50. தம்மத்தை விளக்கும் கதைகள்
மு.சிவகுருநாதன்
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)
மு.சிவகுருநாதன்
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)
(தமிழினி வெளியீடாக டிசம்பர் 2014 –ல் வந்துள்ள பழனியப்பா சுப்ரமணியன் மொழியாக்கத்தில் ‘தம்மபதம் கதைகள்’ நூல் குறித்த பதிவு.)
புத்தரின் போதனைகள் அவரது காலத்தில் வரி வடிவம் பெறவில்லை. அவர் பரி நிப்பாணம் அடைந்த பிறகு அவரது உரைகள் பல்வேறு காலகட்டங்களில் சீடர்களால் தொகுக்கப்பட்டன. அவைகள்தான் இன்றைய பவுத்தத்தின் மூலப் பிரதிகளாக இருக்கின்றன.
புத்தரின் பரி நிப்பாணத்திற்குப் பிறகு அவரது நேரடி சீடரான மகா காசியபன் தலைமையில் 500 புத்த பிட்சுகள் முதல் சங்கத்தைக் கூட்டி புத்தரது போதனைகளைத் தொகுத்தனர்.
100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைசாலியில் சப்பகாம மகாதேரர் (சர்வகாம மகாதேரர்) என்ற பிட்சு தலைமையில் கூடிய இரண்டாம் சங்கம் 700 பிட்சுகள் புத்தர் பகவானின் நியமங்களை பரிசோதித்து முறைப்படுத்தியது.
மாமன்னர் அசோகர் காலத்தில் பாடலிபுத்திரம் நகரில் கூடிய மூன்றாவது சங்கம், மொக்கலி புத்ததிஸ்ஸ என்ற பிட்சுவின் தலைமையில் 1,000 பிட்சுகள் ஆய்வு செய்து அபிதம்ம பீடகம் தொகுக்கப்பட்டது.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் இலங்கை ‘ஆலுலேன’ என்னுமிடத்தில் கூட்டப்பட்ட நான்காம் சங்கம், வினய பீடகம், சுத்த பீடகம், அபி தம்ம பீடகம் என திரி பீடகங்கள் தொகுக்கும் பணியைச் செய்தது.
‘பீடகம்’ என்றால் கூடை என்று பொருள். ஒரு பொருளை ஓரிடத்தில் வைக்கவும் கொண்டு செல்லவும் கூடை உதவுவதுபோல ஞானச்செல்வங்களான மெய்ப்பொருளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்பவை என்பதால் இவை பீடகம் எனப்பட்டன.
பாலி மொழியில் இயற்றப்பட்ட பீடகங்கள் பவுத்த மதம் பரவிய நாடுகளெங்கும் பரவியது. சீன, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. பிற்காலத்தில் ‘அட்டகதா’ போன்ற உரைநூற்கள் வெளியாயின.
மூன்று பீடகங்களும் பல்வேறு உள்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
வினய பீடகம் 5 உட்பிரிவாக உள்ளது.
- மகாவக்கம்
- கல்லவக்கம்
- பாசித்திய
- பாராஜித
- பரிவார
அபிதம்ம பீடகம் 7 உட்பிரிவுகளைக் கொண்டது.
- தம்மசங்காணி
- விபங்க
- தாதுசுதா
- புக்கல பண்ணத்தி
- கதாவத்து
- யமக
- பட்டான
சுத்த பீடகம் அய்ந்து பிரிவை உள்ளடக்கியது.
- தீக நிகாயம்
- மஜ்ஜிம நிகாயம்
- சம்யுத்க நிகாயம்
- அங்குத்தர நிகாயம்
- குத்தக நிகாயம்
இவைகள் ஒவ்வொன்றும் பெருந்நூல் தொகுப்புகளாகும். இவற்றில் சிறப்பு மிக்க தொகுப்பு குத்தக நிகாயம் ஆகும். இத்தொகுப்பில் 15 நூற்கள் அடக்கம். அவைகள் பின்வருமாறு:
- குத்தக பாடம்
- தம்ம பதம்
- உதானம்
- இதி உத்தகம
- சுத்த நிபாத
- விமானவத்து
- பேதவத்து
- தேரகாதா
- தேரிகாதா
- ஜாதகம்
- நித்தேஸ
- பதிசம்பிதாமக்க
- அபதான
- புத்தவம்சம்
- சரியாபீடகம்
(தீக நியாயம் - பௌத்த மறைநூல், பாலியிருந்து தமிழில்: மு.கு. ஜெகந்நாத ராஜா, முகவுரைப்பகுதி., வெளியீடு: தமிழினி, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 2014)
மேற்குறித்தவற்றில் ஜாதகம் புத்தரின் முற்பிறப்புக் கதைகளைச் சொல்வது. பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு மிக்கது. பாலி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்தில் பேரா. ஈபி கோவெல் தலைமையில் மொழிபெயர்க்கப்பட்ட 537 ஜாதகக் கதைகள் உள்ளன. (நன்றி: அ.மார்க்ஸ், ‘என்றார் முல்லா – முல்லா நஸ்ருத்தீன் கதைகள்’ நூல் முன்னுரை.) மயிலை சீனி. வேங்கடசாமி 13 புத்தர் ஜாதகக் கதைகளை நூல் ஒன்றில் மொழிபெயர்த்துள்ளார். (வெளியீடு: எம்.ஏழுமலை, சென்னை, ஆண்டு: 2002)
‘தம்ம பதம்’ பவுத்த அறத்தை வலியுறுத்தும் நூலாகும். இதில் 423 சூத்திரங்கள் (கவிதைகள்) உள்ளன. இவற்றைத் தமிழில் ப.ராமஸ்வாமி மொழிபெயர்க்க, முல்லை நிலையம், 1987 –ல் வெளியிட்டது. ‘தமிழினி’ வெளியிட்டிருக்கும் இந்நூலில் தம்ம பதத்தின் 3, 4 அதிகாரத்திலுள்ள் சுமார் 27 பாடல்களின் கதைகள் கூறப்படுகின்றன. அதிகாரம் மூன்று மனம். சிந்தனை தொடர்பானது. நான்காவது அதிகாரம் மலர்கள் பற்றியது.
தம்மபத 3 வது அதிகாரத்தில் 33 லிருந்து 43 முடிய உள்ள சூத்திரங்கள் நிலையற்ற, நிதானம் இல்லாத, அங்குமிங்கும் அலைபாயக்கூடிய, ஆனால் கட்டுப்படுத்தக் கூடிய மனம் – சிந்தனை தொடர்பானவை.
எடுத்துகாட்டாய் ஒன்றிரண்டைக் காண்போம்.
“நீரிலிருந்து வெளியேறிய மீன் தரையில் துடிப்பதுபோல் மனது
மாரனின் பிடிலிருந்து மீளும்போது துடிக்கிறது”.
(தம்மபதம் 34)
(மாரன் – மன்மதன்)
“மனம் எதை விரும்புகிறதோ அதைப் பற்றிக்கொள்கிறது.
ஆகையால் மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட மனம் மகிழ்ச்சியும் நிறைவையும் தருகிறது”.
(தம்மபதம் 36)
“பகைமை உணர்வுள்ள ஒருவன் எதிரிக்குத் தீங்கிழைப்பான்.
வழி தவறிய மனம் உடையவன், மனம் பிறழ்ந்தவன்
தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்வான்”.
(தம்மபதம் 42)
“சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் தாய், தந்தை
உறவினர்களின் வழிகாட்டுதலை விட அதிக நன்மை தரும்”.
(தம்மபதம் 43)
மேலும் இந்நூல் 4 வது அதிகாரத்தில் 44 முதல் 59 முடிய உள்ள பாடல்கள் மலர்கள் பற்றிய உவமைகள் மூலமாக புத்த தம்மம் விளக்கப்படுகிறது.
சில உதாரணங்கள்.
“மலரின் நிறத்தையோ மணத்தையோ சேதப்படுத்தாமல்
வண்டு தேனைச் சேகரிக்கிறது, அதேபோன்று
ஞானி கிராமத்தில் செயல்படுகிறான்”.
(தம்மபதம் 49)
உதிரிப்பூக்களில் இருந்து மாலை கட்டப்படுவது போலப் பல
சிறந்த செயல்கள் மனிதனை உருவாக்குகின்றன”.
(தம்மபதம் 53)
“மல்லிகை, மகரா. சந்தனம் போன்ற மலர்களின் மணம்
காற்றிற்கு எதிராகப் பரவுவதில்லை. ஆனால் நெறியான
வாழ்க்கை வாழ்பவர்களின் மணம் எதிர்க்காற்றிலும் பரவுகிறது.
எல்லாத் திசைகளிலும் அவர்களுடைய சிறப்பு சென்றடைகிறது”.
(தம்மபதம் 54)
“சேற்றிலிருந்து பூத்த செந்தாமரையும் மணம் வீசுகிறது.
காண்பவர்களை மகிழ்விக்கிறது”.
(தம்மபதம் 58)
ததாகதர் (புத்தர்) உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்போது, ஆனந்தன் சங்கத்தினருக்கு அறிவுரை வழங்க வேண்டினார். அதற்குப் புத்தர், “ஆனந்தா! சங்கம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது? “நான்தான் சங்கத்தின் தலைவன். சங்கம் என்னை நம்பியிருக்கிறது” என்று எவன் நிணைக்கிறானோ, அவன் அறிவுரைகள் கூறட்டும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனந்தா உனக்கு நீயே விளக்கா இரு”, என்று பதிலளிக்கிறார். (பக். 88)
புத்தரின் இறுதி உணவு, திருக்குறள், வீரசோழியம், மணிமேகலை, குண்டலகேசி போன்ற நூற்களிலுள்ள பவுத்த மேற்கோள்கள் இறுதியாக உள்ளன. தம்மபதக் கதைகள் தம்மத்தின் எளிய விளக்கமாக மிளிர்வதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
தம்மபதம் கதைகள்
தமிழில். பழனியப்பா சுப்ரமணியன்
வெளியீடு:
தமிழினி
முதல்பதிப்பு: டிசம்பர் 2014
பக்கம்: 96
விலை: ரூ. 70
அலுவலகம்:
தமிழினி,
63, நாச்சியம்மை நகர்,
சேலவாயல்,
சென்னை – 600051.
மின்னஞ்சல்: thamizhininool@yahoo.co.in
விற்பனையகம்:
25 ஏ, தரைத்தளம்,
முதல் பகுதி,
ஸ்பென்சர் பிளாஸா,
769, அண்ணாசாலை,
சென்னை – 600002.
தொலைபேசி: 044 284990027
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக