வியாழன், பிப்ரவரி 20, 2020

மொழியாக்கக் குளறுபடிகளும் தகவல் பிழைகளும்


மொழியாக்கக் குளறுபடிகளும் தகவல் பிழைகளும்

(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 60) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 



        எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் அலகு: 02 நீதித்துறை. இதில் ‘பண்டைய காலத்தில் நீதித்துறை’ எனும் தலைப்பில் மநுதர்மத்தின் பெருமை பேசப்படுவதைப் பார்த்தோம்.  

    அப்பாடத்தில் நீதித்துறை பற்றிய இரு குறிப்புகள் உள்ளன. அவ்விரண்டும் மொழியாக்கம் மற்றும் செய்திகளில் அபத்தமாக உள்ளதை இப்போது பார்க்கலாம்.

       தமிழ் வழியில், ‘தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA)’ : 
       “இது 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.  இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு  இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு  பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு  காண லோக் அதாலத்தை ஏற்பாடு செய்கிறது. (பக்.228)

  ஆங்கில வழியில்,
    “NALSA – The National Legal Service  Authority has been constituted under the  Legal Services Authorities Act, 1987 to  provide free Legal Services to the weaker  sections of the society and to organise Lok  Adalats for amicable settlement of disputes”. (Page: 190)


     என்ற இணைப்பிலுள்ள வரிகள் அப்படியே பாடநூலில் ‘காப்பி’ செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பியடிக்கும் கொடுமையாவது தொலைந்து போகட்டும்! மொழியாக்கமாவது சரியாகச் செய்யக்கூடாதா? 

   “The National Legal Services Authority (NALSA) has been constituted under the Legal Services Authorities Act, 1987 to provide free Legal Services to the weaker sections of the society and to organize Lok Adalats for amicable settlement of disputes”.

   ‘The National Legal Services Authority (NALSA)’ என்பது தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA)’ என்று மொழியாக்கப்படுவது ஏன்? ஆணையம் (Authority)  ‘அதிகாரம்’ ஆனதெப்படி? 



     இவ்வாணையம் உருவாக்கப்பட்ட சட்டம் என்னவோ 1987 தான்! ஆனால் உடனே நடைமுறைக்கு வரவில்லை. அப்போதைய தலைமை நீதிபதி  பி.என். பகவதி மற்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆகியோரின் சீரிய முயற்சியால் 1980 ஆம் ஆண்டில், நீதிபதை ராவத் தலைமையின் கீழ் நாடு முழுவதும் சட்ட உதவித் திட்டங்களை மேற்பார்வையிடவும் மேற்பார்வையிடவும் தேசிய அளவிலான சட்ட உதவி திட்டங்களை செயல்படுத்துவதற்கான குழு (CILAS)  ஒன்று அமைக்கப்பட்டது. 

    அக்குழுவை அடுத்துதான் 1987 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள சட்ட உதவித் திட்டங்களுக்கு ஒரு சீரான வடிவத்தில் ஒரு சட்டபூர்வமான தளத்தை வழங்க சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டில்  சில திருத்தங்களுடன் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இந்தச் சட்டம் அமலானது.

   தேசிய சட்ட சேவைகள் ஆணையம் 1995 டிசம்பர் 5 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த், 1997 ஜூலை 17 அன்று தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்றார். அதிகாரத்தின் முதல் உறுப்பினர் செயலாளர் 1997 டிசம்பரில் நியமிக்கப்பட்டார்; 1998 ஜனவரியில் பிற அலுவலர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். பிப்ரவரி, 1998 க்குள், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அலுவலகம் முதல் முறையாக ஒழுங்காக செயல்படத் தொடங்கியது.

    இதன்பணிகளில் சட்ட உதவிகள், லோக் அதாலத் ஆகியவை மட்டுமல்லாமல், நாடெங்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பரப்புரை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் அடங்கும். 


பொது நலவழக்கு (Public Interest Litigation): 


      “இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யும் வழக்கு ஆகும். உச்சநீதிமன்றம் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நபர்  தனது வழக்கு தொடர்பான நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறல், சமய உரிமைகள், மாசுபாடு, மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொது நல வழக்கை எவரும் தாக்கல் செய்யலாம். இது தொடர்பான எழுதப்பட்ட புகார் கடிதம் மூலம் இவ்வழக்கினைப்  பதியலாம். பொது நல வழக்கு என்ற கருத்து இந்திய நீதித்துறைக்கு புதிதான ஒன்றாகும்”. (பக்.230)

   
Public Interest Litigation (PIL): 

      “PIL is a litigation filed in a court of law for the protection of  “public interest”. The Supreme court introduced this system which allows a person to approach  the court with his case. PIL can be filed for the following reasons such as violation of basic human  rights, religious rights, pollution, and road safety. This could be done by a written letter stating the  case. This concept is unique to the Indian Judiciary. (Page: 192)

    நெருக்கடிநிலைக் காலத்தில் (1975-77) மனித உரிமை மீறல்களும் நீதித்துறை, அரசியல் சட்டம் ஆகியன கடும் சிக்கலுக்கு உள்ளானது. 1979 இல் புஷ்பா கபிலா ஹிங்கோரானி (Pushpa Kapila Hingorani) மற்றும் இவரது கணவர் நிர்மல் ஹிங்கோரானி ஆகியோர் அயராது முயன்றுச் சட்டப்போர் நடத்தியதால்  பொதுநல வழக்கு என்கிற அம்சம் சேர்க்கப்படுகிறது.

      சிறைப்பட்டவர்கள் சார்பில் அவரோ அல்லது அவர்களது ரத்தவழி உறவினரோதான் வழக்குத் தொடரவேண்டும் என்ற நிலையைப் பீகாரில் மாற்றிக் காட்டினர்,  இந்த இந்தியப் பெண் வழக்கறிஞர். எனவேதான் இவர் ‘பொது நல வழக்குகளின் தாய்’ (Mother of Public Interest Litigation - PIL) என்று அழைக்கப்படுகிறார். 40 ஆண்டுகளாக இருக்கும் ஒரு முறையை, “இந்திய நீதித்துறைக்கு புதிதான ஒன்றாகும்” என்று சொல்வது சரியா? பெட்டிச் செய்திகளிலும் குறிப்புகளிலும் ஏதேனும் ஒன்றைத் தொடர்பில்லாமல் சொல்லிச் செல்லும் போக்கு உள்ளது. 

(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக