57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)
மு.சிவகுருநாதன்
(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)
மு.சிவகுருநாதன்
(அடையாளம் வெளியீடாக டிசம்பர் 2014 –ல் வெளியான, தமிழவனின் நாவல் ‘முஸல்பனி’ பற்றிய பதிவு இது.)
பகுதி: ஒன்று
தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்
முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் கழகம், குப்பம் திராவிடப் பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றியதால் என்னவோ வழமையான தமிழ்ப்புலச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவர்.
அமைப்பியல்வாதம் (Structuralism) குறித்த அறிமுக நூலொன்றை ((ஸ்ட்ரக்சுரலியம் – பாரிவேள் பதிப்பகம், 1982) வெளியிட்டு தமிழ்ச்சூழலில் பெரும் விவாதங்களுக்கு வழி ஏற்படுத்தினார். அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (காவ்யா வெளியீடு, 1991), தமிழும் குறியியலும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1992), தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும் (காவ்யா வெளியீடு, டிசம்பர் 1992), படைப்பும் படைப்பாளியும் (காவ்யா வெளியீடு), இருபதில் நவீனத் தமிழ் விமர்சனங்கள் (காவ்யா வெளியீடு, டிசம்பர் 2000) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நூற்கள்.
“இன்றைய தமிழாய்வு ஒருவிதத்தில் தேங்கியுள்ளது என்று கூறலாம். தமிழ்ச் சிறுபத்தரிகை இயக்கத்தினர் இருத்தலியல்வாதம் (Existentialism) பற்றியும், அமைப்பியல்வாதம் (Structuralism) பற்றியும் நூல்கள் எழுதிய பின் பல்வேறு சர்ச்சைகள் தமிழகத்தில் நடக்கின்றன. அந்த விவாதங்கள் தமிழ்க்கல்வி நிறுவனங்களை வந்தடைந்தால் தமிழாய்வைப் புதுத்திசையில் கொண்டு செல்லமுடியும்”, (தமிழும் குறியியலும் என்னுரையில்.) என்று தமிழவன் குறிப்பிடுகிறார்.
இலக்கியவியல், தமிழ்க்கல்வியியல், மார்க்சீயவியல் ஆகிய திறனாய்வுப் போக்குகளின் இடைவெளிகளை அமைப்பியல் திறனாய்வின் மூலம் நிரப்பப் படமுடியும் என்றும் அதற்கு அமைப்பியலுடன் குறியியலும் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்று இவர் கருதுகிறார். ஃபெர்டினணான்ட் டி சசூரின் மொழியியல் (Linguistics) மற்றும் குறியியல் (Semiology or Semiotics) கருத்துகள் உதவும் என்று தமிழவன் விளக்குகிறார்.
படைப்பை ‘பிரதி’ யாக அணுகுதல், ‘ஆசிரியன்’ இறந்து போனான் போன்ற சிந்தனைகளை அமைப்பியல் முன்மொழிந்தது. மையமழிதல் (Deconstruction) என்கிற ழாக் தெரிதாவின் சிந்தனைகள் பின் அமைப்பியல் (Post Structuralism) என்று வழங்கப்படுகிறது.
“என் கருத்துப்படி ஐந்திணைக் கோட்பாடு உலகளாவிய மானுடவியல் பாகுபாட்டு முறைகளோடு (Classification among Tribes) ஒப்பிடப்பட்டுப் புது உருவம் பெற்றால் இன்றைய அமைப்பியல் தரவுகளுடன் இணைக்கப்படமுடியும். உதாரணமாக, குறிஞ்சி என்பதை ஒருவித குறி என்று எடுத்துக்கொண்டு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவற்றை அதன் துணைக்குறிகளாகக் கொண்டு இன்றைய அமைப்பியல் போல் ஐந்திணைக் கோட்பாடு, இன்றைய இலக்கியத் திறனாய்வுக்குச் சமைத்தெடுக்க முடியும். பிறர் மத்தியில்கூட தமிழர்கள் கொடையாக இத்தகைய ஐந்திணைக் கோட்பாட்டைக் கொண்டு செல்லமுடியும்” , (பக். 92, அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும்) என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
தமிழ்க்கவிதைகளை நான் X நீ என்ற எதிர்வுகள் அடிப்படையில் அணுகியும், மேலும் ஆத்மநாம், விக்ரமாதித்யன் கவிதைகளை புதிய வெளிச்சத்திலும் அணுகினார். திருப்பாவையை அமைப்பியல் அடிப்படையில் ஆராய்ந்து ஒரு கட்டுரையும் எழுதினார்.
பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘இருபதில் நவீனத் தமிழ் விமர்சனங்கள்’ என்ற நூல் வெளியானது. “’நான்’ எப்போதும் – கூட்டங்களிலும் வகுப்பிலும், படைகளிலும் கடைசியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதில் சந்தோஷம் காண்பவன்”, என்று பதிவு செய்கிறார். (மேலே குறிப்பிட்ட நூல்) இதைப்போலவே இவரது படைப்புகளும் தமிழ்ச்சூழலில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
படிகள், மேலும், வித்யாசம் ஆகிய சிறுபத்தரிக்கைகளில் பங்கேற்று நிறைய கோட்பாடு அலசல்களைத் தமிழுக்குத் தந்தவர். தற்போது வெளியாகும் ‘சிற்றேடு’ இதழிலும் எழுதி வருகிறார். குமுதம் தீராநதியில் தொடர்ந்து பத்தி (வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்) எழுதிவருகிறார். இதன் முதல் தொகுதி நூலாக்கம் பெற்றுள்ளது. இவரது முன்னய எழுத்திற்கும் தற்போதைய எழுத்திற்கும் ‘வித்யாசம்’ இருப்பது உண்மையே. இணையக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழுணர்வின் வரைபடம்; என்றானது.
பகுதி: இரண்டு
தமிழவன் என்னும் கதை சொல்லி
கோட்பாட்டு ரீதியாகவும் லத்தீன் அமெரிக்கா போன்ற பிற மொழி எழுத்துக்களின் வாசிப்பனுபவத்தின் வாயிலாகவும் புது வகை எழுத்து முயற்சிகளில் சளைக்காது ஈடுபட்டு வருகிறார். குறிப்பிடத் தகுந்த நாவல்களையும் பல சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது கதை சொல்லும் முறை எளிமை, பூடகம், படிமம் ஆகிய பல கூறுகளால் இணைந்தது.
- ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
- சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
- ஜி.கே. எழுதிய மர்ம நாவல்
- வார்ஸாவில் ஒரு கடவுள்
- முஸல்பனி
ஆகிய நாவல்களும்
- தமிழவன் கதைகள்
- இரட்டைச் சொற்கள்
- நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் இதுவரை வெளியாகியுள்ளன.
‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’ பாதிப்பில் எழுதப்பட்டது சிலாகிக்கப்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே, ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோரின் பாதிப்புகள் எந்த ஒரு படைப்பாளிக்கும் இருப்பது இயல்புதான். அவற்றை தமிழ்ச்சூழலுடன் இணைப்பது தமிழவனின் புதுவகை எழுத்தைச் செழுமைப்படுத்தியுள்ளது.
1993 –ல் வெளியான ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நீண்ட நாள்களுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. இந்நாவல் போஸ்ட் மாடர்னிச / பாலிம்ஸெஸ்ட் சரித்திரம் என்ற வகைப்படித்தி வெளியானது. ‘தெகிமொலா’ என்ற கற்பனை தேசத்தின் ஊடாக சொல்லின் பொருள், காலத்தை வென்றவள், அம்மிக்குழவி, எறும்பு ராணிகள், பச்சை ராஜன், மலை மீது ஒளி, ஒற்றைக்கண்ணன் போன்ற குறியீட்டுக் கதை மாந்தர்கள் வழியே நாம் காணும் தமிழக அரசியலை புது மொழியில் எழுதினார்.
‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலும்’ மர்ம நாவல் பாணியை புது வகை எழுத்தில் கொண்டுவந்தது. வார்சா அனுபவம் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலில் பதிவானது. இந்த நாவல்கள் அதனதன் அளவில் குறிப்பிடத் தகுந்தவை.
இவரது சிறுகதைகள் நம்மை வெறொரு உலகிற்கு அழைத்துச் செல்பவை. வாசிப்பில் சுவாரசியம் தரக்கூடியவை இவை. சிறுகதைக்கென்று தனித்த பாணியைப் பின்பற்றி எழுகிறார். நாவலில் வெளிப்படும் பன்முகப்பார்வைகள் சிறுகதைகளிலும் விரிகின்றன.
பகுதி: மூன்று
படிம நாவல் முஸல்பனி
புதுவகை எழுத்தின் சிறப்பு என்னவெனில் யதார்த்தத்தின் போதாமைகளை இட்டு நிரப்பப் படுவதுதான். ‘சரித்திரத்தில் படிந்த நிழல்களை’ப் போலவே ‘முஸல்பனி’யும் ‘தெகிமொலா’வின் சரித்திரத்தைப் பேசுகிறது. இவ்விரு நாவல்களையும் இணைத்து வாசிக்கவும் முடியும். ‘முஸல்பனி’யின் 25 அத்தியாயங்களும் கதை சொல்லலும் நேர்கோட்டுப் பாணியில் அமைவதில்லை. எனவே நமது வசதிக்கேற்பே எங்கு தொடங்கி வேண்டுமானாலும் வாசிக்கலாம் “பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் தெகிமொலா சரித்திரம்” போல.
அத்திரிக்கப்பா முதலாவது தெகிமொலா அரசன். 3333 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவன். இவன் ஒரு வடிவமா, நிகழ்வா, தனிநபரா, ஒலியா, இசையா என்ற குழப்பம் உண்டு. அத்திரிக்கப்பாவுக்கு எட்டுத்திசைகள் இருப்பினும் பெயர்கள் கிடையாது. அத்திரிக்கப்பா 10 அறைகளில் ஒரே நேரத்தில் வசிப்பவன். அவன் ஒரு அறையில் தூங்கும்போது ஆவி 9 அறைகளில் தூங்கும். 7 பார்பர்கள் வரவழைக்கப்பட்டு முகச்சவரம் செய்யும் வரையில் நிஜ முகம் யாருக்கும் தெரியாது. இவனது முன்னோர்கள் 105 பேரில் பலர் பார்பர்களால் திட்டமிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது கதைப்பாடல் மூலம் தெரியவருகிறது. கொன்றனும் கொலை செய்யப்பட்டனும் அத்தரிக்கப்பா.
இலக்கணம் ஒன்று போல் இன்னொன்று எழுதப்படும். ஆனால் இரண்டும் வேறானவை. பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படுவது தெகிமொலா சரித்திரம். ஊர் முழுதும் குள்ளமான சிலைகள். 113 அடி ஞானவான் சிலை மட்டும் பெரிது. சூத்திரங்கள் ‘என்ப’ என்னும் பழைய சொல்லை எண்ணிடங்கா அர்த்தத்தில் பயன்படுத்தின. இந்த சூத்தரத்தை வாசிக்கும் தருணங்களில் இமை திறந்து கண்களால் பார்த்தன. சில சூத்திரங்களுக்கு இமையுடன் மீசையும் முளைத்தன. புணர்ச்சியின் இலக்கணம் கூறியபோது எழுத்துகள் வியர்த்தன. இறுதியாக எழுத்திலிருந்து உயிர்கள் பிறந்தன.
அத்திரிக்கப்பாவின் மகள் முஸல்பனி. இரண்டு கால்களும் சம அளவு கொண்டவளல்ல. இவள் அத்திரிக்கப்பாவுக்கு 3300 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த அருமை மகள். அவளுக்கு 15 காதலர்கள். அவள் தனது ஆடையில் அவர்களின் ஓவியங்களைத் தீட்டச் சொல்கிறாள். அவள் மூன்று பாகமாக வாழ்கிறாள். மேலும் இவள் கார்க்கோடன் என்று ஆண்பெயரிலும் முஸல்பனி என்ற பெண் பெயரிலும் ஆட்சி செய்தவள். எனவே எதிரிகளால் இவளைக் கொல்லமுடியவில்லை. மீனவன், வெள்ளி முளைத்தவன் ஆகியோர் இவளது காதலர்கள். இவளை வெள்ளி முளைத்தவன் திருமணம் செய்துகொண்டு, மந்திர தந்திர மாயவித்தைகள் பலசெய்து நூலேணியில் நாண்டுகொண்டு செத்தவன் என கதை முடிவடைகிறது.
இக்கதையின் ஊடாக பல்வேறு கிளைக்கதைகளையும் வந்து போகின்றன. இவற்றில் தொடர்பு இருக்கவும் இல்லாமலும் இருப்பதை கதை சொல்லி முன்னுரையில் சுட்டுகிறார். போர்ஹே, ஜாய்ஸ், கால்வினோ போன்றோரின் கதைகளைப் போல தமிழில் உருவாக்க வேண்டிய தேவை வலியுறுத்தப்படுகிறது.
“ஏற்கனவே படித்ததை வைத்து மதிப்பிடும் அராஜகத்தைச் செய்யாதீர்கள். மீண்டும் மீண்டும் படியுங்கள். சில தொனிகள், சித்திரங்கள், மனத்தில் எழும் கற்பனைகளை அனுபவம் ஆக்குங்கள். இது நெட்வொர்க்கின் தன்மை மட்டுமே கொண்டது .இது கணினி யுகம்”, என்று தமிழவன் முன்னுரையில் சொல்வதைக் கேட்கலாம்.
இந்த புதுவகை எழுத்தில் தேடல் மிக்கவர்கள் நிறைய கண்டடைய முடியும் என்று மட்டும் இப்போது சொல்லிவைப்போம்.
முஸல்பனி – நாவல்
தமிழவன்
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2012
பக்கம்: 102
விலை: ரூ. 65
வெளியீடு:
அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் – 621310,
திருச்சிராப்பள்ளி – மாவட்டம்.
பேச: 04332 273444
மின்னஞ்சல்: info@adaiyaalam.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக