தமிழ் மற்றும் திராவிடக் கட்டடக்கலைகள் எவை?
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 58)
7,
8 வகுப்புகளின் மூன்றாம் பருவப்
பாடநூல்கள் ஒரு பார்வை:
ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ
வரலாற்றுப்பகுதியில் ‘தமிழகக் கலையும் கட்டடக்கலையும்’
என்ற பாடத்தின் தொடர்ச்சியாக…
“தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச
பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும் திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம்,
அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன”. (பக்.142)
எது திராவிட, தமிழ்க் கட்டடக்கலை? மேலும் ஐந்து
என்பதைத்தவிர பஞ்சபாண்டவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. திரௌபதியை
பஞ்சபாண்டவர்களில் ஒருவரா? இதெல்லாம் வெறும் நம்பிக்கைகளே!
“இரதங்களில் குறிப்பாக அர்ச்சுன, பீம,
தர்மராஜா இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள்
மாடக் குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடக்குழிகள் ஆண், பெண் தெய்வங்கள், அரசர்கள் ஆகியோரின்
சிற்பங்களையும் புராணக்
காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் கொண்டுள்ளன. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன்
தவமிருக்கும் காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பாகும். இக்கருங்கல் பாறை ஏறத்தாழ 100 அடி
நீளமும் 45 அடி உயரமும் கொண்டதாகும்”. (பக்.142)
இதுகுறித்து
எனது ‘கல்விக் குழப்பங்கள்’ (பாரதி புத்தகாலயம், வெளியீடு: மார்ச் 2017) நூலில் இடம்பெற்ற
கட்டுரையொன்றை இங்கு பதிவிடுகிறேன்.
மாமல்லபுரத்துச் சமணச்சிற்பங்கள் மற்றும் கோயில்கள்
பல்லவர்
ஆட்சிக் காலத்திற்கு முன்பு மல்லை அல்லது கடல் மல்லை என வழங்கப்பட்ட மாமல்லபுரம்
பல்லவர்களின் துறைமுக நகராக விளங்கியது. முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் தனது
சிறப்புப் பெயர்களில் ஒன்றான மாமல்லன் எனும் பெயரை இந்நகருக்குச் சூட்டினான்.
மாமல்லபுரம் பிற்காலத்தில் மகாபலிபுரம் எனத் திரிந்தது. மகாபலிச்
சக்கரவர்த்திக்கும் இந்நகருக்கும் யாதொரு தொடர்புமில்லை.
இன்றும் சிற்ப நகராக விளங்கும்
மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுனன் தபசு’ அல்லது ‘பகீரதன் தபசு’
என்கிற சிற்பம் புகழ்பெற்றது. இவ்வாறே
அழைக்கப்படும் இவற்றின் படம்கூட பாடநூலின் அட்டைப்படத்தில் இடம்பெற்றதுண்டு.
இச்சிற்பங்கள் விளக்கும் உண்மைக்கதையை மயிலை சீனி.வேங்கடசாமி தனது ஆய்வுகள் மூலம்
வெளிப்படுத்துகிறார்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட
இச்சிற்பம் சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையில்
அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் வன பர்வத்தில் அர்ச்சுனன் தபசு செய்து
சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் கதை என ஒரு சாரார் நம்புகின்றனர். இதையே நமது
பாடநூற்களும் வழி மொழிகின்றன.
ஒற்றைக்காலில் நின்று கைகளை உயர்த்தித் தவம்
செய்வது அர்ச்சுனன் ஆகவும் நான்கு கைகளுடன் காணப்படும் தெய்வ உருவம் சிவன் ஆகவும்
கற்பனை செய்யப்படுகிறது. தபசு செய்யும் அர்ச்சுனனிடம் சிவன் வேடன் உருவம் பூண்டும்
பார்வதி வேட்டுவச்சி
உருவம் பூண்டும் சென்றதாக புராணம். ஆனால் இத்தகைய
உருவங்கள் ஏன் காணப்படவில்லை? மாறாக இக்கதைக்குத் தொடர்பில்லாத நாககுமாரர்கள்,
தெய்வகணங்கள், யானைகள், கங்கை, கோயில்,
தலையில்லாத மூன்று உருவங்கள் ஏன் உள்ளன? என மயிலையார் வினா எழுப்புகிறார். இந்திய
சிற்ப முறைகளுக்கு முரணாக சிவன், அர்ச்சுனன் போன்ற உருவங்களைவிட யானை போன்ற
உருவங்கள் பெரிதாக இருப்பது இது அர்ச்சுனன் தபசை குறிப்பதல்ல என்பதற்கு காரணமாகக்
கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்துகிறார்.
மற்றொரு நம்பிக்கையான பகீரதன் தபசு கதையில்
விண்ணிலிருந்து கங்கை மிக விரைவாக பூமியில் இறங்கியபோது அதைத் தன் சடையில் தாங்கிக்கொண்டதாக
இருக்கிறது. இங்கு சிவன் சடைமுடியுடன் காணப்படவில்லை. ஜடாமகுடத்திற்குப் பதிலாக
கிரீடமகுடம் இருப்பதும் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் அன்றி கதாயுதம் சிவனுடையது
அல்ல.
கங்காதர மூர்த்தியின் உருவங்கள்
பல்லவர் காலத்தில் அழகாக செதுக்கப்பட்டதுண்டு. (எ.கா.) திருச்சி மலைக்கோயில்) ஆனால் பகீரதன் தபசில் கங்காதரமூர்த்தி இல்லை.
இக்கதையில் இல்லாத யானைகள், நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி
அமர்ந்திருக்கும் முனிவர், கோயில் ஆகியன
இருப்பது பகீரதன் தபசு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக மயிலையார் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதசுவாமி
புராணத்தில் சொல்லப்படும் சகர சக்கரவர்த்தியின் (சகர சாகரர்) கதை இச்சிற்பத்தில்
விவரிக்கப்படுவதை மயிலையார் விளக்குகிறார். இது ராமாயணத்தில் வரும் சகர
சக்கரவர்த்தியின் கதையல்ல. அது வேறு, இது வேறு.
ஜீத சத்துரு எனும் அரசன் பாரத நாட்டை ஆண்டபோது
அவருக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் அஜிதன்; இளையவன் சகரன். மூத்த
குழந்தையே சமண சமய இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதர் ஆவார். இளைய மகன் சகரன்
தந்தைக்குப் பிறகு அரசுரிமை பெற்றான். சகர
சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து நவ (ஒன்பது) நிதிகளைப் பெற்றார். இது
வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்ததில்லை. சகர சாகரருக்கு 60,000
குழந்தைகள். இவர்களது பொதுப்பெயர் சாகர குமாரர் என்பதாகும்.
நைசர்ப்பம், பாண்டுகம், பிங்கலம், மகாபத்மம்,
காலம், மகாகாளம், மானவம், சங்கம், சர்வரத்தினம் ஆகியவை ஒன்பது வகையான
நியதிகளாகும். சர்வரத்தினம் ஜீவரத்தினம், அஜீவரத்தினம் என்னும் ஏழு ஏழு
உட்பிரிவைக் கொண்டது. அஜீவரத்தினத்தில் ஒன்று தண்டரத்தினம் ஆகும்.
கயிலாய மலை முதலாவது தீர்த்தங்கரரான ரிஷப
தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடம். விலை மதிக்கமுடியாத செல்வங்களைக் கொண்டு பரத
சக்கரவர்த்தி கோயில் கட்டியிருந்தார். கயிலாய மலைக்கு யாத்திரை வந்த சாகர
குமாரர்கள் பரத சக்கரவர்த்தி கட்டிய கோயிலைப் பாதுகாக்க, சுற்றி அகழி தோண்ட
விரும்பினர். நவநிதிகளில் ஒன்றான தண்டரத்தினத்தின் உதவியால் அகழி தோண்டி, அதில்
கங்கை நீரை இழுத்துவந்து பாய்ச்சினர். இதனால் பாதலத்தில் இருந்த நாகர்கள்
துன்புற்றனர். நாகராசன் சினமுற்று மதயானைபோல் வந்து தனது விஷக் கண்களால் நோக்க சகர
குமாரர்கள் எரிந்து சாம்பலாயினர்.
தன்மக்கள் மாண்டதையும் கங்கையின் வெள்ளப்
பெருக்கால் நாடுகள் அழிவதையும் அறிந்த சகர சக்கரவ்ர்த்தி தன் பேரன் பகீர்தனை
அழைத்து தண்டரத்தினத்தின் உதவியால் கங்கையை இழுத்துக் கடலில் விடச் சொன்னான்.
பகீரதன் கங்கை வெள்ளத்தை கடலில் கொண்டுபோய் விட்டான். இதுதான் ஜைன மதத்தில்
சொல்லப்படும் அஜிதநாதர் புராணக்கதையாகும்.
இச்சிற்பத்தை மேல்பகுதி, கீழ்ப்பகுதி என
இரண்டாகப் பிரிக்கலாம். மேல்பகுதி சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கி தவம் செய்து
நவநிதிகளைப் பெற்றதும், கீழ்ப்பகுதி சாகர குமாரர்கள் கயிலாய மலைக்கு வந்து அகழி
தோண்டியது, நாகர்கள் துன்பப்பட, நாகராசன் பார்வையில் சகர குமாரர்கள் இறந்துபட்டதையும்
விவரிக்கிறது.
நதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தாவிடில் அழிவு
ஏற்படும் என்பதும் கட்டுப்படுத்தினால் நன்மை உண்டாகும் என்பதையும் இச்சிற்பம்
மற்றும் கதை வழியே நமக்கு உணர்த்துகிறார்கள். மகேந்திர வர்மன் மாமண்டூரில் ஏரியை
வெட்டி அதற்கு சித்ரமேகத் தடாகம் என்று தன்னுடைய பெயரை வைத்தான். மகேந்திரவாடியில்
மகேந்திரத் தடாகம் என்ற ஏரியும் தோண்டப்பட்டது.
மேலும் கொடிக்கால் மண்டபம் குகையில் இருந்த
கொற்றவை சைவ சமயக் கலகத்தால் சேதமடைந்தது. ஐந்து ரதங்கள் என்று சொல்லப்படும்
பாறைக்கோயில்களுக்கு சூட்டப்படும் பெயர்களான அர்ச்சுனன், தர்மராஜா, பீமன்,
சகாதேவன், கணேசன் அல்லது திரெளபதி ஆகியவற்றுக்கும் பெயர்களுக்கும் தொடர்பில்லை.
திரெளபதி ரதம் துர்க்கை என்னும் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட
கோயிலாகும். இப்பாறைக் கோயில்களை மாடக் கோயிகள், சாதாரண கோயில்கள் என்று
இருவகையாகப் பிரிப்பர். இவற்றை மீண்டும் திராவிடக் கோயில்கள், வேசரக் கோயில்கள்
என்றும் பிரிக்கலாம்.
அர்ச்சுனன் ரதம், தர்மராஜா ரதம், சகாதேவ ரதம்
ஆகிய பாறைக்கோயில்கள் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தவை. பீம ரதம், கணேச ரதம் ஆகியவை
வேசரம் என்ற பிரிவில் வருபவை. எஞ்சியவை அனைத்தும் திராவிடம் என்னும் பிரிவில்
அடங்கும். (உம்) திரெளபதி ரதம். திராவிடக் கட்டிடக்கலைப் பிரிவைச் சார்ந்த இவற்றை
இளங்கோயில் என்றும் கூறுவர். இதற்கு வடமொழியில் ஶ்ரீகரக்கோயில் என்று
சொல்லப்படுகிறது.
(மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், சமயங்கள்
வளர்த்த தமிழ், சமணமும் தமிழும் போன்ற மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூற்களை
அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.)
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக