ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

ஆசிரியர்கள் வாசிப்பு – 005

ஆசிரியர்கள் வாசிப்பு – 005

                          (நல்ல நூல்களைத் தேடி…)


                               மு.சிவகுருநாதன்

                     பேரா. . சிவசுப்பிரமணியன் நூல்கள்

     சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர்  பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் . இவர் சுமார் 50 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.  இவற்றுள் குறுநூல்கள், பதிப்பித்த நூல்களும் அடங்கும். அவை எல்லாவற்றையும் இங்கு அறிமுகம் செய்வது சாத்தியமில்லை. ஒரு பத்து நூல்களை (இப்போது ஐந்து, அடுத்து ஐந்து) மட்டும் இங்கு அறிமுகம் செய்கிறேன்அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வாசித்தால் . சிவசுவை தொடர்ந்து வாசிக்க வேண்டிய உந்துதல் மற்றும் தேவையேற்படலாம்.21. உப்பிட்டவரை...

தமிழ்ப் பண்பாட்டில் உப்பு

பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு 

பக்கங்கள்: 157,  விலை: ரூ. 90  

முதல் பதிப்பு: டிச. 2009

    மானுடவியல், நாட்டாரியல் போன்றவற்றில் பொருள்சார் பண்பாடு உட்பிரிவாக உள்ளது. மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள் மீது அவர்களின் உணர்வுகளும் விழுமியங்களும் கலந்துள்ளன. அரசன் முதல் ஆண்டி வரை தவிர்க்க இயலாத புழங்குபொருளாக உப்பு இருக்கிறது. அந்த உப்பு வெறும் உணவுக்கான ஒரு பொருளாக மட்டுமல்லாது பல கூறுகளோடு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் இதில் சமூக ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளும் அடங்கும்.

    உப்பு, பண்டைத் தமிழகத்தில் உப்பு, தமிழர் சமூக வரலாற்றில் உப்பு, இந்திய விடுதலை இயக்கத்தில் உப்பு, தமிழர் பண்பாட்டில் உப்பு, நம் கால உப்புத் தொழில், உப்புத் தொழிலும் தமிழ் நாவலும் என்னும் 7 தலைப்புகளில் உப்பு பண்பாட்டில் பெற்றுள்ள இடம் விளக்கப்படுகிறது. பின்னிணைப்பு ஆவணங்களும் உள்ளன.

    உப்பு உணவிற்குச் சுவையூட்ட, உணவைப் பதப்படுத்த ஆகியவற்றிற்குமான பொருள் மட்டுமல்ல. திருமணச் சடங்கு, புதுமனைப் புகுவிழா, காணிக்கை, நேர்ச்சை, மருந்து எனப் பல நிலைகளில் கலாச்சார கூறாக அமைவதும் விளக்கப்படுகிறது. தன்னை வருத்திக்கொள்ள உப்பில்லாமல் சாப்பிடுவதும் நன்றியறிதலின் வெளிப்பாடாகவும் உப்பு பயன்படுவதும் இங்கு பதிவாகிறது. 

     உப்புத் தொழில் நடைமுறைகள் விரிவாக சொல்லப்படுகிறது. அயோடின் கலந்து உப்பு விற்பனை இன்று ‘கார்ப்பரேட்’களிடம் சென்றுவிட்டது. வேதாரண்யம் உப்பு ஏற்றுமதிக்கு வழிவகுத்த தொடர்வண்டிப் பாதைக்கு மூடுவிழா நடத்தியாகிவிட்டது. விலை மலிவான குஜராத் உப்பு தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது. எனவே பாரம்பரிய உப்புத்தொழில் நசிந்து போனது.

   கரிப்பு மணிகள் (ராஜம் கிருஷ்ணன்), உப்பு வயல் (ஶ்ரீதரகணேசன்), அளம் (சு.தமிழ்ச்செல்வி) ஆகிய நாவல்களில் வரும் உப்பள வாழ்க்கைக் குறிப்பிடப்படுகிறது. பின்னிணைப்பில் வேதாரண்யம் உப்பு அறப்போரில் ராஜாஜியின் குயுக்தி அரசியல் வெளிப்படுகிறது.

22. பனை மரமே! பனை மரமே

பனையும் தமிழ்ச் சமூகமும்

   பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு 

பக்.: 368, விலை: ரூ. 425, 

முதல் பதிப்பு: டிச. 2016 
 
    தமிழகத்தின் அடையாளமான மாநில மரமாக விளங்கும் பனைமரம், தமிழர் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த புழங்குபொருள். உப்பைப் போலவே பனைமரத்திற்கும் தமிழ்ச் சமூகத்தில் தனியிடம் உண்டு. பொருள்களைப் பாவிப்பதில் உள்ள சமூகத்தடைகளையும் ஆசிரியர் முன்னுரையில் குறிப்பது இவரது ஆய்வு முறைமையை வெளிக்காட்டும். 

     நூலெங்கும் படங்களும் இறுதியில் 16 பக்க வண்ணப்படங்களும் நூலுக்கு புது மெருகூட்டுகின்றன;  விளக்கக் கோட்டோவியங்களும் உண்டு.  
  
      “இயற்கையையும் பண்பாட்டையும் இணைப்பவையாகப் புழங்கு பொருட்கள் உள்ளன. மனிதர்களின் அசாதாரணமான கலை நுட்பங்களையும் அறிவையும் புழங்கு பொருள்களில் காணமுடிகிறது”, (பக்.14) என மானுடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி ‘முன்னியம்பலி’ல் குறிப்பிடுகிறார். 


 • தமிழகத்தில் பனை
 • பனைத் தொழில்நுட்பம்
 • பனை மரமே! பனை மரமே!
 • ஓலையும் ஈர்க்கும்
 • ஓலையும் சுவடியும்
 • கள்ளும் பதநீரும்
 • கருப்புக்கட்டியும் கற்கண்டும்
 • மருந்துப் பொருள்
 • பனையும் சைவமும்
 • பனையும் கிறித்தவமும்
 • ஆங்கிலக் காலனியமும் பனையும்
 • பனையின் சிதைவு

     என 12 தலைப்புகள், 7 பின்னிணைப்புகள், வண்ணப்படங்கள் என பனைமரம் பற்றி மட்டுமல்ல தமிழகச் சமூகவியல் ஆவணமாக இந்நூல் விளங்குகிறது. சிவசு தனது முன்னுரையில் பனை பற்றிய வந்துள்ள் நூல்களைப் பட்டியலிட்டுள்ளார். அந்த வகையில் இத்தகைய நூலொன்றை தமிழ்ச் சமூகம் கண்டதில்லை என்பதே உண்மை.

      கள்ளுண்ணுதல் தமிழ்ப்பண்பாடு. தென்னங்கள்ளை விட பனங்கள்ளிற்கு சிறப்புகள் பலவுண்டு. தேன், முருகு, தணியல், தேறல், சாறு, மதுகரம், கவிகை, மேதை, சுவிகை, சொல்விளம்பி, மகரந்தம், நாற்றம், மது, பானம், பிழி, வடி, என்று கள்ளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டதை  திவாகரம், பிங்கலம், சூடாமணி போன்றவை நமக்குக் காட்டுகின்றன.  இன்று கள் இறக்குதல், கள்ளுண்ணுதல் குற்றச்செயலாக  மாற்றப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.  இதன் பின்னணியில் அயல்நாட்டு மதுவகைகளின் வரவு மற்றும் கள்ளுக்குத் தடை போன்றவற்றின் வணிகச்சூழல் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டியன. 

    வரலாறு, நாட்டாரியல், மானுடவியல், கலை, இலக்கியம்  போன்ற பல்வேறு வகையான துறைகளுடன் பனைமரம் தமிழ் மக்கள் திரளுடன் இணைந்த ஒன்றாக விளங்குவதை இந்நூல் மிக விரிவாகவும் அழகுறவும் எடுத்துக்காட்டுவது சிறப்பு. 

     
23. மந்திரமும் சடங்குகளும்

பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு 

பக்.: 191,  விலை: ரூ. 150 

காலச்சுவடு முதல் பதிப்பு: டிச. 2010

   மந்திரங்களையும் சடங்குகளையும் ஒரு பகுத்தறிவாளன் அணுகுவதற்கும் மானுடவியலாளன் அணுகுவதற்கு பாரிய வேறுபாடுண்டு. “இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்ள இயலாத ஆதிமனிதன் இயற்கையைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெற்றுக்கொள்ளவும் உருவாக்கியதே மந்திரமாகும்” என்று மானுடவியல் அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். 

  வேட்டைச் சமூகத்தில் மந்திரம், வேளாண்மைச் சமூகமும் மந்திரமும், பெண்குறி வழிபாடு, பூரண கும்பம் (கருப்பையின் குறியீடு), மானிடப் புணர்ச்சியும் பயிர்ச்செழிப்பும் என்ற பல தலைப்புகளில் மந்திரம் தொடர்பான நம்பிக்கைகள் விரிவாக எடுத்துக்காட்டப் படுகின்றன.

   காளி, மாரி, பத்திரகாளி போன்ற கிராமத் தேவதைகளுக்கு பெண்களால் நடத்தப்படும் முளைப்பாரி என்னும் புராதனச் சடங்கு, ஆடிப்பொம்மை கொளுத்துதல், தச்சுக் கழித்தல், மதுக்கொடை பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உண்டு. 

    நாட்டார் வழக்காறுகளை உன்னதப்படுத்தும் பண்பு நிறைய ஆய்வாளர்களிடம் காணப்படுகிறது. இது நாட்டார் ஆய்வுகளுக்கு உகந்ததல்ல. சிவசு கள ஆய்வுத் தகவல்களை உள்ளது உள்ளபடி இயல்பாக அளிக்கிறார். எவ்வித கருத்து திணிப்புகளும் இல்லை. திறந்த வெளிப் பிள்ளையார் மீது சாணிக்கரைத்து ஊற்றுதல், வற்ற மிளகாய் அரைத்துப் பூசுதல், தண்ணீரில் மூழ்கடித்தல் போன்ற கடவுளைத் தண்டிக்கும் மழைச் சடங்களும் இருக்கின்றன. 

   இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் ஊடாட்டங்கள் மீது எதிர்வினை புரியவும் இன்றைய ஆதிக்கச் சூழலை எதிர்கொள்ளவும் இத்தகைய நூல்கள் எழுதப்படுதலும் வாசிக்கப்படுதலும் அரசியற் செயல்பாடாக  அமையும்.

  
  24. தமிழகத்தில் அடிமை முறை

பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு 

பக்.: 159,  விலை: ரூ. 120 

மூன்றாம் பதிப்பு: டிச. 2010

   “சேரன் செங்குட்டுவன் கனகவிசயர் தலையில் கல்லேற்றியது வரலாற்றுண்மையா அல்லது கவிஞனின் கற்பனையா என்பது நமக்குத் தெரியாது. அதைப்பேசி மகிழும் இந்நேரத்தில் வடமாநிலங்களிலும் கொத்தடிமைகளாக நம் தமிழர்கள் கல்லுடைத்துக் கொண்டிருப்பது என்னவோ அப்பட்டமான உண்மை” (பக்.13) என்று முன்னுரையில் குறிப்பிடும் சிவசு, “அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியாள், பண்ணையாள், குடிப்பறையன், கொத்தடிமை எனப் பல பெயர்களில் அடிமைகளாய் அல்லலுற்று வாழ்ந்த மடிந்த வரலாற்றுண்மையை மறைத்து தமிழர்களிடம் அடிமை முறை இல்லை என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்”, என்றும் குறிப்பிடுகிறார். 

    சங்ககாலம் தொட்டே போரில் வென்ற அரசன் தோற்ற அரசனின் மனைவியர் மற்றும் பிற பெண்களை சிறைப்பிடித்து வந்து  அடிமைகளாக்கியதற்கு இலக்கியச் சான்றுகள் சுட்டப்படுகின்றன. பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், விஜய நகர அரசுகள், தஞ்சை மராத்தியர்கள், நாஞ்சில் நாடு மற்றும் ஆங்கில ஆட்சியில் அடிமைமுறை குறித்த தரவுகள் விரிவாக விளக்கப்படுகின்றன.

   கோயில் வழிபாடு, திருவிழா போன்ற நிகழ்வுகளில் நடமாடுதல், கோலமிடுதல், பூக்கட்டுதல் ஆகியன் தேவரடியார்களின் அவல வாழ்வை மறைக்கும் புனிதத் திரைகள் என்றும் உடம்பில் சூலச்சின்னம் பொறிக்கப்படுதல், இவர்களது பரம்பரையினரும் தேவதாசிகளாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டமை ஆகியவற்றால்  இம்முறையும் ஒரு அடிமை முறையே என்று நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். 

    தஞ்சை மாவட்டங்களில் அடித்தட்டு மக்கள் பண்ணையடிமைகளாக சாணிப்பால், சாட்டையடி, கிட்டி போடுதல், கொக்கு பிடித்தல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்பட்ட நிலைமையும் விளக்கப்படுகிறது. தீண்டாமை என்பது அடிமைமுறையின் இந்திய வடிவம் என்ற அம்பேத்கர் கருத்துடன் ஆசிரியர் ஒத்திசைகிறார். அடிமை முறை குறித்த ஆவணங்கள் சில பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளன. 

   “தீண்டாமையும் கொத்தடிமை முறையும் இன்றும் தமிழகத்தில் தொடர்வதால் இது கடந்த கால வரலாற்று செய்தியல்ல; நிகழ்கால நடப்பியல் உண்மை”, (பக். 99) என்று நூலை நிறைவு செய்கிறார் சிவசு. 


25. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு 

பக். 183, விலை: ரூ. 140 

காலச்சுவடு முதல் பதிப்பு: டிச. 2009

      ஆஷ் கொலை மற்றும் வாஞ்சிநாதன் பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து உலா வரும் நிலையில் இந்தியப் புரட்சி இயக்கம் பற்றியும் ஆஷ் கொலை வழக்கு ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 15 பின்னிணைப்பு ஆதாரக் குறிப்புகள் பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆ.இரா.வேங்கடாசலபதியின் காலச்சுவடு கட்டுரை பின்னுரையாக உள்ளது. 

    ஆய்வின் முடிவாக கீழ்க்கண்ட கருத்துகளை ஆ.சிவசு முன்வைக்கிறார். “ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்றும் சனாதனப் பிடிப்புகளிலிருந்து விடுபட்ட புரட்சியாளர்கள் இல்லை. இவர்கள் அனைவரும் அன்றைய தமிழ்நாட்டில் மேலாதிக்கம் செலுத்திவந்த பிராமணர், வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ‘ஜார்ஜ் பஞ்சமன்’ என்று வாஞ்சியின் கடிதம் ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடுகிறது. பஞ்சமர் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடும் இழிவான சொல். ஜார்ஜ் மன்னன் இழிவானவன் என்று குறிக்க அவனைப் பஞ்சமன் என்றே வாஞ்சி அழைத்துள்ளான். இத்தகைய கருத்தோட்டம் உடையவர்கள் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவது கடினம்.

      இத்தகைய குறைபாடுகள் இருப்பினும் வாஞ்சிநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் விடுதலை ஆர்வத்தினால் உந்தப்பட்டே ஆஷ் கொலையைச் செய்தனர். அவர்கள் மேற்கொண்ட தனிநபர் பலாத்காரம் தவறானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அச்செயல்கள் எந்தவிதக் குறுகியச் சாதிய உணர்வுடனும் சுயநல நோக்குடன் செயல்படுத்தப்படவில்லை; மாறாக அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்பதனை மறுக்க முடியாது”, (பக். 76, 77 - ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்)

    மேலே கண்ட ஐந்து நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வெளியீடு: 

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
பேச: 04652 – 278525.

மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
இணையதளம்: www.kalachuvadu.com

சென்னை முகவரி:

காலச்சுவடு,
257, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 600005,
தொலைபேசி: 044 28441672.


(பட்டியல் நீளும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக