங்க வரி, வருமான வரி போன்றவை அரசின் பெரும் வருவாய் இனங்களாக இருந்தன. உப்பு,
அபின், வருமானம் ஆகியவற்றின் மீதான வரி கடுமையாக எதிர்க்கப்பட்டது. 1880 – 1905 காலகட்டத்தில்
இந்திய அரசின் வருவாய் ஆதாரங்களில் நிலவரிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உப்புவரி இருந்தது.
செல்வம் வடிந்து செல்லல் (Drain) கொள்கையை உருவாக்கியவர்
தாதாபாய் நௌரோஜி ஆவார். இந்தக் கொள்கையை ரானடே, ஜோஷி, கோகலே போன்ற பிற தேசியவாதிகள்
ஏற்கவில்லை. இந்திய தேசியவாதிகளிடையே மாறுபட்ட பொருளியல் சிந்தனைகள் இருந்தன. தாதாபாய்
நௌரோஜி, ரானடே ஆகிய இரு தேசியத் தலைவர்களை
மாறுபட்ட கொள்கை வடிவங்களின் பிரதிநிதியாகக் கருதலாம். இவற்றை மையமாக கொண்டே பிற்காலத்திய
இந்திய பொருளியல் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (1880-1905) காலனித்துவ
இந்தியாவின் பொருளாதாரத் தேசியத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் முரண்பாடுகளை
இந்நூல் மிக விரிவாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது சிறப்பான ஒன்று.
33. காலனியம்
பிபின் சந்திரா
(தமிழில்) அசோகன் முத்துசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்.: 464,
விலை: ரூ. 290
முதல் பதிப்பு:
டிச. 2012
நமது பாடநூல்களில் இம்மாதிரியான சொற்பயன்பாட்டிற்கு
கிட்டத்தட்ட தடைவிதிக்காத குறைதான்! 10 ஆம் வகுப்பு பாடநூல் காலனி ஆதிக்கம் என்றே சொல்லும்.
மார்க்சியம் என்று எளிமையாகச் சொல்வதைவிட்டு ‘மார்க்ஸிஸம்’ (பழைய 9 –ம் வகுப்பு) சொல்லிக்கொடுப்பதே நமது பாடநூல்களின் சிறப்பு!
-ism என்னும் பின்னொட்டு தமிழுக்கேற்றவாறு இயம் என்று மாறி காலனியம், காந்தியம், பெரியாரியம்,
அம்பேத்கரியம், மார்க்சியம் என்று வழங்குவது நெடுநாளைய வழக்கம். அவைதீகம், ஆசிவகம்
என்னும் சொற்களை இப்போதுதான் பாடநூல்கள் கண்டிருக்கின்றன. இனிமேலாவது நல்ல மாற்றங்கள்
வரட்டும்.
காலனியம் (Colonialism)
என்னும் பிபன் சந்திராவின் இந்த ஆய்வு நூல் அசோகன் முத்துசாமியில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பிபன் சந்திராவின் 8 ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.
காலப்போக்கில் மாறுதலுக்கு
உண்டாகும் சில கருத்துகள் குறித்து “காலனியம் என்பது தனித்துவமாக சமூக அமைப்பு என்றோ
அல்லது தனித்துவமான உற்பத்தி முறை என்றோ நான் இனியும் கருதுவதில்லை”, ஆசிரியர் முன்னுரையில்
விளக்கமளிக்கிறார்.
காலனியத்தை விளங்கிக்
கொள்ளவும் இந்தியாவிற்குரிய பிரத்யேக பண்புகளடிப்படையில் காலனியத்தின் செயல்பாடுகளை
அறியவும் காலனிய இந்தியாவின் பொருளியல் சூழலை உணரவும் இந்த விரிவான ஆய்வு நூல் பயன்படும்.
இந்திய அரசியல் பொருளாதாரம்
முதலாளித்துவத் தன்மையிலேயே இருப்பதையும் சோசலிச சக்திகள் வளரவில்லை என்பதும் முதலாளித்துவ
வளர்ச்சிக்குப் பணியாற்றுபவர்களிடமே அரசியல்
முன்முயற்சி இருப்பதையும் நிறைவாகச் சுட்டிக்காட்டுகிறது.
34.
பொருளாதாரம் குறித்த சிறு அறிமுக
நூல்கள்
(அ) பொருளாதாரம் – ஒரு கையேடு
இ.எம்.ஜோசப்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்.: 191,
விலை: ரூ. 150
முதல் பதிப்பு:
டிச. 2015
பொருளாதாரம் பற்றிய
பல்வேறு செய்திகளை இந்நூல் நமக்கு எளிமையாக விளக்குகிறது. இந்நூலில் 32 சிறிய கட்டுரைகள்
உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, உற்பத்தி, வளர்ச்சி, சந்தை, சுதந்திரச் சந்தை,
நிதி மூலதனம், அரசு தலையீடு, நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பட்ஜெட்,
ஏற்றுமதி இறக்குமதி, அந்நியச் செலாவணி, ரூபாய் மதிப்பு, பனவீக்கன், பணவாட்டம், டாலர்,
நவீன தாராளவாதம். இந்தியப் பொருளாதாரம், ஏகாதிபத்திய உலகமயம் என்ற பல தலைப்புகளில்
பொருளியல்ச் செய்திகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
சந்தையை மட்டும் அளவுகோலாகக்
கொள்ளப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மாறுபடுவதும், இந்தியச் சந்தையில்
சுமார் 80 கோடி பேர் வாங்கி சக்தியின்றி விலக்கிவைக்கப்பட்டுள்ள் நிலையும் எடுத்துக்காட்டப்படுகிறது.
விலை தெரிந்து வாங்குவதுதானே
வர்த்தகம். அதில் தரகர்கள், பேரங்கள் வழியாக நடைபெறுவதால் பங்குச்சந்தையை ஊக வர்த்தகம்
என்று சொல்லலாம். சுதந்திரச் சந்தையில் பணமும் பண்டமாயிற்று.
1939 – 1945 களில்
நடைபெற்ற இரண்டாம் உலகப்போர் மனித குலத்திற்கு விளைவித்த நாசங்கள் மிக அதிகம். இதுவும்
சிலருக்கு பயனுள்ளதாக இருந்தது. பெருமந்தத்திலிருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க
இந்தப்போர் உதவியது. எனினும் போர்ப் பொருளாதாரம் (War Economy) நிரந்தரமல்லவே!
இந்தியப் பொருளாதாரம்
பற்றிய ஐந்து கட்டுரைகளும் ஏகாதிபத்திய உலகமயம்
குறித்த இரண்டு கட்டுரையும் இறுதியாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அறிய விரும்புவோருக்கு
இது சிறந்த கையேடாக மையும்.
(ஆ) பணவீக்கம் என்றால் என்ன?
இ.எம்.ஜோசப்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்.: 64, விலை:
ரூ. 35
இரண்டாம்
பதிப்பு: 2012
‘பணவீக்கம்’
(Inflation) என்னும் சொல் அன்றாடப் புழக்கத்திலுள்ள
ஒரு சொல்லாக மாறிவிட்ட நிலையில் அவற்றின் பொருள், தாக்கம், விளைவுகள், தீர்வுகள் போன்றவற்றை
சிறு வினாக்கள் மற்றும் தலைப்புகள் மூலம் இக்குறுநூல் விளக்க முற்படுகிறது. இது மட்டுமின்றி
பொருளாதாரத்தின் மற்றொரு நோயான பணவாட்டம் (Deflation) குறித்தும் பேசுகிறது.
விலை உயர்வு, இந்திய ரூபாய்
மதிப்பு உயர்வு மற்றும் வீழ்ச்சி, அதன் விளைவுகள், ரிசர்வ் வங்கியின் தலையீடு, முன்பேர
வர்த்தகம், இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சில்லறை வர்த்தகத்தில் நேரடி
அந்நிய முதலீடு, விலைவாசி, உரிமை ஆகியன பற்றியும் இக்குறுநூல் விவரிப்பது சிறப்பு.
(இ) பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?
இ.எம்.ஜோசப்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்.: 160,
விலை: ரூ. 160
முதல் பதிப்பு: ஜன.
2017
மோடி அரசு எடுத்த பணமதிப்பு நீக்க
(Demonetization) நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து
நாடு இன்னும் மீளவில்லை. கருப்பு பணம், கள்ளப்பணம், பணமற்ற பரிவர்த்தனை என்று மாறிமாறி
இலக்கில்லாத பயணமாக இந்த நடவடிக்கை அமைந்துவிட்டது. பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கும்
நெருக்கடிக்கும் காரணமாக அமைந்த இந்தப் பணமதிப்பு நீக்கம் குறித்து பொருளியல் அறிஞர்கள்
எழுதிய 21 கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பேரா. நா.மணி, பேரா. சௌ.புஷ்பராஜ்
ஆகியோர் இக்கட்டுரைகளைத் தொகுத்துள்ளனர்.
கருப்புப் பண மற்றும்
கள்ளப் பண ஒழிப்பு, பணமில்லாத பரிவர்த்தனை ஆகியன இந்தியாவில் எந்த அளவிற்கு சாத்தியம்
என்பதை விவாதிப்பதோடு மக்கள், வேளாண் மற்றும் தொழில்துறைகள் பணமதிப்பிழப்பால் சந்தித்த
நெருக்கடிகள் பல கட்டுரைகளில் விளக்கப்படுகின்றன. இதனால் வங்கித்துறையும் சீரழிக்கப்பட்டது.
அமைப்பு சாரா பொருளாதாரம் அடியோடு ஒழிக்கப்பட்டது. கார்ப்பரேட்டுகளுக்கு நன்மை செய்யவும்
நடுத்தர மக்களை மயக்கவும் அடித்தட்டு மக்களைப் பலியிட்டத் திட்டமது. இதைக் கொண்டாடிய
நடுத்தர வர்க்கமும் ஒருசில இளைஞர்களும் சில வாரங்களிலேயே உண்மையை உணர்ந்து தமதி நிலைப்பட்டை
மாற்றிக்கொண்டதும் நடந்தது.
பொருளாதாரக் கொள்கைகளில்
காங்கிரசை காப்பியடிக்கும் பா.ஜ.க. தங்களை வித்தியாசமானவர்களாகக் காட்டிக்கொள்ள இத்தகைய நடவடிக்கைகளை
எடுத்து மக்களை மயக்குவது ஒருபுறமும் அதன் மூலம் கார்ப்பரேட் ஆதரவை மேலும் அதிகப்படுத்திய
இத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் இக்க்கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. பலரது கட்டுரைத்
தொகுப்பாக இருப்பதால் பலகுரல்கள் ஒலிப்பதை
இங்கு உணரலாம்.
மேலே கண்ட ஆறு
நூல்களையும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
இணையம்:
www.thamizhbooks.com
35. நிலைத்த பொருளாதாரம்
ஜே.சி. குமரப்பா
(தமிழில்) அ.கி. வேங்கடசுப்ரமணியன்
வெளியீடு: இயல்வாகை, பனை
பக். 160, விலை:
ரூ. 200
முதல் பதிப்பு: 2016
காந்தியப் பொருளியல்
அறிஞர், காந்தியின் சீடர் ஜே.சி.
குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ என்னும் இந்நூலை அ.கி,வேங்கடசுப்ரமணியன் தமிழில்
மொழிபெயர்த்துள்ளார். பல்லாண்டாக மறுபதிப்பு செய்யப்படாமலிருந்த இந்நூலை இயல்வாகை,
பனை இணைந்து வெளியிட்டுள்ளது. புதிய +1 பொருளியல் பாடநூலில் இவரது பொருளியல்
சிந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. “நிழலின் அருமை வெயிலில் தெரியும்”, என்பதற்கேற்ப
புதிய பொருளாதாரக் கொள்கைகள், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியவற்றின்
பின்புலத்தில் காந்தியப் பொருளாதாரம் குறித்த சிந்தனை இப்போது முன்வைக்கப்படுவது
வரவேற்கத்தக்க, தேவையான மாற்றமாகும்.
இந்நூலுக்கு மகாத்மா காந்தி சிறிய முன்னுரை
எழுதிருக்கிறார். “நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது
எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை
கவனமாகப் படிக்கவேண்டும்”, என அவர் வலியுறுத்துகிறார்.
‘பசுமைப் பொருளியல் அறிஞர்’ என்னும்
தலைப்பில் நீண்ட முன்னுரையை பாமயன் எழுதியுள்ளார். ஜே.சி. குமரப்பாவை புத்திய
(modern) திணைப் பொருளியலின் தந்தை என்று அழைக்கும் இவர், மேலைப் பொருளியல்
அறிஞர்கள் இவரை ‘பொருளியல் மெய்யியலாளர்’ என்று குறிப்பதையும் பதிவு செய்கிறார். 1950
களில் ரஷ்யா, சீனாவிற்கு சென்ற வந்த பிறகு எழுதிய கட்டுரைகளில் அந்நாடுகளில்
எழுந்துவரும் தற்சார்பு உணர்வுகளைப் பெருமையுடன் பதிவு செய்தார். சோவியத்தைத்
தாண்டி ‘உண்மையான பொதுவுடைமை’ வரவேண்டும் என்று எழுதியதையும் குறிப்பிடுகிறார். நூலாசிரியர்
எழுதிய ஜே.சி.குமரப்பா நூற்றாண்டு அஞ்சலிக் கட்டுரை பின்னிணைப்பாக உள்ளது.
புல்லுருவிப் பொருளாதாரம், கொள்ளைப்
பொருளாதாரம், துணிவும் முயற்சியும் கொண்ட பொருளாதாரம், இணைந்து வாழும்
பொருளாதாரம், சேவைப் பொருளாதாரம் ஆகிய இயற்கைப் பொருளாதார வகைப்பாடுகளை
வலியுறுத்தும் இவர் இந்த எளிய வகைகளிலிருந்து சிக்கலானவற்றை உருவாக்க முடியும் என்கிறார்.
புல்லுருவி, குரங்கு, தேனீ, தாய்ப்பறவை – குஞ்சு என இவற்றிற்கு உதாரணங்களையும் எடுத்துக்காட்டுகிறார்.
(பக். 31,32)
“இயற்கையின் எல்லாக் கூறுகளும் ஒரு பொதுக்
குறிக்கோளுக்காக ஒன்றுடன் ஒன்று சங்கிலி போல் தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை
தனக்காகவே இயங்குகிறது. வன்முறை தலைதூக்கி இந்தச் சங்கிலியை துண்டிக்காமல் இந்த
இயக்கம் இசைந்து தொடர்ந்தால் நிலைத்த பொருளாதாரம் உருவாகின்றது”, (பக். 29)
விலங்குகளைப் போன்று மனிதனும் தனது
இயல்பூக்கங்களான பசி, தாகம், முகர்வு உணர்ச்சி, பாலுணர்ச்சி, கற்பனை, படைப்பாற்றல்
ஆகியவற்றுக்கான கட்டற்ற சுதந்திரத்தை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தாதல்
ஏற்படும் சிக்கல்களை சுதந்திரம் என்னும் தலைப்பில் எடுத்துரைக்கிறார். (பக்.
37-43)
‘வாழ்க்கைத் தரங்கள்’ எனும் தலைப்பில் உயர்ந்த
– தாழ்ந்த, மேல் – கீழ் என்கிற தர அளவுகோல்கள் எளிமை மற்றும் சிக்கலான வாழ்வை மிக
விரிவாக ஆய்வு செய்கிறார். பலருக்கு உழைப்பு கட்டாயமானதாகவும் சிலரால் மகிழ்ச்சி
(துய்ப்பு) அபகரிக்கப்படுவதால் வேலையின்
நடைமுறை அடிமை வேலையாகவும் உழைப்பின் பயன் அளவற்ற நுகர்ச்சியாகவும் மாறுகிறது. மனித
குல முன்னேற்றத்திற்கும் நலவாழ்விற்கும் இவை இரண்டும் தீங்கானது என்கிறார்.
“ஒரே வேலையைத் தொடர்ந்து தினமும் எட்டு மணி
நேரம் என்றும் ஆண்டில் 300 நாடகள் செய்தால் அது அவருக்கு எவ்வளவுதான் ஊதியம்
கொடுத்தாலும் நரம்புத் தளர்ச்சி அளிக்கவும் அவரை பைத்தியக்கார விடுதிக்கு
அனுப்பவும் போதுமானது”, (பக். 127) வேலை பற்றிச் சொல்லும்போது விளக்குகிறார்.
இன்றுள்ள உலகமயச் சூழலில் காந்தியப்
பொருளாதாரம் மார்க்சியப் பொருளாதாரக் கொள்கைகளுடன் இணைந்து ஒன்றையொன்று
வலுப்படுத்திக் கொள்வதே உகந்ததாக இருக்க முடியும் என்பதை மட்டும் இங்குச் சொல்லி
வைக்கலாம்.
வெளியீடு: இயல்வாகை
தொடர்பு முகவரி:
இயல்வாகை பதிப்பகம்,
குக்கூ குழந்தைகள் நூலகம்,
கயித்தமலை அடிவாரம்,
தாலிகட்டிபாளையம்,
ஊத்துக்குளி – 638751.
திருப்பூர் – மாவட்டம்.
பனை,
தற்சார்பு வாழ்வியல் உயிர்ச்சூழல் நடுவம்,
6/8, விவேகானந்தர் 5 வது தெரு,
மதிச்சியம்,
மதுரை – 625020.
அலைபேசி: 9942118080,
8056205053
மின்னஞ்சல்: kawthihills@gmail.com
குக்கூ குழந்தைகள் வெளி
மின்னஞ்சல்: cuckoochildren@gmail.com
முகநூல்:
facebook.com/cuckoochildren
(பட்டியல்
நீளும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக