திங்கள், பிப்ரவரி 24, 2020

எப்படியும் கேட்போம்... இன்னொரு (moment) கணம்!


எப்படியும் கேட்போம்...  இன்னொரு  (moment) கணம்!


மு.சிவகுருநாதன்

 
     தமிழகப் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேர்வுத்துறையின் 'எப்படியும் கேட்போம்', கொள்கை முடிவின் படி  கீழ்க்கண்ட வினாக்கள் தமிழ் ஆங்கிலம் என இரு பயிற்று மொழிகளிலும் எவ்வாறு  வினவப்படுவது என்பதை  மேலும் அறிந்து கொள்ள   உதவும்.



 
   பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளில் 16 வது வினா, 

"Who were the three prominent dictators of the the Post World War I?", 

தமிழ் வழியில், 

"முதல் உலகப் போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சரத்துக்களைக் குறிப்பிடுக", 

என்றும் கேட்கப்பட்டுள்ளது.
 
     இம்மொழியாக்கத்திற்கு சாகித்ய அகாடமி அல்லது ஞானபீட விருதுகளைப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

     இப்படி மொழிபெயர்க்க முடியுமா என்பது ஒரு புறமிருக்க, 'சரத்துக்கள்' என்றால் என்ன?

'சரத்'  என்ற பெயருடைய பலர் எனவும் கொள்ளலாம்!

'ஷரத்து' என்பதுதான் இவ்வாறு திரிந்தது காண்க. 

இதைப்  'பிரிவு'  என்றால் ஆகாது; பிரிவுகள் என்றாலும்  ஆகவே ஆகாது. 

எனவே, 'சரத்துக்கள்' என்று நீள்வதின் பொருளறிந்து மகிழ்வெய்துக.

   முதல் உலகப்போர் முடிவில் ஏற்பட்ட வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் மூன்று பிரிவுகள் என்பதாக ஆராய்ந்தறிக.

   முதல் உலகப் போருக்குப் பிந்தைய மூன்று சர்வாதிகாரிகள் யார்? என்று நீங்கள் கருதினால்  உங்கள் மொழிப்புலமை குறித்து  ஐயுற வேண்டியிருக்கும்.

   ஹிட்லர், முசோலினி இருவர் தானே சர்வாதிகாரிகள்  என்று மூளையைக் கசக்குபவர்கள்  HOT ஆனவர்கள் எனவும் உற்றறிக.

   இருப்பினும் மூன்றாவது ஆளைக் கண்டடையா விட்டால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது உறுதி!

   "எப்படியும் கேட்கும்"  கொள்கை முடிவு பற்றி  உங்களுக்குத் தெரியவில்லையெனில்  இவ்வாண்டு மார்ச் 31 க்குள்  நிதி ஒதுக்கீடுகளைக்  'காலி' செய்ய நடக்கும் பயிற்சிகளை நாடிப் பயன் கொள்க.
 
     தமிழ்நாட்டின் அட்சப்பரவல் (வினா எண்: 8) என்ற வினாவிற்கு, 

'8° 4' வ முதல் 13° 35' வ வரை'      என்பதற்குப் பதிலாக 

'8° 5' வ முதல் 13° 35' வ வரை', 

என்று தவறான விடை அளிக்கப்பட்டுள்ளது.

     இதுவும்  ‘எப்படியும் கேட்கும்’  கொள்கை முடிவு உத்தி என்பதறிக. உயர்சிந்தனை என்பதற்கும் உங்களுடைய ரத்த அழுத்தத்தை உயர்த்தும் நிகழ்வுகளுக்கும் HOT என்று பொருளுணர்ந்து ஆறுதலடைக.

வளர்க எப்படியும் கேட்போம் கொள்கை!
வாழ்க  HOT உருவாக்கிகள்!!
வீழ்க மாணவர்களும் ஆசிரியர்களும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக