வெள்ளி, பிப்ரவரி 14, 2020

வரலாறு எப்படியும் எழுதுவோம்! வினாக்களை எப்படி வேண்டுமானாலும் கேட்போம்!!


வரலாறு எப்படியும் எழுதுவோம்!

 வினாக்களை எப்படி வேண்டுமானாலும் கேட்போம்!!  


(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 57) 


7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 





       பாடங்களை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம். நாங்கள் எழுதுவதுதான் சரி என்று ஒருபுறமும், வினாத்தாள் எப்படியும் இருக்கும் என்ன மாதிரி வேண்டுமானாலும் வினாக்கள் கேட்போம் என்று மறுபுறமும் அதிக அடிகளை வாங்குவது சமூக அறிவியல் பாடம் என்றால் அது மிகையில்லை. வடிவேலுவின்  திரைப்பட நகைச்சுவை போல   எதுவும் செய்வோம் என்பது இன்றைய பள்ளிக்கல்வியின் அவலம். திருவாரூர் மாவட்டம் தன் பங்கிற்கு தமிழ், சமூக அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கும் ஒரே நாளில் (17.02.2020) இரண்டாம் திருப்புதல் தேர்வை நடத்துகிறது. இரு தேர்வுகளுக்கு இடையில் 30 நிமிடங்கள் இடைவெளி விட்ட பெருந்தன்மையைப் பாராட்ட சொற்களில்லை!

      பொதுத்தேர்வுகளில் மட்டுமல்ல பாடநூலிலும் கூட “எப்படியும் கேட்போம்” என்பதை முன்பேத் தொடங்கிவிட்டார்கள். இதை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். இன்னும் புதிய எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.

    ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் வரலாறு பாடப்பகுதியில் ‘தமிழகக் கலையும் கட்டடக்கலையும்’ என்றொரு பாடம். இதிலுள்ள ஒருபகுதி அபத்தங்களை முன்பு கண்டோம். இப்போது மறுபகுதி அபத்தங்கள்!

  

“I.சரியான விடையைத் தேர்வு செய்க”, வில் கீழ்க்கண்ட வினா இருக்கிறது.

“5. வைகுண்ட பெருமாள் கோயிலைக்  கட்டியவர் யார்?

) மகேந்திரவர்மன் 
) நரசிம்மவர்மன் 
) ராஜசிம்மன் 
) இரண்டாம் ராஜராஜன்”, (பக்.150)

      பாடப்பகுதியில், “காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் இரண்டாம் நந்திவர்மனால்  கட்டப்பட்டது”, (பக்.141) என்றுள்ளது. ஆனால் விடைக்குறிப்புகளில் இரண்டாம் நந்திவர்மனைக் காணோம்! கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்!

  பிற்காலப் பல்லவ அரசர்களில்  மூன்று மகேந்திரவர்மன்கள்  மற்றும்  இரு  நரசிம்மவர்மன்கள் உண்டு. இவர்களது காலம்,

முதலாம்  மகேந்திர வர்மன் (கி.பி. 615 – கி.பி. 630)
முதலாம் நரசிம்ம வர்மன் – மாமல்லன் (கி.பி. 630 – கி.பி. 668)
இரண்டாம்  மகேந்திர வர்மன் (கி.பி. 668 – கி.பி. 670)
இரண்டாம்  நரசிம்ம வர்மன் - ராஜசிம்மன் (கி.பி. 700 – கி.பி. 728)
மூன்றாம்  மகேந்திர வர்மன்

    ‘ராஜசிம்மன்’ என்பது இரண்டாம்  நரசிம்ம வர்மனின் வேறு பெயர் அல்லது பட்டப்பெயர். இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமான வினாக்கள் கேட்பதற்கு உயர் சிந்தனை (HOT)  என்று பெயராம்! புல்லரிக்கின்றது!

“குடைவரைக் கட்டடக்  கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்  பல்லவ அரசர் மகேந்திரவர்மன் ஆவார்”.  (பக்.141)

மகேந்திர வர்மன் I, II என்பதைச் சொல்லாமல் பாடமெழுதுவது ஏன்?

“III. பொருத்துக”, வினா கீழ்க்கண்டவாறு உள்ளது.

1. ஏழு கோவில்கள்மதுரை
2. இரதிமண்டபம்தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர்கோவில்திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில்கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம்ஆழ்வார் திருநகரி    (பக்.150)

   கொஞ்சம் பாடப்பகுதிக்குள் செல்வோம்.

   “ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும்,  மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக்  கோவில்கள் பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மமவர்மனால்  எழுப்பப்பட்டவை ஆகும். அவை  தென்னிந்தியாவின் மிகப் பழமையான கட்டுமானக்  கோவில்களாகும். ஒரே பாறையில் ஒரு  கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி  இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்  பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன”. (பக்.141)

       கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்தன என்கிற நம்பிக்கையின் அடைப்படையில் வரலாறு எழுதுவது எப்படி? அதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? சிந்து சரஸ்வதி நாகரிகம் போல ஏதேனும் உள்நுழைக்கும் உத்தியா?


“3. பொருந்தாததைக் கண்டுபிடி” வினா நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது.

  “திருவில்லிபுத்தூர் அழகர்கோவில்ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை”,  (பக்.151)

முதலில் பாடப்பகுதியைக் காண்க.


    “வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்திண்டுக்கல்லுக்கு அருகே தாடிக்கொம்பில்  அமைந்துள்ள கோவில்கள், திருநெல்வேலிக்கு  அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள  கோவில், தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்குள் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவில்  ஆகியவை இக்காலப்பகுதியைச் சேர்ந்த  சிறப்பித்துச் சொல்லவேண்டிய, கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய மிகப்பெரும் கலைப்படைப்புகளாகும். காஞ்சிபுரம் வரதராஜ  பெருமாள் கோவில், மதுரை கூடல் அழகர்  கோவில், திருவில்லிபுத்தூர், திருவெள்ளரைஅழகர்கோவில், திருவண்ணாமலைதிருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றில்  இதிகாசக் கதைகள், பெரும்பாலும் ராமாயணக்  காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  (பக்.148)


    இதைப் பார்த்த உடன் மாணவர்கள் ‘ஸ்ரீரங்கம்’ என்கின்றனர். அதன் வேறு வடிவமே ‘திருவரங்கம்’ ஆகும். பாடம் எழுதியவர்களுக்கும் இது புலப்படாமால்போனது வியப்பு! இதிலென்ன உயர் சிந்தனை (HOT) இருக்கிறது என்பது நமது சிற்றறிவிற்கு விளங்கவில்லை.
 
     இப்பாடப்பகுதியைக் கணக்கில் கொள்ளும்போது,  “திருவில்லிபுத்தூர் அழகர்கோவில்ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை”,  - இவற்றில் பொருந்தாத ஒன்றுமில்லை.

   இன்னும் இருக்கிறது… தொடர்வோம்…

உதவி: பல்லவர் வரலாறு – மா.இராசமாணிக்கனார்; பாவை வெளியீடு

(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக