திங்கள், நவம்பர் 14, 2016

53. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

53. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

(முதல் பகுதி)

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)
 
(இன்று நவம்பர் 14 குழந்தைகள் நாள்.) 



(இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து, புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட, அப்பணசாமி மொழிபெயர்ப்பில் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’ என்ற ஜான் ஹோல்ட் நூல் குறித்த பதிவு.)


      தமிழில் இன்று பொருளிழந்த சொற்கள் ஏராளம். புரட்சி, மக்கள் நலம், கல்வியாளர் என்பன அவற்றுள் சில. ஆனால் உலகில் கல்வியாளர்கள் பலர் உண்டு. அவர்கள் பெரும்பாலும் நமது கல்விப்புலங்களிலிருந்து வந்தவர்களல்ல என்பது ஏதேச்சையான ஒற்றுமை அல்ல. நமது கல்விநிலையங்கள் கல்வியாளர்களை மட்டுமல்ல, மனிதர்களைக் கூட உருவாக்க லாயக்கற்றவை.

     ஜான் ஹோல்ட், பாவ்லோ பிரைய்ரே, மரியா மாண்டிசோரி, ஆன்டன் மக்கெரென்கோ, கோர்டான், ஆண்ட்ரு பொலார்டு, இகோர் பெட்ரோவிச் இவானோவ், க்ரூஸ் போன்ற நீண்ட பட்டியலில் ஜான் ஹோல்ட்க்கு தனித்த இடமுண்டு.

     1923 ஏப்ரல் 14 –ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர் ஜான் ஹோல்ட் (John Holt). இரண்டாம் உலகப்போரில் நீர்மூழ்கிக் கப்பலில் வீரராகப் பணி புரிந்தவர். போருக்குப் பின்னர் அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தில் ஈடுபட்ட ஹோல்ட், தங்கையின் விருப்பத்திற்காக நியூயார்க் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியேற்றார். பிறகு பாஸ்டன் நகர் பள்ளியிலும் புரிந்தார். கல்விக்கூடம் வன்முறைக்களமாக இருப்பதைக் கண்டு மனம் நொந்து, தனது ஆசிரிய நண்பருடன் இணைந்து கல்விச் சோதனைகளில் இறங்கி தொடர் ஆய்வுகளைப் பல்வேறு நூற்களாக எழுதி வெளியிட்டார். கல்வியில் குழந்தைகளின் விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றை அரசும் பெற்றோர்களும் விரும்புவதில்லை என்றபோது, பள்ளியைப் புறக்கணிப்பதே ஒரே வழியென்றார். இவரது ஆதரவாளர்கள் பள்ளிகளைப் புறக்கணித்த நிகழ்வும் நடந்தேறியது வியப்பான ஒன்று. இவரின் கருத்தும் பிறராலும் செவிமெடுக்கப்பட்டது.

     வயலின் இசைக்கலைஞரான இவர், வீட்டுக்கல்வி இயக்கப் (Home Schooling Movement) பரப்புரையை முன்னெடுத்தார். பள்ளிகளின்றி வளர்தல் (Grow Without Schooling) என்னும் இதழ் ஒன்றையும் நடத்தினார். நடுத்தர வர்க்க பணவெறி குழந்தைகளை முதலீடாகவும் வளர்ப்புப் பிராணியாக கருதும் நிலைக்கு ஆட்படுத்திவிட்டதை தனது நூல்களில் வெளிப்படுத்துகிறார்.

     பள்ளி சார்ந்த மற்றும் சாராத வன்முறைகளை வெறுத்த இவர், அதிலிருந்து தப்பிக்க தனி நூலொன்றையும் எழுதியுள்ளார். பிற கல்வியாளர்களை விட குழந்தைகளின் உரிமை குறித்து மிக அதிகமாகச் சிந்தித்தவர். தன்னுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் , வீடு, பள்ளி, மதம், பாடநூல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தைகளுக்கு வேண்டுமென வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு தனி வரவு செலவு அறிக்கை, வாக்குரிமை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதிய பாடத்திட்டம் என்று கல்வியில் எல்லையில்லாமல் சிந்தித்தவர். மாற்றுக் கல்வியாளர் ஜான் ஹோல்ட் 1985 செப்டம்பர் 14 –ல் தனது 62 வது வயதில் மறைந்தார்.

அவர் எழுதிய சில கல்வி நூற்களின் பட்டியல்:

  1. குழந்தைகள் ஏன் தோற்கிறார்கள்? (How Children Fail?)
  2. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்? (How Children Learn?)
  3. கல்விக்குப் பதிலாக… (Instead of Education)
  4. 'குழந்தைப் பருவத்திலிருந்து தப்புதல் (Escape From Childhood)
  5. விடுதலையைத் தாண்டி… (Freedom and Beyond)
  6. இன்னும் காலம் கடந்துவிடவில்லை (Never too Late)

      இவற்றில் ‘How Children Learn?’ என்ற நூலானது தோழர் அப்பணசாமியால் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் கீழ்க்கண்ட ஒன்பது தலைப்புகளில் இவரது கல்வி ஆய்வுகள் விரிகின்றன.
  1. குழந்தைகள் குறித்து கற்றல்.
  2. விளையாட்டுகளும் சோதனை முயற்சிகளும்.
  3. பேச்சு.
  4. வாசித்தல்.
  5. விளையாட்டுகள்.
  6. ஓவியம் மற்றும் கணிதம் பிற.
  7. அதீத புனைவுகள்.
  8. மூளையும் அதன் செயல்பாடுகளும்.
  9. கற்றலும் அன்பும்.

      குழந்தைகள் கற்பிக்கப்படவேண்டியவர்கள் என்ற மரபான எண்ணத்தைத் தகர்த்து அவர்களும் மனித உயிர்களே, அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு நிறைய உண்டு என்பதை உணர்த்தியது இவரது ஆய்வுகளும் எழுத்துச் செயல்பாடுகளும். “ஒவ்வொரு இளம் குழந்தையிடமிருந்தும் குழந்தைக் கல்வி தொடர்பாக ஏதேவது ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்” (பக். 29) என்பதை தனது அனுபவங்களின் முடிவாகச் சொல்கிறார்.

      1960 களில் குழந்தைகளின் கற்றல் தொடர்பான வலது மூளை, இடது மூளை பற்றிய கோட்பாடு பிரபலமானது. இவர்கள் குழந்தை மூளையின் வலது பக்கத்தைச் சரிசெய்தால் போதும் என்று கூறுகிறார்கள். ஆனால் பள்ளிக்கு வெளியேதான் கலை வளரமுடியும் என்பதை விரும்பும் மக்கள் இந்த வலது மூளை வாதத்தில் ஆர்வம் காட்டுவதில்லை (பக். 16).

      உயிர்கள் அனைத்தும் எந்திரங்கள் போன்றவைதான் என்ற அபாயகரமான கருத்து குறித்து ஜான் ஹோல்ட், “மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இயந்திரங்கள் தவிர வேறல்ல என்ற கருத்து உலகின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. என்னைப் பொருத்தவரையில் உலகில் உள்ள அனைத்து மோசமான கருத்துகளைக் காட்டிலும் மிகவும் மோசமான, அபாயகரமான, முட்டாள்தனமான, தவறான ஒரு கருத்தாகும் இது. ஒரு கருத்து சாத்தானாக இருக்க முடியும் என்றால், அது இதுதான்”, (பக். 24) என்று கருத்துரைக்கிறார். லெயிங் கூறுவதுபோல், இம்மாதிரியான சாத்தானின் மொழி, இதயமற்ற அறிவின் மொழியில் கொடூரமாகத் தொடர்கிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

      குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்; குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பதை நாம் எவ்வாறு கற்கிறோம் என்பது தொடர்பான ஆய்வில் எந்திரத்தனம் உதவாது. அன்பு செலுத்துதல், மரியாதை அளித்தல், நம்பிக்கை கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமே சாதிக்கமுடியும்.

      குழந்தைகள் எவற்றையெல்லாம் கற்கமுடியுமோ அவற்றையெல்லாம் கற்கவேண்டும், கற்றவற்றை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று என்னும் திரிபுவாதிகள், அலட்சியப் போக்காளர்கள் குழந்தைகளைச் செயற்கையான பழக்க வழக்கங்களுக்குள் திருப்புகின்றனர். குழந்தைகளை அடித்து ஒடுக்கி சீசாவில் அடைக்கப்பட வேண்டிய பூதமாகவோ அல்லது நாம் உருவாக்கித் தந்த செயல் நிரலின்படி இயங்கும் இரண்டு கால் கணினியாகவோ அவர்களைப் பார்க்கப் பெற்றோர் ஆசைப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார் (பக். 34,35).

     குழந்தைகளுடன் விளையாடுதல் பற்றி ஜான் ஹோல்ட் கூறுவதை கொஞ்சம் கேட்போம். “ நாம் குழந்தைகளுடன் விளையாடுவதர்கு ஒரே காரணம் நாம் குழந்தைகளை நேசிக்கிறோம். அவர்களோடு விளையாடுவதில் நமக்கு மகிழ்ச்சி இருக்கிறது. நம்மோடு விளையாடுவதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி இருக்கிறது. மாறாக அவர்களை உடனடியாகக் கல்லூரியில் சேர்ப்பதற்காகப் பயிற்சியளிக்கவில்லை. விளையாட்டுக்களை வேடிக்கையாக்குவதிலும் நமக்கும், குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி இருக்கிறது. இதில் மகிழ்ச்சியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கொடூரமான குயுக்திப் பயிற்சிகளை வைத்து சிரமப்படுத்தினால், நாம் விளையாட்டைக் கொன்றுவிடுவோம். நாம் இப்படியே குயுக்திப் பயிற்சிகளை அளித்துக்கொண்டிருந்தால் குழந்தைகள் நம்முடன் விளையாட மறுத்துவிடுவார்கள். அப்படி விளையாடினாலும் அது பள்ளிப் பாடம் போல் கடமையாகவும் வாய்பாடு போல உணர்ச்சியற்றுதான் இருக்கும் (பக். 66).

      குழந்தைகள் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் பள்ளி வாழ்க்கைப் பற்றியே நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே கணக்கில் கொள்ளவில்லை, என்கிற குறைகளைச் சுட்டிக்காட்டி, மழலைப்பருவம், அதற்கு முந்தைய பருவம் தொடர்பான குழந்தைகளின் வளர்ச்சியை அன்றாடம் கவனித்துப் பதிவு செய்யும் தனது ஆய்வு முறையியலை விளக்குகிறார்.

                (இரண்டாம் பகுதி… நாளை தொடரும்.)



எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட்

தமிழில்: அப்பணசாமி

வெளியீடு:

இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து

புக் ஃபார் சில்ரன்

(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..)



முதல்பதிப்பு: டிசம்பர் 2007,

மூன்றாம் பதிப்பு: நவம்பர் 2014

பக்கம்: 272

விலை: ரூ. 170



தொடர்பு முகவரி:



பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.



தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக