ஞாயிறு, நவம்பர் 06, 2016

49. குழந்தையை உணர்தல் – அறிதல் – நேசித்தல்

49. குழந்தையை உணர்தல் – அறிதல் – நேசித்தல்

(பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான நூல்.)

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 
 
 
 

(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ஜேனஸ் கோர்ச்சாக்கின் ‘ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்ற மொழியாக்க நூல் குறித்த பதிவு.)


“உலகை சீர்திருத்த விரும்பினால், நீங்கள் கட்டாயம் கல்வியை சீர்திருத்தவேண்டும்”. - ஜேனஸ் கோர்ச்சாக்.

       “புத்தகம் எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என கோர்ச்சாக் கருதியதை அரி எல் கோல்ட்மான் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்நூல்கூட மிகச் சிறியதுதான். கோர்ச்சாக் சொல்வதைப்போல, “குழந்தைகளை உற்றுநோக்கிப் புரிந்து கொள்ளும் விதமாக படைக்கப்பட்டிருப்பதால்”, இந்நூல் குழந்தைகளை உணர, அறிய, நேசிக்க பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடும்.

       யார் இந்த் ஜேனஸ் கோர்ச்சாக்? 1878 –ல் போலந்தின் வார்சாவில் பிறந்த, யூத மரபுகளைத் துறந்து, போலந்து கலாச்சாரத்துடன் தங்களைக் கரைத்துகொண்ட குடும்பம் இவருடையது.

         பதினெட்டு வயதில் தந்தையை இழந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற படித்துக் கொண்டே மாலையில் தனிப்பயிற்சி நடத்தினார். “எழுத்து என்பது வெறும் வார்த்தைகளே”, என்ற எண்ணத்தில் எழுத்தாளராக மாறிய பிறகும், ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவ மருத்துவத் துறையைத் தேர்வு செய்ததோடு, சாகும் வரையில் கல்வி, மருத்துவம், குழந்தைகள், எழுத்து ஆகிய களங்களில் ஒருங்கே பணியாற்றியவர்.

        போர்கள், புரட்சிகள் நடப்பதற்கு முன்பு காயப்படும், கொல்லப்படும், அநாதையாக்கப்படும் குழந்தைகள் குறித்த சிந்திக்கச் சொன்ன இவர், ஆதரவற்ற யூதக் குழந்தைகள் இல்லத்தில் இறுதிவரை ஊதியமின்றி குழந்தைகளுக்காகப் பணி செய்தார்.

       முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட வீரர்கள், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோருக்காக பணிபுரிந்த அனுபவம் உடையவர். 1939 செப்டம்பரில் ஜெர்மன் போலந்து மீது போர்த் தொடுக்க, நாஜிகளால் யூதர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட, அநாதை இல்லத்திலிருந்த 200 குழந்தைகளுடன் நடந்த வாழ்க்கைப்போரில் ட்ரெப்லிங்கா எரிவாயு அறைகளில் குழந்தைகளுடன் சாம்பலானார்.

      “ஜேனஸ் மற்றும் அவரது குழந்தைகளின் உடல்களும் எரியூட்டப்பட்டன. கைநிறைய சாம்பலும், புகை மூட்டமுமே அவர்களின் எச்சம். அதை காற்று பூமிப்பந்தின் எல்லா மூலைகளிலும் சிதறச் செய்துள்ளது. இந்தப் புகையின் மூலம் கோர்ச்சாக்கின் சிந்தனைகள் உலகம் முழுவதும் சுற்றி வருகின்றன. சிந்தனைகளை எதுவும் அழிக்கமுடியாது. மறதிச் சிமிழுக்குள் அடைத்து விடவும் முடியாது”, என்ற போலந்து நாட்டின் எழுத்தாளரும் பத்தரிக்கையாளருமான மாரெக் ஜவொர்ஸ்கி யின் வரிகள் கோர்ச்சாக்கை உணர்த்தப் போதுமானவை.

“குழந்தைகள் நாளைய மனிதர்கள் அல்ல; இன்றைய மனிதர்கள்தான்”,

உலகின் கொடூரங்களில் மிகவும் மோசமானது ஒரு குழந்தை தன் அப்பா, அம்மா அல்லது ஆசிரியருக்குப் பயப்படுவதாகும்”,

கண்டுபிடிப்பாளராக இல்லாமல் ஆய்வாளராகவே நம்மை நாம் உணரவேண்டும்”,

          என்று நம்மைப் புரட்டிப் போட்டு, புதிய வெளிச்சக் கீற்றுக்களை ஏற்படுத்திய சில கருத்துகளை தமிழ்ப் பதிப்பு முன்னுரையி ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகிறார்.

        தி.தனபால் மொழிபெயர்த்துள்ள ‘Loving Every Child’ என்ற கோர்ச்சாக்கின் இந்நூலில் 18 சிறிய தலைப்புகளில் குழந்தைகள் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்திலான அரிய செய்திகள் சொல்லப்படுகின்றன.

       “கற்பனை வளமிக்க கலைஞன் மட்டுமே வரையக்கூடிய ஓவியம்போல் நுட்பமுள்ளதாக குழந்தையின் உருவம் உள்ளதை”, அவதானிக்கும் கோர்ச்சாக, “சிறியது என்பதைவிட பெரியதாய் இருப்ப்பது மதிப்புமிக்கது எனும் கருத்து காலங்காலமாய் நிலவி வருகிறது. மேசை மீது நின்றுகொண்டு, ‘நான் பெரியவன்’ ‘நான் உன்னைவிட உயரமானவள்’, என்று மகிழ்வோடும் பெருமையோடும் நம்மிடத்தில் குழந்தைகள் பிரகடனம் செய்வதை”, விளக்குகிறார்.

        “வளர்தல் எனும் புதிரான, சிக்கலான விஷயத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை, அதன் மர்மங்களை மதிக்க”, வலியுறுத்தும் கோர்ச்சாக், தனது அனுபவமாக, “பல் ஆண்டுகளாக கற்பித்தல் களப்பணிக்குப்பின் எனக்கு மேலும் மேலும் வெளிப்படையாகத் தெரிவது என்னவெனில், குழந்தைகள் மரியாதை, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு உரியவர்கள்”, என்பதை அறுதியிடுகிறார்.

       குழந்தைகளில் விளையாட்டு பற்றிச் சொல்லும்போது, “குழந்தை என்ன விளையாடுகிறது என்பதல்ல, விளையாடும்போது என்ன உணர்கிறது, என்ன நினைக்கிறது என்பதுதான் முக்கியம். பொம்மையைக் கொண்டு புத்திசாலித்தனமாக விளையாடலாம் அல்லது சதுரங்கப் போட்டியில் முட்டாளதனமாக விளையாடலாம்”, என்று குழந்தைகளின் அக உலகை நமக்கு வெளிப்படுத்துகிறார். “குழந்தைகளின் பல விளையாட்டுகள் வேலையைப் போன்றதுதான். விளையாடும்போது மட்டுமே குழந்தை இயல்பாய் இருப்பதை உணர முடியும்”, என்பதும் உணர்த்தப்படுகிறது.

        குழந்தை மனிதர்கள் மட்டும் உயிருள்ளவை என்று நம்புவதில்லை. மேலும் அது சமூகப்படிநிலைகளைக் கண்டுகொளவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் சந்தேகமின்றி ஒரு ஜனநாயகவாதி. பெரியவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை, ரொம்ப புத்திசாலிகள் இல்லை, பொய்யர்கள் என்று குழந்தைகள் நினைப்பதும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

       அரசியல்வாதிகளும் ஆள்வோரும் உருவாக்கும் குழந்தைகளுக்கான விதிகளும் தீர்மானங்களும் பொதுவாக செயலிழக்கும் குழந்தைகளின் விருப்பத்தையும் இசைவையும் யாரும் கேட்பதில்லை. எனவே இந்த அப்பாவிக் குழந்தைகள் சொல்வதற்கு என்ன இருக்கமுடியும் என்று வினா எழுப்பப்படுகிறது.

       குழந்தைகள் கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பானது. படிப்பது என்பதுகூட மேலும் மேலும் வினாக்கள் கேட்பதே. குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பிறகு நம்மிடம் ஏதேனும் இருந்தால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்யலாம். குழந்தமையை புரிந்துகொள்ளவும் அதைக் கொண்டாடாவும்கூட இந்நூல் வழிவகுக்கும்.
ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் (பெற்றோருக்கான ஞானம்)
ஜேனஸ் கோர்ச்சாக் 

தமிழில். தி.தனபால்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..
முதல்பதிப்பு: டிசம்பர் 2010

மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி 2016

பக்கம்: 64

விலை: ரூ. 50தொடர்பு முகவரி:பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக