வியாழன், நவம்பர் 17, 2016

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்

மு.சிவகுருநாதன்       (நேற்று நவம்பர் 16, 2016 அன்று மாலை 5.00 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க’க் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான தயாரிக்கப்பட்ட சில குறிப்புகள். பள்ளி நேரம் முடிந்து மேலும் 3 மணி நேரம் கல்வி மற்றும் குழந்தைகள் பற்றிய சிந்திக்க சுமார் 30 ஆசிரியர்கள் கூடியிருந்தது மனம் மகிழ்ந்த நிகழ்வு. பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்கள். அனைவரும் தங்களது குழந்தைகளின் சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டதும் அதைத் தீர்க்க முனைப்பு காட்டியதும் இனிய தருணங்கள். தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் திரு. பாலசண்முகம் (நாகை பாலா), சங்கத்தின் தோழமைகள், திரு. சு.பாலசுப்பிரமணியன் போன்ற வாட்ஸ் அப் தோழர்கள், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.)


                                                           பகுதி: ஒன்று

        லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, பற்றி அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அ,மார்க்ஸ், தய்.கந்தசாமி ஆகியோருடனான ஒரு சந்திப்பில் இதன் இலக்கிய தன்மை பற்றியும் பழைய ஏற்பாட்டை அதன் இலக்கிய ரசனைக்காக வாசிப்பது பற்றியும் பேச்சு வந்தது. அதில் குழந்தைகள் பற்றிய சிறுபகுதியைக் கீழே தருகிறேன். முழுக்க அன்பைச் சுரக்கும்/பொழியும் புத்த, சமண, கிருஸ்தவ பிரதிகளைப்போல மனுஸ்மிருதியையோ, பகவத்கீதையையோ அணுகமுடியாது என்பது உறுதி.

சுவிசேஷங்களில் இயேசு கிருஸ்து சொன்ன அய்ந்து கட்டளைகள்:

1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள்.

2. விபச்சாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள்.

3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. தீமையினை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள். மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள்.

5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போன்றே பிற நாட்டவரையும் நேசியுங்கள்.

(பக். 77. சுவிசேஷங்களின் சுருக்கம், லியோ டால்ஸ்டாய், தமிழில்: வழிப்போக்கன், பாரதி புத்தகாலயம் வெளியீடு: மே 2016)

இயேசுவை காண வந்த குழந்தைகளை அவரது சீடர்களை அப்புறப்படுத்துவதைக் கண்டவர், பின்வருமாறு கூறுகிறார்.

     “குழந்தைகளைத் துரத்துவதென்பது தவறானதொருச் செயலாகவே இருக்கிறது. வேறு எவரைக் காட்டிலும் குழந்தைகள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் குழந்தைகளே தந்தையின் சித்தத்தின்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களே பரலோக ராஜ்யத்தினில் வீற்றும் இருக்கின்றனர். எனவே நீங்கள் அவர்களைத் துரத்திவிடக்கூடாது. மாறாக நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தந்தையின் சித்தத்தின்படி வாழவேண்டும் என்றால் நீங்கள் ஒரு குழந்தை எவ்வாறு வாழ்கிறதோ அவ்வாறே வாழவேண்டும்.

       நான் உங்களிடம் தந்திருக்கும் அந்த ஐந்து கட்டளைகளை குழந்தைகள் எப்போதும் நிறைவேற்றுகின்றார்கள். அவர்கள் எவரையும் சபிப்பதில்லை. அவர்கள் எவர் மீதும் வன்மம் கொள்வதில்லை. அவர்கள் விபச்சாரம் செய்வதில்லை. அவர்கள் எதற்காகவும் உறுதிமொழிகளினை ஏற்பதில்லை. அவர்கள் தீமையை எதிர்ப்பது இல்லை. அவர்கள் எவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. தங்கள் இனத்தவரிடம் இருந்து வேற்று இனத்தவரை அவர்கள் வேற்றுமைப் படுத்திக் காண்பதுமில்லை. எனவே அவர்கள் வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கின்றனர். மாமிசத்தின் விளைவாக எழும் அனைத்துவிதமான ஆசைகளையும் துறந்து இந்தச் சிறு குழந்தைகளைப் போன்று நீங்கள் மாறவில்லை என்றால் பரலோக இராஜ்யத்தினுள் நீங்கள் நுழையமாட்டீர்கள்”. (அத்தியாயம் IX, பக். 177, மேலே குறிப்பிட்ட நூல்.)

       பவுத்தம் ஆசைகளை மட்டுமல்ல; அனைத்து வகையான பற்றுகளையும் அறவே அகற்றச் சொன்னது. அப்போதுதான் பரிநிப்பாணம் கிடைக்கும். பற்றுகளைத் துறந்து பரிநிர்வாணமடையும் சிந்தனா முறை புத்தர் நமக்களித்தது.

       சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில் புத்தர் வலியுறுத்துகிறார். அறிவுநிலை மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை நீக்குதல் இங்கு முதன்மையானது. (பக். 72, தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988) இதைத்தான் பெரியார் வேறு மொழியில் சொன்னார்.

     “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, ‘நிர்வாணமான சிந்தனா சக்தி’ தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை எதைப்பற்றியும், எந்தப்பற்றுமற்ற வகையில் செல்லும்வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெருமளவு மீதமாகி மக்கள் வாழ்க்கைத் தரமுயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து, இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ‘குறைவற்றச் செல்வத்துடனும், நிறைவற்ற ஆயுளுடனும்’ வாழ்வார் என்பது உறுதி”. (விடுதலை தலையங்கம். பக். 146, பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007)

      மனிதன் பற்றற்ற நிலையில் எதையும் சிந்திக்கவேண்டும் என்று சொன்னவர் பெரியார். கூடவே மதம், சாதி, மொழி, தேசம் என நான்கு பற்றுக்களை அழிக்கவேண்டியவையாக அவரால் அடையாளம் காட்டப்பட்டன. இதில் முதலிரண்டும் சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் சொல்கிற ஒன்றுதான். ஆனால் பின்னிரண்டையும் சொல்வதற்கு பெரியார் போன்ற ஆளுமையால்தான் சாத்தியப்படும்.

      கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே கற்றலில் முதல்படி.

      ஜென் பவுத்தக்கதை ஒன்று. குருவைத் தேடி ஒரு சீடன். அவனை அமரச் செய்து குவளையில் தேநீர் தந்து என்ன வேண்டும் என வினவுகிறார். உங்களிடம் கற்றுக்கொள்ள வந்தேன் என்கிறான் சீடன். ஏற்கனவே தேநீர் நிரம்பிய குவளையில் மீண்டும் தேநீரை ஊற்றுகிறார் குரு. குவளை நிரம்பி வழிகிறது. சீடன் ஏனென்று கேட்க, முதலில் உன்னிடம் நிரம்பியுள்ளவற்றைக் காலியாக்கிக் கொண்டுவந்தால்தான் நீ எதையும் நிரப்பிக் கொள்ள முடியும் என்றார் குரு. இங்கு ஆசிரியர்கள் நிரம்பி வழிபவராக அல்லவா இருக்கிறார்?

      ஜே.கிருஷ்ணமூர்த்தி “நீ அறிந்தவற்றிலிருந்து விடுதலை” என்று சொல்கிறாரல்லவா! அதுவும் இந்தப் பொருளில்தான்.

      அலோபதி மருத்துவமுறை நமது உடலை மொத்தத்துவமாக அணுகி நோய்க்குறிகளுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் மாற்று மருத்துவமுறையான ஹோமியோபதி தனித்தனி கூறுகளைக் கவனிக்கிறது. அதைப்போல எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி வகையினத்தில் அடைப்பது தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்த குண இயல்பைக் கொண்டவர்களாக இருக்க முடியும். ஒரு குழந்தைக்கு நாம் பயன்படுத்தும் உத்தி பிறிதொரு குழந்தைக்கு பலனளிக்காமல் போகலாம்.

                                                           பகுதி: இரண்டு

         மாற்றுக்கல்வியாளர் ஜான் ஹோல்ட் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பின்வருமாறு கருதுவதாக, அவர் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறார். (இது குறித்து விரிவான தகவலுக்கு இரு நாட்களுக்கு முந்தைய எனது வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பதிவைக் காண்க.)

பெற்றோரும் குழந்தையும்

 • · தன் சொத்து (Wealth)
 • · அன்பு, பாசம், செலுத்தும் வடிகால் (Love Object)
 • · அசாதாரண செல்ல, வளர்ப்புப் பிராணி (Super – Pet)
 • · ஆடம்பர, அலங்கார, அழகு சாதனம் (Cute Costly Decoration)
 • · வாழ்வதற்கான ஒரே நோக்கம் (Purpose of their Life)

      பாலோ ப்ரையிரே வின் தற்போதைய வங்கி முறைக்கல்வி குறித்தான் மதிப்பீடு இப்படித்தான் இருக்கிறது. ஆசிரியரும் மாணவரும் முரண் எதிர்வாய் இவ்வாறு தோற்றம் கொள்கின்றனர்.

ஆசிரியரும் குழந்தையும்
 • · அறிந்தவர் X அறியாதவர்
 • · அறிவாளி X முட்டாள்
 • · நிரம்பி வழிபவர் X தெரியாதவர்
 • · சிந்திப்பவர் X நினைப்பவர்
 • · பேசுபவர் X கேட்பவர்
 • · செயல்படுபவர் X செயல்பட வைக்கப்படுபவர்
 • · கட்டுப்படுத்துபவர் X கட்டுப்படுத்தப்படுபவர்
 • · தேர்வு செய்பவர் X ஏற்றுக்கொள்பவர்
 • · மனிதர் X பொருள்

     பாலோ பிரைய்ரே தமது மாற்றுக்கல்வி மூலம் பின்வரும் வாழ்வியல் சாத்தியப்பாட்டை உணர்த்துகிறார்.
 • · உரையாடல்
 • · உறவாடல்
 • · அரசியல்
 • · விடுதலை
 • · அறவாழ்வு
 • · தேடல்
 • · தலையீடு
 • · சமூக மாற்றம்
 • · திசைக்கருவி

குழந்தைகள் பற்றிய சில கல்வியாளர்களின் மேற்கோள்கள்: 


“குழந்தைகளை நல்லவர்களாக மாற்ற அவர்களை மகிழ்ச்சியாக்குவதே ஒரே வழி”.

- ஆஸ்கார் வைல்ட்

“குழந்தைகளுக்குத் தேவையாக இருப்பது வழிகாட்டுதலும் பரிவுணர்வுமே தவிர போதனைக் குறிப்புகள் அல்ல”.

- ஆனி சுலிவன்

குழந்தைகள் எந்த வழியில் செல்லவேண்டும் என்று போதிப்பதற்கு ஒரே வழி, அந்தவழியில் நாமும் பயணிப்பதே”.

- ஜோஷ் பில்லிங்க்ஸ்

“குழந்தைகளை தொடர் முயற்சியின் மூலமே நல்வழிப் படுத்தவேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளால் அல்ல”.

- டெரென்ஸ்

குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதல் கடமை அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே. அதனை நாம் செய்யவில்லையென்றால் அவர்களுக்கு நாம் தவறிழைக்கிறோம். மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் அதற்கு ஈடாகாது”.

- சார்லஸ் பக்ஸ்டன் 


                                                                  பகுதி: மூன்று

இந்தியக் கல்வியின் வரலாறு

     1813 –ம் ஆண்டு வெளியான பட்டயச்சட்டம் (Charter of 1813) கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கல்விச் சாசனம் ஆகும். இந்தியக் கல்விக்கான ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு பின்னாளில் 10 லட்சங்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஆங்கில வழி கிருத்தவ போதனாப் பள்ளிகள் பரவலாக்கம் பெற்றன. 1834 –ல் மெக்காலே பொதுப் போதனைத் துறை (Public Instruction) தலைவராக நியமனம் செய்யப்பட்டார். சில மாதங்களில் அவரது பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டு அடுத்த ஆண்டே (1835) நடைமுறைக்கு வந்தது.

     1853 –ல் சார்லஸ் வுட் அறிக்கை வெளியானது. இதன் மூலம் பொதுக்கல்வி இயக்குநரகம் (Directorate of Public Instruction) அமைக்கப்பட்டது. கல்வி போதனையாக மாறிய கதை இப்படித்தான் தொடங்கியது. 1882 –ல் வந்த ஹண்டர் குழு அறிக்கை தேர்வுகளைப் பரிந்துரைத்தது. இதுதான் குழந்தைகளுக்கு இன்று சுமையாக உள்ளது.

      காங்கிரஸ் இயக்கத்தின் கல்விக்கொள்கை என்ன? 1909 –ல் கோபாலகிருஷ்ண கோகலே கட்டாய இலவசக் கல்வியை வலியுறுத்தினார். விடுதலைக்குப் பின்பு அது அமலாக்கம் பெற 100 ஆண்டுகள் (2009) ஆனது பெரும் வேதனை. இதுவும் அரசால் தானாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதற்கான புற அழுத்தங்கள் போராட்டங்கள் ஏராளம்.

     1937 –ல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் மாகாண கல்வியமைச்சர்கள் மாநாடு கல்வியின் கல்விக்கொள்கைகளை முன்மொழிந்தது.
 • 6-14 வயதுக் குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி.
 • தாய்மொழியில் தொடக்கக் கல்வி.
 • ராட்டை நூற்றல் உள்ளிட்ட தொழிற்கல்வி.
 • சொந்தக்காலில் சுயக்கட்டுப்பாடு உடைய குழந்தைகளை உருவாக்குதல்.

     வலுவான அரசுகள், சிறைச்சாலைகள், தண்டனைகள் கூட வேண்டாம் என்று சொன்ன மகாத்மா காந்தி கூட கல்வி என்றதும் கட்டுப்பாட்டை வலியுறுத்துவது கல்வி பற்றிய சில மரபுவழிப் பார்வைகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

    1964 – 66 இல் கோத்தாரி கல்விக்குழு, 1986 –ல்ல் புதிய கல்விக்கொள்கை எல்லாம் பார்த்தாகிவிட்டது. கல்வியில் குழந்தைகளை அணுகுவதில் சிற்சில மாற்றங்களைத் தவிர பெரிய பலன் ஒன்ற்றுமில்லை. புதிய கல்விக்கொள்கை 2016 வரைவு இருக்கின்ற ஒருசில உரிமைகளையும் புதைக்கும் வேலைக்கு வித்திடுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 ஐ (பிரிவு 21 ஏ) திருத்தம் செய்யத் துடிக்கும் இவர்களது முகமுடிகள் கழன்று விழுகின்றன.                                                  பகுதி: நான்கு

குழந்தை உரிமைகள்

       1989 –ல் ஐக்கிய நாடுகள் சபை புகழ்பெற்ற குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தை வெளியிடுகிறது. அவ்வாண்டு சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்படுகிறது. ஐ.நா. வின் குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தில் (Charter of Child Rights) 117 நாடுகள் கையெழுத்திட்டன. இதில் முகப்புரை, 4 பிரிவுகள், 54 உட்பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் முழு மனிதர்கள் (Persons); அரை மனிதர்கள் (Sub – Persons) என்று வலியுறுத்துவதுடன் இவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் சிறப்பு உரிமைகளையும் வழங்க வழிவகுக்கிறது. இவர்களுக்கு 18 வயதுக்குப் பிறகுதான் உரிமைகள் வழங்கப் பட்டுள்ளதான ஒரு மாயை இங்குண்டு. அது வாக்களித்தல் போன்ற இதர உரிமைகள். இவற்றை அடிப்படையான குழந்தைகள் உரிமையோடு குழப்பிக்கொள்ளக்கூடாது.

     குழந்தைகளை எவற்றிலிருந்து பாதுகாப்பது (அனைத்துவகையான சுரண்டல்கள்), எவற்றைத் தருவது (உரிமைகள்), எதில் பங்குகொள்வது (கல்வி) போன்ற உரிமைகள் வழங்குவதற்கான சட்டங்களையும் ஆயத்தங்களையும் செய்ய இது வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியாவில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் (Protection of Child Rights – 2005) 2005 இல் தான் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகும் NCPCR, SCPCR போன்ற மத்திய, மாநில குழந்தைகள் ஆணையங்களை அமைக்க அரசுகள் அடம்பிடிக்கவே செய்தன. பெரும்போராட்டங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்த அமைப்புகள் ஏதோ பெயரளவில் இருக்கும் பிற அமைப்புகளைப் போலவே இயங்குகிறது. (உம். மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தாழத்தப்பட்டோர் ஆணையம், நுகர்வோர் நீதிமன்றங்கள் போன்றவை)

      இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 –ல் கொண்டுவரப்பட்டு, 2010 லிருந்து அமல் செய்யப்படுகிறது. 6-14 வயதுக் குழந்தைகளை மட்டும் கணக்கில் கொள்ளும் இச்சட்டம் 3-5 முன்பருவக் கல்வியை முற்றாக புறக்கணித்து கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதோடு, குழந்தைகள் உரிமைகளையும் மீறுகிறது.

      குழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் அபாயகரமான திருத்தத்தைச் செய்ய ஆளும் இந்துத்துவ அரசு தயங்கவில்லை. பெற்றோர்களில் தொழிலகங்களில் குழந்தைகள் பணிசெய்யலாம் என்கிறது திருத்தம். புதிய கல்விக்கொள்கை மூலம் மீண்டும் குலக்கல்வியை நடைமுறைப்படுத்த இவர்கள் துடிப்பதன் பின்னணி நமக்கு விளங்காமலில்லை.                                                           பகுதி: ஐந்து

                                                சில சிக்கல்கள் மட்டும்

சாதிப்பாகுபாடு (தலித்கள்)


மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த (Inclusive Education) கல்வி நடைமுறைப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதற்கான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படவேண்டும். ஆனால் இன்னொரு பக்கத்தில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் இன்னும் இப்போதிருக்கும் கல்வியில் ஒருங்கிணைக்க முடியாத போக்கு நிலவுகிறது. ஒவ்வொரு பள்ளியும் அங்குள்ள ஆதிக்கசாதிகளின் பிடியிலும் ஆதிக்கத்திலும் உள்ளது. சில சமயங்களில் ஆசிரியர்கள் கூட சாதியவாதிகளாக மாறும் அவலமும் உண்டு. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெயர்கள் இன்றும் ‘அர்’ விகுதி தவிர்த்து ‘அன்’ விகுதியுடன் தான் எழுதப்படுகின்றன. இது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல. இது குறித்த உரிய அரசாணை இருந்தும் அவை வலியுறுத்தப்படுவதில்லை. இது ரகசியமாக வைக்கப்படுவதில்லை. இந்நிலை அம்மாணவர்களை கல்வி மற்றும் பள்ளிச் சூழலிலிருந்து அந்நியப்படுத்தவே செய்கிறது.

பழங்குடியினர்

பழங்குடிக் குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் பயில வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. பிற மாணவர்களது கேலி, கிண்டல்,ஏளனப் பேச்சுகள் இவர்களைப் பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாக இருளர், வாக்ரியர் குழந்தைகள் இம்மாதிரியான நெருக்கடிகளுக்கு உள்ளாவது தொடர்கதை. மாணவர்களிடம் சகிப்புணர்வை வளர்க்க இந்த கல்வியமைப்பு ஏதும் செய்ய இயலாததாக உள்ளது. சாதாரண உணவு முறை, தொழில், நிறம், உருவம் போன்றவை இங்கு எள்ளலுக்குரியதாக கட்டமைக்கப்பட்டு குழந்தைகளின் பொதுப்புத்தியிலும் பதிய வைக்கப்பட்டுள்ள அவலமிது. கல்வியில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் உருவாக்கப்படும் மேல்தட்டு அளவுகோல்கள் குழந்தைகள் மூலம் அடித்தட்டுக் குழந்தைகளையும் அவர்களது கல்வியையும் பாதிக்கிறது.

சிறுபான்மையினர்

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம். சச்சார் குழு ஆகியவற்றில் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் கல்விநிலையை எடுத்துக்காட்டின. இக்குழந்தைகளையும் மற்றவராக (Others) அணுகும் போக்கு பள்ளிகளில் உள்ளது. இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறைக்கு வாழ்த்து சொல்லும் சகிப்புணர்வு கூட நமக்கு இல்லை. ஆசிரியர்கள் மொழியில்கூட சில நேரங்களில் ‘நம்ம’ ‘அவங்க’ என்பதாக மாற இது, அக்குழந்தைகளை மேலும் அந்நியப்படுத்தும்.

குழந்தைகள் மையமின்மை

குழந்தைகள் மையமான பாடம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள் இங்கில்லை. மொத்தத்தில் குழந்தைகள் மையமான கல்வி இல்லை. அப்படிச் சொல்லப்பட்டாலும் அது பெரியவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான குழந்தை மையக்கல்வியே. பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கத்தில் குழந்தைகளின் பங்கேற்பு துளியும் இல்லை. அவர்களது கருத்துகள் கேட்கப்படுவதில்லை. மாணவர்களது விருப்பங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை. வட்டார அளவிலான மொழி மற்றும் பாடங்கள் இல்லாததும் பெருங்குறையாகும். அந்த வட்டார மொழி வழக்கு அல்லாத ஆசிரியர்களால் தொடக்க நிலை வகுப்புகளுக்கு கற்றுக்கொடுப்பது இயலாத செயல். குழந்தைகளுக்கு இது மேலும் ஒரு சுமை. சுயகற்றல் – சுய மதிப்பீடு, திணித்தல் இல்லாத கல்வி சாத்தியப்படும் போதுதான் குழந்தை உரிமை பாதுகாக்கப்படும்.

வெற்றி மீதான் வெறி – தோல்வியை ஏற்க இயலாமை

பழங்காலத்தில் போருக்குச் செல்வதைப்போல ‘ஜெயித்துக் காட்டுவோம்’ என்று கும்பல்கள் கிளம்பிவருகின்றன. தேர்வுகள், மதிப்பெண்கள், வெற்றி என வெறியூட்டி வளர்க்கப்படும் விலங்குகள் அல்ல குழ்ழந்தைகள். இந்நிலை மாற பொதுத் தேர்வுகள் ஒழிக்கப்படவேண்டும். தோல்விகளை ஏற்க/கடக்க குழந்தைகள் பழக்கப்படுத்தப் படவேண்டும்.

சிறார்கள் குற்றவாளிகள் அல்ல

அவர்களது செயல்பாடுகளுக்குக் காரண – காரியத்தை நாமாகக் கற்பித்துக் குற்றவாளியாக்குவது தவிர்க்கப்படவேண்டும். அவர்களது குழந்தமையைக் கொண்டாடுவோம். குழந்தைகளது சுயமரியாதை, மாண்புகளைக் காப்போம்.

விளையாட்டு கற்றலுக்கு எதிரானது அல்ல.

விளையாட்டு என்பதும் ஒருவகையான கற்றலே. கணினி போன்ற எந்திரத்திரத்திற்கே ‘refresh’ தேவைப்படும்போது மனித உயிருக்கு விளையாட்டு அவசியமல்லவா? இன்று பள்ளிகளில் விளையாட்டு என்பது பெயரளவில் உள்ளது. 9 – 12 வகுப்புகளுக்கு விளையாட்டுப் பாடவேளைகள் ஆக்ரமிப்புக்கு உள்ளாகிவிட்டன.

நமது குழப்பங்கள் / மனத்தடைகள்

குழந்தைகள் பற்றிய நமது எண்ணங்கள் இவ்வாறே உள்ளது. இந்நிலை மாறவேண்டும்.
 • தவறு செய்பவர்கள்.
 • திருத்தப்பட வேண்டியவர்கள்.
 • கண்காணிப்பட வேண்டியவர்கள்.
 • “அடியாத மாடு படியாது”, என்ற கருத்து/நம்பிக்கை.
 • அறிவுக்கும் வயதுக்குமான உறவு தொடர்பு பற்றிய தப்பெண்ணங்கள்.
 • சட்ட உரிமைகள் பற்றிய புரிதலின்மை.

பொதுத்தேர்வுக்கு மட்டுமே முதன்மை தரும் போக்கு.

9,11 ஆகிய வகுப்பு பாடங்கள் தவிர்க்கப்பட்டு 10,12 வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்குத் தயாரிக்கும் போக்கு பரவலாக உள்ளது. இந்த கல்விக் கொள்ளையை அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இதன் பாதிப்பு குழந்தைகளுக்குத்தான். 1-8 வகுப்புகளுக்கான CCE மேம்படுத்தப்படவேண்டும். 10-12 வகுப்புகளுக்கும் CCE யுடன் கூடிய பருவமுறை அமலாக்கப்படவேண்டும்.

+1, +2 வகுப்புகளில் இடஒதுக்கீடு மறுப்பு

+1 கணிதவியல் பிரிவில் சேர சில அரசுப்பள்ளிகள் கூட 450 மதிப்பெண்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பொறியியல் சார்ந்த பட்டம் அல்லது பட்டயம் படிக்கும் வாய்ப்பு 300 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மறுக்கப்படுகிறது. +2 கணிதப்பாடத்தில் 70 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்தவர்கள் பொறியியல் படிக்க தகுதி இருக்கும்போது பத்தாம் வகுப்பில் இடஒதுக்கீட்டை மறுத்து மதிபெண்கள் அளவுகோல்கள் ஏன்? அரசு ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை? +1 சேர்க்கையில் தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு அமல் செய்யவேண்டும்.

                                                                பகுதி: ஆறு

கதைகள் / நாடகங்கள் வழி தீர்வுகள்:

     கதை சொல்லல் ஒரு தொல்குடி வடிவம். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு கதை சொல்பவை. கதை மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் தொல்குடிப் பண்பாடு இன்றும் உண்டு.

     அதீத கற்பனைக் கதைகள் குழந்தைகளின் கற்பனை வளத்தை பறைசாற்றுபவை. லத்தீன் அமெரிக்க புதிய வகையான மாயாஜால யதார்த்த வகை பாணியிலான கதைகள் இங்கு அறிமுக ஆகியுள்ளன. மகாபாரத, ராமாயாணக் கதைகளிலும் இத்தகையக் கூறுகளைக் காணமுடியும்.

     தமிழவன் எழுதிய சில நாவல்கள் குறிப்பாக ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ விடுதலைக்குப் பிந்திய தமிழக – திராவிட இயக்க வரலாற்றை கேலியும் கிண்டலாகவும் அணுகுபவை. இம்மாதிரியான உத்திகள் குழந்தைகளிடத்தில் இயல்பாக வருவது தெளிவு. மணிரத்னத்தின் ‘இருவர்’ சினிமா கூட இவ்வகையிலான ஒரு முயற்சியே. ஆனால் தனிப்பட்ட அரசியல் காய்ப்புகள் நோக்கத்தைச் சிதறச்செய்யும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

      1001 அரேபிய இரவுகள் கதைகள் மூலம் மரணதண்டனை ஒத்திப்போடப் படுகிறது. இங்கு கதை மரணத்திற்கு எதிராக செயலாற்றுகிறது.

     கதை சொல்ல முதலில் வகுப்பறை உரையாடலுக்கான வெளியாக மாறவேண்டும். கதை சொல்லல் இங்கு போதனையாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அது ஓர் அனுபவவீச்சு. ச.முருகபூபதி சொலவதைப்போல, “சுதந்திரத்தின் பன்முகப்பாதைகளைப் புரியவைக்க, சில நாட்களாக குழந்தைகளின் நண்பனாக, சமவயதுக்காரனாக இருக்க முயலவேண்டியது”, அவசியமானது.

     ச. முருகபூபதி, வேலு சரவணன் போன்றோர்கள் பல்லாண்டுகளாக குழந்தைகள் நாடக உலகில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இவர்கள் நாடகங்கள் ‘புரிதல்’ குறித்த கேள்விகள் எழுப்பப் படுவதுண்டு. பெரியவர்களுக்கு வேண்டுமானால் புரியாமற் போகக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு எவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்கள் இல்லை.

     சிறுவர்கள் கதை உலகம் fantasy தன்மை மிக்கது. இந்த மாய உலகில் கதைகளின் சிறகுகள் பறவையென விரிகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளவும், இணைந்து பயணிக்கவும் நமக்கு குழந்தை மனநிலை தேவைப்படுகிறது. இது இல்லாதபோது இந்த fantasy உலகம் நம்மை அந்நியப்படுத்துகிறது. இங்குதான் ‘புரிதல்’ பற்றிய சிக்கல் எழுகிறது. அப்போதுதான் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய யதார்த்த உலகை அவர்கள் கடக்க முடியும்.

     குழந்தைகளின் அகமன உலகம் புதிரானது; மிகவும் எளிமையானது. ஆனால் அவற்றை சிக்கலான ஒன்றாக கற்பனை செய்துகொண்டு, நாம் அவற்றை இழந்துவருகிறோம். அதை உணர நாமும் குழந்தைகளாக மாறுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. வயதாக, வயதாக நாம் குழந்தமையை முற்றாக இழந்துவிடுகிறது. அப்போது குழந்தைகளின் உலகம் நமக்கு மிகவும் அந்நியப்பட்டு விடுகிறது. குழந்தமையை தக்கவைக்க முடிந்த கோமாளி மனங்களால் இதை மீட்டெடுக்க முடிகிறது.

      நமது பள்ளிகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கு விழாக்கள், நிகழ்வுகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

     உரை, பேச்சு, சொற்பொழிவு என்பதாகவே இன்று கல்விக்கூட சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அகமன உணர்வுகளையும் கற்பனைத்திறனுக்கும் மீட்டெடுக்கும் நாடகத்திற்காக வாய்ப்பு முற்றாக இல்லாத சூழல்தான் இருக்கிறது.

     இங்கு ‘நாடகம்’ என்ற ஒரு போலியான வடிவம், அதாவது ஒருபக்கம் புராணக் குப்பைகள், ஒன்னொரு புறம் குழந்தைகள் பங்கேற்கும் பெரியோர் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதையும் சுட்ட முடியும். மேலும் கலை என்பதற்கான புரிதல்கள் கல்விக்கூடங்களில் பெருமளவில், நமது கல்வியமைப்பிலும் பாடத்திட்டங்களிலும் இல்லை. இந்த இடைவெளி குழந்தைகளுக்கு எதிரானவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றன.

     பலவகையான நீதிக்கதைகள் உண்டு. பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், புராண- இதிகாசக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் ஆகியன அவற்றுள் சில. இவை அனைத்திற்கும் பின்னால் அரசியல் நோக்கம் உண்டு. இக்கதைகள் போதிக்கும் நீதி யாருக்கானது என்பதில் விமர்சனம் உண்டு. இவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்தியதுதான் நமது கல்வி வரலாறு.

     தந்திரம், சூழ்ச்சி என்றெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படும் காகம், நரிக் கதைகள் குழந்தைகளிடம் நற்பண்புகளை விடுத்து வேறுவகையான பண்புகளை வளர்ப்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளுக்கு தினமணி நாளிதழின் சிறுவர் இணைப்பில் ஷாஜகான் என்ற எழுத்தாளர் இம்மாதிரியான சிறுவர் கதைகளை மறுவாசிப்பு – மறுகட்டமைப்பு செய்து தொடராக எழுதிவந்தார்.

      பீர்பால் கதைகள் அக்பர் என்ற அறிவார்ந்த, சகிப்புத்தன்மையுடைய முகலாயப் பேரரசரை இழிவு படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இங்கு கட்டமைக்கப்படும் மதம் சார்ந்த முரண் எதிர்வு ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு நமது கல்விமுறை காரணமாக அமைந்துவிட்டது. இதைப்போல தெனாலிராமன் கதைகள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியறிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்த விஜய நகர அரசரான கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் நோக்கிலானவை.

     இதர புராண-இதிகாசக் கதைகள் அனைத்துமே ஏமாற்றுதல், சூழ்ச்சி, தந்திரம் ஆகிய மற்றுமல்லாது வருணதர்மம், மனுதர்மம், இந்து மேன்மை, கடவுளர்களின் திருவிளையாடல்கள், போர், கொலைகளை நியாயப்படுத்துதல், பிராமண அல்லது சத்திரியக் குலமேன்மை என குழந்தைகளுக்கு ஒவ்வாத தீய சித்தரிப்புக்களைக் கொண்டவை. இவைகளைப் பற்றி எழுதினால் பக்கங்கள் நீளும். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது இதிலுள்ள அபாயங்கள் புரியும்.

     புத்த ஜாதகக் கதைகள், முல்லா நஸ்ருத்தின் கதைகள் போன்றவற்றை மேலே கண்டவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக புத்தர் சொல்லும் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். மேலே சொன்னவற்றுக்கு மாறாக இக்கதைகளும் பவுத்தம் போல் அறத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன. 500 க்கு மேற்பட்ட இக்கதைகள் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை இதுவரை நமது நீதிபோதனை வகுப்புகளில் பயன்படுத்தியதே இல்லை. நமது முன்னுரிமை தந்திரம், ஏமாற்றுதல், சூழ்ச்சி, இழிவு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறது.

      முல்லா கதைகள் வேறொரு பின்புலத்தில் இயங்குபவை. இதிலுள்ள தன்னைத்தானே பகடி செய்துகொள்ளும் தன்மை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சுய எள்ளலை, கிண்டலை வேறெந்த கதைகளிலும் காணமுடியாது. இது ஓர் வகையில் தமிழ்க் கோமாளி (விதூஷகன்) மரபுடன் ஒன்றியிருப்பதையும் உணரலாம்.

       இன்று காட்சி ஊடகங்களில் குழந்தைகள் அனுமான், கிருஷ்ணா, சக்திமான், ஸ்பைடர்மேன் போன்ற மத அடையாளத்துடனான சாகச நாயகர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் போக்கு உள்ளது. இவை குழந்தைகளின் ஆழமனங்களில் வன்மம், பகை, வெறுப்பு போன்றவற்றை வளர்த்தெடுப்பவை. நீதிபோதனைக் கதைகளும் இவற்றில் மறுபதிப்பாக இருப்பதை ஏற்கவே முடியாது. முல்லா கதைகள் போன்றவை நமது குழந்தைகள் இழந்துபோன குழந்தமையை மீட்டெடுக்க உதவும்.

      நீதிபோதனை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை உருவாக்கும்போது நமது நாட்டின் பன்மைத்துவத்தையும் குழந்தைகளின் மனநிலையையும் சரியான புள்ளியில் இணைக்கவேண்டும் என்பதே நமது விருப்பம். இதுவரையில் கல்வியில் அத்தகைய மாற்றங்கள் நடைபெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

      தரம், ஒழுக்கம் என்பது போன்ற ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுவன விதிகள், பாடப்புத்தக சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கித் தரம்பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக்கூடிய ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்பதான கல்வி அதிகாரங்களை நோக்கி 19 ஆம் நூற்றாண்டில் குரல் எழுப்பிய டால்ஸ்டாய், அவரைப் பின்பற்றிய காந்தி, நவீனத்துவமும் வர்ணாசிரமும் இணைந்து இத்தகைய அடிப்படைக் கல்வியை சீரழித்த வரலாறு இங்குண்டு.

      குழந்தைகள் கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பானது. படிப்பது என்பதுகூட மேலும் மேலும் வினாக்கள் கேட்பதே. குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பிறகு நம்மிடம் ஏதேனும் இருந்தால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்யலாம். குழந்தமையை புரிந்துகொள்ளவும் அதைக் கொண்டாடாவும்கூட நாம் முயலவேண்டும்.

துணை நூற்பட்டியல்:
 1. சுவிசேஷங்களின் சுருக்கம், லியோ டால்ஸ்டாய், தமிழில்: வழிப்போக்கன், பாரதி புத்தகாலயம் வெளியீடு: மே 2016.
 2. தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988.
 3. பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007
 4. எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? – ஜான் ஹொல்ட் தமிழில்: அப்பணசாமி, புக் ஃபார் சில்ரன் வெளியீடு: டிசம்பர் 2007
 5. இது யாருடைய வகுப்பறை, ‘ஆயிஷா’ இரா.நடராசன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: செப்டம்பர் 2013.
 6. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை, பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராசன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: 2008.
 7. குழந்தைமையைக் கொண்டாடுவோம் –முனைவர்.என்.மாதவன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: டிசம்பர் 2013.
 8. டேஞ்சர் ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையால், இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியீடு: 2012.
 9. மூன்றாம் உலகின் குரல், பவுலோ பிரையரின் கல்விச் சிந்தனைகள், மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு: நவம்பர் 2009
 10. தமிழகப் பள்ளிக் கல்வி பிரச்சினைகளும் தீர்வுகளும் மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியீடு: 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக