வியாழன், பிப்ரவரி 13, 2020

பெரியாரும் மொழியும்


பெரியாரும் மொழியும்

மு.சிவகுருநாதன்

பகுதி: ஒன்று



பெரியாரின் தாய்மொழி தெலுங்கு அல்ல.

   பேசும் புதிய சக்தி பிப். 2020 இதழில் பெரியாரின் உதவியாளர் தோழர் எழில்மாறன் நேர்காணல் வெளியாகியுள்ளது. தோழர் பாவெல் சூரியன் இச்செவ்வியை எடுத்துள்ளார். கீழ்க்கண்ட கேள்வியொன்றுக்கு பதில் இவ்வாறாக இருக்கிறது. 

    கேள்வி: பாவெல் சூரியன்: “குலக்கல்வி கொண்டு வந்த ராஜாஜியை, அதை ஆதரித்த .பொ.சியை மிகவும் கொண்டாடுகிற தமிழ்த்தேசியவாதிகள் பெரியாரைத் தமிழரல்லர் என்கிறார்கள். இவர்கள் சொல்வது போலத் தமிழரல்ல என்றாலும் தமிழர்க்கு ஆதரவான நிலையெடுத்தவர் அல்லவா பெரியார்? இந்த மதிப்பீட்டு முரண் ஏன்?”.


    பதில்: தோழர் எழில்மாறன்: “இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கு. இதைத் தேசிய இனப் பிரச்சினையோட சேர்த்துப் பார்க்கணும். பெரியார் தாய்மொழி தெலுங்கா இருந்தாக்கூட தமிழ்நாட்டிலேயே அவர் தன்னைத் தகவமைச்சிக்கிட்டு  வாழ்க்கையை நடத்துறார். எப்படிப்பட்ட வாழ்க்கையில் தன்னைப் பிணைச்சிக்கிறார்ன்னுதான் பார்க்கணும். தெலுங்கராகப் பிறந்தாலும் தெலுங்குக்காகவே நிற்கிறாரா, தெலுங்கு மொழியோடு தன்னைப் பிணைந்துக் கொண்டிருக்கிறாரா, அதற்காகப் போராடுகிறாரான்னு பார்க்கணும். எந்த நாட்டில் தன் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டு, அங்குள்ள மக்களோடு சேர்ந்து வாழ்கிற அளவுக்குத் தன்னைப் புணரமைத்துக் கொண்டு, அதிலயும் போராளியாக மாறி, அந்த மக்களுடைய ஏற்றத் தாழ்வுக்கு, அவர்களுடைய பலவிதமான கஷ்டநஷ்டங்களுக்க்கு எது காரணமென ஆராய்ந்து, அதில உண்மையாகவே முகங்கொடுத்த போராளியா இருக்கிறபோது, அதையெல்லாம் மறச்சிட்டு, என்ன இருந்தாலும் பெரியார் பிறப்பால ஒரு தெலுங்கர் எனப் பார்ப்பது சரியல்ல”, (பேசும் புதிய சக்தி பிப். 2020, பெரியாரின் உதவியாளர் தோழர் எழில்மாறன் நேர்காணல்)

   பெரியாரைப் பற்றித் தொடர்ந்து பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன. பெரியாரை எதிர்கொள்ள இயலாதவர்கள், அவரது கருத்தியல் எதிரிகள் இவ்வாறான அவதூறுகளை அள்ளி வீசுவதில் முனைப்பாக உள்ளனர்.

   அவற்றில் ஒன்று தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பது. கீழவெண்மணி படுகொலைக்குக் காரணமான இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவுடன் பெரியாரை முடிச்சிடுவதும் இங்கு நடக்கு  கூத்து.

   மொழி பற்றிய அவரது சிந்தனைகள் ஆழ்ந்த அவதானிப்புகளும் கூர்நோக்கு மற்றும் தொலைநோக்கும் கொண்டவை. இவை பெரியாரை முழுதாக வாசிக்கும் எவரும் உணரக் கூடியவை. அவரது தாய்மொழி கன்னடம். ‘மொழி’ பற்றிய அவரது சிந்தனையொன்றில் அவரே  கூறிச்செல்கிறார். (வந்தேறி கன்னட வடுகர் என்று சில பாசிசக் கும்பல்கள் குக்குரலிடுவதைப் பார்க்கலாம்.)

  “மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல; அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.

   மொழி, மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதேயொழிய பற்றுக் கொள்ளுவதற்கு அவசியமானதல்ல.

   மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொது வாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல. இந்தக் கருத்துகளைக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

  நமக்குச் சொந்த மொழி என்பது – பிறந்த சாதியின் காரணமாக எனக்குக் கன்னடம்; சிலருக்குத் தெலுங்கு; பெரும்பாலனவர்களுக்குத் தமிழ்; நாட்டுக்குரியது தமிழ்”. (பக்.1766 & 1767, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி:02, அரசியல்:02, பதிப்பு: வே.ஆனைமுத்து)

   இதைக்கூட தெரியாமல் அவரது உதவியாளராக இருந்தவர் இன்றைய அவதூறுகளைப் பின்பற்றி விளக்கமளிப்பது அபத்தமாக உள்ளது. ‘தமிழரல்ல’ என்ற அவதூறு குறித்த கேள்விக்குத் தெலுங்கர் என்று விடையளிப்பது சரியல்ல. 

பகுதி: இரண்டு

பெரியார்?

     “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்”, 

    என்று சுயமதிப்பீடு செய்துகொண்டு தாம் இறக்கும் வரையிலும் கலகக்கராராய் வாழ்ந்தவர் பெரியார். 

    “எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாமல், மானத்தைப் பற்றி கவலை இல்லாத திராவிட மக்களிடத்தில் நல்லபேர் வாங்கவேண்டும் என்ற கவலை சிறிதுமில்லை”, 

     என்று வெளிப்படையாக அறிவித்து கலாச்சார மதிப்பீடுகளை கட்டுடைத்து எதிர்க்கலாச்சாரவாதியாக இருந்தார். 

    “நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும். தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக; பிரசங்கம் செய்தாக வேண்டும்”, என்று உடல் நலிவுற்ற நிலைலிலும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழலில் தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வழிகாட்டினார். 

   “நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்”, என்று தன்னிருப்பை நிலைநாட்டி, “93 வயதாகிவிட்டது. இனி என்னை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள். சென்னையில் நிரந்தரமாகத் தங்கி நூல் வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுகிறேன்”, என்று சொன்ன அவரது உழைப்பு இன்று வீணாகிவிட்டதோ என்று எண்ணக்கூடிய அளவில் தமிழகச்சூழல் உள்ளது. 

   “எந்தக்காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய  எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்”, என்று கேட்டுக்கொள்ளும் பெரியார் போகுமிடங்களில், “ராமசாமி கழுதைக்கு செருப்படி”, “ராமசாமி கழுதை செத்துவிட்டது”, “ராமசாயின் மனைவி அவிசாரி”, என்றெல்லாம் சுவரெழுத்துகள் எழுதப்பட்டன. “ராமசாமி சிரஞசீவியாக இருக்க வேண்டும்”, “ராமசாமி மனைவி கற்புக்கரசி”, என்பதற்கு மகிழ்ச்சியடைந்திருந்தால்தானே இதற்காக விசனப்படவேண்டும் என்று எதிர்க்கேள்வி எழுப்பி தனது பயணத்தைத் தொடங்கிவிடுவார் பெரியார். அவர் தன் மீது வீசப்பட்ட செருப்புகளை மிதித்துக்கொண்டு தனது பயணத்தில் முன்னேறினாரே தவிர பின்தங்கிவிடவில்லை. அவர் சிலை அவமதிக்கும் மூடர்களுக்கு என்றுமே புரியப் போவதில்லை.

பகுதி: மூன்று

பற்றுகளை விட்டொழித்தல்.

      “ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” 

        என்று புத்தன் வழியில் சாதி, மத, இன, மத, மொழிப் பற்றுக்களை துறக்கச் சொன்னவர் பெரியார். ஆனாலும்  அவருக்கு ஒரு அபிமானமிருந்தது. அதுதான் சுயமரியாதை அபிமானம். அதை அவரே வெளிப்படுத்துகிறார்.

   “எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக்கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். உங்களுக்குள் ‘தேசாபிமானம்’ என்கின்ற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக்கூடாது. அது, சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் என்பது போன்ற மூட நம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும்”, (குடியரசு: 13.10.1935, ராசிபுரம் வட்ட ஆதிதிராவிடர் மாநாடு)
 
 
பகுதி: நான்கு

மொழிச் சிந்தனைகள்

   “நமது நாட்டில் வேறுவழியில் பிழைக்க முடியாதவர்கள்  தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கல் துடிதுடிப்புத்தான் ‘தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன் என்பது போன்ற கூப்பாடுகள்.

   இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.

  நான் தமிழை அறியாதவனல்ல; தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல.

   இன்றைய புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிடிகல் (Theoretical) புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் (Practical) பிராக்டிகல் (அனுபவ) அறிவி உடையவன் என்று கருதி இருப்பவன்”. (பக்.1771 & 1772, மேலது)


‘திராவிட மொழிகள்’ எனும் தலைப்பில்,

  “தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம், தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன்; நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன். இவை நான்கும் வெவ்வேறு மொழி என்று கூறுபவர்கள் ‘தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; கருதிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறலாமே தவிர – இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது” (……….)
  
  “நமது பண்டிதர்களில் சிலர், இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கை, தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது என் கருத்து. இத் திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான், அதாவது தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கிறோம். நான்கு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழ்ங்குகிறதே ஒழிய, நான்கிடத்தில் பேசப்படுவது தமிழ்தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவதுதான் தவறு; ஒன்றுதான்  நான்காக, நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை நிருபித்துக் காட்டவும் என்னால் முடியும்”. (பக்.1753, மேலது)

    “நான்கு தனியிடங்களில் வாழ்ந்துவந்த மக்களுக்குள் போக்குவரவும், அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பமும் முன் காலத்தில் இல்லாததால், ஆங்காங்குள்ள மக்கள் தமிழைப் பேசி வந்த முறை சிறிது வேறுபடவும், அதைச் சாதகமாக வைத்துக் கொண்டு, நம்மை நான்கு சாதியாகப் பிரித்து வைத்த ஆரியர், நம் மொழியையும் நான்காகப் பிரித்து, வேண்டுமளவும் வடமொழியை அவற்றுள் புகுத்தி, அதற்கேற்ற வண்ணம் எழுத்து இலக்கணம் முதலியவற்றை உண்டாக்கி, சிறிது வேறு உச்சரிப்பாக இருந்த தமிழைத் தனித்தனி மொழியென்று சொல்லும்படிச் செய்துவிட்டது. தமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வகுப்பு வேற்றுமையால், இக் குறைபாட்டைப் பற்றிச் சிந்திக்காமல், இதன் உட்காரணத்தையும் கண்டு பிடிக்காமல், தமிழ்நாட்டிலுள்ள தமிழைத் தவிர, மற்றைய மூன்றும் கிளைமொழிகளென்றும், நாட்டுப் பெயரையே மொழிகளுக்குக் கொடுத்துப் பிரித்துவிட்டார்கள். அன்றைய தமிழ்ப் பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடைமைப் பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்களல்லர். இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரியமோகம் தீர்ந்தபாடில்லை. (பக்.1754, மேலது)

     ‘திராவிட மொழி தமிழே’ என்ற கட்டுரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிச் சொற்களை ஒப்புமைப்படுத்தி ஒரு பட்டியல் வெளியிடுகிறார். (பக்.1758 & 1759, மேலது)
     

   பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகளும் எழுத்துச் சீர்திருத்தங்களும் பின்னாளைய மொழியறிஞர்களும் வியக்கக் கூடிய வகையிலானவை. தமிழைக் காட்டுமிராண்டி  மொழி என்று கடுமையாகச் சாடிய பெரியார் அவற்றை மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். மொழி ஒரு கருவியே என்பதை அவர் பல இடங்களில் வலியுறுத்தினார்.  மதம், மொழி, இலக்கியம் ஆகியன சாதியைக் காப்பாற்றுபவை என்று சாடினார். தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் கூட சாதி, மதங்களை உயர்த்திப்பிடிப்பதை எடுத்துக்காட்டினார். இராமாயணம், பெரிய புராணம், தேவாரம், திருவாசகம் போன்ற இலக்கியப்பிரதிகளைக் கட்டுடைத்து, அதன் வாயிலாகவே தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்ற முடிவுக்கு அவர் வர நேரிடுகிறது. 

    அன்று மொழி பார்ப்பனியக் கறை படிந்ததாக இருந்தது. பின்னர் அதில் சைவக்கறை படிந்தது. சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்கள் அதை ஓரளவு மாற்ற முற்பட்டன. இருப்பினும் மேல், கீழ், உயர்ந்த, தாழ்ந்த என்பது போன்ற சொல்லாட்சிகள் இன்றும் நீடிக்கத்தான் செய்கின்றன.


பகுதி: ஐந்து


எழுத்துச் சீர்திருத்தம்

‘தமிழ் மொழி’ என்னும் தலைப்பில்,

    “தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேகப் பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது அம் முயற்சிக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல.

   இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தகுதியுள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்ன செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ முயற்சிப்பதன் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை.

    ஆனாலும், நான் அம்முறையிலேயே இரண்டு, மூன்று பத்தரிக்கைகள் நடத்துகிறேன். அம் முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னமும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது”, (பக். 1752 & 1753, மேலது)

   எழுத்துச் சீர்திருத்தங்களை 13.01.1935 இல் ‘குடி அரசு’ இதழில் நடைமுறைப்படுத்தினார். தமிழ் எழுத்துகளை 54 அளவிற்கும் குறைக்கும் இவரது முடிவு மிகவும் புரட்சிகரமானச் செயல்பாடு. அச்சுப் பணியில் உள்ள பட்டறிவைக் கொண்டு அவரால் ஒரு சிறந்த மொழியிலாளராகச் செயல்பட முடிந்ததது வியப்பு. இவற்றுள் சிலவற்றை மட்டும் தமிழக அரசு ஏற்று பின்னாளில் நடைமுறைப்படுத்தியது. ‘ஐ, ஒள’ வரிசைகளை நீக்காமல் விட்டது புதிதாக மொழி கற்போருக்கும் இன்னும் இடையூறுதான்.  

    பெரியாரது மிக நீண்ட பொது வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்காட்டி தமிழ் மொழிக்கும்  தமிழர்களுக்கும் எதிரானவராகவும் அந்நியராகவும் சித்தரிப்பது அறிவுடைமையாகாது. அவரது எழுத்துகள், செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அணுகுவதே சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக