வியாழன், ஆகஸ்ட் 16, 2018

ஆசிரியர்கள் வாசிப்பு – 006

ஆசிரியர்கள் வாசிப்பு – 006

(நல்ல நூல்களைத் தேடி…)

மு.சிவகுருநாதன்

பேரா. . சிவசுப்பிரமணியன் நூல்கள் - II



     26. அடித்தள மக்கள் வரலாறு

         பேரா. . சிவசுப்பிரமணியன்

 
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 319,  விலை: ரூ. 150
முதல் பதிப்பு: 2002
பாவையின் முதல் பதிப்பு: டிச. 2011
வெளியீடு:


பாவை பப்ளிகேஷன்ஸ்
142,  ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை
சென்னை 600014.
பேச: 044-28482441, 28482973
மின்னஞ்சல்:     pavai123@yahoo.com


     Subaltern studies  என்பது வரலாற்றெழுதியலில் புதிய துறை; புதிய அணுகுமுறை. அடித்தள மக்கள் வரலாறு, விளிம்பு நிலை மக்கள் வரலாறு என்று பலவாறு அழைக்கப்படும் மாற்று வரலாற்றுத் துறை இதுவாகும். ரண்ஜித் குகா மற்றும் அவரது குழுவினர் அடித்தள மக்கள் ஆய்விற்கு வழிசெய்தனர். 1990 களில் ‘நிறப்பிரிகை’ மாற்று வரலாறு குறித்த விவாதங்களை முன்னெடுத்தது. அவை தொடர்பான கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டது. அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோர் தொகுத்த ‘விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்’ விளிம்பு நிலை ஆய்வுகள் குறித்த 13 கட்டுரைகள் உள்ளன. (புலம் வெளியீடு, டிச. 2009, விலை: ரூ. 100)

         அடித்தள மக்கள் வரலாற்றைப் பேசும் 13 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. வாய்மொழி வரலாறுகள் உடனடியாகத் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முதல் கட்டுரை வலியுறுத்துகிறது. வாய்மொழி வரலாற்றை அப்படியே ஏற்றுகொள்ள முடியாது. ஏனைய வரலாற்றுத் தரவுகளுடன் ஒப்பிட்டு உண்மையைக் கண்டறியலாம் என்று ஆசிரியர் முன்னுரையில் விளக்கமளிக்கிறார். 

  மறுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைப் போராடிப் பெறுதல், திணிக்கப்பட்ட இழிவான பண்பாட்டு அடையாளங்களைத் துறத்தல், மீட்டுருவாக்கம் செய்தல், மேட்டிமைப் பண்பாட்டைக் கேலிசெய்தல் போன்ற கூறுகளை மையமாகக் கொண்டு பண்பாட்டடையாளப் போராட்டங்கள் அமைவதை இது குறித்த கட்டுரை விளக்குகிறது. பரதவர்களின் மேசை எதிர்ப்புப் போராட்டம், துவிக் குத்தகைப் போராட்டம் குறித்த கட்டுரைகளும் உண்டு.

    தமிழக நூலக ஆணைக்குழு 64 பக்கங்களுக்குக் குறைவான நூல்களை வாங்குவதில்லை. எனவே இந்நூல்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமற் போகிறது. இக்குறு நூல்கள் பற்றியும் மறைந்து வரும் தானியங்கள் குறித்த கட்டுரையும் இருக்கிறது. 

    உடன்கட்டை ஏறுதல் தமிழகத்தில் இல்லை என்று பலர் சொல்லிவரும் நிலையில் சங்க காலத்திலிருந்தே இவ்வழக்கம் இருந்ததை இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளின் வழி ‘எரிமூழ்கு பெண்டிர்’ என்னும் கட்டுரை வெளிப்படுத்துகிறது. 

     செவ்விலக்கியங்களில் பாலியல் வன்முறைகள் குறித்த பதிவுகள் இல்லை. நாட்டார் வழக்காறுகளில் மட்டுமே இப்பதிவுகள் கிடைக்கின்றன. இவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி வரலாற்றுண்மைகளைக் கண்டறிய முடியுமென ஆ.சிவசு தெளிவுபடுத்துகிறார். அடித்தள மக்கள் வரலாற்றைப் பதிவு செய்த, அதன் பக்கம் ஆய்வாளர்களைத் திருப்பியதில் முதன்மைப் பங்காற்றிய நூலாகும் இது. 


27.  தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும்

பேரா. . சிவசுப்பிரமணியன்

 
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக். 166, விலை: ரூ. 135
முதல் பதிப்பு: டிச. 2014

வெளியீடு: 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.
044-26241288, 26258410, 26251968
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.com

       குடி ஊழிய முறைத் தொழில்களில் சலவைத்தொழிலும் ஒன்று. இத்தொழில்கள்  அனைத்தும் சாதி மற்றும் இழிவுப்படுத்தும் காரணிகளைக் கொண்டேயுள்ளன. 

      தமிழ்நாட்டின் அட்டவணைச் சாதிப்பட்டியலில் உள்ள துரும்பர் என்னும் சாதியினர் பற வண்ணார், பற ஏகாலி, புதிர வண்ண்ணார் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவோர் சமூக அடுக்குகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். துரும்பர் குறித்த மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வாக இந்நூல் விளங்குகிறது. 

    நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாக கொலையுண்டோருக்கு கல், சிலை, பீடம் அமைத்து வழிபடும் முறை நாட்டார் பண்பாக உள்ளது. சாதி மீறிய காதல் (சாதி ஆணவக் கொலைகள்) இவ்வாறு கொலைகளில் அன்றும் முடித்து வைக்கப்பட்டன. வண்ணார மாடன், ஈனமுத்து போன்ற      கொலையுண்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் சொல்லப்படுகின்றன. 

    தமிழ்ச் சமூகத்தில் கழுதை, வண்ணான் பாடு ஆகிய விரிவான கட்டுரைகள் பின்னிணைப்பில் உள்ளன. சட்டநாட்தன் குழுவ்விடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள், சட்டநாதன் குழு அறிக்கைப் (1970) புள்ளிவிவரங்கள் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. 

     இவர்களை இன்னும் தமிழக அரசு மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளது. வாக்ரிகளை (நரிக்குறவர்கள்) பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் நடைமுறை இன்னும் பூர்த்தியாகவில்லை. அவர்களும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். வண்ணார்களை அட்டவணைச் சாதிப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. 

     வண்ணார் சாதியின் பல பிரிவுகள் (MBC வ.எண்: 38)  அனைத்தும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருநெல்வேலி செங்கோட்டை வட்டத்தில் மட்டும் இவர்கள் அட்டவணைச் சாதிப்பபட்டியலில் (SC வ.எண்: 71)  இடம் பெறுவர். புதிரை வண்ணார் மட்டுமே  தமிழகம் முழுவதும் அட்டவணைச் சாதிப்பபட்டியலில் (SC வ.எண்: 60)  இடம் பெறுவர். 

  9 கட்டுரைகள், பின்னிணைப்புகள், வண்ணப் படங்கள், துணை நூற்பட்டியல்  என நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

28. வரலாறும் வழக்காறும்

   பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு
பக்.: 120, விலை: ரூ. 90
இரண்டாம் பதிப்பு: ஆக. 2010   


         இங்கு வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறாகச் சுருங்கிப் போய்விட்டது. இதனை விரிவாக்க, மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, திரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நாட்டார் வழக்காறுகள் பயன்படுகின்றன. இவையனைத்தையும் வரலாற்றுண்மைகளாகக் கருதும் போக்கு ஒன்றுள்ளது. 

   அவ்வாறில்லாமல் ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்றிற்கும் வழக்காற்றிற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தவர். அவர் தமது பல்வேறு நூற்களின் மூலம் வரலாற்றையும் வழக்காறையும் பொருத்திப் பார்த்து  ஆய்வு செய்வதன் வாயிலாக வரலாற்றில் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர். 

   “மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” என்று ஆ.சிவசு வெறொரு நூலுக்கான முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அடித்தள மக்கள் வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, டிச. 2011.)

    காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வரலாறும் வழக்காறும்’ என்ற நூலில் இவரது 10 கட்டுரைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் வரலாற்றுப் பாடங்கள் எவ்வாறு உள்ளன என்பதற்கு தனது அனுபவங்கள் வழியாக ஓரு சித்திரம் வரைகிறார். இங்கு வரலாற்று நாவல்கள் என்ற போர்வையில் அரசர்களின் அந்தப்புரங்களை சுற்றிவந்த நிலையை மாதவையா, பிரபஞ்சன் ஆகியோர் மாற்றியமைத்ததைச் சுட்டுகிறார்.

  பள்ளிகளில் பிராமண ஆசிரியர்கள் ‘பிரம்மஹத்தி’ என்ற சொல்லை திட்டுவதற்கு பயன்படுத்தக் கேட்டிருக்கலாம். ‘பிரம்மஹத்தி’ என்ற பார்ப்பனப் பேய் புராணக்கதையைக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களது சமூக மேலாண்மையை (Social Hegemony) நிலைநாட்டுவதை ஓர் கட்டுரை விவரிக்கிறது. மநு தர்மத்தை ஒட்டி உற்பத்தி செய்யப்பட்ட இப்புராணக்கதைகள் மூலம், பண்பாட்டு மேலாண்மையை அடித்தள மக்களின் மீது நிலைநிறுத்தி, அவர்களின் சமூக ஒப்புதலைப் பெறும் முயற்சியின் வெளிப்பாடே இத்தகைய கதைகள், என்று சிவசு எழுதுகிறார்.

    பிராமண சமூகம் மநு தர்மத்தின் வழியாக தனக்கான ஓர் ஆதிக்க வழக்காறைக் கட்டமைத்துள்ளது. திருவாரூர் மநு நீதிச்சோழன் கதையும் இவ்வாறாக கட்டமைக்கபட்டதே. பிராமணர்களையும் பசுக்களையும் பிற வருணத்தவர் கொல்வது மாபாவம் என்றும் பார்ப்பனர்கள் செய்யும் கொலைகளுக்குக் கூட கடினமான தண்டனை கூடாது எனவும் மநு தர்மம் வகுத்தளித்திருக்கிறது. 

  முதலாம் ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் (கிபி.965) பஞ்சவன் பிரமாதி ராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்ற பார்ப்பனர்களால் கொலை செய்யபட்டான். 20ஆண்டுகள் கழித்து இக்கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முதலாம் ராஜராஜன் அவர்களிருவரும் பார்ப்பனர் என்பதால் அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டான். சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மநு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

   ‘பிரம்மஹத்தி’ பற்றிய ஐந்து கதை வடிவங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. அவற்றில் மூன்று கதைகள், மூன்றாம் குலோத்துங்க சோழன், வீரசேனன், வரகுணன் (பாண்டிய மன்னர்கள்) கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மருதீஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு வாசலில் ‘பிரம்மஹத்தி’ காத்திருப்பதைப் பற்றிக் கூறுகிறது. 

  வைதீக இந்து மதம் தீட்டைக் கழிக்க, தீ, பசுமாட்டின் மூத்திரம், பட்டு, பூணுல், சுத்தி சடங்குகள், யாகங்கள் என்று பல்வேறு விதமான வழிமுறைகளை வைத்திருக்கிறது. ‘பிரம்மஹத்தி’யைப் போக்க உப்பை பயன்படுத்துகிறார்களோ என்னமோ தெரியவில்லை. திருவிடைமருதூர் கிழக்குக் கோபுரத்தின் தென்பகுதியில் அரசனது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘பிரம்மஹத்தி’க்கு  உப்பைக் கொட்டி வழிபாடு செய்கிறார்கள். 

  1930 சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிரான ‘சம்பந்தி போஜனம்’ போன்றவற்றை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஏற்கவில்லை என்பதை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை (1937) சம்பவம் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது.

  நீடாமங்கலத்தில் 1937 டிசம்பர் 28 இல் நடைபெற்ற தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் ‘சமபந்தி போஜனம்’ உண்ட சுமார் 20 தலித்கள் காங்கிரஸ் பண்ணையார் சபாபதி உடையார் தலை மயிரைப் பிடித்து இழுத்து அடித்து, உதைத்து வெளியேற்றினர். பிறகு இவர்களுக்கு மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றி யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என எச்சரித்து பணம் (ஓர் அணா) கொடுத்து சேரிக்கு அனுப்பினர். 

  காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக விளங்கிய ‘தினமணி’ இம்மாதிரியான நிகழ்வு நடைபெறவில்லை என்று எழுதியது. பின்னாட்களில் வெண்மணிப் படுகொலையை ஆதரித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு சென்ற தினமணி தனது சாதீய மனோபாவத்தை வெளிப்படுத்தியது. இச்சம்பவம் பற்றிய செய்திகள் ஆதாரங்கள் குடியரசு, விடுதலை போன்ற இதழ்களில் வெளியிட்ட தந்தை பெரியார் தலித் தோழர்கள் வழக்கு தொடர் ஆலோசனை வழங்கியும் அதற்கான உதவிகளையும் செய்தார். 

    பண்ணையாரின் சமூகத்தைச் (உடையார்) சேர்ந்தவரும் நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சர்.ஏ.ட்டி.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட தலித்கள் சார்பில் வழக்கும் தொடுத்தார். ஆதிக்க சக்திகள் வழக்கு போட்டவர்களை அச்சுறுத்தி இவ்வழக்கை நீர்த்துப்போகச் செய்தனர் என்கிற விவரங்கள் இந்நூலில் கிடைக்கின்றன.

  சாணிப்பால், சவுக்கடி தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக இருந்த பண்ணையார் ஒடுக்குமுறை, சாதிய இழிவுகள் மற்றும் கூலிச்சுரண்டல் என்பதாக நீட்சி பெற்றதை கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்து இந்நிலை மாறப் போரடியதை மற்றொரு கட்டுரை விவரிக்கிறது.   திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பாலில் 1944 இல் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் ‘களப்பால் ஒப்பந்தம்’ செய்துகொள்ளப்பட்டது. இதன்படி சவுக்கடி, சாணிப்பால் கொடுத்தல் நிறுத்தப்படும் என்றும் முத்திரை மரக்காலில்தான் குத்தகை நெல்லும், ஊதிய நெல்லும் அளக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் இத்தகைய போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கையும் மறுக்கமுடியாது. 

  தோழர் நல்லக்கண்ணு சிறைவாழ்க்கை, போராட்டங்கள் பற்றி ஒருகட்டுரை பேசுகிறது. ஹாப்ஸ்பாமின் கண்ணியமிகு கொள்ளையர்களுக்கான (Noble Robbers) வரையறைகளில்  பெரிதும் பொருந்திப் போகக்கூடிய கொள்ளைக்காரன் செம்புலிங்கம் பற்றிய கட்டுரை ஒன்று, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் நாட்டார் பாடல்கள் பற்றிய கட்டுரை, வரலாறும் வழக்காறும் என்ற தலைப்புக் கட்டுரை, ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும் – கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள் என்ற பேரா.எஸ்.நீலகண்டன் நூல் அறிமுக விழா உரைச் சுருக்கக் கட்டுரை என நூல் விரிகிறது.

(“சொல்லப்படாத வரலாறுகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும்“, என்ற எனது முந்தைய கட்டுரையிலிருந்து… இந்நூல் என வாசிப்பில்… தொடர்.)

29. ஆகஸ்ட் போராட்டம் – தமிழகத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம்

பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு
பக்.: 127,  விலை: ரூ. 90
முதல் பதிப்பு: டிச. 2008

    “செய் அல்லது செத்துமடி” என்னும் வீரமுழக்கதுடன் 1942 இல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டம் வரலாற்றில் ஆகஸ்ட் புரட்சி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவில் இப்புரட்சியின் மறைக்கப்பட்ட உணமைகளை சு. துரைசாமியின் நூலொன்று வெளிப்படுத்துகிறது. (1942 ஆகஸ்டு புரட்சி : மறைக்கப்பட்ட உண்மைகள், வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை, முதல் பதிப்பு: டிச. 2010,  விலை: ரூ.100)

     தமிழகத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் தொகுத்தளிக்கிறது.  எடுத்துக் கொண்ட தலைப்பு குறித்த விரிவான அறிமுகம், தரவுகள், விளக்கங்கள், பின்னணி, ஆதாரங்கள் அனைத்தையும் சேர்த்து வழங்குவதே ஆ.சிவசு அவர்களின் பாணி. அந்த அடிப்படையில் இந்நூலும் சிறந்த சமூகவியல், வரலாற்று ஆவணமாக அமைகிறது. 

   குலசேகரப்பட்டினம் உப்பளங்களை கண்காணிக்கும் உதவி உப்பு இன்ஸ்பெக்டர் டபுள்யூ.லோன் கொலை, அவ்வழக்கு குறித்த விவரங்கள் விளக்கப்படுகின்றன. இந்தக் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரில் இருவருக்கு மரண தண்டனையும்  பிறருக்கு ஆயுள் சிறை மற்றும் சிறைத் தண்டனையும்  12 பேருக்கு விடுதலையும் கிடைத்தது. மரண தண்டனை பெற்ற ராஜகோபாலன், காசிராஜன் என்ற ராமலிங்க நாடார் ஆகியோரின் மேல்முறையீட்டை பெடரல் நீதிமன்றமும் பிரிவ்யூ கவுன்சிலும் தள்ளுபடி செய்த நிலையில் 1947 இல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி தனது அதிகாரப்பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்தார். மேல்முறையீட்டு வழக்கை நடத்தியவர்களில் ஒருவர் ஆர்.வெங்கட்ராமன். இந்தத் தகவல்கள் இன்றைய தூக்குத்தண்டனை ஆதரவாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும்.

     எஸ்.ஏ.டாங்கே, ப.ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் தடுப்புக் காவலில் சிறைபட்டிருந்த நிலையில் பாசிஸ்ட்கள் இந்தியாவைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதைக் கணித்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை. இருப்பினும் போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாடு எடுக்கவில்லை.  சுபாஷ் சந்திர போஸ், ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாரயணன் போன்ற  சோசலிஸ்ட்கள் முழுவீச்சில் பங்கேற்றனர்.  காங்கிரஸ் மக்கள் மத்தியில் இருந்த சரிவை மீட்க இப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது. 

     இந்து மகாசபையின் நிலை விநோதமானது. இயக்கம் நடந்தபோது இந்து மகாசபையின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி வங்காள அரசின் நிதி  அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட மகாண அரசில் அங்கம் வகித்தவர்கள் காந்தியின் அழைப்பை ஏற்றுப் பதவி விலகிய நிலையில் சியாமா பிரசாத் முகர்ஜி அதை ஏற்கவில்லை. மேலும் இந்து மகாசபையின் தலைவர் சவார்க்கர் அதன் உறுப்பினர்கள் யாரும் அரசுப் பதவிகளிலிருந்து விலகவேண்டாம் என்று கட்டளையிட்டார். 1942 ஆகஸ்ட் 31 இந்து மகாசபையினர் அனைவரும் தத்தம்  பதவிகளில் தொடர்ந்து இருக்கும்படியும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்க்கும்படியும் தீர்மானம் நிறைவேற்றினர்.  இன்றைய நிலையில் உண்மைத் ‘தேசபக்தர்கள்’ யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட இந்நூல் பெரிதும் உதவும்.

  மாவட்ட வாரியான் நிகழ்வுகளும் ராஜாஜி எழுதிய ‘அரசியல் நேர்மை’ என்னும் குறுநூலும் பின்னிணைப்பாக உள்ளன. 

  30.  கிறித்தவம் குறித்த ஆய்வு நூல்கள்

   (அ) கிறித்தமும் சாதியமும் – வடக்கன்குளம் பிரிவினைச் சுவரிடிப்புப் போராட்டம்

       பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு
பக்.: 256,  விலை: ரூ. 190
முதல் பதிப்பு: டிச. 2001, ஐந்தாம் பதிப்பு: நவ. 2011

     கிறித்தவம் குறித்த ஐந்து நூல்களை ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயம் தொடர்பாக கத்தோலிக்க நாடர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் நடைபெற்ற சாதியப் பிரச்சினையைப் பேசும் நூலிது. 

    1752 இல் கட்டிமுடிக்கப்பட்ட சிலுவை வடிவ ஆலயத்தில் வேளாளர், நாடார் வழிபடும் இடங்கள் தனித்தனியாகவும் இடையே கம்பிகளும் அமைக்கப்பட்டன.  இடப்பற்றாக்குறை, சிதிலமடைந்த ஆலயம் காரணமாக 1872 இல் புதிய ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு வெள்ளாளர்களும் நாடார்களும் உழைப்பு மற்றும் பொருளுதவி வழங்கினர். இந்த ஆலயமும் வெள்ளாளர், நாடார் நுழைவதற்கு தனி வாயில்கள், தடுப்புச்சுவர் ஆகியன அமைக்கப்பட்டு சாதி வேற்றுமை கடைபிடிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட வகுப்பாருக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்த ஆலயம் அமைப்பில் காற்சட்டையை ஒத்திருப்பதால் ‘காற்சட்டை ஆலயம்’ என்றும் எள்ளலுடன் குறிப்பிட்டார்கள். 

    18.11.1910 இல் திருநெல்வேலி மறை மாவட்டத்தலைவர் சுவரை இடிக்க இட்ட உத்தரவை கௌசானல் 22.11.1910 அன்று நிறைவேற்றினார். ஆதிக்க சாதியின் குறியீடாக இருந்த சுவர் இடிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடிப்பு சரியே எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

   இருப்பினும் பல இடங்களில் கிறித்தவத்தில் இன்றும் சாதியம் (கல்லறைத் தோட்டம், சப்பரம் (தேர்) இழுத்தல்) தொடர்வது வேதனையான உண்மை நூலில் பதிவாகிறது. 

   (ஆ) கிறித்தவமும் தமிழ்ச்சூழலும் 

        பேரா. . சிவசுப்பிரமணியன்



வெளியீடு: காலச்சுவடு
பக்.: 149,  விலை: ரூ. 100
முதல் பதிப்பு: ஆக. 2007, காலச்சுவடு முதல் பதிப்பு: டிச. 2010
 
            விவிலியச் செய்திகளுக்கு இடையிலுள்ள இடைவெளிகளை இட்டு நிரப்பவோ அல்லது அச்செய்திகளை விரிவுபடுத்தியோ உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்டார் விவிலியம் என்பர் (பக். 22). மாட்டிறைச்சி உணவு இழிவாக்கப்பட்டதன் காரணம் விவிலியக்கதைகளில் வரும் கொழுத்த கன்று கொழுத்த கடா, கொழுத்த ஆடு என்று மாற்றம் பெறுவது இதனடிப்படையில் விளக்கப்படுகிறது. 

   கத்தோலிக்க கிறித்தவம், சீர்திருத்தக் கிறித்தவம் ஆகியவற்றில் சாதிகளைக் கடந்தும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் சேவை அடிப்படையில் கல்வி வழங்கியது. உலகமயமாக்கல் பின்னணியில் கிறித்தவ விழுமியங்களைத் துறந்து கல்வியை வணிகமாக்கும் கிறித்தவ நிறுவனங்களின் செயல் இம்மண்ணில் கிறித்துவத்தை பரப்பிய முன்னோடிகளுக்குச் செய்யும் துரோகம் என்று சாடுகிறார். 

    அயோத்திதாசர் கிறித்தவம் மீது வைக்கும் விமர்சனம் குறித்த கட்டுரையும் உண்டு. கத்தோலிக்க வரலாற்று ஆவணங்கள் மதத்தைத் தாண்டி தமிழகச் சமூக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளாகவும் இருக்கின்றன. 

   கல்லறை வாசாப்பு நாடகம், வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள், கால்டுவெல்லும் இடையன்குடியும், சட்டாம்பிள்ளை வேதம் போன்ற கட்டுரைகள் இந்நூலின் சிறப்பு. 


   (இ) தமிழ்க் கிறித்தவம்

        பேரா. . சிவசுப்பிரமணியன்
 
வெளியீடு: காலச்சுவடு
பக்.: 152,  விலை: ரூ. 135
காலச்சுவடு மூன்றாம் பதிப்பு: டிச. 2010

   நடமாட்டமே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மறுக்கப்பட்ட நிலையில் பிண ஊர்வலத்திற்காக எதிர்ப்பு எவ்விதம் இருக்கும் என்பதை அனுமானிக்க முடியும். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் பிண ஊர்வலங்கள் நடத்த கிறித்தவம் செய்த உதவி கட்டுரையில் பதிவாகிறது. 

    இந்து மதத்திலிருந்து கிறித்தவம் தழுவியவர்கள் தமது சுயசாதி அடையாளத்தை இழக்க விரும்பவில்லை என்ற தமிழ்க் கிறித்தவத்தின் அடிப்படைக் குறைபாட்டைச் சுட்டுவதோடு, வேத சாஸ்திரக் கும்மி எழுதிய  வேதநாயக சாஸ்திரியாரும் இதற்குத் தப்பவில்லை என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. 

  அந்தோணியார் வழிபாட்டில் பொங்கலிடுதல், அசனம் (உணவு) கொடுத்தல், உலோக உறுப்புக் காணிக்கை செலுத்துதல், பட்டம் கட்டுதல், மடிப்பிச்சையெடுத்தல், பேயோட்டுதல் உள்ளிட்ட  நாட்டார் வழிபாட்டு நெறிகள் கிறித்தவத்தில் ஊருருவிய நிலையில் தீண்டாமை போன்ற வடிவங்களும் சேர்ந்திருப்பதன் அபாயத்தை ஆசிரியர்  எடுத்துக்காட்டுகிறார். 

  கத்தோலிக்க அரங்கியலில் பரசமய எதிர்ப்பு நாடகமாக தைரியராயர் வீதி நாடகம் குறிப்பிடப்படுகிறது. சூசை வழக்கு குறித்தான கட்டுரை, கிறித்தவத்தில் உள்ள சாதியம் மற்றும் அடித்தள தலித் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குருமார்கள் மிகக்குறைவாக இருப்பதால் சாதியப் பாகுபடுத்தல்கள் இன்னும் நிகழ்வது சுட்டிக் காட்டப்படுகிறது. 

   கிறித்தவ சிற்றிலக்கியங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள், பண்பாடு ஏற்றலில்  இருவேறு அணுகுமுறைகள், தமிழக மறைத்தள வரலாற்று வரைவும் கால்டுவெல்லும், உபதேசியார் சவுரிராயன் நாட்குறிப்புகள் போன்ற கட்டுரைகளும் இதில் இருக்கின்றன.  உபதேசியார் சவுரிராயன் நாட்குறிப்புகளை தனியே பதிப்பித்துள்ளார் ஆசிரியர். (வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ. 175)

    தமிழ்க் கிறித்தவம் பற்றிய வரலாறு, சமூகவியல், நாட்டாரியல், மானுடவியல் பார்வைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட நூல்கள் என்பதே இந்த நூல்களின் சிறப்பாகும். இத்தகைய ஆய்வுகள் மேலும் தொடரவேண்டும். 

       மேலே கண்ட ஐந்து நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 


வெளியீடு: 

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
பேச: 04652 – 278525.
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
இணையதளம்: www.kalachuvadu.com

சென்னை முகவரி:

காலச்சுவடு,
257, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 600005,
தொலைபேசி: 044 28441672.

(பட்டியல் நீளும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக