வெள்ளி, பிப்ரவரி 28, 2020

சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?


சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 64) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 


      ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவப் பாடத்தில் குடிமையியல் பகுதியில் அலகு 3 ‘சாலைப் பாதுகாப்பு’ என்ற பாடம் இருக்கிறது. இப்படத்தின் தொடக்கத்தில் கற்றல் நோக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.  அவைகள்  பின்வருமாறு:


  • “சாலைப்  பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல்.
  • சாலை விபத்திற்கான காரணங்களை  ஆராய்தல்.
  • சாலைப்  பாதுகாப்பு  முறைகளைப் பட்டியலிடுதல்.
  • அரசாங்கம் மற்றும் தனிமனிதனின்  சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல்.
  • சாலைப்  பாதுகாப்பு  வாரம் போக்குவரத்துக் குறியீடுகள் முதலியவற்றை  அறிந்து கொள்ளுதல்”. (பக்.241)

  ஆங்கில வழியில், (Unit -3 Road Safety Learning Objectives)


  • “Understand the need for road safety 
  • Analyze the causes for road accidents 
  • List out the safety measures
  •  Recognize the roles and responsibilities of government and  individuals 
  • Know about safety week and traffic signals (Page: 198)


   “அரசாங்கம் மற்றும் தனிமனிதனின்  சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல்”, என்றால் என்ன? இதென்ன புதுக் குழப்பம்? அரசின் பாதுகாப்பை யார் அங்கீகரிப்பது?  “Recognize the roles and responsibilities of government and  individuals”, என்கிற வரிதான் மொழிபெயர்ப்பில் இவ்வாறாகத் திரிகிறது.

    அது போகட்டும்; விட்டுத் தொலைப்போம். பாடநூல்களில் வரிக்குவரி இச்சிக்கல் தொடர்கிறதே!  மேற்கண்ட நோக்கம் நிறைவேறியதா என்பதை மதிப்பீடுகளால் அளவிட வேண்டும். இந்நோக்கங்களை ஒட்டி மதிப்பீடு செய்வதே உகந்தது. பொருத்தமில்லாத வினாக்களைக்  கேட்பது  எதற்காக?

     காட்டாக, ஒரு மதிப்பீட்டு வினாவைப் பாருங்கள்:

“V. பொருத்தமில்லாத ஒன்றைக்  கண்டுபிடி.

அ) கார் ஆ) டிரக் இ) டெம்போ ஈ) ஏரோப்ளேன்”,   (பக்.250)

“2. Find the odd one 
a) car b) trucks c) tempos d) aero planes”,  (Page: 205)

     இங்கு எவ்வகையான திறன் அளவிடப்படுகிறது? இப்பாடம் வாகனங்களைப் பற்றியதா, அல்லது சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பிற்கானதா?
 
    ‘Road Safety education’, (Page: 202&203)  என்ற சொற்றொடரை எப்படி மொழிபெயர்ப்பது? பாடநூல்  ‘போக்குவரத்துக் கல்வி’ என்றே சொல்கிறது. ‘போக்குவரத்துக் கல்வி’ (Transport Education)  என்றால் என்ன? இக்கல்வியை கலைத்திட்டத்தில்  இணைப்பது குறித்தெல்லாம் பேசப்படுகிறது. ‘சாலைப் பாதுகாப்புக் கல்வி’யை மாணவர்களுக்கு முறையாக அளிக்க வேண்டும் என்று துளியும் நினைக்கவில்லை. இது குழந்தைகளுக்கு எழுதும் பாடம் என்பதையே மறந்துவிடும் போக்கு நீடிக்கிறது.

     ஏற்கனவே ஒரு வகுப்பில்  சாலை விபத்துகளுக்கு கல்வியறிவின்மை காரணம் என்றனர். தேசிய அளவில் கல்வியில் இரண்டாமிடம் பெறும் தமிழ்நாடு விபத்து மற்றும் உயிரிழப்புகளில் முதலிடம் வகிக்கக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டாமா?

 ‘பாதசாரிகளின் பொறுமை இன்மை’ எனும் தலைப்பில்,

     “சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பொறுமையின்மையும், சாலைவிதிகளைப்  புறக்கணித்தலுமே விபத்துகளை  ஏற்படுத்துகின்றன”. (பக்.243)

    இங்கு பாதசாரிகளின் (pedestrians) பொறுமையின்மை, சாலை விதிகளைப் புறக்கணித்தல் ஆகியன காரணமாகச் சுட்டப்படுகிறது (பக். 243). பாதசாரிகளுக்கு என்ன விதிகள் என எந்தப் பாடநூலும் விளக்குவதில்லை. 

    நடைபாதை அல்லது நடைமேடையில் நடக்க வேண்டும். வெள்ளைக் கோடுகள் அமைக்கப்பட்ட இடத்தில் சாலையைக் கடக்கவேண்டும் என்று  நகரத்தை மையமாகக் கொண்டு  குறிப்பிடுவது ஏன்?

   நகரங்களில் கூட நடைமேடைகளை நடப்பதற்குப் பயன்படுத்த முடியாத  நிலைதான் உள்ளது.  சாலைகளில் எங்கும் நடைமேடையும் வரிக்கோடுகளும் இருக்காது அல்லவா!

  வாகனங்கள் இடப்புறமாகச் செல்லவேண்டும் என்பதைப் பாதசாரிகளுக்குமான சாலை விதியாகக் கற்பிதம் செய்துகொள்ளும்  நிலையை மாற்ற அந்த விதியை உறுதியாகச் சொல்ல வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என நீட்டி முழக்கும் பாடம் சாலைவிதிகளைத் தெளிவாக உணர்த்த முன்வரவில்லை.

   பாதசாரிகள் (pedestrians) நடைமேடை இல்லாத இடங்களில் சாலையின் வலது புறம் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தவாறு நடக்க வேண்டும் என்பதே விதி. இதை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை; எனவே யாரும் கடைபிடிப்பதில்லை. பின்னால் வரும் வாகனங்கள் மோதாமலிருக்க இந்த ஏற்பாடு. வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எப்படி ஒரே விதி இருக்க முடியும்?
   
    சச்சின் டெண்டுல்கர் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு பரப்புரைக்குக் கொடுக்கும் முதன்மையில் Car Pooling, Raksha Safety ஆகிய புதிய மற்றும் ஆசிரியர்களுக்கேத் தெரியாத செய்திகளுக்கு  ஒரு சிறு துளிகூட தருவதில்லை.

     “Carpooling is the sharing of car  journeys so that more than one person  travels in car, and prevents the need for more cars to the same location”.

   “Raksha safe drive. It is a  device capable of automatic  crash detection, two – way call  connectivity, GPS tracking, engine  health monitoring and smart  panic button”. (Page: 202)

    கார்பூலிங் என்று அப்படியே ஒலி பெயர்த்து அடைப்புக்குறிக்குள் கூட ஆங்கிலத்தில் தராமல் பாடம் எழுதுவதை என்ன சொல்ல? மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் ‘பயணப் பகிர்வு’ செய்வதை எளிமையாக விளக்க முடியாதா? ஏதோ விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதைப்போல “ஓரிடத்தை நோக்கி வாகனங்கள் செலுத்தப்படுகின்றன”, என்கிறார்கள்.

   “The Government of India observes 'Road  Safety Week' awareness during January, every  year”. (Page: 204)

    மத்திய அரசு ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கொண்டாடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜனவரி 1 முதல் 7 வரையிலான முதல் வாரத்தில் இவ்வார விழா கொண்டாடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக எந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒப்புக்குக் கொண்டாடிவிட்டு  நகர்கிறது. இதுதான் மனித உயிர்களின் மீதான மாநில அரசின் பெரிய அக்கறை!

    ‘Zebra crossing’ என்பதை  ‘வரிக்குதிரை கடப்பு’ (பக்.250) என்றெல்லாம் மொழிபெயர்ப்பது அபத்தம்.  கடப்பு என்பதற்கு வேறு பொருள்கள் உண்டு. பாதசாரிகள் கடக்குமிடத்தை இப்படி குழப்ப வேண்டாம்!

    ‘seat belt’ ஐ ‘இருக்கை வார் பட்டை’ என நீட்டி முழக்காமல் ‘இருக்கைப் பட்டை’ என்றே சொல்லலாம். 'வார்' என்பதும் ‘பட்டை’யைக் குறிக்கும் சொல்லே. ‘நடுசென்டர், கேட்வாசல், ஷாப்கடை’ என்பதைப் போல வேண்டாமே! ‘தலைக்கவசம்’ என்றுதானே சொல்கிறோம்? ‘தலைமேல் தொப்பிக் கவசம்’ என்று சொல்ல வேண்டுமோ! எளிய சிக்கலற்ற மொழியாக்கங்கள் வேண்டும்.

        “Drunken driving, jumping red light over  speeding and unmanned railway crossings  cause great damage to valuable lives. Due to  this, many families lose their breadwinners”. (Page: 200)

    “மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து குறியீடுகளை மதிக்காமல் இருத்தல், அதிவேகமாக இயக்குதல், ஆளில்லாத இருப்புப் பாதை பகுதிகளில் கவனமில்லாது கடப்பது போன்ற செயல்களால் உயிர்ச்சேதம் அதிகரிக்கிறது. இதனால், பல  குடும்பங்கள் வருமானம் ஈட்டும் தம் நபரை இழந்து வாடுகின்றன”, (பக்.244)

  இப்பகுதிக்கான வினாக்கள்,


“4. ________________ is the monetary  supporter of a family”. (Page: 205)

“4. ___________________ குடும்பத்திற்கு  வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்”, (பக்.250)

      Breadwinner – குடும்பத்திற்காக சம்பாதிப்பவர் (பக்.249) என்று சொற்களஞ்சியம் விளக்குகிறது.

     "Breadwinner  is the monetary  supporter of a family", என்று ஆங்கில வழியில் எழுதிட முடியும்.

   
      "குடும்பத்திற்காக சம்பாதிப்பவர்  குடும்பத்திற்கு  வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்”,  என்று தமிழில் எழுதும்போது அபத்தமாகத் தோன்றும். இவற்றெல்லாம் சிந்தித்து வினா எடுப்பது அழகு!


      “தனிமனிதன்  ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர், தற்கான  ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும்  அதற்கான தேர்வுகளில  தேர்ச்சியும்  பெற்றிருக்க வேண்டும்”. (பக்.245&246)

“3. அனுமதி என்பது

அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்

4. ரக்‌ஷா பாதுகாப்பு

அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள்
இ) கார் இயக்குபவர்கள்
 ஈ) பயணிகள்”,  (பக்.250)

2. Permit refers to 
a) permission for driving b) permission for carrying goods c) certificate for drivers  d) registration of vehicles 

4. Raksha safe drive is a device useful for 
a) pedestrians b) motorists c) car drivers d) passengers

     இப்படிப் பொத்தாம் பொதுவாக 'அனுமதி  (Permit)  என்றால்' என்று வினவுவதை எப்படி விளங்கிக் கொள்வது?  மோட்டார் வாகனச் சட்டம் அல்லது சாலை விதிகளில் அனுமதி என்றால் ... ? என்று வினவலாம். ஆனால் இரண்டிற்கும் ஒரே விடை சாத்தியமில்லை.

      'ரக்‌ஷா பாதுகாப்பு இயக்கம்' என்று ஒரு இயக்கம் இல்லை. அது ஒரு வாகன ஒட்டிகளுக்குப் பயன்படும் மின்னணுப் பாதுகாப்புக் கருவியாகும். அதை சாலைப் பாதுகாப்பு என்பதைப் போல 'ரக்‌ஷா பாதுகாப்பு’ அல்லது 'ரக்‌ஷா பாதுகாப்பு இயக்கம்' (Raksha safe drive)  என்று குறிப்பிடுவது தவறு. ஒரு பாதுகாப்புக் கருவியை நேரடி மொழிபெயர்ப்பில் இயக்கமாக்கிய கொடுமையை என்னவென்பது?

     இந்த ரக்‌ஷா பாதுகாப்புக் கருவி மோட்டார் வாகன ஓட்டிகள், கார் இயக்குபவர்கள், பயணிகள் ஆகியோருக்கும் பயன்படக்கூடியது தானே! ஒரு விடைகளை எப்படித் தேர்ந்தெடுக்க இயலும்?  இதையும் 'எப்படியும் கேட்போம்' உத்தியில் சேர்க்கலாம் போலும்!

    பிரசாத் பிள்ளை தனது நண்பர் ஜெயந்த் ஜெகதீஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த மின்னணுக் கருவியை   eLsys Intelligence Devices Pvt. Ltd. என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இம்மாதிரி ஒரு கருவியை வடிவமைக்கும் எண்ணம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் விபத்துகளில் சிக்கிய அனுபவத்தில் கிடைத்தது. இதன் மூலம் ‘Golden Hour’ எனப்படும் குறித்த காலத்தில் விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களைக் காக்க முடியும். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன.  


  • மேம்பட்ட செயலிழப்பு உணரிகள்
  • ஜி.பி.எஸ். கண்காணிப்பான்
  • ஓட்டுநர் செயல்திறன்
  • தாக்கம் கண்டறிதல்
  • அவசரச் சேவைகள்
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி தெரிவித்தல்
  • ஸ்மார்ட் எச்சரிக்கை பொத்தான்
  • நேரலை வரைபடம் மற்றும் பயண விவரங்கள்
  • பிரேக் டவுன் உதவி


    சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள இக்கருவியை நாம் வாகனங்களில் வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும். இவற்றை வாகனங்களுடன் கட்டாயமாகப் பொருத்தித் தர இந்தியச் சட்டங்களில் இடமில்லை. காற்றுப்பைகள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாத வாகனங்கள் விற்குமிடம் இந்தியா என்றால் அது மிகையில்லை. இங்கிருந்து ஏற்றுமதியாகும் வாகனங்களில் அவ்வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில் போலியாக நடக்கும் விழிப்புணர்வுப் பரப்புரைப் பெருமைகளில் மூழ்கிவிட வேண்டியதுதான்!

   
(அபத்தங்கள் தொடரும்…)  

வியாழன், பிப்ரவரி 27, 2020

நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!

நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 63) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 



            புதிய பாடநூல்களில் பக்கத்திற்கு பக்கம் மொழியாக்கம், தகவல் பிழைகள் உள்ளிட்ட பல்வேறு அபத்தங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் 'Indian Ordnance Factory' ஐ 'ஒழுங்குமுறை தொழிற்சாலை', என்ற மொழியாக்கிச் சாதனை படைத்ததை முன்பு கண்டோம். (தொடர் எண்: 49)

   ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் பொருளியல் பகுதியில் 'சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு' என்றொரு பாடம் இடம்பெறுகிறது. அப்பாடத்தில்,
  
 “III. பின்வருவனவற்றைப் பொருத்தவும்:

1. நுகர்வோர் உற்பத்தி சட்டம் 1955
2. சட்ட பூர்வமான அளவீட்டு  சட்டம் 1986
3. இந்திய தர நிர்ணய  பணியகம் 2009
4. அத்தியாவசிய பொருட்கள்  சட்டம் 1986”  (பக்.240)

       ‘பொருத்துக’ நுகர்வோர் உற்பத்தி சட்டம்’ என்று உள்ளது. பாடநூல்கள் இப்போது நுகர்வோரையும் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன! ‘The Consumer Protection Act’ என்பதுதான்   ‘நுகர்வோர் உற்பத்தி சட்டம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ‘Protection’ ஐ  ‘Production’ ஆக மாற்றும் மொழிபெயர்ப்புப் புலமையை நீங்களும் பாராட்டலாமே!

 “III. Match the following: 

1. The Consumer Protection Act    1955
2. The Legal Metrology Act       1986
3. The Bureau of Indian  Standards Act   2009
4. The Essential Commodities  Act     1986”   (Page: 197)


    பாதுகாப்புச் சட்டம், அளவீட்டுச்  சட்டம், பாதுகாப்புத்  துறை என எந்த இடங்களிலும் வல்லினம் மிகுவதேயில்லை. ஆனால் ‘இயற்க்கை’ (பக்.240) என்று எழுதுவதில் மட்டும் குறைவில்லை.

  சில நுகர்வோர் தொடர்புடைய சட்டங்கள் தரப்பட்டுள்ளன.
“முக்கியமான சட்டங்கள்

  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986
  சட்ட அளவீட்டு சட்டம், 2009
  இந்திய தர நிர்ணய பணியகம், 1986
  அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955
கறுப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும்  அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு பொருட்களின் சட்டம், 1980”, (பக்.239)

  “Important Acts

  • The Consumer Protection Act, 1986
  • The Legal Metrology Act, 2009
  • The Bureau of Indian Standards Act, 1986
  • The Essential Commodities Act, 1955
  • The prevention of Black Marketing and  maintenance of supplies of essential Commodities Act, 1980”, (Page: 195)

   ‘The Bureau of Indian Standards Act, 1986’ ‘இந்திய தர நிர்ணய பணியகம், 1986’ என்று மாற்றப்பட்டு, ‘சட்டம்’ காணாமற்போகிறது.

  ‘The Legal Metrology Act, 2009’  ‘சட்ட அளவீட்டு சட்டம், 2009’ ஆக மாறுகிறது. ‘அளவியல் (Metrology)  வெறும்  அளவீடு (measurement) என மாறுகிறது. ‘சட்ட அளவியல் சட்டம்’ என்பதே பொருத்தமாக இருக்கும்.

   “The prevention of Black Marketing and  maintenance of supplies of essential Commodities Act, 1980”, என்ற சட்டத்தை,  “கறுப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும்  அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு பொருட்களின் சட்டம், 1980”, என்று குழப்பது ஏன்? “கள்ளச் சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாமைப் பொருள்கள் பராமரிப்புச் சட்டம் – 1980” என்பதை ஏன் தலைகீழாகச் சுற்றியடிக்க வேண்டும்? இப்பாடத்தைப் படிப்போர் ஏழாம் வகுப்பு மாணவர்கள் என்பதை உணர மறுப்பது ஏன்? ‘Black Market’ ஐ ‘கள்ளச்சந்தை’ என்பதே சரி.
 
“National Consumer Disputes Redressal  Commission (NCDRC)
State Consumer Disputes Redressal  Commission (SCDRC)
District Consumer Disputes Redressal Forum  (DCDRF)”,  (Page: 195)

     ஆகியவற்றை பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்கள்.
“தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்  (NCDRC)

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்  (SCDRC)

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்  (DCDRC)”,   (பக்.238)

    மாவட்டங்களில் இருப்பது, ‘மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்’ (District Consumer Disputes Redressal Forum  (DCDRF). இது ஆணையம் (Commission) அல்ல; மன்றம் (Forum).  

  “சரியான விடையை தேர்வு செய்க”, பகுதியில்,

1. எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
அ) காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது 
ஆ) பொருட்களின் விலை
இ) பொருட்களின் தொகுதி எண்
ஈ) உற்பத்தியாளரின் முகவரி

(…)

3. நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு  பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் 
அ) உற்பத்தியின் முதலீடு 
ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு 
இ) கடனில் பொருட்கள் வாங்குதல் 
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு” (பக்.240)
ஆங்கில வழியில்,

“Choose the correct  answer: 
1. In which case a consumer cannot complain against  the manufacturer for a defective product? 
a) Date of expiry unspecified 
b) Price of the commodity
c) Batch number of the commodity 
d) Address of the manufacturer
(...)
3. Consumers must be provided with adequate  information about a product to make
a) Investment in production
b) Decision in sale of goods
c) Credit purchase of goods
d) Decision in purchase of goods”, (Page: 196)

      இதில் முதல் வினாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விடைக்குறிப்புகளில் எதைத் தேர்வு செய்வது?  இந்த நான்கும் பொருள்களின் மீது இடம்பெற்றிருக்க வேண்டுமல்லவா!

  பாடப்பகுதி கீழ்க்கண்ட விளக்கத்தை அளிக்கின்றது.

       “நியாயமற்ற வர்த்தக நடைமுறை”  என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது  எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின்  விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை  ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, நியாயமற்ற  துறையை அல்லது நியாயமற்ற அல்லது  ஏமாற்றும் நடைமுறை பின்பற்றப்படுவது. இந்த நடைமுறைகளில் சில பின்வருமாறு: 

• தவறான பிரதிநிதித்துவம்

• பொருள்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட  தரநிலை, தரம் அல்லது தரத்தில் இல்லாத போது; 

• உபயோகித்தப் பொருள், புதுப்பிக்கப்பட்ட  பொருள்கள் புதியது போல விற்கப்படுவது.

• பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உரிமை  அல்லது நன்மை இல்லாதபோது; 

• தயாரிப்புகள் / சேவைகளுக்கு உரிமை  கோரப்பட்ட உத்திரவாதம் / பொறுப்புறுதி  இல்லாதபோது. 

• தயாரிப்பு அல்லது சேவையின் விலை தவறாக குறிக்கப்படும் போது. 

• பேரம் பேசும் விலையில் விற்பனை செய்வதற்கான தவறான விளம்பரம். 

• பரிசுகளை, பரிசு போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான  எந்த நோக்கமும் இல்லாமல் அவற்றை வழங்குவதற்காக. 

• தகுதிவாய்ந்த அதிகாரத்தால் அமைக்கப்பட்ட  பாதுகாப்புத் தரங்களுக்குள் வராத பொருட்களை விற்பனை செய்தல். 

• அதிக விலைகளை ஏற்றும் வகையில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்  அல்லது ஒரே மாதிரியான பொருட்களின்  விலையை உயர்த்தும் நோக்கத்துடன்  பதுக்கல் அல்லது பொருட்களை அழித்தல். 

• மோசமான பொருட்களை உற்பத்தி செய்தல்  அல்லது வழங்குதல் அல்லது சேவைகளை வழங்குவதில் ஏமாற்றும் நடைமுறைகளை 
பின்பற்றுவது”, (பக்.235)

   3 வது வினாவின் விடைக்குறிப்புகளும் குழப்பத்தை உண்டாக்குகிறது.

  உற்பத்தியின் முதலீடு  (Investment in production) என்று சொல்வது சரியாகுமா? தயாரிப்புப் பொருள்கள் (ingredients in  product) அல்லது தயாரிப்புக் கலவை (composition in  product) என்பதே சரியாக இருக்க முடியுமென்றுத் தோன்றுகிறது.

    ‘முற்றுரிமை’ (Monopoly) என்று மொழியாக்கம் செய்த பிறகு அடுத்த பத்தியில் ‘monopolistic Competition’ ஐ  ‘ஏகபோக போட்டி’ என்பது ஏன்? முற்றுரிமை – முற்றுரிமைப் போட்டி அல்லது  ஏகபோகம் - ஏகபோக போட்டி என்று ஒரே மாதிரியாகக் குறிப்பதில் என்ன தவறு?


  ‘ஒலிகோபோலி’ விளக்கத்தை படித்து ரசியுங்கள். இதன்மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் எதை அறிந்து கொள்வர்? இங்கு மொழியாராய்ச்சித் தேவையில்லை. இதைப்பற்றிய தெளிவான விளக்கமே தேவை. எல்லாம் ‘விக்கிபீடியா’வைக் காப்பியடிப்பதால் இவ்வாறு நிகழ்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!    

   இவர்களது மொழியாராய்ச்சியும் நகைப்பிற்கிடமாக உள்ளது. மேலும் பாடப்பகுதி பற்றியத் தெளிவான விளக்கத்தைத் தராமல் வெறும் சொற்சிலம்பமாடுவது வெறுப்பூட்டுகிறது. 

    “ஒலிகோபோலி என்ற  சொல் இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து  பெறப்பட்டது. ஒலிகோய் என்றால் சில  மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு.  எனவே ஒலிகோபோலி என்பது ஒரு  சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. இதில்  ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட  தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள்  உள்ளதைக் குறிக்கிறது”. (பக்.234)

‘Oligopoly’, ஆங்கில வழியில்,

  “The term oligopoly has been derived from  two Greek words, Oligoi means few and poly  means control. Therefore, oligopoly refers to  a market form in which there are few sellers  dealing either in homogenous or differentiated  products”. (Page: 192)

            இப்பகுதிகள்,



           என்ற இணையப்பக்கத்திலிருந்து வெட்டி (cut paste)  ஒட்டப்பட்டுள்ளன.

      
    Oligopoly   Market  System என்பது  ஒரு அல்லது சில நிறுவனங்களே ஒரு குறிப்பிட்ட துறையில் ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கும். ஓர் அங்காடியில் சில விற்பனையாளர்களும் பல வாங்குபவர்களும் இருக்கும் நிலை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இது வணிகப் போட்டியைத் தவிர்த்து  ஒற்றையாதிக்கத்திற்கு வழிவகுக்கும். இதை சிறு குழு முற்றுரிமை, சில நிறுவன முற்றுரிமை, சில நிறுவனப் போட்டி என்றுகூட சொல்லலாம்.

   எ.கா. ஜியோ (Jio)

     இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில்  இயங்கிய பல நிறுவனங்கள் இன்று காணமற்போயுள்ளன. இன்று ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel),  வோடபோன்-ஐடியா (Vodofone-Idea) ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும்  ஜியோ (Jio) 4G  சேவையை  மட்டும் தரும் தனித்த நிறுவனமாகவும்  விரைவில் இந்தச் சந்தையில் தனியாதிக்கத்திற்குள் வர வாய்ப்புண்டு.

    இந்திய அரசின் பொதுத்துறை 'மினிரத்னா' நிறுவனமான பாரத் சஞ்சார்  நிகம் லிட். (BSNL) இந்தப் போட்டியிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4G உரிமம் வழங்காமல் மத்திய அரசு இந்நிறுவனத்தை முடக்கியுள்ளது.

    இல்லையில்லை; BSNL க்கு 4G உரிமம் வழங்கப்பட்டுள்ளது என யாரும் சண்டைக்கு வரவேண்டாம். இந்த மூன்று நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்தியா முழுமைக்குமான உரிமம் வழங்கப்படவில்லை. இதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது அல்லது முற்றாக சாகடிப்பது என்பதே மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை.

    உலக மின்னணு வணிகச் சந்தையில் உள்ள அமேசான், உலகக் குளிர்பான சந்தையிலுள்ள கோக், பெப்சி, சிக்கன் சந்தையிலுள்ள KFC ஆகியனவும்  Oligopoly க்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியன.

    ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மிக எளிமையாச் சொல்ல வேண்டியவற்றை  ஆசிரியர்களுக்கே  புரியாமலும், தடித்த மொழியிலும்,  தான்தோன்றித்தனமாகவும்  பாடநூல்கள் எழுதும் ஆசிரிய மற்றும்   பேராசிரியப் பெருந்தகைகள்  இதைக் கொஞ்சம்  கவனிப்பார்களாக!

(அபத்தங்கள் தொடரும்…)