அவைதீகக்
கல்விமுறைகளே பொதுக்கல்வியாக மாறவேண்டும்
மு.சிவகுருநாதன்
காலந்தோறும் கல்வி பல மாற்றங்களுக்கு
உள்ளாகி வந்திருக்கிறது. வேதக்கல்வி, குருகுலக் கல்வி, பவுத்த - சமணக் கல்வி, திண்ணைப்
பள்ளிகள், மெக்காலே கல்வி எனப் பல கல்விமுறைகள் இந்தியாவில் வழக்கத்தில் இருந்துள்ளன.
இதற்கு முன்னதாக சிறப்பான கல்வி முறை இருந்திருக்க வேண்டும். திருக்குறளில்
‘கல்வி’ எனும் அதிகாரம் உள்ளது. பழங்காலக் கல்வி பற்றி அறிய ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.
நன்னூல், நாலடியார் போன்ற சமண நூற்களில் ஆசிரியர், மாணவர்கள் குறித்த பதிவுகள் உண்டு.
ஆனாலும் அவை வேத – குருகுலக் கல்வியைப் பிரதிபளிப்பதாகவே உள்ளன.
“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நளி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாலற் குரைப்பது நூலே”, (நன்னூல்)
என்று நன்னூல் யாருக்கு
கல்வி வழங்கவேண்டும் என்று வரையறைப்பதைப் போல எவ்விதக் கட்டுப்பாடுகளும் அவைதீக முறைகளில்
இல்லை.
தன் வாரிசு, ஆசான் வாரிசு, மன்னன் வாரிசு, பணம் கொடுப்பவன், வழிபடுபவன் ஆகியோருக்கு
மட்டுமே கல்வி கொடுக்க வேண்டும் என்பது குருகுலக் கல்வியன்றி வேறென்ன?
நன்னூலும் ஆண்களுக்கான கல்வியை மட்டும் பேசும். பெண் கல்வியின் நிலை? அது பவுத்தம்,
சமணம் போன்ற அவைதீகக் கல்வியில் சாத்தியமானது. பவுத்த சங்கங்களில் பெண்களுக்கு இடமிருந்தது.
துறவிலும் பெண்கள் ஈடுபட்டனர். கல்வியில் அவர்களை பாகுபடுத்தி வெளியேற்றும் வழக்கமில்லை.
அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு மாற்றாக அறத்தை முன்வைத்தது பவுத்தம். 8 வயது
சிறுவனோ அல்லது 80 வயது கிழவனோ தவறு செய்தால் பாருங்கள் பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வி
இல்லை, அதனால்தான் இப்படி நடக்கிறது என்று ஒரு கூட்டம் கூச்சல் போடும். ஆனால் இவர்கள்
பரிந்துரைக்கும் நீதிக்கதைகள் ஒழுக்கம் தந்திரம்,
ஏமாற்றுதல், சூழ்ச்சி, இழிவு செய்தல் என்பதாக மட்டுமே இருக்கிறது.
புத்த ஜாதகக் கதைகள் இவற்றிலிருந்து
வேறுபடுத்திப் பார்க்கலாம். போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக புத்தர்
சொல்லும் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். மேலே சொன்னவற்றுக்கு மாறாக இக்கதைகள்
பவுத்த அறத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன. 500 க்கு மேற்பட்ட இக்கதைகள் பாலி
மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை இதுவரை நமது
நீதிபோதனை வகுப்புகளில் பயன்படுத்தியதே இல்லை. பவுத்தம் ஒழுக்கத்திற்கு மாற்றாக
அறத்தை முன்நிறுத்துகிறது.
“சமணர் அமைத்த பள்ளிகளில்
சமண மாணவர்களும் புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்”, (பக். 170, 6 –ம் வகுப்பு சமூக அறிவியல்) என்று நமது
பாடநூல்கள் சொல்லிக் கொடுப்பதுபோன்ற நடைமுறையில் இல்லை. பவுத்த சங்கங்களும் சமணக்
கணங்களும் தங்களது தத்துவத்தைப் பரப்புவதை மட்டும் செய்யவில்லை. இலக்கியங்களை
படைத்தன. தங்களுக்கு மட்டும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றை நடத்தவில்லை.
அனைத்து மக்களும் கல்வி கற்கும் பொதுக்கல்வியாக இது இருந்தது.
“ஒரு மனிதனின் நடத்தையே அவன் உயர்ந்தவனா
அல்லது தாழ்ந்தவனா என்பதைத் தீர்மானிக்கிறது. பிறப்பும் இன்னபிற விபத்துகளும் கணக்கிலெடுக்க
முடியாதவையாகும்”, என்று புத்தர் கூறுகிறார். சங்கத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தது
போலவே விகாரை, பள்ளிகளின் கதவுகளும் திறந்தன.
பவுத்தம்
ஆசைகளை மட்டுமல்ல; அனைத்து வகையான பற்றுகளையும்
அறவே அகற்றச் சொன்னது. அப்போதுதான் பரிநிப்பாணம் கிடைக்கும். பற்றுகளைத் துறந்து
பரிநிர்வாணமடையும் சிந்தனா முறை புத்தர் நமக்களித்தது.
சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில்
புத்தர் வலியுறுத்துகிறார். அறிவுநிலை மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை
நீக்குதல் இங்கு முதன்மையானது. (பக். 72, தீக
நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர்
1988) இதைத்தான் பெரியார் வேறு மொழியில் சொன்னார்.
“இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக் கணக்கான ரூபாய்களைச்
செலவு செய்து பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை
வைத்துக் கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, ‘நிர்வாணமான
சிந்தனா சக்தி’ தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை எதைப்பற்றியும், எந்தப் பற்றுமற்ற
வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்று
வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெருமளவு மீதமாகி மக்கள் வாழ்க்கைத்
தரமுயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை
தானாக வளர்ந்து, இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ‘குறைவற்றச்
செல்வத்துடனும், நிறைவற்ற ஆயுளுடனும்’ வாழ்வார் என்பது உறுதி”. (விடுதலை தலையங்கம்.
பக். 146, பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு:
டிசம்பர் 2007)
மனிதன் பற்றற்ற நிலையில் எதையும் சிந்திக்கவேண்டும் என்று சொன்னவர் பெரியார்.
கூடவே மதம், சாதி, மொழி, தேசம் என நான்கு பற்றுக்களை அழிக்கவேண்டியவையாக அவரால் அடையாளம்
காட்டப்பட்டன. இதில் முதலிரண்டும் சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் சொல்கிற ஒன்றுதான்.
ஆனால் பின்னிரண்டையும் சொல்வதற்கு பெரியார் போன்ற ஆளுமை தேவைப்படுகிறார். பவுத்தம்
பற்றுகளற்ற, சார்பற்ற கல்வியை நமக்குத் தந்தது.
கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால்
திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி.
எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே கற்றலில் முதல்படி.
ஜென் பவுத்தக்கதையில் வருவதைப் போல
ஆசிரியர்கள், மாணவர்கள் எவரும் நிரம்பி வழிபவராக இருக்கக்கூடாது. பவுத்தக் கல்வி விடுதலைக்கான கல்வி.
பவுத்தம் இந்தியாவில் மறைந்துவிட்டது என்று
நமது பாடநூல்கள் சொல்கின்றன. அவைதீக மதங்கள் இந்துத்துவத்தால் அழித்தொழிக்கப்பட்டன
அல்லது விழுங்கப்பட்டன. “Though it
virtually disappeared from India for nearly a millennium, it spread far and
wide and is widely followed even today in the South-east and East-Asian
countries. In the mid-twentieth century it was revived in India by Dr.
B.R.Ambedkar. (11 –ம் வகுப்பு வரலாறு, ஆங்கில வழி: பக். 50)
ஏறத்தாழ சென்ற ஆயிரமாண்டுகளில்
இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டாலும்கூட, அதற்கு வெளியே
தொலைவிற்குப் பரவியது. இன்றும் தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம்
பரவலாகப் பின்பற்றப்படுகிறது. (11 –ம் வகுப்பு வரலாறு, தமிழ் வழி: பக். 52)
அம்பேத்கர் பவுத்தம் தழுவியதால் புத்தம்
எழுச்சி பெற்றதான இறுதிவரி தமிழில் பெயர்த்தவர்களால் நீக்கப்பட்டுள்ளது. பவுத்தம்
உள்ளிட்ட அவைதீக மதங்களை அணுகும் பொதுப்புத்தி இவ்வாறாகவே உள்ளது. பள்ளிக்கல்வி
மட்டுமல்லாது இதை மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும். இந்திய அளவில் நடைபெற்று வரும்
அரசியல் நிலைப்பாடுகள் இதை
விரைவுப்படுத்தும் என்று நம்பலாம்.
இந்தியத் தத்துவ மரபில் அவைதீக மரபுகளே அடிப்படை. இவற்றின் கல்விமுறைகளே நாட்டின்
பொதுக்கல்வியாக மலர்ந்திருக்க வேண்டும். வைதீகச் சூழ்ச்சிகளால் அச்செயல் தடுக்கப்பட்டுவிட்டது.
பொதுக்கல்வியில் இவற்றின் கூறுகள் இடம்பெறுதல் நல்லது.
பவுத்தம், சமணம் பற்றிய பாடங்கள் இடம்பெறுவதால் நாம்
மகிழ்ச்சியடைய இயலாது. இவற்றைச் சரியாக அறிமுகம் செய்யப்படுகிறதா என்பது முக்கியம்.
மேலே சொன்ன இரு உதாரணங்கள் இவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளன. பவுத்த அறக்கதைகளுக்கு
பாடநூல்களில் இடமில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரஸ்வதி பூசை மட்டும் கொண்டாடிக்கொண்டிருந்த நமது அரசுப்பள்ளிகள் பொதுத்தேர்வு
வழிபாடு, ஆடிப்பெருக்கு, பாதபூசை என்றெல்லாம் முன்பைவிட அதிகமாக நடக்கும் சூழலில் பொதுக்கல்வி
குறித்த அக்கறை தேவையாக உள்ளது. மேலும் வெறுப்பரசியல்
உச்சத்தில் இருக்கும் நிலையில் அறன் வலியுறுத்தல் அவசியமாக இருக்கிறது.
கல்விமுறைகளில் எவ்வளவோ மாற்றங்கள், புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள் வந்துவிட்டபோதிலும்
கல்விப்புலங்களை ஆக்ரமித்துள்ளவர்களிடம் குருகுலக் கல்விமுறையின் பாதிப்புகள் அதிகம்
தென்படுகின்றன. மத்திய அரசின் மறைமுக செயல்திட்டங்களுள் மீண்டும் வேதக்கல்வியை கட்டுவதே.
5, 8 ஆகிய வகுப்புகளில் மாணவர்களைப் பெயிலாக்கும் சட்டத்திருத்தம் போன்றவை இதன் அங்கமே.
அறக்கல்வி, பெண்கல்வி, சமத்துவக்கல்வி, மதச்சார்பற்ற கல்வி, அனைவருக்குமான கல்வி,
விடுதலைக்கல்வி, மாற்றுக்கல்வி, பொதுக்கல்வி என எவ்வழியில் பார்த்தாலும் அதற்கு வாய்ப்பாக
இருப்பது அவைதீகக்கல்வி முறைகளே. இதைப் பொதுக்கல்வியாக்குவது
அதாவது இத்தகைய அறங்களை நமது கல்வித்திட்டத்தில் இணைப்பது இன்றைய இன்றியமையாத தேவை.
பவுத்த அறம் பொதுக்கல்விமுறையாக இருக்கக்கூடிய தகுதிகளைப் பெற்றதாகும்.
உதவியவை:
01. தீக நிகாயம் – பௌத்த மறைநூல் தமிழில். மு.கு.ஜெகந்தாத ராஜா – தமிழினி
வெளியீடு
02. தம்மபதம் கதைகள் தமிழில். பழனியப்பா சுப்ரமணியம்
– தமிழினி வெளியீடு
03. மயிலை சீனி.வேங்கடாசாமியின் நூல்கள்: பௌத்தமும்
தமிழும், கௌதம புத்தர், புத்தர் ஜாதகக் கதைகள், பௌத்தக் கதைகள்
04. பௌத்தம்: ஒரு மார்க்சிய அறிமுகம் (தொ)
வெ.கோவிந்தசாமி
05. புத்தர் ஓர் இந்துவா? – டாகடர் சுரேந்திர
அஜ்நாத் – தமிழில். சு.சத்தியச் சந்திரன்
06. அ.மார்க்சின் நூல்கள்: புத்தம் சரணம், கடமை
அறியோம் தொழிலறியோம், இராமன் கடந்த தொலைவு, இது மோடியின் காலம், புதிய கல்விக்
கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும், சொல்வதால் வாழ்கிறேன், மாற்றுக் கல்வி: பாவ்லோ
ஃப்ரெய்ரே சொல்வதென்ன?
(தமிழ்நாடு பௌத்த சங்க கூட்டிணைப்புக்
குழு ஆகஸ்ட் 05, 2018 (05.08.2018) சென்னை, பெரம்பூர் பௌத்த விகாரில் ஏற்பாடு
செய்த “உலகைக் காக்கும் மாற்றுக்
கல்வியை பௌத்தம் தருமா?” என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பகிரப்பட்ட கருத்துகளின்
எழுத்து வடிவம். தமிழ்நாடு பௌத்த சங்கச் செயலாளர் பெரியவர் ஓ.ரா.ந. கிருஷ்ணன் ஏற்பாடு
செய்த இக்கருத்தரங்கில் பேரா. அ.மார்க்ஸ், வழக்கறிஞர் பொ. இரத்தினம், சாலை செல்வம், மீனா, நட்ராஜ் போன்றோருடன் நானும் பங்குபெற்றேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக