புதன், பிப்ரவரி 05, 2020

பிற்காலச் சோழர்களில் முற்காலச் சோழர்கள்! 


பிற்காலச் சோழர்களில் முற்காலச் சோழர்கள்! 


(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 56) 


7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 




      சங்ககாலம் என அழைக்கப்படும்  கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலகட்டத்தில் பழங்காலத் தமிழகப் பகுதிகளை  ஆண்ட சோழர்களை சங்ககாலச் சோழர்கள் என்று சொல்வது வழக்கம். கல்லணையைக் கட்டிய கரிகாற் சோழன் இவர்களில் அடக்கம். 

   ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் பாடநூலின் வரலாற்றுப் பகுதியில் ‘தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்’ (அலகு  2) என்ற பாடத்தில் புதிய காலப்பகுப்பு செய்யப்படுகிறது. அப்பகுப்பை அவர்களே பின்பற்றவில்லை என்பதே பாடம் சொல்லும் செய்தி.  

   “தமிழ்நாட்டில் கோவில்  கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி  ஐந்துகட்டங்களாக நடைபெற்றுள்ளது.  அவை:

1. பல்லவர் காலம் (கி.பி 600 - 850), 
2. முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850  - 1100),
3. பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 -1350),
4. விஜயநகர/நாயக்கர் காலம் (கி.பி.1350-1600),
5. நவீன காலம் (கி.பி.1600க்கு பின்னர்)”. (பக்.140)

    “In Tamil Nadu, the  evolution of temple architecture took place in five  stages:

(1) The Pallava Epoch (A.D. 600 to 850);
(2)  Early Chola Epoch (A.D. 850 to 1100);
(3) Later  Chola Epoch (A.D. 1100 to 1350);
(4) Vijayanagara / Nayak Epoch (A.D. 1350 to 1600); and
(5) Modern  Epoch (After A.D. 1600)”.  (Page:114)

   பல்லவர்களையும் பாண்டியர்களையும் இந்த முற்கால, பிற்கால விளையாட்டில் தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் முறையே பல்லவர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என்று குறிப்பிடுகின்றனர். முதற்காலம், இடைக்காலம், பிற்காலம் என பல்லவர்களை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வகைப்படுத்துவார்.
   
   விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் மூன்றாம் ராஜேந்திர  சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) ஈறாக உள்ள சோழ மன்னர்களைப் பிற்காலச் சோழர்கள் என்று வகைப்படுத்துவதே வரலாற்றாசிரியர்களின் வழக்கம். இவர்களில்  விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர  சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070) முடிய உள்ள காலகட்டத்தையும் அரசர்களையும் (கி.பி. 846 – கி.பி. 1070) விஜயாலயச் சோழமரபினர் என்றும், முதலாம் குலோத்துங்க  சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) முதல் மூன்றாம் ராஜேந்திர  சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) ஈறாக உள்ள அரசர்களையும் காலகட்டத்தையும் (கி.பி. 1070 – கி.பி. 1279) சாளுக்கிய சோழ மரபினர் என்று கூறுவதும் மரபு. ஆனால் இங்கு புதிய வரலாற்றுக் கதையாடல் நிகழ்த்தப்படுகிறது.


‘முற்காலச் சோழர்கள் காலம்’ என்ற தலைப்பில்,

     “கி.பி.850 இல் விஜயாலய சோழன்  காலத்தில் முக்கியத்துவம் பெறத்துவங்கிய  சோழர்கள் தொடர்ந்து அப்பகுதியில் நானூறு  ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர். முற்காலச்  சோழர்களின் கோவில் கட்டடக்கலைக்கு  தமிழ்நாட்டில் திண்டிவனத்திற்கு அருகேயுள்ள  தாதாபுரத்திலுள்ள கோவிலைக் குறிப்பிட்டுச்  சொல்லலாம். திருப்புறம்பியம் கோவில் முற்காலச் சோழர்களின் கோவில்  கட்டக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப்  பின்பற்றி அமைந்தததாகும். கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் (மாடக் குழிகள்) இருந்தால் அதை செம்பியன்  மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம். செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட முற்காலக் கோவில்களுக்குத் திருப்புறம்பியத்திலுள்ள கோவில் ஓர் எடுத்துக்காட்டாகும்”.  (பக்.144 & 145)

‘பிற்காலச் சோழர்கள் காலம்’ எனும் தலைப்பில்,  

    “தஞ்சாவூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக் கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஏறத்தாழ கி.பி.1009இல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரிலுள்ள சிவன் கோவில் ராஜாராஜன் காலத்து செல்வப்  பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்”. (பக்.145)

   ‘The Early Chola Epoch’ என்ற தலைப்பில்,  

    “The Cholas came to limelight in A.D.  850 under Vijaylaya Chola and continued to govern the region for about four hundred years. For the Early Chola epoch, the temple at Dadapuram, near Tindivanam in TamilNadu, is worth mentioning. The early Chola architecture followed  the style of Sembian Mahadevi. Temples with  the increased number of devakoshta (niche)  figures can be classified as belonging to the  Sembiyan style. Tiruppurambiyam is an  illustrious example of early temple that was  re-fashioned in the days of Sembiyan  Mahadevi”. (Page: 117)


     ‘Later Chola Epoch’ எனும் தலைப்பில்,

    “The maturity attained by Chola  architecture is reflected in the two magnificent  temples of Thanjavur and Gangaikonda Cholapuram. The magnificent Thanjavur Big  Temple dedicated to Siva, completed around A.D.1009, is a fitting memorial to the material achievements of the time of Rajaraja”. (Page: 117&118)

     400 ஆண்டு சோழர்கள் என்று சொல்லிவிட்டு உடன் முற்காலச் சோழர்கள் என்கின்றனர். பிற்காலச் சோழர்கள் காலத்திற்கு கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர் ஆகிய இரண்டையும் எடுத்துக்காட்டுகின்றனர்.  இவையிரண்டும்

முதலாம் ராஜராஜ  சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014)
முதலாம் ராஜேந்திர  சோழன் (கி.பி. 1012 – கி.பி. 1044) 

        ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டவை. இவையிரண்டும் பிற்காலச் சோழர்கள் என்றால்,

முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850  - 1100)
பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 -1350)

      என்று பாடத்தின் தொடக்கத்தில் செய்யப்பட்ட வரையறைக்கு என்ன பொருள்? இவர்களும் குழம்பி குழந்தைகளையும் குழப்புவது ஏன்?  அதுவும் முதலில் கங்கைகொண்ட சோழபுரம் சொல்லப்படுகிறது.

    ‘மூலாதார நூல்கள்’ பட்டியலில் கீழ்க்கண்ட நூல்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் எங்கிருந்து இத்தரவுகளைப் பெற்றனர் என்பது விளங்கவில்லை.


1. K.A. Nilakanta Sastri, A History of South  India: From Pre-Historic Times to the Fall  of Vijayanagar Empire (Oxford University  Press, 1997) - with an introduction by  R. Champakalakshmi.
2. Burton Stein, A History of India, Oxford  University Press, 2004.
3. Crispin Branfoot, “The Architectural Sculpture of the South Indian Temples, 1500-1700,”  Artibus Asiae, vol. 62, No.2, 2002. 
4. Crispin Branfoot, “The Tamil Gopura:  From Temple Gateway to Global Icon,” ARS  Orientalis, vol. 45, 2015.
5. https://www.britannica.com.  (பக்.149)

  கீழ்க்கண்ட வினாக்களும் இது குறித்து கேட்கப்படுகின்றன.

“I.சரியான விடையைத் தேர்வு செய்க.

3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின்  சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

2. முற்கால சோழர் கட்டடக்கலை  ________________ பாணியைப் 
பின்பற்றியது
3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ________________ ஆகும்
4. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ________________ பெயர்பெற்றது”. (பக்.150)

4. பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.

அ) கி.பி. 600 – 850 –
ஆ) கி.பி. 850 – 1100 –
இ) கி.பி. 1100 – 1350 –
ஈ) கி.பி. 1350 – 1600 – 


V. சரியா ? தவறா?

2. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின்  சமகாலத்தவர் ஆவர். (பக்.151)

   திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில்  பிறந்ததாகும். காலப் போக்கில் பரிணாமச்  செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு  அடைந்தது. தமிழ் திராவிடக் கட்டடக்  கலையின் மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள  ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில்  முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) எடுத்துக்காட்டுகளாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு  முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவிலில்லை. அதற்கு முந்தைய  கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டுமெனவும் அதன் காரணமாக இயற்கை சக்திகளால் அழிவுக்கு  உள்ளாகி இருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். (பக்.140)

   “திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில்  பிறந்தது”, என்றால் தமிழ்நாட்டில் என்று பொருளாகிறது. பிற திராவிடப் பகுதியின் மண்ணுக்கு இக்கலை உரிமையானது இல்லையா? “அக்கலை பரிணாமச்  செயல்பாட்டின் வழியாய் மேம்பாடு  அடைந்தது”, என்பதன் பொருள் யாது? இதில் தாக்கம் ஏதுமில்லையா? கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு  முந்தைய நினைவுச்சின்னங்கள் மரத்தால் மட்டும் ஆனவை என்பது அபத்தமில்லையா? செங்கற் கோயில்களே இல்லையா; வெறும் மரத்தால் மட்டுமே கட்டப்பட்டனவா? எதன் அடிப்படையில் இவ்வாறு எழுதப்படுகிறது? எந்த வரலாற்று ஆசிரியர் இவ்வாறு சொன்னார்? வெறும் பெருமை பேசுவது மட்டுமே வரலாறாகிவிடாது.
 
   மகாபலிபுரம் சிற்பங்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்த வழமையான கதையாடல்களை நிகழ்த்திவிட்டுத் திராவிட, தமிழ் பாணி பெருமை பேசுவதில் பொருளில்லை.  


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக