செவ்வாய், பிப்ரவரி 25, 2020

பாடங்களை இப்படி அறிமுகம் செய்யலாமா?

பாடங்களை இப்படி அறிமுகம் செய்யலாமா?

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 62) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 


          உயர் தொடக்கநிலை வகுப்புகளில் (6-8) பாடங்களைத் தனித்தனியே வைக்காமல் கருப்பொருள் (thematic) அடிப்படையில் அமைக்க வேண்டுமென அப்போதைய பள்ளிக் கல்விச் செயலர் உதயச்சந்திரன் தலைமையில் விரிவான விவாதங்களை  முன்வைத்து, மாதிரிப் பாடங்களும் எழுதப்பட்டன. பாடப்பிரிவுகள் அடிப்படையில் (அதாவது சமூக அறிவியலில் வரலாறு, குடிமையியல், புவியியல், பொருளியல்; அறிவியலில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்ற பாடப்பிரிவுகள்) பாடநூலை அமைப்பது என்று இறுதியாக முடிவெடுக்கப்பட்டது. 

      இருப்பினும்  ஆறாம் வகுப்பில் நேரடியாக பாடப்பொருளைத் திணிக்கும் குழந்தைகள் அதிர்ச்சி, பயம், சுமை,  இல்லாமலிருப்பதற்காக கதை அல்லது உரையாடல்கள் வழியே முழுப் பாடத்தையோ அல்லது ஒரு பகுதியையோ கொண்டு செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் பாடங்கள் குறிப்பாக ஆறாம் வகுப்புப் பாடங்கள் எழுதப்பட்டன. 

      உரையாடல்களில் தமிழினி, குழலி, இன்பா, மோகன், கவின், யாழினி, சுடரொளி, வேலன், பொன்னி, மணிமாறன் ஆகிய தமிழ்ப்பெயர்கள் (தனித்தமிழ்ப் பெயர்கள் கூட வேண்டாம்; தமிழ் எழுத்துகளில் உள்ள பெயர்கள்) பயன்படுத்தப்பட்டன. இவை மட்டுமின்றி  நமது நாட்டின் பன்மைத்துவத்தைப் பேணிக் காக்கவும்  ஆமினா – முகிலன் – மெர்சி, ஆனந்தி – மும்தாஜ் – டேவிட், பாத்திமா – செல்வன் – அன்புமேரி போன்ற பெயர்கள் இடம்பெற்றுப் பாடநூலை மேலும் மெருகூட்டின.

    ஆனால் இந்நிலை தொடராமல் வேறு திசையில் பயணிக்கும் போக்கு மிகுந்து காணப்படுவது வருத்தமளிக்கக் கூடியது. விணுபாலன், ப்ரியன் (அடுத்த வரியில் பிரியன் என்றாகிறது.), ஹேஸ்னா (பக்.70, பருவம் III, அறிவியல்), அக்‌சய், ஆகாஷ்  (பக்.167, பருவம் III, சமூக அறிவியல்) என்று எழுதுவது நவீன ‘பாணி’யாக (style) உள்ளது. 

     பாடக்கருத்துகளை மிகவும் அபத்தமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் பிழைகளுடனும்   அறிமுகம் எனும் பெயரில் அளிப்பது இழிவான ஒன்று. ஒன்றிரண்டு மாதிரிகளை இங்கு காணலாம். 

     எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் புவியியல் அலகு 1 ‘தொழிலகங்கள்’ பாட அறிமுகம் இவ்வாறு செல்கிறது.

     “அக்சய் மற்றும் ஆகாஷ் உங்களைப் போன்றே எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் பள்ளியில்  மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த  போது மழை பெய்யத் துவங்கியது. அவர்கள்  தங்கள் வகுப்பறையை நோக்கி ஓட ஆரம்பித்தனர். மழையினால் அக்சய் அருகில்  உள்ள ஒரு மரத்தின் கீழ் தங்க திட்டமிட்டு  ஆகாஷை அழைத்தான். ஆனால் ஆகாஷ்  மரத்தை மின்னல் தாக்கக்கூடும் என  எதிர்மறையாக பதிலளித்தான். கடைசியில்  இருவரும் அவர்கள் வகுப்பறையை அடைந்தனர். வகுப்பறையில் ஒரு புதிய  பருத்தியினாலான துவாளையைக் கண்டனர்.  அவர்கள் இருவரும் தங்களுடைய தலையை பருத்தியினாலான துவாளையைக் கொண்டு  துடைத்து கொண்டனர். வகுப்பறையில் இருந்த  மற்ற மாணவர்கள் ஆசிரியர் கொண்டு வந்த  துவாளையை நீங்கள் இருவரும் ஈரமாக்கி  விட்டீர்கள் என்றனர். எனவே ஆசிரியர்  தங்களைத் கண்டிக்க கூடும் என நினைத்து  ஆசிரியரை திருப்திபடுத்தும் பொருட்டு ஆகாஷ்  ஆசிரியரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.  

     “மேடம்”, இந்த துவாளை மிகவும் அழகாகவும்  வண்ணமயமாகவும் இருக்கிறது. இதை எங்கிருந்து வாங்கினீர்கள்?. இது எவ்வாறு  உற்பத்தி செய்யப்படுகிறது?” என ஆசிரியரிடம்  கேட்க, ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியாக இவை எவ்வாறு மூலப்பொருட்களைக் கொண்டு  தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை விளக்கத் தொடங்கினார்”. (பக். 167)


‘Introduction’, ஆங்கில வழியில்,  

     “Akshay and Akash were studying in 8th standard like you. One day it was raining while  they were playing in the school play ground.  They started running towards the class room.  Akash planned to stay under a nearby tree in  the rain and called Akshay to accompany him.  But he denied saying that lightning might strike  the tree. Finally, they reached the class room.  They saw an attractive new cotton towel in the  class room. They used the towel for wiping their  heads. Other students in the class room said to  them,'' The towel was brought by the teacher  and you made it wet. So, she might shout at  you". In order to please the teacher, Akash asked  the teacher some questions. He said, "Madam  this is so cute and colourful. From where did  you buy this? How is it made?" The teacher  was very happy and started explaining the raw  materials used, the way it was manufactured  and marketed”. (Page: 140)

   மரத்தடியில் தங்குவது (stay) எப்படி? மரத்தடியில் நிற்கலாம்; ஒதுங்கலாம். “மரத்தை மின்னல் தாக்கக்கூடும்”, என்பது  எதிர்மறைக் கருத்து என்றால்,  “மின்னல் தாக்காது”, என்பது நேர்மறைக் கருத்தாகிறது. இதைத்தான் கல்வி மாணவர்களிடம் எதிர்பார்க்கிறதா? மறுப்பது, முரண்படுவது (denied) எதிர்மறைக் கருத்து என்ற முத்திரை குத்தி வெறும் ‘ஆமாஞ்சாமிகளை’ உருவாக்குவது கல்வியின் பணியாக இருக்கவியலாது. (பார்க்க: முரண்பாடுகளிருந்து கற்றல் – பேரா. கிருஷ்ணகுமார், பாரதி புத்தகாலயம் வெளியீடு)

   ‘மேடம்’, இருக்கும்போது ‘டவல்’ (towel) இருப்பதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை? Towel ஐ ‘துவாலை’ எனலாம். பேசாமல் பருத்தித் துண்டு என்றே சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் இங்கு துவாளை? இதன் பொருளென்ன? ‘வாளை’ என்பது ஒரு வகைக் கடல்மீனைக் குறிக்கும்.

   “துவாலை – இழைகள் மேலெழுந்தாற்போலக் காணப்படும் நெருக்கமாக நெய்யப்பட்ட துண்டு, a  towel with a fluffy surface; Turkish  towel”, என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (பக். 567) உரைக்கிறது.

   “In order to please the teacher”, என்பதை,  “ஆசிரியரை திருப்திபடுத்தும் பொருட்டு” என்று மொழியாக்கம் செய்வது சரியா? என்பதையும் யோசிக்கலாம்.

     அலகு 2: கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் அண்டார்டிகா) – பாட அறிமுகம் கீழே தரப்படுகிறது.

    “எட்டாம் வகுப்பு ஆசிரியர் வகுப்பறைக்குள்  நுழைந்த பின் மாணவர்களிடம் எதைப் பற்றிப்  பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என வினவினார்.  அதற்கு அவ்வகுப்புத் தலைவன் ஆசிரியரிடம்  ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் மட்டைப்பந்து  லீக் போட்டி குறித்து மாணவர்கள் பேசிக்  கொண்டிருந்தார்கள் எனக் கூறினான். அதற்கு  ஆசிரியர், 'மாணவர்களிடம், சரி இன்று இவ்விரு  கண்டங்களைப் பற்றிப் பல விவரங்களை  இப்பாடத்தில் கற்போம்' என்று கூறினார்”. (பக்.176)

‘Introduction’, ஆங்கில வழியில்,

      “A teacher handling class VIII entered the  classroom and asked the students what they  were talking about. The class monitor told the  teacher that the students were talking about the  ODI league match between Australia and South  Africa. The teacher said to the students, “Well  today we will learn many things about them in  this lesson”. (Page: 147)

    அது என்ன ‘மட்டைப்பந்து  லீக் போட்டி’? ‘கிரிக்கெட்’ வேண்டாம் என்றால் ‘லீக்’கும் வேண்டாமே! ‘ODI league’ (One Day International  league) என்பதை அப்படியே சொல்லிவிடலாமே! ‘league’ போட்டிகளில் பங்கேற்கும் இணைக்குழுவைக் குறிக்கும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டும் கண்டங்களா? இப்படியான ஓர் அறிமுகம் தேவைதானா, பாடநூல் அறிவுஜீவிகளே?  

   தென் ஆப்பிரிக்கா எப்போது கண்டமானது? மேலும் இப்பாடம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய மூன்று கண்டங்களைப் பற்றியது. இவற்றை அறிமுகம் செய்ய வேறு கருத்துகள், செய்திகளே இல்லையா? இவற்றை பாடம் நடத்தும் ஆசிரியர்களிடமே விட்டுவிடுவது நலம். பாடக்குறிப்புகள், அறிமுகம், கற்பித்தல் வழிமுறைகள் எல்லாவற்றையும் இவ்வாறு அபத்தமாகவும் அராஜகமாகவும் மேலிருந்து திணிப்பது கொடுமை.

      “Well  today we will learn many things about them in  this lesson”. (Page: 147) என்ற வரிகள் தமிழுக்கு வரும்போது,  “மாணவர்களிடம், சரி இன்று இவ்விரு  கண்டங்களைப் பற்றிப் பல விவரங்களை  இப்பாடத்தில் கற்போம்' என்று கூறினார்”, (பக்.176)என்று மாறும் ‘ரசவாதம்’ நமக்கு விளங்க மறுக்கிறது.

    இப்படியான அபத்த அறிமுகங்களை விட்டொழித்துப் பிழையின்றி பாடநூல்களை எழுத கொஞ்சமாவது முயற்சி செய்தால் கல்விக்கு நல்லது. 

 (அபத்தங்கள் தொடரும்…)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக