வெள்ளி, நவம்பர் 04, 2016

06. தொல்குடிகள் பற்றிய கண்ணோட்டம் மாறுமா?

06. தொல்குடிகள் பற்றிய கண்ணோட்டம் மாறுமா?



- மு.சிவகுருநாதன்



(நான்காம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவப் பாடத்தில் பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அது பற்றி எழுதச் சொன்ன ‘ஆசிரியக் கோமாளி’ தோழர் நல்லமுத்து அவர்களுக்கு நன்றி.)




     “ஏகாதிபத்தியம் அக்கால நாகரிகமாகக் கருதப்பட்டது. மேலும் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் தங்களை உயர்வாகவும், கருப்பின ஆப்பிரிக்க, ஆசிய மக்களுக்கு நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது எனலாம்”.



(பக். 02, பத்தாம் வகுப்பு, தமிழ் வழி, சமூக அறிவியல் 2016)



     “Imperialism became the fashion of the age. The Europeans felt that it was ‘White Man’s burden’ to civilize the backward and uncivilized native people of Africa and Asia. This was another cause for Imperialism.”

(பக். 02, பத்தாம் வகுப்பு, ஆங்கில வழி, சமூக அறிவியல் 2016)

     மொழிபெயர்ப்பு அழகை ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக தமிழ், ஆங்கில வடிவங்களைத் தருகிறேன்.



        நமது பாடநூல்களில் உள்ள தொல்குடியினர் பற்றிய பதிவுகளைப் பார்க்கும்போது, மேலே குறித்த ஆதிக்க உணர்வுக்குச் சிறிதும் சளைத்ததல்ல என்றே தோன்றுகிறது. முன்பெல்லாம் காட்டுமிராண்டிகள் என்று சொன்னோம்; இப்போது பழங்குடிகள் என்கிறோம். சொல் மாறியதே தவிர, நமது கண்ணோட்டங்கள் துளியும் மாறவில்லை.



       முதுகுடி, பூர்வகுடி, பழங்குடி (Tribe) என்றெல்லாம் அழைத்தாலும் நமது அரசியல் சட்டம் அட்டவணைப் பழங்குடி (Schedule Tribe) என்று சொன்னபோதும், தொல்குடி (Aborigine) என்ற சொல்லினால் இவர்களை அழைப்பது பொருத்தமானதாக இருக்க முடியும். ஒரு காலத்தில் அய்ரோப்பியர்களை நம்பியிருந்த நிலையில், இன்று தமிழிலும் நிறைய இனவரைவியல் ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் பக்தவத்சல பாரதியின் நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

      திரைப்படம், நாடகம் மற்றும் இலக்கியப் பிரதிகளில் குழந்தைகள், பெண்களின் உரையாடல் மொழிகளை யாரோ ஒருவர் (அவர் பெரும்பாலும் ஆணாக இருப்பார்.) தீர்மானிப்பார். அதனால் இங்கு குழந்தைகள் பெரியோர் மொழிகளிலும் பெண்கள் ஆண் மொழியிலும் பேசும் அவலம் நடக்கிறது. கடும் தணிக்கைகள் உள்ள ஈரானில் குழந்தைகள் சினிமா எடுக்க முடிகிறது; இந்தியாவில், தமிழகத்தில் அதற்காக தொடக்கம் கூட இல்லை.

      நான்காம் வகுப்பு சமூக அறிவியல் (இரண்டாம் பருவம்) பாடத்தில் ‘ஒவ்வொருவரின் வாழ்விலும்’ (Life Styles) என்றொரு பாடமுண்டு. அதில் பலதரப்பு மக்கள் தங்களைப் பற்றிச் சொல்வதாக பாடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் தோடர் இனத்துப்பெண் வாசமல்லி சொல்வதாக அமைந்த பகுதி முற்றிலும் அபத்தம்.

அதனுடைய சாரம் இதுதான்.

      “நாங்கள் இதுவரையில் நாகரிகமில்லாத வாழ்வு வாழ்ந்தோம். தற்போது நாகரிகமுள்ள பிறருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதால், எங்களது நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கம், உணவுமுறை, கல்வி, வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. காட்டுமிராண்டிகளாக இருந்தவர்கள் மனிதர்களாக மாறிவிட்டோம். நாங்கள் இப்போது உங்களைப் போல நாகரிக மனிதர்கள்”.

       பள்ளிக்கு நடந்து செல்வது, மந்தையாக எருமைகள் வளர்ப்பது போன்றவை இழிவான, வியப்பான ஒன்றா? இது யாருடைய கண்ணோட்டம்? ஒரு தொல்குடிச் சிறுமியால் இவ்வாறு கூறமுடியுமா? இது யாருடைய குரல்? இன்றும் அரசுப்பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் நடந்தே வருகின்றன. பலரது வீட்டில் கால்நடைகள் வளர்க்கத்தான் செய்கிறார்கள். சிலருக்கு அரசும் கால்நடைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

       இந்த மாதிரி யாரல் யோசிக்க முடியும்? இயற்கை, மக்கள், புவி ஆகியன பற்றி எவ்வித புரிதல்களும் இல்லாத மரமண்டைகள் தான் இவ்வாறு கற்பனை செய்யமுடியும்? தோழர் நல்லமுத்து கோத்தகிரி மலைப் பகுதியிலுள்ள பழங்குடிக் குழந்தைகள் படிக்கும் அவ்வூர் தொடக்கப்பள்ளியில் இருக்கிறார். அக்குழந்தைகளின் கருத்தைப் பதிவு செய்து வெளியிட வேண்டுகிறேன். அதுதான் உண்மையான பாடமாக இருக்கமுடியும். தொல்குடி மொழியை நகரவாசி பேசமுடியாது; அதைப்போல பெண்ணின் மொழியை ஆணும் குழந்தைகள் மொழியைப் பெரியவர்களும் பேச இயலாது.

       “பழங்குடிகளை இனங்காண்பதிலும் அடையாளப்படுத்துவதிலும் பழங்குடிகளல்லாத (நம்முடைய) ‘மற்றவர்’ பார்வையே முன்னிலை பெற்று நிற்கிறது. இதில் ஆங்கிலேயர்கள் தவறாக உச்சரித்தவற்றையே இன்றுவரை நாம் கூறிவருகிறோம்”, (பக். 77, தமிழகப் பழங்குடிகள் – மரபையும் மாற்றத்தையும் நோக்கிய இனவரைவியல் பார்வை, பக்தவத்சல பாரதி, வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் – 621310, திருச்சி மாவட்டம்., முதல் பதிப்பு: 2007, மறு பதிப்பு: மார்ச் 2008, செப்டம்பர் 2009, மின்னஞ்சல்: info@adaiyaalam.net) என்று பக்தவத்சல பாரதி சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.




       “The old ideas are changing slowly because of our contact with people in the town. We do not live in the Toda hut which is built bamboo, dried grass and loose stones piled one on top of the other, with low entrance. Earlier this protected them from cold and wild animals”.

(பக். 116, 4 –ம் வகுப்பு சமூக அறிவியல், ஆங்கில வழி, திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

         இப்பகுதி தமிழில் பின்வருமாறு இருக்கிறது. “இப்பொழுது எங்கள் இனத்து மக்களுக்கும் மற்ற இனத்து மக்களுக்கும் இடையே தொடர்பு அதிகரித்துள்ளது. இதனால் பழைய பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. எங்களில் பலரும் முன்புபோல் மூங்கில், காய்ந்த புற்களால் கூரையிடப்பட்ட தாழ்ந்த வாசலுடன் கூடிய குடிசை வீடுகளில் வாழ்வதில்லை. எல்லோரயும் போல் கல் வீடுகளில் தான் வாழ்கிறோம்.” (பக். 116, 4 –ம் வகுப்பு சமூக அறிவியல், தமிழ் வழி, திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

           “Earlier this protected them from cold and wild animals.” என்ற வரி தமிழில் ஏன் தவிர்க்கப்படுகிறது? ‘with people in the town’ என்பது பிற இனத்து மக்களாக எப்படி ஆனது? பிற இனத்து மக்கள், நகர மக்கள் ஆகியோருடன் இவர்களுடைய தொடர்பு ஒரே மாதிரியானதா? தொதவர்கள், கோத்தர்கள், படுகர்கள் ஆகிய அண்டை இனங்களின் உறவின் மூலம் இவர்கள் சொல்லும் நாகரிகம் (?!) வளர்ந்துவிட்டதா? மிகவும் அபத்தக் கூத்து இது.

பாட இறுதிச் செயல்பாடுகளில்,

“கோத்தர்கள், படகர்கள், பணியர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியினர்கள் பற்றி ஆசியர்களிடம் கேட்டு அறிந்து கொள்க.”

உன் ஊரில் உள்ள தொழிலாளர்கள் சிலரின் வாழ்க்கை முறையைக் கேட்டறிந்து வரவும்.”

  என்று கொடுக்கப்பட்டுள்ளது. (பக். 121, 4 –ம் வகுப்பு சமூக அறிவியல், தமிழ் வழி, திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

ஆங்கில வழியில்

“Discuss with your teacher how the life style of tribes differ from others”,

“List the professions in your locality.”

           (பக். 121, 4 –ம் வகுப்பு சமூக அறிவியல், ஆங்கில வழி, திருத்தப்பட்ட பதிப்பு: 2016) என்று உள்ளது. ஏனிந்த முரண்பாடு? ஒவ்வொரு மொழிக்கும் வேறுபட்ட செயல்பாடுகள் அளிப்பது ஏன்? படுகர் என்ற பெயர்கூட படகர் என்று மாறுவதைக் கவனிக்க. பெயரைக்கூடத் தெரியாமல் பாடம் எழுதுபவர்களை என்ன செய்வது?

       படுகர்கள் தொதவர்களின் அண்டைச் சமூகமாக இருப்பினும் இவர்களை அரசு இன்னும் பழங்குடிகளாக அங்கீகரிக்கவில்லை. இவர்களைப் போன்று பலருக்கு அந்த கோரிக்கைகள் உண்டு. ஆனால் பாடநூல் அவர்களைப் பழங்குடிப் பட்டியலில் இணைத்துவிட்டது! மேலும் ‘தொடவா’ என்று படுகர்கள் அழைத்ததன் ஆங்கிலத் திரிபே ‘தோடா’ (Toda) என்று ஆகியுள்ளது. இவர்கள் தங்களை “தோடா’ என்று சொல்வதேயில்லை.

       வாக்ரிகளை ‘நரிக்குறவர்கள்’, ‘குருவிக்காரர்கள்’ என்று நாமே எதோ ஒரு கேலியான, இழிவுபடுத்தும் பெயரை இட்டு அழைப்பது போலவே, இங்கும் நடப்பது கவனிக்கத்தக்கது. மேலும் இவர்களது பெயரை ‘அன்’ விகுதியுடன் சொல்லும், எழுதும் ஆதிக்க உணர்வு இருப்பதையும் காணலாம். தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பெயரை எழுதும்போதும் இதே நிலைதான். பிற ஆதிக்க சாதிகளை எழுதும்போது ‘அர்’ விகுதி சேர்ப்பது மிக இயல்பாக நடக்கிறது.

        சாதிப்பெயரை எழுதும்போது அனைத்து சாதியினருக்கும் ‘அர்’ விகுதி இணைத்து எழுதப்படவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருந்தாலென்ன? பள்ளிகளில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை கொண்டாடக்கூடாது என்றுகூடத்தான் அரசாணை இருக்கிறது. இதை எத்தனை பள்ளிகள் மதித்து நடந்திருக்கின்றன? பள்ளிகளில் மத வழிப்பாட்டிற்கு அனுமதி இல்லை என்பதுதானே சட்டம். ஆனால் இங்கு நடப்பது என்ன? 10, 12 மாணவர்களை கோயில் கோயிலாக அழைத்துச் செல்வதும் வழிபடுவதும் நடக்கத்தானே செய்கிறது. பெற்றோர்கள் செய்யவேண்டிய வேலை பள்ளிகளும் ஆசிரியர்களும் செய்யத் தொடங்கிவிட்டால் இவர்களது வேலையை யார் செய்வது?

      பக்தவத்சல பாரதி தோதவர்கள் (தோடர்கள்) பற்றிச் சொல்வதைக் கவனிப்போம்.

       “தொதவர்களைஆங்கிலேயர்கள் ‘தோடா’ என்றனர். எந்தத் தொதவரும் தம்மைத் ‘தோடா’ எனக்கூறுவதில்லை. ‘ஒல்’ (மக்கள்) என்றே தம்மைக் கூறிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் ‘கொடா’ என்னும் வழக்கு ஏற்பட்டது. இச்சொல்லின் திரிபே ‘தோடா’ வாக மாறியது எனலாம். ‘கொடவர்’ என்றால் ‘மேற்கத்தியர்’ என்று பொருள். எனினும் தூத மரம் (மெபிசோமா சிம்ப்ளிசிஃபோலியா) இவர்களுடைய புனித மரம் என்பதால் ‘தூதா’ என்றும் இவர்கள் தம்மை தாமே அழைக்கின்றனர்.

       தொதவர்களின் அண்டைச் சமூகத்தவர்களாக வாழும் படுகர்கள் அவர்கலைத் ‘தொடவா’ என்றும், கோத்தர் ‘தொன்’ என்றும் அழைக்கிறார்கள். மற்ற தமிழர்கள் அவர்களைத் ‘துதவர்’ என்றழைக்கிறார்கள். இன்று பரவலாக வழங்கப்படும் ‘தோடா’ என்பது படுகர்கள் வழங்கும் ‘தொடவா’ என்பதன் ஆங்கில மயப்படுத்தப்பட்ட வழக்காகும்.” (பக். 77, மேலே குறிப்பிட்ட நூல்.)

       நீலகிரிப் பகுதியில் வாழும் தொதவர்கள், கோத்தர்கள், குறும்பர்கள், படுகர்கள், இருளர்கள் ஆகிய இனங்களின் சமூக அமைப்பாக இயங்கியவர்கள். எருமைகளை வளர்க்கும் ஆயர்களான தொதவர்கள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயர 80 மந்துகளில் (குடியுருப்புகள்) வாழ்கிறார்கள். இதற்கடுத்து 4,500 அடி மட்டத்தில் கோத்தர்கள் 7 கோகலில் (ஊர்கள்) வாழ்கின்றனர். இவர்கள் கருமார், தட்டார், ஆசாரி, குயவர், இசைக் கலைஞர் ஆகிய 5 தொழிற்சேவைகளை செய்பவர்களாக உள்ளனர்.

      பழங்குடி அங்கிகாரம் பெறாத படுகர்கள் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நிலங்களில் விவசாயம் செய்பவர்கள். இவர்கள் 373 ஹட்டிகளில் (ஊர்கள்) வாழ்கின்றனர். இவர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் மைசூரு பகுதில்யிலிருந்து இங்கு குடியேறியவர்கள்.

      குறும்பர்கள் காடுகளில் உணவுப்பொருள் தேடியும் மந்திர வைத்தியங்கள் செய்தும் பிழைப்பவர்கள். இவர்களில் குடியிருப்புகள் (கோம்பைகள்) கோத்தர்கள் வாழும் உயரத்தில் 9 கோம்பைகளும் படுகர் வாழும் உயரத்தில் 16 கோம்பைகளும் உள்ளன.

     அடுத்து, இருளர்கள் 1,500 அடி உயரத்தில் காட்டுப்பொருள்கள் சேகரித்தல், எளிமையான மலைச்சரிவு விவசாயம் ஆகியவற்றைச் செய்து 23 மொட்டகளில் (குடியிருப்புகள்) வாழ்கின்றனர். (மேலே குறித்த நூல்.)

       ஒரு தொல்குடியின் பெயரைத் திரித்து அவர்கள் விரும்பாத பெயரால் அழைப்பது எப்படி பொருத்தமாக இருக்கமுடியும்? பழங்குடி பட்டியலில் இல்லாத ஒரு சமூகத்தை அப்பட்டியலில் இணைப்பது, நாடாளுமன்றத்தில் சட்டமியற்றிச் செய்யவேண்டியது; பாடப்புத்தகத்தில் பெயரைச் சேர்ப்பதல்ல.

      காடுகளுடன் காடோடிகளுக்கு இருந்த இயற்கையான உறவை வெட்டிவிட்டு, காட்டை அழித்து உருவாக்கப்பட்ட தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் கூலிவேலை செய்யும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டு, நாகரிகம் பற்றிக் கதைக்க நமக்கு அருகதை உண்டா? 1842 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட யூகலிப்டஸ் மரமும் இவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்தது. 1878 இல் வந்த வனச்சட்டம் வனத்திலிருந்து இவர்களை அந்நியப்படுத்தியது.

       தொல்குடிகளைப் பற்றியதும் காட்டைப் பற்றியதுமான நமது மதிப்பீடு இயல்பானதல்ல. நாகரிகம், இயற்கை போன்றவை குறித்து நம்மிடம் உள்ள போலியான புரிதல்கள் இவர்களை மிக மோசமாக அணுகுவதில் போய் முடிகிறது. இந்தக் கண்ணோட்டம் மாறாதவரையில் சூழலியல் நமக்கு வசப்படப் போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக