ஃபிடலுக்கு செவ்வணக்கம்!
மு.சிவகுருநாதன்
கியூபப் புரட்சியாளர், போராளி ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90 வது வயதில் 25.11.2016 வெள்ளி இரவு மரணமடைந்தார். அவர் பிறந்த நாள்: 13.08.1926. மறைந்த கம்யூனிசப் போராளிக்கு செவ்வணக்கங்கள்… அவருக்கு அஞ்சலியாக…
ஃபிடலிற்கு ஒரு பாடல்
- எர்னஸ்டோ சே குவேரா
பிடல்,
சூரியன் உதித்தே தீருமென்று
சொன்னீர்களே!
நாம் திரும்பிச் சென்று விடலாம்.
வரைபடங்களால் புரிந்துகொள்ள முடியாத
பாதைகளைத் தாண்டி
நீங்கள் விரும்புகிற அந்த பச்சை முதலையை
விடுதலை செய்ய
நாம் முன்னேறலாம்.
இருண்ட
புரட்சிக்காரர்களான நட்சத்திரங்கள்
எரிகிற விழிகளால்
எல்லா அவமானங்களையும்
துடைத்தெறிந்துவிட்டு
நாம் ஒன்று வெற்றி பெறுவோம்
அல்லது,
மரணத்தை வெல்வோம்.
முதல்வெடி முழக்கத்திலேயே
காடு முழுக்க புது எழுச்சியின் சுடர்கள் படரும்
அந்த நிமிடம், உங்கள் அணியில்
அமைதியாக நாங்கள் இருப்போம்.
உங்களது சத்தம் நான்கு தீவிர வாதங்களாக
விவசாயப் புரட்சிக்காகவும்
நீதிக்காகவும்
அப்பத்திற்காகவும்
சுதந்திரத்திற்காகவும்
பலமாக அடிக்கும்போது
ஒரே சுரத்தில் அடிபிறழாமல்
நாங்கள் உங்களோடிருப்போம்.
இறுதியில்
பகலின் முடிவில்
அம் மகா வன்முறையாளனுக்கு
எதிரான உமது படை
வெற்றிக் கொடியை நாட்டும்போது
இறுதிப் போருக்குத் தயாராக
நாங்கள் உங்களோடிருப்போம்.
கியூபாவின் கூரம்பு
ஆழப்பதித்த காயத்தை
நக்கித் துடைத்து
அக் கொடுஞ் சிறுத்தை அடங்கும்போது
அலையடிக்கிற இதயத்துடன்
நாங்கள் உங்களோடிருப்போம்.
பிடல்,
பேராசைச் சிரிப்புடன்
துள்ளி நடக்கிற அந்தப்
புள்ளித்தோல் கொண்ட தெள்ளுப்
பூச்சிகளுக்கு
ஊற்றிக் கொடுப்பதற்கானதல்ல எங்கள்
ஆவேசம்…
எங்களுக்கு வேண்டியது அவர்களது
துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தான்.
அது மட்டும் தான்.
முடிவில்,
நாங்கள் எங்களது வழியை
எதிர்த்து நிற்கிற
இரும்பு ஈட்டிகளில்
மாட்டவேண்டி வந்தால்
எங்களுக்கு வேண்டியது ஒன்றுதான்.
அமெரிக்க வரலாற்றுக்கான
பயணத்தின் நடுவே
தகர்ந்துபோன
எங்களது
கொரில்லா எலும்புகளுக்கு
போர்த்த வேண்டி
கியூபாவின் கண்ணீரால் நெய்த
ஒரே ஒரு கம்பளம்.
தமிழாக்கம்: உமர்
(செகுவேராவின் கடிதங்கள், புலம் வெளியீடு: டிசம்பர் 2011, விலை: ரூ. 40)
நன்றி:
உமர்,
புலம்.
ஒரு பின் குறிப்பு:
அர்ஜென்டீனாவில் பிறந்து கியூபாவின் மகனாக மாறிய எர்ன்ஸ்டோ சே குவேரா பொலிவியா வில் அமெரிக்கப்படைகளால் கொன்று புதைக்கப்பட்டார். அவரது எலும்புக்கூடு சான்டா கிளாரா நினைவிடத்தில் 17.10.1997 –ல் முழு அரசு மரியாதைகளுடன் புதைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக