வினாத்தாள்
வடிவமைப்புக் குழப்பங்கள்
மு.சிவகுருநாதன்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு “மாதிரி வினாத்தாளில்
உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்கள் / ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது”,
என்று தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை சொல்கிறது. மேலும் அவ்வறிக்கையில்,
“வினாத்தாள்
கட்டமைப்பு (Blue Print) இல்லை என்பதால் வினாக்கள் எந்தப் பாடத்திலிருந்து எந்த வகையிலும்
(வினாத்தாள் வடிவமைப்பில் (Pattern) மாற்றமின்றி)
கேட்கப்படலாம். மாதிரி வினாத்தாள் என்பது வடிவமைப்பான பகுதி / பிரிவுகள் மதிப்பெண்கள்
ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் / ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாளில்
கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே (பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, தலைப்பு வினாக்கள்,
வரைபட வினாக்கள், வடிவியல் வினாக்கள் மற்றும் பல) கேட்கப்படவேண்டும் என்று கட்டாயமில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும்,
ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை
அனைத்து மாணவர்கள் / ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ள அறுவுறுத்த வேண்டும்”, என்றும் அறிவுறுத்துகிறது.
இதையெல்லாம்
பார்க்கும்போது மெத்தப் படிக்காத சாமான்ய மாணவர்கள் / ஆசிரியர்களுக்குக் கீழ்க்கண்ட
அய்யங்கள் / குழப்பங்கள் எழுவது தவிர்க்க இயலாததாகிறது. முதலில் Blue Print, Pattern
ஆகியவற்றுக்கு Oxford அகராதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
Blue Print (n) – a photographic plan or a
description of how to make, build or achieve something – ஒன்றை உருவமைப்பதற்கான,
கட்டுவதற்கான அல்லது செயல் நிறைவேற்றத்திற்கான நிழற்படத் திட்ட வரைவு அல்லது விளக்க
வரைவு; முதனிலை பணித்திட்ட வரைவு.
Pattern (n) – design, a set of instructions
or shape to cut around that you use in order to make something – ஒன்றை உருவாக்குவதற்குப்
பயன்படுத்தும் உருப்படிவம், விளக்கக் குறிப்புகள் அல்லது வடிவமைப்பு மாதிரி.
- வினாத்தாள் கட்டமைப்பு (Blue Print) என்றால் என்ன? வினாத்தாள் வடிவமைப்பு (Pattern) என்றால் என்ன? இவையிரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் யாவை?
- Blue Print இல்லாமல் ஒரு வினாத்தாள் தயாரிக்க இயலுமா? இனி திட்டமிடல் இன்றியே அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என கொள்கை முடிவு எடுக்க முடியுமா?
- சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன?
- பொதுத்தேர்வுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் மாணவர்களை இவ்வாறு குழப்புவது நியாயமா?
- காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வடிவமைப்பிலும் (Pattern) மாவட்டத்திற்கொன்றாக வினாக்கள் அளித்து இதுவே பொதுத்தேர்வு மாதிரி என்று எவ்வாறு சொல்ல முடிகிறது?
- தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்கள் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்றால் ஏன் அவை வெளியிடப்பட்டன?
- எங்கிருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று சொல்வதுதான் Blue Print இன் வேலையா?
Blue Print என்பதை வினாத்தாள் வரைபடம் என்று குறிக்கலாம்.
எந்தப்பாடம் அல்லது பகுதியிலிருந்து வினா என்று சொல்வது மட்டும் இதன் வேலையல்ல.
வினாவின் வகைகள் (எ.கா. சமூக அறிவியல்)
- சரியான விடையைத் தேர்வு செய்க.
- பொருத்துக.
- கோடிட்ட இடங்களை நிரப்புக.
- சரியா, தவறா?
- வரலாறு நிலவரைபடம்.
- புவியியல் நிலவரைபடம்.
- குறுகிய விடை தருக.
- வேறுபடுத்துக.
- காரணம் கூறுக.
- தலைப்பு வினாக்கள்.
- விரிவான விடை தருக.
மதிப்பெண்கள் / மொத்த மதிப்பெண்கள்
- ஒன்று (1)
- இரண்டு (2)
- நான்கு (4)
- ஐந்து (5)
- நூறு (100)
வினாக்களின் எதிர்பார்க்கப்படும்
அடைவுகள்
- அறிதல்.
- புரிந்துகொள்ளுதல்.
- பயன்படுத்துதல்.
- திறன்.
ஒவ்வொரு பிரிவிற்குமான மதிப்பெண்
பங்கீடு (சமூக அறிவியல்)
- வரலாறு
- புவியியல்
- குடிமையியல்
- பொருளியல்
மொழிப் பாடங்களில்
- செய்யுள்
- உரைநடை
- இலக்கணம்
- மொழிப்பயிற்சிகள்
என்று மதிப்பெண்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
இவை போன்ற பல்வேறு கூறுகள் கொண்டதே வினாத்தாள் வரைபடம் (Blue Print) என்பது நமது புரிதல்.
எப்படி இலக்கணத்தை மட்டுமே வினா அமைக்கக்கூடாதோ, சமூக அறிவியலில் வரலாறு பகுதியிலிருந்து
மட்டும் வினாக்கள் கேட்கமுடியுமா? இதற்கு Blue Print இல்லை என்ற வாதம் செய்வது சரியாகுமா?
Blue Print இல்லாமல் வினாத்தாள் தயாரிக்கும் முறைகளை கல்வியாளர்கள் விளக்க வேண்டும்.
சென்ற பாடத்திட்டத்தில் Blue Print பாடநூலில்
இடம் பெற்றது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.) அதில் அலகுவாரியாக இடம்பெறும் வினாக்களின்
எண்ணிக்கைப் பட்டலிடப்பட்டிருந்தது. குறிப்பாக பொருளியல் (இரண்டில் ஒன்று), குடிமையியல்
(நான்கில் ஒன்று) ஆகியவற்றில் மிகக்குறைவான பாடங்களைப் படித்தால் போதும் என்ற நிலை
அதிலிருந்தது. கூடுதல் தேர்வு வினாக்களும் (choice) அதில் இடம்பெற்றன. இது தவறான புரிதலால்
ஏற்பட்ட சிக்கல். இதற்காக வினா வரைபடம் இல்லாமல் தேர்வு நடத்துகிறோம் என்று சொல்வது
சரியானதல்ல.
வினா வரைபடம் (Blue Print) இல்லாமல் மாதிரி வினாத்தாள்
எப்படி வெளியிட முடியும்? அதன் அடைப்படைகள் என்ன?
குறிப்பாக சமூக அறிவியலில் மதிப்பெண் பங்கீட்டுக்காக
மட்டுமே மாதிரி வினாத்தாள் என்றால் அதன் பொருள் என்ன? வரலாறு, புவியியல், குடிமையியல்,
பொருளியல் போன்றவற்றிலும் இல்லை. மதிப்பெண்கள் அடைப்படையிலும் இல்லை என்று கூறுவது
எவ்வாறு நியாயமாகும்? மதிப்பெண்களைக் கலைத்துப் போடுவது என்ன வகையான வடிவமைப்பு அல்லது
பங்கீடு? மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டியதே இல்லை. எட்டாம் வகுப்பிலும் இதே நிலைதான்.
- 14X1=14
- 10X2=20
- 10X5-50
- 2X8=16
என்று மதிப்பெண்களைப் பிரிப்பதற்கு எதற்கு மாதிரி
வினாத்தாள்கள் வெளியிட வெண்டும்? ஒரு மதிப்பெண் வினாக்கள் ஐந்தை ஒன்றாக சேர்த்து 5
மதிப்பெண்கள் வினா என்போம்; அவற்றிற்லுப் பதிலாக விரிவான விடைதருக வினாவைக் கேட்போம்
என்று பிடிவாதம் செய்வது எவ்வகை நியாயம்? நான்கு ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் இரண்டை
ஒன்றாக்கி 8 மதிப்பெண் வினாவாக்குவது எதனால்? 1 மதிப்பெண் வினாக்களுக்குப் பதிலாக 5 மற்றும் 8
மதிப்பெண் வினாக்கள் கேட்பது அநியாயமல்லவா! 8 மதிப்பெண்கள் வினாக்கள் பற்றிய அறிமுகம்
மாணவர்களுக்கு உண்டா?
இதே மதிப்பெண் பங்கீடு கணிதப் பாடத்திற்கும் உள்ளது.
ஆனால் அங்கு 1 மதிப்பெண் வினாவிற்குப் பதிலாக 5, 8 மதிப்பெண்கள் கேட்கப்படவில்லை. மதிப்பெண்
பங்கீடு பாடத்தின் பிரிவுகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டியது அவசியம்.
சமூக அறிவியல் தவிர இதர பாடங்களில் இந்தக் கொடுமை
இல்லையே ஏன்? உதாரணமாக ஆங்கிலத்தில் 8 மதிப்பெண் Comprehension வினாவிற்குப் பதிலாக
Essay type வினா கேட்கலாமல்லவா! கணிதம் செய்முறை வடிவியல், வரைபடத்திற்குப் பதிலாக
பெருங்கணக்குகளை ஏன் கேட்பதில்லை? சமூக அறிவியலில் வாரத்திற்கு 5 பாடவேளைகள் என்ற பல
இடையூறுகளைப் போல பொதுத்தேர்வு வினாவிலும்
பழிவாங்கல்கள் தொடரலாமா?
‘சரியான விடைகளைத் தேர்வு செய்க’ எனக்கேட்டு மாற்றுவிடைகள்
அளிக்காமலிருப்பதும், தமிழக நிலவரைபடத்தை அளித்து (படம் இணைக்கப்பட்டுள்ளது.) அரபிக்கடல்,
சோழமண்டலக் கடற்கரையையும் குறித்துக்காட்டச் சொல்வது அபத்தமாக இல்லையா?
10 ஆம் வகுப்பில் அரபிக்கடல் மற்றும் சோழமண்டலக் கடற்கரையைக் குறிக்க அளிக்கப்படும் தமிழ்நாடு நிலவரைபடம்... |
ஒரே பாடத்தில்
இடம்பெறும் பொருத்துக வினாவை அப்படியே அடிபிறழாமல் கேட்பதும், காலாண்டு, அரையாண்டு,
திருப்புதல் தேர்வு என ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரி வினாக்கள் கேட்பதும் இதுவே பொதுத்தேர்வு
மாதிரி என்பதும் வினாத்தாள் பற்றி பேசவோ, கோரிக்கை வைக்கவோ உரிமையில்லை என்பதும் அறிவுப்பூர்வமானதா
என்பதை கல்வித்துறை சார்ந்த சான்றோர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதிக மாணவர்களைப் பெயிலாக்கி வீட்டிற்கும் வேலைக்கும் அனுப்ப, சமூக அறிவியல் பாடத்தைத்
துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த வேண்டாமென்றும் கோருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக