ஞாயிறு, நவம்பர் 13, 2016

52. பவுத்தத்தை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ளல்

52. பவுத்தத்தை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ளல்



(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)



மு.சிவகுருநாதன்

    (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக வந்த பௌத்தம் – ஒரு மார்க்சிய அறிமுகம் (மார்க்சிய ஒளிக் கட்டுரைகள் – 01-தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, இராம்விலாஸ் சர்மா, பொன்கார்ட் – லெவின், பதிப்பாசிரியர்: வெ.கோவிந்தசாமி) நூல் பற்றிய பதிவு.)





        1970 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மார்க்சிய ஒளி’ என்ற தத்துவார்த்த இதழில் வெளியான கட்டுரைகள் தொடராக வெளியிடும் நோக்கில், இந்த முதல் தொகுப்பில் நான்கு முக்கிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தொடர்ந்து புத்தகங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பவுத்தத்தை மார்க்சிய நோக்கில் விளங்கிக் கொள்ள குறிப்பிடத்தக்க அறிமுக நூல் இது என்பதில் அய்யமில்லை.

       மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுக்கும் இடையே உரையாடல்கள் தொடரவேண்டும் என்பதை அணிந்துரையில் வலியுறுத்தும் எஸ்.பாலச்சந்திரன், “கறாரான மார்க்சிய தத்துவ அடிப்படையில் நின்று புதிய சூழலுக்கேற்ற விவாதங்களை மர்க்சியர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர் என்பதும், அவர்களில் பலர் தலித்தியர்களின் பௌத்த ஏற்பை விமர்சனமின்றி அங்கீகரித்து, முரண்பாட்டைத் தவிர்க்க விரும்புகின்றனர் என்பதும், மனந்திறந்த உரையாடல்கள் மூலம் தலித் மக்களின் விடுதலைக்கான கருத்தியலை உருவாக்குவதில் மார்க்சியர்களை இணைத்துக்கொண்டு செயல்படுவதில் தலித்திய சிந்தனையாளர்களிடம் தயக்கம் இருப்பது” காரணம் என்று சொல்கிறார்.

‘        ஆரம்ப பௌத்தத்தில் சில பிரச்சினைகள்’ என்ற தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் 34 பக்க நீண்ட கட்டுரையை கா.சு.ரகுமணி மொழிபெயர்த்துள்ளார். பெரிய அறிஞர்கள் உள்பட பலர் ஆரம்பகால பவுத்தத்தின் வர்க்கச் சார்புநிலை பற்றி முரண்பட்ட முடிவுகள் எடுத்திருப்பதைச் சுட்டி, இப்பிரச்சினை பற்றிய புதிய விளக்கம், புதிய அணுகுமுறைக்கான வழிவகைகளை சொல்வதே நோக்கமென பறைசாற்றுகிறது.

        புத்தருக்குப் பின்னர் தலைமையிடத்தில் இருந்த உபாலி (சவரத்தொழிலாளி), சுனிதா (தாழ்ந்தப்பட்ட வகுப்பு), சதி (மீனவர் மகன்), நந்தா (இடையர் சாதி), பந்தகர்கள் (உயர்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் ஓர் அடைமைக்கும் பிறந்தவர்கள்), கபா (மான் வேட்டையாடி மகள்), புன்னா, புனிகா (அடிமைகள்), சுமங்களமாதா (பாய்முடையும் பெண்), சுமி (தச்சர் மகள்) என்ற பட்டியலிடும் ரைஸ் டேவிட்ஸ், பிறப்பு, தொழில், சமூக அந்தஸ்து ஆகியவற்றின் மூலம் கிடைத்து வந்த நன்மைகளையும் இடர்பாடுகளையும் புத்தர் தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழிருந்த மத அமைப்பில் முற்றாக ஒதுக்கித் தள்ளினார்; வெற்றுச்சடங்கு அல்லது சமூக இழிவு அடைப்படையில் உருவான தன்னிச்சையான விதிகளால் எழுந்த தடைகளையும் இடர்பாடுகளையும் அவர் முற்றாக துடைத்தெறிந்தார்”. (பக். 13) என்கிற முடிவுக்கு வருகிறார்.

       மகத அரசைச் சேர்ந்த உயர்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் பவுத்த மதத்தைத் தழுவியபோது, “சந்நியாசி கௌதமர் குழந்தைகள் இல்லாமல் செய்யவே இங்கு வந்திருக்கிறார்; சந்நியாசி கௌதமர் விதவைப் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இங்கு வந்திருக்கிறார்; சந்நியாசி கௌதமர் குடும்பங்களைச் சீர்குலைக்கவே இங்கு வந்திருக்கிறார்”, (பக். 15) என்கிற முணுமுணுப்பு ஏற்பட்டதாக ஓல்டன் பெர்க் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, எழுச்சியை உருவாக்கிய ஒரு தலைவனைப் பற்றி இவ்வாறு பேச வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்.

        “இன்றைய உலகத்தில் புத்தர் வாழவில்லை. எனவே இன்றைய அளவுகோலின்படி அவருடைய வர்க்கச் சார்புநிலை பற்றி மதிப்பிடுவது கஷ்டம்”, (பக். 16) என்றும் “எந்த முறையில் ஜனநாயகம் என்பது பழங்காலத்தில் அறியப்பட்டது? அந்த வகையான ஜனநாயகத்தில்பால் புத்தரின் அணுகுமுறை என்ன?”, (பக். 17) ஆகிய இரு வினாக்களுக்கு விடை தேடுவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

        ஓர் உண்மையான சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு எதிரான திசையில் பயணம் செய்தது, அரச மதமானது, அது எதிர்க்க வேண்டிய அநீதிகளுக்கு எதிராக தற்காலிக நிவாரணம் தேடியது போன்ற பவுத்தத்தின் குறைபாடுகள் வெளிப்படையாக இருந்தபோதும், இதன் மேன்மையை புறக்கணிக்க முடியாது. மேலும் புத்தர் தனக்கு வேண்டியவற்றில் பெரும்பாலானவற்றை வர்க்கங்களுக்கு முந்தைய சமூக அமைப்பிலிருந்து எடுத்துக்கொண்டார் என்பதும் சொல்லப்படுகிறது.

      “புத்தர் காலத்தில் நடப்பில் இருந்து வந்த பல்வேறு கணங்கள் குறித்த தகவல்கள், பண்டையப் பொதுவுடைமைச் சமுதாயங்கள் அல்லது குறைந்தபட்சம் அதனுடைய வலுவான மிச்ச சொச்சங்களைக் கொண்டிருந்த சமுதாயங்கள் மத்தியில் புத்தர் வாழ்ந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்களைத் தருவதை”, (பக். 26) மஹாவஸ்து – அவதானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள கதைகளில் இரண்டறக் கலந்துள்ளது எடுத்துக்காட்டப்படுகிறது.

       பழங்குடியினரைக் கொள்ளையடிப்பதும், மது – மாது ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒற்றர்கள் மூலம் கொலை செய்வதும் முடிமன்னர்களின் வேலையாக இருந்ததை ஆர்.சி. மஜூம்தார் குறிப்புகளைக் கொண்டு விளக்கப்படுகிறது. மவுரியப் பேரரசின் மூளையாக இருந்து செயல்பட்ட கவுடில்யர் வகுத்த இந்தக் கொள்கைகள் வழிவழியாக தொல்குடி மக்களை ஒடுக்க மகாபாரதக் குறிப்புகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிற செய்திதான்.

       பவுத்த புனித நூலான தீக நிகாயம் மகா பரிநிர்வாண சூத்திரத்தில் மகத அரசன் அஜாதசத்ருவின் போர்வெறி உணர்த்தப்படுகிறது. இதற்கு எதிராக “ஒரு ஸ்தாபனத்தின் பலம் அதன் உறுப்பினர்களுடைய ஒற்றுமையில் அடங்கியுள்ளதை”, புத்தர் போதிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

      பபஜ்ஜம், உபசம்பதம் போன்ற தீட்சைச் சடங்குகளில் பெறப்படும் சங்க உறுப்பினர்களின் இசைவு, “அனைத்தும் சங்கத்திற்கே சொந்தம், தனிப்பட்ட எந்த ஒரு பிட்சுவுக்கும் அவை சொந்தமானதல்ல”, என்கிற கொள்கைகள் பொதுவுடைமை அடிப்படைகள் விளக்கப்படுகின்றன.

     புத்தரின் நாத்திகவாதம் வெளிப்படையானது. பவுத்தம் ஒரு கடவுளற்ற மதம். ‘வடக்கத்திய பவுத்தத்தில் கடவுள்கள்’ என்ற நூலில் காணப்படுபவை பிற்காலத்தில் நுழைக்கப்பட்டவை. “தனது உள்ளெழுச்சிக்கான மூலாதாரத்தைப் பண்டையப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆரம்பகாலப் பௌத்த மதமானது எவ்வாறு கடவுள் நம்பிக்கையைப் பற்றிப் பேசமுடியும்?”, (பக். 37) என்ற வினா எழுவது இயற்கையானது.

       “பண்டையப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மாயத்தோற்றங்களை (illusion) மட்டுமே புத்தரால் உருவாக்க முடிந்ததைக் குறிப்பிட்டு, அவரால் உருவாக்கப்பட்ட சங்கங்கள், “வர்க்கமற்ற சமுதாயத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வர்க்கமற்ற அமைப்புகள்”, (பக். 41) என்றும் விளக்கப்படுகிறது.

      இஸ்ரேலியர்களின் ஒரு கடவுள் கொள்கையை உருவாக்கிய ஜெகோவா – புத்தருடன் வேறுபடும் புள்ளிகள் இருந்தபோதிலும் ‘பழங்குடியினரின் கற்பனை உள்ளடக்க’ ஒன்றுமையையும் சுட்டப்படுகிறது.

      ‘புத்தரின் போதனையில் சில தோற்றங்கள்’ என்ற இராம் விலாஸ் சர்மாவின் கட்டுரையை மு.அம்மையப்பன் மொழிபெயர்த்துள்ளார். மகத, கோசல நாட்டு நிலப்பிரபுத்துவ முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் புத்தர். உலகத்திலேயே முதலாவது மதத்தை நிர்மாணித்த புத்தர், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சிறு உற்பத்தியாளருக்கும் அவருடைய உழைப்பைச் சுரண்டுபவருக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. போலி பிராமணர்களை அதிகமாக எதிர்த்தார். (பக். 48)

      “தன்னுடைய தீமைகளுக்குத் தானே காரணமாக இருக்கிறான்; தன்னுடைய துயரங்களுக்கு தானே காரணமாக இருக்கிறான்; தன்னால் மட்டுமே தீமைகளைக் கைவிடமுடியும்; தன்னால் மட்டுமே தன்னை நல்லவனாக்கிக் கொள்ளமுடியும்; ஒருவன் மற்றொருவனை நல்லவனாக்க முடியாது”, (பக். 49 என்று தம்மபதம் சொல்வது, மனிதன் தீமைகளுக்கு எதிராக போராடுவதை விடுத்து சகித்தல் அல்லது அடிபணிதல் என்னும் போக்கு இந்திய சிந்தனையாளர்களிடம் நிறைந்திருக்குகிறது. புத்தரும் இதற்கு விலக்கல்ல.

      புத்தர் கடவுளையோ, ஆன்மாவையோ நம்பவில்லை. எந்த ஒரு வேத நூலையும் ஒப்புக்கொள்ளவில்லை. சார்வாகர்களுக்கும் இதே கருத்துண்டு. புத்தர் தனது நடைமுறையிலும் பார்வையிலும் கருத்து முதல்வாதியாகவே இருக்கிறார் என்று கணிக்கிறது.

      புத்தர் வலியுறுத்திய காரணீயக் கோட்பாட்டை சார்வாகர்கள் மறுக்கவில்லை. அதன் மாறுதலற்ற தன்மையை அவர்கள் மறுத்தனர். மேலும் புத்தரிடம் உடைமை வர்க்கப் பண்புகள் வெளிப்பட்டன. அவரது போதனைகள் வணிகர்கள், மன்னர்கள் ஆகியோர்கள் நலன்களைப் பாதுகாத்தது என்ற ராகுல் சாங்கிருத்தியாயன் முன்வைத்த விமர்சனத்துடன் (பௌத்த தரிசனம்) கட்டுரை முற்றுப்பெறுகிறது.

     ‘நிலப்பிரபுத்துவம், வருணம், ஜாதி, தேசியம்’ என்ற இராம் விலாஸ் சர்மாவின் மூன்றாவது கட்டுரை எஸ்.நாராயணனால் மொழியாக்கப்பட்டுள்ளது. “தன் தந்தையின் தொழிலை மகன் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்வது அதிக அவசியமாகின்றது. இந்தப் பொருளாதார அவசியம்தான், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் ஜாதிய முறையை உற்பத்தி செய்தது”, (பக். 64) என்றும், ‘நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை பிளவுபடுகின்றது. பிறகு கரைந்து புதிய சமுதாய உருவம் ஒன்றில் இந்தப் பூர்வகுடிகள் ஒன்றுபடுகின்றன. இவ்வாறு தோன்றுகின்ற சமுதாய உருவம்தான் தேசிய இனம். இந்தத் தேசிய இனங்களிலிருந்துதான் முதலாளித்துவக் கட்டத்தில் தேசங்கள் உருவகமடைகின்றனவே தவிர பூர்வகுடி அமைப்பிலிருந்தோ அல்லது பெயரற்ற சமுதாய உருவகங்களிலிருந்தோ தோன்றுவதல்ல”, (பக். 48) என்றும் வரையறுக்கிறது.

  “நிலப்பிரபுத்துவத்தின் அடைப்படை அம்சங்கள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஒரே மாதிரியானவ”தான்”, (பக். 75) என்று திட்டவட்டமாகக் கூறும் ஆசிரியர் சாதியம் இங்கு மட்டும் உள்ள ஒன்றல்ல, என்றும் கூறுவது இந்திய சாதிய, வருணப் பின்புலத்தைப் பற்றி சரியாக புரிதல் இல்லாத பார்வையாகவே இருக்கிறது.

     பொன்கார்ட் லெவினின் ‘ஆர்யபட்டரும் லோகாயவாதிகளும்’ என்ற கட்டுரையை தமிழில் சாரதி வழங்கியுள்ளார். தக்காணப் பகுதியில் பிறந்த ஆர்யபட்டரின் படைப்புகள் குப்த அரசு வெளியீடுகளில் இல்லாது போனதற்கு உள்ளார்ந்த காரணம் இருக்கக்கூடும், என்றும் இவரை மரபுவாதியாக சிலர் திரித்தாலும் மரபு வழிச் சிந்தனைக்கு மாறுபட்டவர் என்பதே உண்மை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

     வராகமிஹிரர் போன்ற மரபுவாதிகள் ஐம்பூதங்கள் (நிலம், நீர், ஆகாயம், தீ, வளி) பற்றிப் பேசும்போது ஆரியபட்டர் உலகாயத வாதிகளைப் போல பூமி நான்கு பூதங்களால் ஆனது என்கிறார். (நிலம், நீர், தீ, வளி) ஆகாயத்தை இவர்கள் பூதமாகக் கொள்வதில்லை. பகுத்தறிவுவாதமென ஏற்கப்படும் சாங்கியம்கூட ஐம்பூதங்களை ஏற்கிறது.

    தனது அச்சின்மேல் பூமி சுழல்கிறது என்று கூறிய முதல் இந்திய வானியல் அறிஞர் ஆர்யபட்டர். இதன்மீது வராஹமிஹிரர், பிரம்மகுப்தர், பட்டோத்பனர், ராமேஸ்வரர், லல்லா ஆகிய வைதீகர்கள் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் கக்கியுள்ளனர். மேலும் ஆர்யபட்டரைத் திரித்தும் இருக்கின்றனர். பிராமண குலத்தில் பிறந்து, மரபுவழிக் கல்வியைப் பெற்ற ஆர்யபட்டர், இந்துமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எதிர்த்த இந்திய அறிஞர் என்ற வகையில் பாராட்டுக்குரியவராகிறார். இருந்தபோதிலும் இவரை உலகாயதவாதியாகக் கருதமுடியாது என்றும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

     பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய “இருபிறப்பாளர்கள் தர்க்க சாஸ்திரத்திற்கு அடிமையாகிப் புனித மரபை மறுத்துரைக்க முற்பட்டால் அவனை நாஸ்திகன் என்று மக்கள் ஒதுக்கி வைக்கவேண்டும். வேதத்தை மீறுபவன் என்று குற்றஞ்சாட்டி வெளியேற்றவேண்டும்”, (பக். 82) என்ற இந்து சட்டநூலான மனுஸ்மிருதி கூறியதற்கிணங்க ஆர்யபட்டர் சனாதனிகளால் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை. 23 வயதில் தனது படைப்புகளைத் தந்த இவரது பிற்காலம் நமக்கு மறைக்கப்பட்டுவிட்டது.

     தொன்மை இந்தியப் பொருள் முதல்வாதத்தைப் பற்றிய ஆய்வு செய்த பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவில்லை என்கிற அவநம்பிக்கை அவசியமற்றது என்றும் மாறாக தேடல் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



பௌத்தம் – ஒரு மார்க்சிய அறிமுகம்

(மார்க்சிய ஒளிக் கட்டுரைகள் – 01)



தேவிபிரசாத் சட்டோபாதியாயா

இராம்விலாஸ் சர்மா

பொன்கார்ட் - லெவின்



பதிப்பாசிரியர்: வெ.கோவிந்தசாமி



முதல் பதிப்பு: டிசம்பர் 2012

விலை: ரூ. 65

பக்கம்:. 84





வெளியீடு:





நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.



044-26258410, 26251968, 26359906

மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in



அச்சிட்டோர்:



பாவை பப்ளிகேஷன்ஸ்,

16 ஜானி கான் கான் சாலை. ராயப்பேட்டை,

சென்னை 600014.

பேச: 044-28482441, 28482973

மின்னஞ்சல்: pavai123@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக