செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

மறைந்த தலைவருக்கான உண்மையான அஞ்சலி


மறைந்த தலைவருக்கான உண்மையான அஞ்சலி

மு.சிவகுருநாதன்

     கலைஞர், தமிழினத் தலைவர், மு.க. என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட தி.மு.க. வின் 50 ஆண்டுத் தலைவர் திரு மு.கருணாநிதி அவர்கள் தமது 95 வது வயதில் ஆகஸ்ட் 07, 2018 (07.8.2018) காலமானார். வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டுவந்த அவர் 11 நாள்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 06.10 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டது. 

   பெரியாருக்குப் பிறகு நீண்ட காலம் வாழ்ந்த, அரசியலில் நீடித்த தலைவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. நெடுங்காலம் கட்சி மற்றும் ஆட்சிப் பதவிகளை வகித்தவர்; இவற்றில் பல தலைமுறைகளைக் கண்டவர். அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டவர்; அதிகளவிலான விமர்சனங்களை எதிர்கொண்டவர் என்ற பல சிறப்புகளும் அடக்கம். 

   அடித்தட்டு சமூகம் ஒன்றிலிருந்து மாநிலத்தின் உயர் பதவிக்கு அவர் சென்றது சாதாரணமான ஒன்றல்ல. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்ட  சமூக, அரசியல் இயக்கங்களின் பங்களிப்பின் விளைச்சல் இது. 

    பெரியாரிடமிருந்து முரண்பட்டு தேர்தல் பாதையைத் தேர்வு செய்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய அறிஞர் அண்ணா திடீரென்று மறைந்து நிலையில் கட்சியையும் ஆட்சியையும் பொறுப்பெற்று நடத்தினார். பின்னர் ஏற்பட்ட கட்சியின் உடைவுகளைச் சமாளித்து, நீண்டகாலம் கட்சியைக் கட்டிக்காத்து, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் தமிழக முதல்வரானார்.  

   குறுகிய காலம் பொறுப்பில் இருந்த அல்லது வாழ்ந்து மறைந்த தலைவரை மதிப்பிடுவது மிக எளிது. மூன்று தலைமுறைகள் கடந்துத் தொடர்ந்து பணி செய்த ஒருவரை எளிமையாக மதிப்பிடுவது இயலாது. இது பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கும் பொருந்தும். 

   அவருடைய சாதனைப் பட்டியல்கள் ஒரு புறம்; அவர்மீது வைக்கும் விமர்சனங்கள் மறுபுறம். இவற்றிகெல்லாம் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. பெரியார், காந்தி, நேரு போன்ற தலைவர்களைக் கருத்தியல் ரீதியாக எதிர்தளத்தில் அணுகியவர்கள்கூட தற்போது புதிய கண்ணோட்டத்தில் அணுகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரலாறு தேங்கிப்போகும் ஒன்றல்ல; காலம் மு.கருணாநிதிக்கான இடத்தையும் விமர்சனங்களையும் சேர்த்தே அளிக்கும். 

    உலகம் முழுக்க 200 ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் மக்கள் திரளைக் கொண்ட கார்ல் மார்க்ஸ்  போன்ற தலைவர்களை மக்களிடமிருந்து எளிதில் பிரித்துவிட முடியாது. மக்களுக்கான தலைவர்கள் எங்கு நிராகரிக்கப்படுவதில்லை. அவர்களுடைய உழைப்பும் கருத்தியல்களும் அடுத்த  தலைமுறைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். 

   திராவிட இயக்க வேர்கொண்ட ஒரு சமூகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா போன்ற தலைவர்களைவிட மு.கருணாநிதியிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. பல்வேறு எதிர்பார்ப்புகளை அவரால் எந்த அளவிற்கு பூர்த்தி செய்ய முடிந்தது என்பது விமர்சனம். இந்திய அரசியமைப்புக்குட்பட்டு ஒரு மாநில அரசு என்ன செய்யமுடியும்? என்கிற மு.கருணாநிதியின் அனுபவங்கள் ஊடாக நாம் கண்டடைய வேண்டிய செய்திகளும் உண்டு. தனிநாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சிக் கோரிக்கையை கையிலேந்தி, மத்திய அரசுடன் முரண்பட்டும் இறுதியில் அவர்களுடன் இணைந்தும் அவர் பெற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்குப் பாடமாக  அமையும். 

    நாடகம், எழுத்து, திரைப்படம் என தான் கைக்கொண்ட கலை வடிவங்கள் மூலமும் இயக்கம், கட்சி, அரசுப் பதவி ஆகியவற்றின் ஊடாகவும் தன்னுடைய கருத்தியல் நோக்கங்களுக்காக மிக நீண்டகாலம் உழைத்த அவரது சாதனைகள், வீழ்ச்சிகள் அனைத்தும் வெளிப்படையாக விவாதிப்பதே தமிழ்ச் சமூகம் முன்னோக்கி நடைபோட உதவியாக இருக்கும்.

    கட்சியைக் குடும்பமாக  எண்ணும் அண்ணா தொடங்கி வைத்த பாசப்பிணைப்பு, மு.கருணாநிதியின் இழப்பு  கழகத் தொண்டர்களுக்கு பேரிழப்பாகவே இருக்கும். அவற்றிலிருந்து மீள திராவிட இயக்கக் கருத்தியல், நடைமுறைகள் ஆகியவற்றை நோக்கிச் செல்வதே  அருமருந்தாக இருக்கும். திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு மு.க. பாணியிலான விடை இதுவே. 

   95 வயது வரை நிறைவாக வாழ்ந்து மறைந்த தலைவருக்கு கனிவுடனும் வீரவணக்கத்துடனும் விடைகொடுக்க வேண்டும். அவரது கொள்கைகளுக்கு மாறாக, அவரைக் கடவுளாக்கும்  தன்மையிலிருந்து விலகி, அவரது சாதனைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை சீர்தூக்கி அவற்றிலிருந்து நாம் பெறும் படிப்பினைகளே தமிழ்நாட்டை மேம்படுத்தும் என்பதில் அய்யமில்லை.  
  

(இது இன்றைய முகநூல் பதிவு செய்யப்பட்ட எனது அஞ்சலிக் குறிப்புகள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக