பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்கள்
- ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ பாடத்தை முன்வைத்து…
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 61)
7,
8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்
மூன்றாம் பருவத்தில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம்
உண்டு.
இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் இந்துத்துவச் சொல்லாடல்களையும் இஸ்லாம் வெறுப்பையும் எப்படியெல்லாம் உற்பத்தி செய்கின்றனர் என்று பாருங்கள்.
“பண்டைய இந்தியாவில் அதிலும் குறிப்பாக முந்தைய
வேதகாலத்தில் பெண்கள் சமமான
உரிமைகளை பெற்று
மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை
மோசமடைந்தது. அவர்கள்
அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புதிய சமூக
நடைமுறைகள்,
பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களின் சுதந்திரத்திற்கு சில
வரம்புகள் மற்றும்
கட்டுப்பாடுகளை விதித்தன”. (பக்.156)
தொல்குடித் தாய்வழிச் சமூகத்தில் பெண்களின்
ஆதிக்கமே மிகுந்திருந்தது. ஆனால் முன், பின் வேதகாலம் என்பது முற்றிலும் தந்தைவழி
ஆணாதிக்கச் சமூகம். இங்கு சமஉரிமை என்ற பேச்சிற்கே இடமில்லை. தொடந்து முன்
வேதகாலத்தில் பெண்களின் நிலை சிறந்திருந்தது என்கிற அபத்தக் கதையாடல்கள்
நிகழ்த்தப்படுகின்றன. வேதகாலத்திற்குப் பிந்தைய படையெடுப்பதுகளால் பெண்களின் நிலை
மோசமடைந்ததாகக் கூறுவது பாசிசமன்றி வேறில்லை. ஆரியர்கள் படையெடுப்பால் / வருகையால்
பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது என்பதே வரலாற்று உண்மை. இடைக்கால இஸ்லாமியப்
படையெடுப்புகள் வழியே பெண்களின் நிலை மோசமானதாக எழுதுவது இந்துத்துவப் பாசிச
வெறியாகும்.
“பண்டைய இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுள வணங்கியதற்கான
சான்றுகள் கிடைத்துள்ளன. அச்சான்றுகளிலிருந்து அந்தக் காலகட்டத்தில் பெண்கள்
மதிக்கப்பட்டிருந்தனர் என தெளிவாகத் தெரிகிறது. ரிக்வேத காலத்தில் மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக இருந்தது. குறிப்பாக மதச்
சடங்குகளில் பெண்கள்
பங்கெடுத்துக் கொள்வது
ஏற்றுக்கொள்ளப்பட்டன”. (பக்.157)
சிந்துவெளி நாகரிகத்துடன் ரிக் வேதகாலத்தை
இணைப்பதும் பாசிசமே. நாம் முன்பே கூறியது போன்று இவ்விரண்டும் ஒன்றல்ல. “மனைவியின்
நிலை போற்றுதலுக்குரியதாக
இருந்தது”, என்றால் இதரப் பெண்கள், விதவைகளின் நிலை எவ்வாறு இருந்தது? கோயில்
வழிப்பாட்டில் அன்றும் இன்றும் பெண்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்த நிலை.
வீடுகளில் மதச் சடங்குகள் செய்வதும் பொது வெளியில் மதச் சடங்குகள் செய்வதும்
ஒன்றல்ல; தீட்டு போன்ற கற்பிதங்களும் உற்பத்தியானது.
“ பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி,
கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர
வித்யாசாகர், பண்டித
ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி
அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் தர்மாம்பாள் போன்ற
பல முக்கிய சமூக – சமய
சீர்திருத்தவாதிகள்
பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினர். ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால் 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் 1856 இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும் வழிவகுத்தது. பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதை சீர்திருத்தவாதிகள் உணரந்தனர். ஆகையால் அவர்கள் பெண்களுக்கான பள்ளிகள் நாட்டின் பல பகுதிகளிலும் தொடங்கினர். அதுவே பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டுவந்தன”. (பக்.156)
பெண்கல்வி மற்றும் சீர்திருத்தவாதிகள்
பட்டியலில் உள்ள அரசியல் கூர்ந்து அவதானிக்கத்தக்கது. இதே வகுப்பில் இரண்டாம்
பருவத்தில் இந்தியக் கல்வி குறித்த பாடத்திலும் சாவித்திரி பா புலே
நிராகரிக்கப்படுகிறார். (சாவித்திரி பாய் அல்ல என்று பலமுறை எழுதியிருக்கிறேன்.)
இங்கு
ஓர் இடையீடு:
ஆயிஷா இரா. நடராசன் ‘இந்தியக் கல்விப்
போராளிகள்’ எனும் நூலில் (புக்ஸ் ஃபார் சில்ரன், முதல் பதிப்பு: மே 2018)
கீழ்க்கண்ட போராளிகளைக் கவனப்படுத்துகிறார்.
- ராஜாராம் மோகன்ராய்
- பெக்ராம்ஜி மலபாரி
- ராஸிக் கிருஷ்ணா மாலிக்
- கவுரி பார்வதிபாய்
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- சாவித்திரி பா புலே
- சாயாஜிராவ் கெய்க்வாட்
- பண்டித ரமாபாய் சரஸ்வதி
- கேசவ் சந்திர சென்
- பைக்காஜி காமா அம்மையார்
- மகரிஷி கேசவ் கார்வே
- கோபால கிருஷ்ண கோகலே
- கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு
- சையது அகமது கான்
- ரமாபாய் ரானடே
- கோபால் கணேஷ் அகர்கர்
- அசுடோஷ் முகர்ஜி
- ஜாம்ஷெட்ஜி ஜிஜி பாய்
- அபலா போஸ்
- அய்யன்காளி
- ஷேக் அப்துல்லா - பேகம் வாஹித் ஜஹான்
- டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
- காந்தியக் கல்வி X மெக்காலே கல்வி
இரண்டாம்
உலகப்போரின்போது ஆஸ்திரியாவில் ஹிட்லரின் வதைமுகாமில் 200 குழந்தைகளுடன் மாண்டுபோன
ஜோஹன் கோர்சாக் ஐப் போல குழந்தைகள் மற்றும் கல்விக்காக உயிர் துறந்தவர் சாவித்ரி பா
புலே. இவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்குப்
பணிவிடை செய்து அந்நோய் பாதிப்பிற்குள்ளாகி இறந்து போனார். பெண்கல்விக்கு எதிராக
அழுகிய முட்டை, சாணி, மல வீச்சுக்கு இலக்கானவர். இன்று பெண்கல்விக்காக
துப்பாக்கிகளை எதிர்கொண்ட மலாலாவை யாருக்கும் தெரியும். ஏனெனில் அது இஸ்லாமிய
அடிப்படைவாதம் பற்றிய செய்தி. ஆனால் 1848 யிலேயே இந்து அடைப்படைவாதத்தை தனது கணவர்
ஜோதிராவ் புலே உடன் எதிர்கொண்டவர் இவர். இந்தியக் கல்வி தொடர்பான முந்தைய
பாடங்களிலும் காணப்படாத ஒரு பெயர் உண்டென்றால் அது சாவித்ரிபா புலே தான்!
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல்
பகுதியில் 'பெண்கள் மேம்பாடு' என்ற பாடத்தின் முடிவில் பெட்டிச்செய்தி ஒன்று
படத்துடன் இடம்பெறுகிறது.
"சாவித்ரிபாய்
பூலே, பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் ஆசிரியர் ஆவார்.
பெண்கள் கல்வியை பற்றி பேசும்போதெல்லாம் நினைவில் வருபவர். இந்தியாவில் பெண்
கல்வியை செயல்வடிவமாக்கிய ஜோதிராவ்புலே,
சாவித்ரிபாயின் கணவர்
ஆவார். இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை 1848 ஆம்
ஆண்டு தொடங்கினர்". (7 சமூக அறிவியல் - பருவம் III, பக்.226)
ஆனால் 'இந்தியாவின் 19 முதன்மைப் பெண்மணிகள்' பட்டியலில்
சாவித்திரி பா புலே இல்லை. இந்த 'முதல்' பட்டியலில் சுஷ்மா சுவராஜ், நிர்மலா
சீத்தாராமன் ஆகியோர் இருமுறை இடம்பெறுகின்றனர். சாவித்திரி பா புலே விற்கு
இடமில்லை. இதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய
பாடநூல் அரசியல்!
வேத காலங்களில் உச்சத்தில் இருந்த இந்தியச் சமூகம்
இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகளில் மிக மோசமான நிலையை அடைவதாக 'பாடநூல்
இந்துத்துவவாதிகள்' கதையாடல்களை நிகழ்த்துகின்றனர்.
"இடைக்காலம்
இடைக்கால சமூகத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை
திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல
சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்". (பக்.157)
இதன்
தொடர்ச்சியாக,
"முஸ்ஸீம் படையெடுப்பின் விளைவாக பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில் விதவையின் நிலை பரிதாபமாக மாறியது", (பக்.157) என்கின்றனர். ஆனால் 'சதி'யில் தாங்களாகவே விரும்பித் தீவைத்துக் கொண்டனராம்!
பர்தா முறையையும் விதவைக் கொடுமையையும் இணைக்க
வேண்டிய அவசியமென்ன? முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் இஸ்லாம்
மதத்திற்கு மட்டுமா உரியது?
"இடைக்காலத்தில் கல்விமுறை ஆரம்ப
கட்டத்தில்தான் இருந்தது". (பக்.157)
ஆனால் வேதகாலத்தில் கல்வி உச்சத்தில் இருந்தது போலும்!
பெண் சிசுக்கொலைக்கு, “குடும்பப் பெருமை, சமூகப்
பாதுகாப்பு, பெண் குழந்தைக்குப் பொருத்தமான வரனைக் கண்டுபிடிக்க முடியாது என்ற
பயம் போன்ற காரணிகளே இந்த நடைமுறைக்கு
முக்கியக் காரணங்கள் ஆகும்”, (பக்.158) என்று சொல்லப்படுகிறது. வரதட்சணைக்
கொடுமையைப் பாடநூல் முற்றாகத் தவிர்க்கிறது.
"பெண்சிசு கருக்கொலை என்பது சாதி,
சமய, வர்க்கம் மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்த மற்றொரு மனிதாபிமானமற்ற
நடைமுறையாகும். பெண் சிசுக்கொலை அல்லது
பெண்சிசு கருக்கொலை எதுவாக இருந்தாலும்
நோக்கம் ஒன்றே. பெண்சிசு கருக்கொலை மற்றும் கருவிலேயே பாலினம் அறிதல் ஆகியவற்றை தடை செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி உள்ளது”.
(பக்.158)
கி.பி. 18 ஆம் நூற்றாண்டுக் கொடுமைகளான சதி,
தேவதாசி போன்றவற்றிற்கு முன்னதாக ‘பெண்சிசு கருக்கொலை’யை உள்நுழைத்து
மத்திய அரசின் பெருமை பாடப்படுகிறது.
‘குழந்தைத்
திருமணம்’ என்ற தலைப்பில்,
“குழந்தைத் திருமணமானது நடைமுறையில் பெண்களுக்கெதிரான மற்றொரு சமூக தீமையாக காணப்பட்டது. குழந்தைத் திருமணம்
பழங்குடியினரிடையே வழக்கத்தில் இருந்தது". (பக்.158)
இந்தியச் சமூகத்தில் அன்று லட்சக் கணக்கில்
ஒரு வயதுப் பெண் விதவைகள் பிராமணர்களில் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
பிராமணர்கள் எப்பொழுது பழங்குடிகள் பட்டியலுக்கு
மாற்றப்பட்டனர்? இந்திய உயர்த்தப்பட்ட வர்க்கக் கொடுமை பழங்குடி மக்கள் மீது
சுமத்தப்படுகிறது. இவ்வாறு தமிழகப் பாடநூல்கள் உருவாக்கும் புனைவுகள் எண்ணற்றவை.
“1930இல் மத்திய சட்டபேரவையில் ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை
திருமண மசோதா கொண்டுவரப்பட்டது.
இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 14 ஆகவும் நிர்ணயித்தது. பின்னர் இது
ஆண்களுக்கான குறைந்தபட்ச
திருமணவயது 21 ஆகவும்
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண
வயது 18 எனவும் திருத்தப்பட்டது”.
(பக்.159)
இம்மசோதாவிற்கு பால கங்காதர திலகர், சுப்பிரமணிய
சிவா, தீரர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றோர் அளித்த தார்மீக ஆதரவை (தேவதாசி ஒழிப்பைப்
போன்று…) நமது பாடநூல் குழுவினர் கண்டுகொள்ளாதது பெருவியப்பு! திலகர் தனது கேசரி இதழில்
குழந்தைத் திருமண ஒழிப்பைக் கடுமையாகக் கண்டித்து எழுதினார். பார்சி மதத்தைச் சேர்ந்த
பெக்ராம்ஜி மலபாரிக்கு (பி.எம்.
மலபாரி) இந்துப் பண்பாட்டில் தலையிட உரிமையில்லை என்றார். சத்தியமூர்த்தி
தன்னைக் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை, குழந்தைத் திருமணங்களை
நடத்தி எதிர்ப்பைக் காட்டுவேன் என்று அறைகூவல் விடுத்தார். நமது பாடமெழுதிகள் இது
‘பழங்குடியினர் பழக்கம்’ என பல்லிளிக்கின்றனர். அப்படியென்றால் இவர்களனைவரும் பழங்குடியினருக்கு
ஆதரவளிக்கும் அக்கால ‘அர்பன் நக்சல்கள்’ போலும்!
‘சதி’
யைப் பற்றிய இவர்களது பார்வை:
“இந்திய சமூகத்தில் நிலவிய மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக
ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம்
காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது.
இதன் பொருள் ‘கணவனின் சிதையில் தானாக முன்வந்து விதவைகள்
எரித்துக்கொள்ளுதல்’ ஆகும். ஆரம்ப
காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர் ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால்
சிதையில் அமர்ந்தனர்”. (பக்.159)
பெண்களது விருப்பத்தை ஏன் ஆங்கிலேய அரசு தடை செய்ய வேண்டும்? ராஜாராம் மோகன் ராய்
ஏன் ஒழிக்க முயற்சித்தார்? மொட்டையடித்து, விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தும்
விதவைக்கொடுமைகள் பெண்களை இந்தத் தற்கொலைக்குத் தூண்டியது. யாரும் விரும்பி
ஏற்கவில்லை; கட்டாயக் கொலை என்பதுதான் உண்மை. முதலில் விருப்பம், பிறகு
வற்புறுத்துதல் என்கிற பாசிச சொல்லாடல் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?
பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ளும் நடைமுறை
பல வட இந்திய சமூகங்களில் உண்டு. ‘பர்தா முறை’ கொடுமையானது, உடன்கட்டை ஏறுதல்
விரும்பிச் செயதது என்பது எத்தகைய பார்வை? இதைப் படிக்கும் குழந்தைகளின் புரிதல்,
மனநிலை என்னவாக இருக்கும்?
‘தேவதாசி முறை’ குறித்தும் இவர்களது ஆய்வின் வெளிப்பாட்டையும் காணுங்கள்.
“தேவதாசி (சமஸ்கிருதம்)
அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் “கடவுளின் சேவகர்” என்பதாகும்.
பெண் குழந்தையை கோவிலுக்கு நேர்த்தி கடனாக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது.
அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும்
பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையையும்
அனுபவித்தனர். பிற்காலங்களில் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர்.
மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம்,
பெருமை உணர்வு, சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றை இழந்தனர். அதைத்
தொடர்ந்து தேவதாசி முறை ஒரு சமூக தீமையாக மாறியது”. (பக்.159
& 160)
தேவதாசிகள் பெற்ற சமூக உயர்நிலைகள் எவை?
அத்தகைய நல்லப் பழக்கத்தை ஏன் சட்டம் மூலம் தடுக்க வேண்டும்? ஆண்கள் ஏன் ‘அடியாள்’ ஆகவில்லை? பொதுவாக ஆண் விலங்குகளைத்
தானே கடவுளுக்கு அர்ப்பணிப்பர்! இங்கு மட்டும் பெண்களை அர்ப்பணிப்பது ஏன்?
அவர்களுக்கு திருமண உரிமை ஏன் மறுக்கப்பட்டது?
அவர்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துகொள்ளும் ஆணாதிக்கச் சூழ்ச்சிதானே!
இச்சட்டம் கொண்டுவர பெரியாருடன் சேர்ந்து ராஜாஜி தார்மீக ஆதரவு கொடுத்தாராமே!
(பக்.160) தீரர் சத்தியமூர்த்தி அய்யர் கொடுத்த வெளிப்படையான ஆதரவை ஏன் பாடநூல்
இருட்டடிப்பு செய்கிறது?
இது குறித்து நாம் பேசுவதைவிட டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி கூறுவதே சரியாக இருக்கும்.
“சிறிதும்
கள்ளங்கபடம் இல்லாத பெண்களை மதத்தின் பெயரால் ஒரு ஒழுக்கமற்ற, தவறான, பலருடன்
உடலுறவு கொள்ளும், உடல் உள்ளம் இரண்டையும் நோய் பீடிக்குமாறு செய்யும் ஒரு வாழ்க்கைக்குப்
பழக்கப்படுத்துவது பெரிய அநீதி, மனித உரிமை மீறல் என்பதோடு, நம் உயரிய மனிதப்
பண்புக்கே எதிரான ஒரு பழக்கம என்று நான் எப்போதும் மிகத் தீவிரமாக
உணர்ந்திருக்கிறேன்”. (பக்.94, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, அவ்வை
இல்லம் வெளியீடு: ஜூலை 2014)
“1937 ஆம் ஆண்டு புதுச் சீர்திருத்தத்தின் படி காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணம்
உட்பட ஏழு மாகாணங்களில் வெற்றி பெற்று இந்தியச் சட்டமன்றத்தில் இடம் பிடித்தது. திரு. சி.
ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெண்களைக் கோவில்களுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் மசோதா ஜனங்களின் முழு ஆதரவுடன்
சட்டமன்றத்துக்குத் திரும்பிவந்தாலும், காந்திஜி வேண்டிக்கொண்டாலும், திரு.
ராஜகோபாலாச்சாரியார் இந்தத் தீய வழக்கத்தை நிறுத்துவதற்கு ஆதரவு காட்டாததால் இதைச்
சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்துவதைத் தாமதித்தார். 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ்
மந்திரி சபை ராஜினாமா செய்தது. ஆகவே, இந்த மசோதாவின் இறுதி முடிவு
தள்ளிவைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் உள்துறை அமைச்சராக
இருந்தபோது ஓமந்தூரார் மந்திரி சபையால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு திரு.
ராஜகோபாலாச்சாரியார் நம் சமூகத்தில் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர் என்பது நிரூபிக்கப்பட்டது”.
(பக்.104, மேலது)
“இந்து தர்மம் அழிந்துவிடும், என்றும்
அவர்கள் வீட்டுப் பெண்களில் ஒருவரையாவது பொட்டுக்கட்டி இந்துக் கலாச்சாரத்தைக்
(?!) காப்பாற்றுங்கள்!”, என்று கூவியவர் சத்தியமூர்த்தி. “நம்முன் எவ்வளவோ பணிகள்
உள்ளன. தேவதாசி ஒழிப்பு தற்போதைய முதன்மைப் பணியாக இருக்க முடியாது”, என்று
சத்தியமூர்த்திக்கு ஆதரவாக நின்று மசோதாவைக் கிடப்பில் போட்டவர் ராஜாஜி. வைக்கம்
போராட்டத்திற்கு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஒருவரையும் அனுப்ப மறுத்த
கதையும் உண்டு.
பொதுவாக பாடநூல்களில் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டியின் இளவயதுப் படமே இடம் பெறுகிறது
வரது சுயசரிதை முகப்பில் அழகான படம் ஒன்று உள்ளது. இவற்றைப் பயன்படுத்துவதில் என்ன
தடை என்று தெரியவில்லை? 10 ஆம் சமூக அறிவியலில் (தொகுதி:1) அய்யா வைகுண்டசாமி படம்
சர்ச்சையானது. அப்படத்தை நீக்கச் சொல்லும் SCERT கடிதம் ஆர்.எஸ்.எஸ். வரிகளை நீக்க
உத்தரவிட்டது போன்று பள்ளிகளுக்குச் சுற்றுக்கே விடப்படவில்லை என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப்பில் வந்ததோடு சரி.
“பொதுவாக பெண்களின் நிலை மோசமடைந்திருந்தபோதிலும்,
ரசியா சுல்தானா,
ராணி துர்காவதி, சாந்த் பீபி, நூர்ஜஹான், ஜஹனாரா, ஜீஜாபாய் மற்றும் மீராபாய்
போன்ற சில விதிவிலக்குகளையும் நாம் காணலாம்”, (பக்.157)
இதைப் போன்று, சிவகங்கையில் வேலுநாச்சியார், பேகம்
ஹஸ்ரத் மஹால், ஜான்சியின் ராணி லட்சுமி பாய் போன்றவர்களை மட்டும் விடுதலை
இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களாகவும் (பக்.162) காட்டுவது மிகச்சிறந்த நகைச்சுவை.
மேட்டுக்குடிகளின் வரலாற்றை மட்டுமே பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்? சமூகத்தின்
அடுத்தடுத்தப் பிரிவினர்களுக்கு வரலாறு என்று இடம் கொடுக்கும்?
“இந்தியாவில் பெண்கள் தற்போது கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும்
பங்கேற்கின்றனர்”. (பக்.163)
இரண்டு நாள்களுக்கு முன்புதான் ராணுவத்தில்
பெண்களுக்கு உயர் அதிகாரப் பதவிகள் வழங்கப்படுவதில்லை என்று உச்சநீதிமன்றம் மத்திய
அரசுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. பெண்களுக்கு உடல்திறன் இல்லை என்று
மத்திய அரசு கூற, மத்திய அரசுக்கு மனமில்லை என்பதே காரணம் என்றும் சாடியது.
இன்றும் பலதுறைகளில் பெண்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதற்கு இது
ஓர் எடுத்துக்காட்டு.
“புதிதாக தொடங்கப்பட்ட ‘மஹிளா சமக்யா’ எனும் திட்டமானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒதுக்கியது
பெண்களின் சமூக அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது”. (பக்.163)
இந்திய உள்ளாட்சிகளில் மட்டுமே 33% நடைமுறையில்
உள்ளது. தமிழகத்தில் 50% உள்ளதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஆனால் இங்கு மத்திய
அரசின் பெருமை பாடுவதுதான் முதன்மையாக இருக்கிறது.
2019 மக்களவையில் 543 உறுப்பினர்களில் சுமார்
78 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக தகவல்; இதன் விழுக்காடு 14% மட்டுமே.
சட்டமியற்றும் அதிகாரத்திலுள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33% வழங்க மறுத்து
அதிகாரமற்ற உள்ளாட்சிப் பணிகளில் மட்டும் வழங்கிவிட்டு ஒட்டுமொத்தப் பெருமை
பேசுவதில் பொருளில்லை.
33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா குழந்தைத்
திருமண (சாரதா) மசோதா, தேவதாசி ஒழிப்பு (முத்துலட்சுமி) மசோதாக்களைப் போலவே நீண்ட
காலம் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. அன்று திலகர், ராஜாஜி, சத்தியமூர்த்தி? இன்று
பா.ஜ.க., காங்கிரஸ் என்று அனைத்துக் கட்சியிலும் பெண்களுக்கு எதிரான வைதீகர்களின்
பெருங்கூட்டம்? அரசியல், சமூகத் தளங்களில் நாம் முன்னேறியிருக்கிறோமா? வல்லரசுக்
கனவிற்கு மட்டும் குறைவில்லை.
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக