செவ்வாய், நவம்பர் 29, 2016

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை



(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)



மு.சிவகுருநாதன்



     (நமது சுழலியலாளர் நன்னிலம் நக்கீரன் எழுதிய விகடன் பிரசுர வெளியீடான ‘கார்ப்பரேட் கோடரி – மண் மீதான வன்முறையின் வரலாறு’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.)




       ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் காலனிய சுரண்டலுக்கு உள்ளானவை. இவை இன்றும் கார்ப்பரேட் என்னும் நவகாலனிய சுரண்டலுக்கு உள்ளாவதை இந்நூல் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுரண்டல் வன்முறை வெளிப்படையாக அல்லாது மிக நுணுக்கமாக நாம் அறியாமல் நடக்கும் ஒன்று. இதன் பின்னாலிருக்கும் அரசியலையும் நக்கீரன் வெளிப்படுத்துகிறார்.

      நைட்ரேட் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி நியூயார்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தை தகர்க்க முயன்றால் அது பயங்கரவாத நடவடிக்கை. அதே நைட்ரேட் உரங்களைக் கொண்டு மண்ணையும் மனிதர்களையும் அழித்தொழித்தால் அது கார்ப்பரேட்களின் ‘வளர்ச்சி’ மற்றும் புரட்சிகர செயல். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறதல்லவா? இதைத்தான் நக்கீரன் இந்நூலில் நுணுக்கமாக விவரிக்கிறார்.

      நகரமயமாதலால் மனிதக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் ஆறுகள் சாக்கடைகளாக மாறிய கதை, தழைச்சத்து உரப்பற்றாக்குறை, அதை ஈடுசெய்ய கல்லறை எலும்புகளை வேட்டையாடல், பறவை எச்சங்களை எடுக்க லத்தீன் அமெரிக்கக் குட்டித்தீவுகளைக் கொள்ளையடித்தல், பெரு, பொலிவியா நாடுகளின் நைட்ரேட் வயல்களுக்காக பிரிட்டன் முதலாளிகளுக்காக சிலி நடத்திய பசுபிக் போர் (நைட்ரேட் போர்), இறுதியாக ஃபிரிட்ஸ் ஹாப்பர் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி நைட்ரேட் தயாரிக்கும் முறையைக் கண்டடையும் வரலாறு இங்கு பேசப்படுகிறது.

     ஃபிரிட்ஸ் ஹாப்பருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. இவர் சைக்ளோன் – பி என்கிற நச்சு வாயுவையும் கண்டுபிடிக்கிறார். இதுதான் ஹிட்லரின் வதைமுகாம்களில் யூதர்களைக் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப் பயன்பட்டது. இதன் காரணமாகவே இவரும் இவரது குடும்பமும் அழிந்த கதை வியப்பானது.

       அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். நமது நாட்டிலும் ‘விஞ்ஞானிகள்’, ‘பொருளாதார நிபுணர்கள்’ என்னும் பெருங்கூட்டம் கார்ப்பரேட்களுக்கும் அவை சார்ந்த அரச நடவடிக்கைகளுக்கும் சேவையாற்றி வருகிறது. இவர்களால் கறிவேப்பிலைகளாக பயன்படுவதை அவர்கள் உணருவதாகத் தெரியவில்லை. இந்திய அணு விஞ்ஞானிகளின் தொடர் மர்ம மரணங்கள் நாமறிந்த ஒன்றுதானே!

       தென் அமெரிக்கக் கண்டம் ஏண்டிஸ் மலைத்தொடர்ப் பகுதியில் (பெரு) தொல்குடி மக்களின் ‘சாக்ரா’ வேளாண்மை, ‘பச்சமாமா’ என்னும் பூமித்தாய், ஆழ்ந்த சூழலியல் (Deep Ecology) ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்களை வீழ்த்திய நவீன வேளாண் அறிவியல் வன்முறை விளக்கப்படுகிறது. 1500 வகையான ‘கின்வா’ தானியங்களையும், 330 வகையான ‘கேனிவ்வா’ தானியங்களையும், 228 வகையான ‘டார்வி’ பயறு வகைகளையும், 250 வகையான உருளைக்கிழங்கு வகைகளையும் பயிரிட்டு உலகிற்கு அளித்த இவர்களைக் காலி செய்த அமெரிக்காவின் கோடரிதான், இந்திய பாரம்பரிய வேளாண்மையையும் வெட்டியது.

     ‘சாக்ரா’வை அழித்த அமெரிக்கர்கள் தோற்றும் திருந்தாமால் சோயாவைத் திணித்த செயல் இவர்களது வெறித்தனத்தை அம்பலமாக்குகிறது. நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு, மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும் பொருளான சோயாவை ஃபோர்டு நிறுவனம் கார் தொழிற்சாலைக்கானப் பொருளாக மாற்றியது. சோயா எண்ணையிலிருந்து தயாரிக்கப்பட்ட பெயின்ட் மற்றும் மசகை கார்களில் பயன்படுத்தத் தொடங்கினர்.

      கருப்பர்களைக் குரங்காய், கண்டத்தை இருண்ட கண்டமாய் கற்பிதம் செய்த ‘வெள்ளை’ப் புனைவுகளுக்கு மாற்றாக வெள்ளையர்கள் பற்றிய கருப்பர்களின் எண்ணங்கள் எப்படியிருந்திருக்கும்? “புதைகுழியிலிருந்து பாதியில் எழுந்து வந்துவிட்ட தோல் வெளுத்த பிணங்கள்” (ஆவிகள்), ஆவிப்பயம் போனபிறகும் பன்றி வகையாகக் கருதியதும் இங்கு சொல்லப்படுகிறது.

     பன்றி உணவாக அய்ரோப்பியர்கள் கருதிவந்த நிலக்கடலையை புரதச்சத்து மிகுந்த உணவு என்று ஜார்ஜ் வாஷிங்டன் கார்வார் சொன்னபிறகு, நிலக்கடலைச் சாகுபடிக்கு பிரிட்டனின் தட்பவெப்பநிலை ஒத்துவராததால், ராணுவ டாங்குகள் புல்டோசர்களாக மாற்றப்பட்டு தான்சானிய விளைநிலங்கள் பாழாக்கப்பட்ட வரலாற்றை விளக்குகிறார்.

     கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே மயன் நாகரிகச் சடங்குகளில் கோக்கோ பானங்கள் முதன்மை இடம் பிடித்தன. நிகரகுவா நாட்டிலிருந்து கோக்கோவை கொலம்பஸ் அய்ரோப்பாவிற்கு கொண்டு சென்றான்.

     மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கானா, ஐவரிகோஸ்ட் ஆகியன கோக்கோ உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றின் பொருளாதாரம் மேம்பட்டிருக்க வேண்டாமா? விடுவார்களா கார்ப்பரேட்கள்! குழந்தைக்கடத்தல், விற்பனை, கொத்தடிமை ஆகியன இங்கு ‘கார்ப்பரேட் அற’மாக உள்ளதையும் இவற்றைப் பயிரிடுவதன் மூலம் உலகில் பழமையான மழைக்காடுகள் அழிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்.

      மனித இனம் முதன்முதலில் தோன்றிய எத்தியோப்பியாவில்தான் காப்பியும் தோன்றி உலகம் முழுக்க பரவியிருக்கிறது. காப்பி கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவையாக விளக்கப்படுகிறது. தூக்கத்தை விரட்டும் இந்த விழிப்புப் பானத்தை தங்களது ‘இரவு வழிபாட்டுக்கான கண் விழிப்பு’க்கு அவசியம் என்பதால் பாபா புதான் என்னும் சூஃபி குடகு மலைக்குக் கொண்டுவந்தார். (பக். 56)

      எத்தியோப்பிய மக்கள் தன் மண்ணுக்காகப் போராடி வென்றதையும் இந்தியா பாசுமதி, மஞ்சள் ஆகியவற்றின் அறிவுசார் சொத்துரிமைக்காக எதும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்ததும் வந்தனா சிவா, நம்மாழ்வார் போன்ற தனிநபர்கள் முன்முயற்சி எடுத்ததும் இங்கு பதிவாகிறது.

      வெள்ளைத்தங்கம் என்று சொல்லப்பட்டாலும் பலகோடி மக்களின் குருதியில் வளர்க்கப்பட்டதால் பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு என்றே சொல்லவேண்டும் என்கிறார் நக்கீரன். உண்மைதான். பாரம்பரிய பருத்தி தரமற்றது என்று பி.டி. ரக வீரியரக பருத்தி வகைகள் இன்று விவசாயிகளின் உயிரைக் குடிப்பது நாமறிந்ததுதானே.

      ஏரல் கடலுக்கு நீர் அளிக்கும் அமுர் தாரியா, சிர் தாரியா என்ற இரு ஆறுகள் நீர்வரத்து நின்றதால் இன்று வறண்டுபோய் உப்புப் பாலைவனமாக (அரால்கம்) மாறியுள்ளது.

      சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்தோனேசியாவின் காட்டுத்தீயால் பாதிப்பு உண்டாகும்போது அந்நாட்டுக்கு எவ்வளவு பாதிப்புண்டாகும்? மழைக்காட்டை அழித்து செம்பனை விவசாயம் செய்யப்படுகிறது. தொல்குடிகளிடம் ‘காட்டெரிப்பு வேளாண்மை’ உண்டு. ஆனால் மர்மமாக உண்டாகும் காட்டுத்தீ கார்ப்பரேட்டுகளால் உண்டாக்கப்பட்டு அங்கு தோட்டங்கள் உருவாகின்றன.

      போர்னியோ காட்டிலுள்ள ஒராங்ஊத்தான் (Orangutan) மனிதக்குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகள் அழிவுக்குச் சென்றுவிட்டன. காட்டை அழித்து தயாரிக்கப்படும் பாமாயில் கொழுப்பு அதிகமானது என்பதால், சோப்பு, ஷாம்பு, சலவைத்தூள், பற்பசை, லிப்ஸ்டிக், லேஸ், குர்குரே போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தும் நாம் கொஞ்சம் சிந்திப்போமா?

.     உணவு உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும்போது ஏன் பஞ்சம், பட்டினி ஏற்படவேண்டும்? மரபணுமாற்றம் செய்யப்பட்ட சோளம் மூலம் எத்தனால் தயாரிப்பில் கார்ப்பரேட்கள் ஈடுபடுகிறார்கள். பங்குச்சந்தை முதலீட்டாளர் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் -க்கு பிரேசிலில் எத்தனால் ஆலையும் நாமறிந்த பில்கேட்ஸ் -க்கு அமெரிக்காவில் ஆலையும் உள்ளது. மேலும் இந்நூல் சொல்லும் 1 லிட்டர் எத்தனால் தயாரிப்பிற்கு 17,000 லிட்டர் நீர் (மறைநீர்) தேவை என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்! ஆனால் உண்மை அதுதான்.

      கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்க சோளம், கரும்பு, கோதுமை, கிழங்குகள், நெல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உத்திகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் ‘உயிரி பிளாஸ்டிக்’ என விளம்பரம் செய்யப்படுகிறது. இவற்றிற்கான மறைநீர் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதும் சொல்லப்படுகிறது.

      Degradable, Bio- Degradable ஆகியற்றிற்கு வேறுபாடு உண்டு என்று சொல்லும் நூலாசிரியர், Oxy Degradable – மட்கும் பிளாஸ்டிக் என்பதெல்லாம் பம்மாத்து என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இதில் 1:1 என்ற அளவில் பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் பாலி புரோபலைனும் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் நமக்குக் கிடைக்கிறது.

        எத்தியோப்பியாவில் உழவர்கள் அவர்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவ்விடங்கள் கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. அம்மக்களை எவ்வித வசதியுமற்ற இடங்களின் குடியமர்த்துவது ‘கிராமமயமாக்கல்’ என்ற அழைக்கப்படும் அபத்தம் பாருங்கள்! மோடி கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் இதன் வேறு வடிவமே என்பது விளக்கப்படுகிறது.

       கார்ப்பரேட்களை எதிர்கொள்ள சூழலியல், அரசியல் அறிவு தேவையென வலியுறுத்தப்படுகிறது. குடகு மலையைச் சீரழித்துத் தேயிலையும், சோலைக்காடுகளை அழித்துத் தைலமரங்களையும் நட்டபோது காவிரிப்படுகை விவசாயிகள் கவலப்படவில்லை. அதன் விளைவு இன்று காவிரியில் தண்ணீர் இல்லை என்ற நிதர்சனம் இந்நூல் மூலம் புரிகிறது. தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள் ஆகியவற்றினால் கடல்நீர் உட்புகுந்து நன்னீர்க்குள் ஊடுருவும் அபாயமும் நடக்கிறது.

      மன்னர்களும் சர்வாதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட்களிடம் கொண்டுள்ள உறவு புரிந்துகொள்ளக் கூடியது. மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டு இவர்களுடன் இந்தியா போன்ற நாடுகள் கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வது நாட்டையும் மக்களையும் படுகுழியில் தள்ளும். உலகமயத்தில் மக்களாட்சியும் பொருளிழந்துவிட்டது. உலக வர்த்தக நிறுவனம் தனது இணையதளத்தில் ‘நல்ல ஆட்சியயை ஊக்குவித்தல்’ என்பதை ஒரு நோக்கமாக வரையறுப்பதை, தனக்குச் சாதகமான ஆட்சியைக் கொண்டுவருதல் என்பதாகப் புரிந்துகொள்வதில் ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல.


கார்ப்பரேட் கோடரி – மண் மீதான வன்முறையின் வரலாறு

சுழலியலாளர் நக்கீரன்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2016

பக்கம்: 96

விலை: ரூ. 100



வெளியீடு:

விகடன் பிரசுரம்: 962,

757, அண்ணா சாலை,

சென்னை – 600002.



பேச: 044 42634283 / 84

மின்னஞ்சல்: books@vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக