புவியியலில் ‘புனிதங்கள்’ ஏன்?
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்:
09)
‘இந்தியா
அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு’ என்பது பத்தாம் வகுப்பு புவியியல் முதல்பாடத்தில்
சில கலைச்சொற்களுக்கு பின்வருமாறு விளக்கமளிக்கப்படுகிறது.
“கிளை
ஆறு (Distributary) : முதன்மை ஆறானது அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரிந்து கடலில்
கலப்பது”.
“கழிமுகம்
(Estuary) : ஆறு தன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரியாமல் ஒரே ஆறாக கடலில் கலக்கும்
பகுதி”. (பக்.106)
மேற்கண்ட இரண்டையும் எப்படி விளங்கிக் கொள்வது?
“அதன் கடைப்பகுதியில் பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலப்பது”, எனவும் “கடைப்பகுதியில்
பல கிளைகளாகப் பிரியாமல் ஒரே ஆறாக கடலில் கலக்கும் பகுதி”, எனவும் என இரண்டையும் குழப்புவது
ஏன்?
ஆங்கில வழியில் பின்வருமாறுதானே இருக்கிறது!
‘கழிமுகம்’ என்பதை வேறு வகையில் விளக்க வாய்ப்பில்லையா?
“Distributary: A branch or outlet
which leaves a main river and does not rejoin it, carrying its water to the sea
or a lake”.
“Estuary: Mouth of a river where it
enters the sea through a single channel with a hollow”. (page:95)
“காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Back
waters): ஆற்றின் முகத்துவாரத்தில் ஆற்று நீர் கடல் அலைகளால் தடுக்கப்பட்டு கடலில்
கலக்காமல் தேங்கி இருப்பது”. (பக்.106)
இங்கு ஆற்றுநீர் மட்டுமா தேங்கியுள்ளது? கடல் நீருடன்
கலந்து உவர்நீராகத்தானே உள்ளது! இப்பகுதிகள் பரந்த சதுப்புநிலங்களாகவும் பல்வேறு உயிரினங்கள்
வாழும் பன்மைச்சூழலும் உள்ளது.
“Back waters: The part of a river which are stagnant and do not reach
the sea as they are pushed by the current”. (page:95)
‘பூமத்திய ரேகை’ எப்போது நிலநடுக்கோடு ஆவது? (பக்.94) இதைப்போல கடகரேகை,
மகரரேகை போன்றவையும் மாறவேண்டும். (கடக அட்சம் / கடகக்கோடு, மகர அட்சம் /
மகரக்கோடு)
அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணதேவி கோயில்கள் அமைந்துள்ளது
இயமமலையின் முக்கியத்துவம் என்று சொல்வதை
என்னவென்பது? இவை பலகாலமாகத் தொடர்ந்து சொல்லப்படுகிறது? நிலவியல் அமைப்பு,
காலநிலைக் கூறுகள், பல்லுயிர்ப்பெருக்கம், வற்றாத ஆறுகளின் பிறப்பிடம் ஆகியவற்றோடு
இதையும் இணைப்பது சரியல்ல. இவை பெரும் முக்கியத்துவமானது என்றால் இமயமலைகளில் உள்ள
பவுத்த, சமண, சீக்கிய, இஸ்லாமிய புனித இடங்களையும் சுட்டுவதுதான்
மதச்சார்பின்மைக்கு அழகு.
காவிரி, “கர்நாடகாவில் இரண்டாக
பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஶ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை
உருவாக்குகிறது.
…………………………………………………………………………. பின்பு திருச்சிராப்பள்ளிக்கு முன்
ஶ்ரீரங்கம் அருகே கொள்ளிடம், மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து
இறுதியில் பூம்புகார் என்ற இடத்திற்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது”. (பக்.105)
அது என்ன புனித ஆற்றுத் தீவுகள்? இமயமலையிலுள்ள ஒரு மதப் புனித இடங்களை
மட்டும் குறிப்பிட்டு அதை முக்கியத்துவமாகப் பேசுவதை முன்பு குறிப்பிட்டோம். இங்கு
புனித ஆற்றுத்தீவுகள் என்கின்றனர். ஆங்கில வழியிலும் ‘sacred islands’ என்று
குறிக்கின்றனர். ஆனால் ஶ்ரீரங்கம் வெறும் தீவுதான்; புனிதத் தீவல்ல. (Srirangam
Island)
In Karnataka the river bifurcates twice, forming the sacred islands of
Srirangapatnam and Sivasamudram. ………………………………………………………………………………………..
The Kaveri breaks at Srirangam Island
with two channels, river Coleroon and Kaveri. (page:94)
Cauvery என்று எழுதாமல் ‘Kaveri’ என்று ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? Recap
இல் மட்டும் Cauvery என்று குறிக்கப்படுகிறது. (பக்.95) கொள்ளிடம் (Kollidam) ஆற்றை
பிரித்தானியர்களின் உச்சரிப்பில்தான் (Coleroon) எழுதவேண்டும் என்று சட்டமா? தரங்கம்பாடி,
பழவேற்காடு, கோழிக்கோடு போன்ற ஊர்ப்பெயர்களையும் அப்படித்தான் எழுதுவோம் என்று
அடம்பிடிப்பது போன்றே இதுவும் அசிங்கமானது.
(9,
10 வகுப்புகளுக்கு சமூகவியல் தமிழ்வழிப் பாடநூல் இன்னும் அச்சு வடிவில்
வெளியாகவில்லை. கணினியிலோ, அலைபேசியிலோ வாசிப்பது நமக்கு எளிதாக இல்லை. எனவே
அச்சுப்பிரதி வந்த பிறகே முழுமையாக படிக்கமுடியும் என்கிற நிலை உள்ளது; விரிவாக
பிறகுதான் எழுதமுடியும். பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள 10 ஆம் வகுப்பிற்கு ஆங்கில
வழிக்கு மட்டும் சமூக அறிவியல் முதல் தொகுதியை வெளியிட்டுவிட்டு, தமிழ் வடிவத்தை
வெளியிடாமல் இருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.)
(இன்னும் வரும்…)
1 கருத்து:
புவியியலில் புனிதங்கள் தேவையில்லைதான். பாடப்பொருண்மையிலிருந்து விலகி பொருள் தருவது ஏற்புடையதல்ல.
கருத்துரையிடுக