வியாழன், ஆகஸ்ட் 30, 2018

ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும்

ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும்


மு.சிவகுருநாதன்

    குறிப்பு: வாட்ஸ் அப் குழுவில் நடந்த விவாதத்தை  அப்படியே வெளியிடுகிறேன். வாசிப்பில் ஏற்படும் சிரமத்தைப் போக்க ஒன்றிரண்டு எழுத்துப்பிழைகளைச் சரி செய்துள்ளேன். சம்பிரதாயமான நன்றி, வணக்கம் ஆகியவற்றை மட்டும் நீக்கியுள்ளேன்.

    இளம் தலைமுறைகள் வாசிக்க வருவது கொண்டாடும் செய்திதான் என்பதில் துளியும் அய்யமில்லை. வாசிப்பு நமக்குள் பல்வேறு திறப்புகளைக் கொண்டு வருவது. ஆனால் அரசியலற்ற வாசிப்பு சாத்தியமில்லை. அரசியலற்ற இலக்கியம் என்பதே ஒரு அரசியல்தான்!

    இளைஞர்கள் வாசிப்புத் தளத்திற்கு வருவது விவாதிப்பதும் மகிழ்ச்சியான செய்தியே. அந்த வகையில் திருவாரூர் என்ற நகரமும் கிராமும் அல்லாத ஓரிடத்தில் வாசிப்பு இயக்கம் ‘நதிக்கரை இலக்கிய வட்டம்’ என்னும் பெயரில் இருப்பதைக் கண்டு, முதலில் முகநூலில் இணைந்தேன். திருவாரூர் என்றதும் வாட்ஸ் அப் எண் கேட்டு ‘நதிக்கரை இலக்கிய வட்டம்’ என்ற குழுவிலும் இணைத்தனர். ‘நதிக்கரை’ என்ற பெயரேச் சிக்கல்தான். ‘சரஸ்வதி நதிக்கரையோ’ அல்லது தி.ஜா. போன்றோர் நிர்மாணித்த நதிக்கரையோ என்கிற அய்யம் இருக்கத்தான் செய்தது. இருப்பினும் என்ன நடக்கிறது என்று கவனிக்கலானேன்.

        இவர்களது முகநூல், வாட்ஸ் அப் பதிவுகள் திருவாரூரில் யாரும் இலக்கியம் வாசிக்கவில்லை என்ற ‘இலக்கிய வறட்சியை’ விண்டுரைத்தது. (இங்கு வறட்சி இருப்பது உண்மைதான்! ஆனால் அது இலக்கிய வறட்சியல்ல.) அவர்களுக்கு நாங்கள் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்யப் போகிறோம் என்று பிரகடனப்படுத்தியது. இது தொடர்பான பதிவுகள் சிலவற்றைப் பார்ப்பது அவசியம்.

7/14/18, 8:04 PM - +91 9#####8861:

      “கூட்டத்திற்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தோம். ஒருவர் எழுத்தாளர். நான்கு பேர் தீவிரமான இலக்கிய வாசகர்கள் அனைவரும் முப்பது வயதை ஒட்டி இருப்பவர்கள். கதைகளைப் பற்றிய ஒவ்வொருவருடைய  கோணமும் வேறு வேறாக இருந்தது. விவாதம் நீர்த்து போகாதவாறு சுரேஷ் பிரதீப் அருமையாக நெறியாள்கை செய்தார்.
………………………………………………………………………………………..
      நடைபெற்ற நதிக்கரை இலக்கிய கூட்டங்களிலிலேயே  செறிவான விவாதம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தான். அதிகப்படியான நபர்கள் இல்லாததால் அனைவருக்கும் போதிய அளவில் பேச நேரம் இருந்தது. அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கான பணிகள் கூட்டம் முடிவடைந்தவுடனே தொடங்கிவிட்டது”. (14.07.2018 நதிக்கரை இலக்கிய வட்ட முகநூல் பதிவிலிருந்து…)


7/15/18, 7:48 AM - +91 9#####8861:

    12 angry men பார்த்துவிட்டு இந்தத் தகவல்களை இணைத்து நீங்கள் தனிக்கட்டுரையாகவே எழுதலாம். இந்த வாழை விஷயத்தை ஜெ மற்றொரு தருணத்திலும் சொல்லி இருக்கிறார். ஒருவேளை நான் பாண்டிக்கு வந்தபோது நடந்த இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்திருக்கலாம்

7/16/18, 6:01 PM - +91 9#####8861:

     தமிழில் சிறுகதை, நாவல், கவிதை என்ற மூன்று வடிவங்களிலும் வெற்றிகரமாக இயக்கப் படைப்பாளிகள் மிகச் சொற்பம்.

   சுந்தர ராமசாமி மட்டுமே இந்த மூன்று வடிவங்களிலும் ஓரளவு வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்ததாக யுவன் சந்திரசேகர் மூன்று வடிவங்களிலும் சாதனைப் படைப்புகளைக் கொடுத்துள்ளார். பொதுவாக கவிஞர்கள் நல்ல சிறுகதை ஆசிரியர்களாக இருப்பார்கள். இரண்டுமே நுணுக்கத்தை எதிர்பார்க்கும் வடிவங்கள்.

7/19/18, 8:33 AM - +91 9#####3567:

    அப்போ ஒரு சிறு அமர்வு போட்டுடலாம், கலந்துரையாடல் அல்லாமல் நீங்கள் எங்களுக்கு சிறுகதை எழுதுவது குறித்து பேசினால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

7/19/18, 9:15 AM - +91 9#####8861:

நிச்சயமாக. பத்து மணிக்கு வந்து விடுகிறேன்

7/20/18, 9:17 AM - +91 9#####8861:

     யுவன் சந்திரசேகர் படைப்புகள் குறித்த கூடுகை வருகிற ஆகஸ்டு இருபத்தாறாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மைய நூலகத்தில் நடைபெறும்.

    நதிக்கரை இலக்கிய வட்டம் திருவாரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்யும் பொருட்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இதுவரை நிகழ்ந்த ஐந்து நிகழ்வுகளில் ஒருவர் தவிர்த்து கலந்து கொண்டவர்கள் யாருமே திருவாரூரில் வசிக்கவில்லை. பெங்களூருவில் பணிபுரியும் மகேஷ் மற்றும் சென்னையில் பணிபுரியும் நரேன் இருவரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். ரமேஷ் மற்றும் கதிரேசன் இருவரும் நாகையில் இருந்து வருகின்றனர். உண்மையில் இந்த அமைப்பினை சற்று தளர்வான வழிமுறைகள் உடையதாக கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் எண்ணமாக இருந்தது. நிகழ்வில் விவாதிக்கப்படும் படைப்புகளை கலந்து கொள்கிறவர்கள் வாசித்திருக்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறெந்த முன் நிபந்தனையும் வைக்கப்படவில்லை.

    என் சொந்த அனுபவத்தில் திருவாரூரில் சந்தித்த உரையாடிய மனிதர்களைக் கொண்டு இங்கு இலக்கியம் என்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்த பின்னரே நதிக்கரை இலக்கிய வட்டத்தினை தொடங்கினேன். இன்றுவரை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு சில நண்பர்களாலும் திருவாரூர் நூலகத்தின் உதவியாலும் மட்டுமே நதிக்கரை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளின் முக்கிய நோக்கம் தமிழின் வெவ்வேறு வகையான புனைவிலக்கிய போக்குகளையும் அதன் விரிவையும் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமே.

    ஒரு சில படைப்பாளிகளின் ஒருசில சிறுகதைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வாசிப்பதும் விவாதிப்பதும் அந்தப் படைப்பாளியின் புனைவுலகுக்குள் இலக்கிய வாசகர்களை தயக்கமில்லாமல் நுழைய வைப்பதற்காகவே.

7/25/18, 8:46 AM - +91 9#####8861:

    தொண்ணூறுக்கு பின்பு அல்லது இரண்டாயிரத்தின் துவக்கத்தில் தமிழில் மரபை, தொன்மங்களை, வரலாற்றை மறுஆக்கம் செய்யக்கூடிய நாவல்கள் சிறுகதைகள் வரத்தொடங்கின. தற்போதைய பொதுப்போக்கு என்பது மிகக்கறாரான சொற்சிக்கனத்தோடு பேசுபொருளின் அனைத்து கோணங்களையும் விரித்தெழுவது. தமிழில் சுரேஷ் பிரதீப், அனோஜன் பாலகிருஷ்ணன், நவீன் முதலியவர்கள் இதற்கு உதாரணம்.

தமிழ் சிறுகதைகள் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்ககள்

  • இலக்கிய முன்னோடி –ஜெயமோகன்
  • பழுப்பு நிற பக்கங்கள்-சாருநிவேதிதா
  • நூறு தமிழ் சிறுகதைள்_வீ அரசு
  • கதவிலாசம்-எஸ் ராமகிரிஸ்னன்
  • நவீன தமிழிலக்கிய அறிமுகம்-ஜெயமோகன்
  • எழுதும் கலை-ஜெயமோகன்

குறிப்பு:

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம், எழுதும் கலை ஆகிய நூல்களில் காணப்படுகிறது. 
(நதிக்கரை இலக்கிய வட்டப் பதிவிகளிலிருந்து…)

     இந்தப் பதிவுகளிலிருந்து இப்பதிவுகளைப் போடும் ‘பிதாமகன்’ சுரேஷ் பிரதீப் என்பதும் இவரது இலக்கியப் பீடத்தின் கீழ் “கைகட்டி, வாய் பொத்தி, எங்களுக்குச் சிறுகதை அருளுங்கள்”, என்று பணிந்தேகும் ‘குருகுல’வாசிகள் சிலர் இருப்பதும் வெளிப்பட்டது.

   வேறு பெயரில் இயங்கும்  ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின்’ நகலிது. அவர்களது பதிவுகளில் இருக்கும் அபத்தங்கள், உன்னதத் துதிபாடல், ஜெயமோக, சுயமோகத் தம்பட்டங்களுக்கு அளவில்லை. இவர்களது முன்னோடி ஜெயமோகனுக்கு எவ்விதமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பலநேரங்களில் நிருபிக்கிறார்கள்.
   
    ஜெயமோகனோ (ஜெமோ) அல்லது வேறு எவரோ எழுதிய மதிப்பீடுகளை இவர்கள் தங்களது கருத்தாக வெளியிட்டுக் கொள்ளத் தயங்கவில்லை. அறிஞர் பொ.வேல்சாமி ‘கவிதாசரணில்’ அம்பலப்படுத்திய இலக்கியத்திருட்டு நமக்கெல்லாம் தெரியுந்தானே! குருவுக்கு நிகரான சில நேரங்களில் குருவையும் மிஞ்சும் சீடர்கள்!

   “தற்போதைய பொதுப்போக்கு என்பது மிகக்கறாரான சொற்சிக்கனத்தோடு பேசுபொருளின் அனைத்து கோணங்களையும் விரித்தெழுவது. தமிழில் சுரேஷ் பிரதீப், அனோஜன் பாலகிருஷ்ணன், நவீன் முதலியவர்கள் இதற்கு உதாரணம்”, என்று இவர்கள் எழுதுவதைக் கவனியுங்கள்.
  
   புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், லா.ச.ரா, மௌனி, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகியோருக்குப் பிறகு ‘நம்ம’ சுரேஷ் பிரதீப் தான் தமிழ்ச் சிறுகதையின் கதாநாயன்; பிதாமகன். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதிலும் இதற்கு ஜெமோ எவ்வளவோ பரவாயில்லை!


     அ.மார்க்ஸ் -ன் முகநூல் பதிவொன்றில் (ஜூலை 24, 2018) ‘இளம் எழுத்தாளர்களின் சில கதைகள்’ எனும் தலைப்பில் வெளியான  சில கருத்துகளையும் பார்த்துவிடுவோம்.   


01. ஒரு கால்நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு தமிழ்ச் சிறுகதையைப் படித்தால் முதல் சில பத்திகளில் அது தமிழக எழுத்தாளர் எழுதியதா, ஈழச் சிறுகதையா, மலேசியா- சிங்கப்பூரிலிருந்து எழுதப்பட்டதா என்பதை உடன் சொல்லிவிட முடியும். இப்போது அப்படியான புவி எல்லைகளைத் தாண்டிய ஒரு பொதுவான தமிழ் இலக்கிய உருவாக்கம் உயிர்த்துள்ளதாக உணர முடிந்தது. எடுத்துக்காட்டாக அனோஜன் பாலகிருஷ்ணன் எனும் இளைஞரின் 'சாய்வு' எனும் சிறு கதையைப் படித்தபோது அது யாரோ தமிழக இளைஞர் எழுதியதாகவே நினைத்தேன். அவரது வேறொரு, இளம் வயது யாழ்ப்பாண யுத்த கால அனுபவம் ஒன்றை வாசித்தபோதுதான் அவர் ஈழ எழுத்தாளர் என்பது விளங்கியது.


02. இவர்களது நூல்கள் கிட்டத்தட்ட அனைத்துமே ‘கிழக்கு’ அல்லது ‘காலச்சுவடு’' வெளியீடுகளாகவே உள்ளன. அவை தரமாக நூலை வெளியிட்டு பரவலாக மார்கெட் பண்ணுவது இவர்களை வசீகரிக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு அதைவிட வேறென்ன வேண்டும்?


03. இவர்கள் அனைவரும் ஜெயமோகனை குருவாக அல்ல, தெய்வமாக மதிக்கின்றனர். அவரது எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்ட தலைமுறையாகவே இன்றைய எழுத்தாளத் தலைமுறை அமைந்துள்ளது. அவரது எழுத்தின் மீதான ஈர்ப்பு என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவர் இவர்களை உடன் வாசித்து, எழுதி, உற்சாகமூட்டித் தன் வாசகர் வட்டத்துக்குள் இருத்திக் கொள்ளக் காட்டும் அக்கறையும் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளும் இதன் பின்புலமாக உள்ளன.

04. இன்றைய அரசியல் சூழல் இத்தகைய போக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் உருவாக்கியுள்ள புது அரசியல் மதிப்பீடுகள, மதம் இதில் வகிக்கும் பங்கு ஆகியன இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று உலகில் உருவாகி வரும் பாசிசச் சூழல் இவர்களுக்கு ஒரு பொருட்டாக அமைவதில்லை. இவர்கள் 90 களுக்குப் பிந்திப் பிறந்தவர்கள். உலகளவில் உருவாகியுள்ள புதிய சூழலின் விளைபொருட்கள். இந்த மாற்றங்கள் சென்ற தலைமுறையினரான என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படுத்தும் கவலைகள் இவர்களுக்குக் கிடையாது. அதோடு இலங்கையாக இருக்கட்டும் மலேசியாவாக இருக்கட்டும் அங்கெல்லாம் தமிழர்கள் பிற இனத்தால் மட்டுமல்ல பிற மத அரசுகளாலும் பாதிக்கப்பட்டவர்கள். அங்கே ஒடுக்கப்படும் மதமாக இந்து மதம் உள்ளது. எனவே அவர்களுக்கு இன்று உலகளவிலும், இந்தியாவிலும் உருவாகியுள்ள புதிய அரசியல் ஒரு வகையில் ஆறுதலை அளிப்பதாகவே உள்ளது. அந்த வகையில் அவர்கள் பாக்கியசாலிகள்தான்.

(அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் பதிவு:  ஜூலை 24, 2018)

    இந்தக்குழுவில் முதலில் பதிவிடாமல் விலகியிருந்துப் பிறகு,  எனது வழக்கமான பதிவுகள் மற்றும் நூல் அறிமுகங்கள் ஆகியவற்றை இட்டுவந்தேன். எவ்வித எதிர்வினையும் இல்லை. வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ். பற்றிய பதிவுகள் இட்டபோது எதிர்வினை தொடங்கியது. “இலக்கியமல்லாத, வெற்று, சில்லறை அரசியல் பேசக்கூடாது. அதற்கு டீக்கடை பெஞ்ச்கள் உள்ளன. நாங்கள் சொல்லும் உன்னத இலக்கியங்களை (உம்: ஜெமோ, யுவன் சந்திரசேகர்) வாசித்துவிட்டு வாருங்கள்”,  என அறிவுறுத்தியது.

      ஜொமோ கொண்டாடவில்லை என்றாலும் சாருநிவேதிதா போன்றவர் கொண்டாடும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிதையை ஒன்றை ஜெமோ விமர்சனம் செய்தது குறித்து நண்பர் ராஜன் குறையின் முகநூல் பதிவு ஒன்றை இட்டபோது மீண்டும் உன்னத இலக்கியம் போதிக்கத் தொடங்கினர். அந்த விவாதங்களை அப்படியே தருகிறேன்.

     என்ன இருந்தாலும் இலக்கியமே வாசிக்காமல் இருந்துவிட்டு, அரசியல் பேசுவதற்கும் சில்லறைத் திருவாரூர் (நன்றி: சுரேஷ் பிரதீப்) பசங்களுக்கு இவ்வளவுத் திமிர் ஆகாதென்றும், நாகரீகமற்ற சொற்களைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி என்னை குழுவிலிருந்து நீக்கினர். யார் நாகரிகமில்லாத சொற்களைப் பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள இந்த உரையாடல்களைப் பொதுவில் வைக்கிறேன்.
    

8/20/18, 8:00 AM - +91 9#####8861:

    நதிக்கரை இலக்கிய விவாதத்திற்கென தொடங்கப்பட்ட குழு. ஆகவே இலக்கியம் சார்ந்தவற்றை மட்டும் பதிவிடவும்

8/20/18, 11:39 AM - மு.சிவகுருநாதன்:

    சமூக, அரசியல் கலப்பு இல்லாத அரூப இலக்கியத்தை எப்படி படைப்பீர்கள் அல்லது படிப்பீர்கள்?  இக்குழுவில் எத்தகைய இலக்கிய விவாதங்கள் நடந்திருக்கிறது?

   ஒருவர் சொல்ல பிறர் கைகட்டி, வாய் பொத்தி பாடம் கேட்கும் குருகுலத்திற்கு  நிகராகவே இருக்கிறதே இக்குழுவின் இலக்கியச் செயல்பாடு. ஒரு இலக்கியப் பீடத்தை நிறுவும்போது அங்கு விவாதத்திற்கு வேலை இருக்குமோ!

    ஜெயமோகன் சொல்வதை, எழுதுவதை மட்டும் வாசிப்பது மட்டுமே இலக்கிய வாசிப்பாகாது. அரசியலற்ற இலக்கியம் சாத்தியமா என்று யோசியுங்கள். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் அரசியல் உண்டு. தூய இலக்கியம்  என்கிற வரையறையும் அரசியலே. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் என யாராக இருப்பின் படைப்பின் உள்ளாடும் அரசியலும் பேசப்பட வேண்டியதே. தூய்மை இலக்கியம், இனத்தூய்மை, மொழித்தூய்மை   ஆகியன எல்லாம் நமக்கு உணர்த்துவது  அதன் பின்னாலிருக்கும் அரசியலைத்தான்...
பின் குறிப்பு: தூய இலக்கியந்தான் பேசவேண்டும் என்றால் என்னைக் குழுவிலிருந்து நீக்கிவிடுக..

8/20/18, 11:56 AM - +91 9#####8861:

     ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இக்குழுவின் முதன்மை நோக்கம் நவீன இலக்கியம் சார்ந்த மிகக்கடுமையான விலக்கம் நிலவும் திருவாரூர் என்ற மிகப்பின்தங்கிய மாவட்டத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்வதும் விவாதிப்பதும் தான். இதுவரை ஐந்து இலக்கிய கூடுகைகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்த பதிவுகளும் இக்குழுவில் பகிரப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள நண்பர்களும் தொடர்ந்து கூடுகைகளில் கலந்து கொள்கின்றனர். ஊரில் இல்லாத போது அலைபேசி வழியாகவும் இணைகின்றனர்.

   "கைகட்டி வாய்பொத்தி" என்பது போன்ற வார்த்தைகளை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உண்மையில் சில்லறை அரசியல் விஷயங்களைத் தாண்டி இலக்கியத்தில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் 26 அன்று நடைபெறும் கூடுகையில் கலந்து கொள்ளுங்கள். அங்கு யாரும் சொற்பொழிவு ஆற்றினால் விவாதிக்கும் படைப்புகளை வியந்தோதினால் பிறகு நீங்கள் சொல்லும் "கைகட்டுதல் வாய்பொத்துதல்களை" நானும் ஏற்கிறேன். அரசியல் சினிமா போன்றவற்றை பேச தமிழகம் முழுவதும் மேடைகள் உள்ளன. குழுக்கள் உள்ளன. இது இலக்கிய விவாத்திற்கான குழு.

    படைப்பின் அரசியலை பேசுங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை. பின் தொடரும் நிழலின் குரலோ காவல்கோட்டமோ எவ்வகையில் அரசியல் பிரதிகளாகின்றன என விளக்குங்கள். வெறும் அரசியலை நேரடியாகப் பேச இது இடமல்ல. நான் சொல்கிறவற்றில் உங்களுக்கு உடன்பாடில்லை எனில் குழுவை விட்டு நீங்களே விலகலாம்.

8/20/18, 12:06 PM - மு.சிவகுருநாதன்:

    இக்குழுவில் வரும் பதிவுகளைப் பார்த்துவிட்டுத்தான்  சொல்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் அல்லது திருவாரூரில் நவீன  இலக்கிய அறிமுகம், வாசிப்பே இல்லை என்று சொல்லிவரும் உங்களது சொல்லாடல் மிகவும் ஆபத்தானது.

    அத்தகைய வாசிப்புகளை நாங்கள் கொண்டுவந்து சேர்க்கிறோம் என்பதும் அபத்தமான வாதம். இக்குழுவில் நானாக இணையவில்லை. இணைத்தீர்கள்.... வெளியேற்றுவதும் உங்களது வேலை.... என் வேலை அதுவல்ல.... மேட்டிமைத்தனம் படைப்பாளி, வாசகன் யாரிடமிருந்தாலும் அது மிக மோசமான ஒன்று. அதில் உரையாடல் சாத்தியமில்லை.

8/20/18, 12:10 PM - +91 9#####8861:

   மன்னிக்கவும். உங்களது அனுமதி அல்லது விருப்பம் இல்லாமல்  உங்களை இணைத்திருக்க வாய்ப்பில்லை.

8/20/18, 12:14 PM - +91 9#####1690:

    தங்களுக்கு நதிகரையின் நோக்கம் புரியவில்லை என தோன்றுகிறது...

8/20/18, 12:42 PM - மு.சிவகுருநாதன்:

    உங்களது மேட்டிமை நோக்கத்தைப் புரிந்தே எதிர்வினை புரிந்தேன்.. உங்கள் அளவிற்கு இலக்கிய அறிவில்லாததால் எனக்குப் புரிதல் இல்லாமற் போயிருக்கலாம்.. என்ன செய்வது திருவாரூரில்தான் யாருமே படிப்பதில்லையே!

8/20/18, 12:45 PM - மு.சிவகுருநாதன்:

   முகநூலில் இணைந்தபிறகு வாட்ஸ் அப் கேட்டு, நான் தந்த பிறகு இணைத்தீர்கள். இதை அனுமதி என்றே எடுத்துக் கொள்கிறேன்.. இக்குழுவை விட்டு விலகுவது என் விருப்பம் இல்லை. நீக்குவதும் வைத்திருப்பதும் அட்மின் விருப்பம். அவ்வளவுதான்!

8/20/18, 12:49 PM - +91 9#####8861:

   சார் ஏன் இவ்வளவு சூடாக பேசிக்கொள்கிறோம் என்று புரியவில்லை? மாற்றுக் கருத்துக்களை நேரில் விவாதிப்போம். விடுமுறை நாட்களில் திருவாரூர் நூலகம் வரும் போது சொல்லுங்கள் சந்திப்போம்.

8/20/18, 12:51 PM - மு.சிவகுருநாதன்:

    இதிலென்ன வெம்மை, குளிர்ச்சி? நீங்கள் சொன்னதற்கு பதில் சொல்லவே வேண்டாம் என்றால் எப்படி விவாதம் நடக்கும்?


8/20/18, 12:54 PM - +91 9#####8861:

 பேசுவோம். நேரிலொரு முறை சந்தித்து விடுவோம்.

8/20/18, 1:11 PM - +91 9#####690:

    நதிக்கரை கூடலுக்கு வாருங்கள்.. கைகட்டி.. வாய்பொத்தி.. வார்த்தைகள் தவறு என்பதை உணர்வீர்கள்..

8/20/18, 2:44 PM - +91 9#####7173:

  காழ்ப்பு வேண்டாம். இலக்கியம் நம்மை மேம்படுத்தட்டும்.

8/20/18, 2:47 PM - மு.சிவகுருநாதன்:

    காழ்ப்பு யாருக்கு, யாரிடம் என்று விளக்கினால் தேவலாம்....

8/20/18, 2:48 PM - +91 9#####7173:

     நமக்கு, நம்மிடமே.

8/20/18, 2:49 PM - மு.சிவகுருநாதன்:

     இல்லை. வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதும்போது மட்டுமே பிரச்சினை வருகிறது. ஏன்?

8/20/18, 2:50 PM - +91 9#####7173:

   பல நூறு கட்டுரைகள் வழியாக ஜெயமோகன் விளக்கி விட்டார்.

8/20/18, 2:52 PM - மு.சிவகுருநாதன்:

    இதுதான் பிரச்சினையே... ஜெயமோகன் சொல்லிட்டா பொத்திகிட்டு போயிற வேண்டியதுதானா?

8/20/18, 2:55 PM - +91 +91 9#####8861:

     நீங்கள் இப்படிப்பட்ட முன் முடிவுடன் இருப்பீர்கள் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நீங்கள் ஒரு இடதுசாரியை இகழ்ந்திருந்தாலும் நான் இதையே சொல்லி இருப்பேன். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு priority இருக்கும். இக்குழுவின் priority இலக்கியம். அது சார்ந்தவை பேசப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். நீங்கள் அதை அரசியல் போன்ற தளத்துக்கு இழுக்க வேண்டாம் என்றே நான் சொன்னேன். மற்றபடி அதிதீவிர இந்துத்துவ மார்க்கஸிய திரவிடனான என்னை இந்துத்துவ அடையாளத்துக்குள் அடைக்க நினைப்பதை ஏற்க முடியாது.

8/20/18, 3:01 PM - மு.சிவகுருநாதன்:

    உங்கள் கருத்துகளில்  முன்முடிவுகளே  இல்லையா? உங்களை இந்துத்துவவாதி என்று எங்கு சொன்னேன்? அது என்ன அதிதீவிர இந்துத்துவ மார்க்சிய திராவிடன்? என்னைப் போன்ற அதிகம்  படிக்காதவர்களுக்கு இது  விளங்காது என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏற்கிறேன். பார்த்தீர்களா... பூனைக்குட்டி தானாக வெளிவருவதை.....

8/20/18, 3:03 PM - +91 9#####8861:

    எனக்கு சில்லறை அரசியல் நிலைப்பாடுகளில் நம்பிக்கை கிடையாது என்பதால் தான் எதிர் அடையாளங்களை ஒன்றிணைத்தேன்.

8/20/18, 3:03 PM - மு.சிவகுருநாதன்:

    இங்கு இகழ்தல் எங்கு வந்தது? வாஜ்பாயியை புகழ்கின்ற எவரும் மறந்த மோடியின் முன்னோடி அவர் என்பதை நினைவூட்டுவதே எனது கட்டுரை. இதை ஏன் பாராட்ட எடுத்துக்கொள்ளக்கூடாது?

8/20/18, 3:06 PM - +91 9#####8861:

   எடுத்துக் கொள்ளலாம் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் இந்த சமகால சில்லறை விஷயங்களை விடுத்து சற்று இலக்கியம் வாசித்தல் நலம். இது அதற்கான குழு. அதையே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பூனை புலி எதையும் இங்கு ஒளித்து வைத்திருக்கவில்லை நண்பரே.

8/20/18, 3:07 PM - மு.சிவகுருநாதன்:

    திரும்பவும் உங்கள் கருத்துகளில் மேட்டிமைவாதம் எதிரொலிப்பதைப் பாருங்கள். சில்லறை அரசியல்,  சில்லறைப் பசங்க கூட வீண் விவாதமெல்லாம் தேவையா உங்களுக்கு....? உன்னத இலக்கியங்கள் படைக்கும்போதும் வாசிக்கும்போது இந்த சில்லறைத்தனங்கள் இனியேனும் நுழையாமல் பார்த்துக் கொள்க....

8/20/18, 3:08 PM - மு.சிவகுருநாதன்:

    நான் எதையும் வாசிக்காதவன் என்பதை முன்பே சொல்லிவிட்டேன். திரும்பவும் அறிவுரை எதற்கு?

8/20/18, 3:13 PM - +91 9#####8861:

    ஆலோசனைக்கு நன்றி. ஆம் இங்கிருக்கும் அரசியலாளர்கள், அவர்களையே கவனித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற அரசியல் நோக்கர்களுக்கு இலக்கியம் பெரிதல்ல என்பது போலவே இலக்கிய வாசகர்களுக்கு அரசியல் சில்லறை விஷயம் தான்.

     இலக்கியத்தின் பேசுபொருள் எல்லாக்காலத்திலும் மானுட உணர்வுகளே. அது குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கிறது. சமகால மனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அத்தகைய பெரும்பரப்பின் ஒரு சிறு மூலை தான் அரசியல் கருத்தியல் எல்லாம். அந்த மூலையும் இலக்கியத்துக்குள் வரும்போது வேறொரு பரிணாமம் கொள்ளும். இலக்கிய வாசகர்களன்றி எல்லாவற்றிலும் கருத்தியல் நிலைப்பாடு தேடுகிறவர்களால் அதை அறிய முடியாது நண்பரே.

8/20/18, 3:26 PM - மு.சிவகுருநாதன்:

    நான் சொல்லாத சொற்களை நீங்களாக என் மீது சுமைத்த உங்களுக்கு   உரிமையில்லை. இலக்கியம் தேவையில்லை என்று நான் எந்த இடத்தில் சொன்னேன். சில்லறை போன்ற இழிவுபடுத்தும் சொற்கள் உங்களுடையவை. இலக்கியம் பெருசா... அரசியல் பெருசா என என்று நான் எங்கும் விவாதிக்கவில்லை. இது மேன்மை, உயர்வு, உன்னதம் என்று கதைக்கவில்லை. நான் வாசிப்பதை நீ வாசித்தாயா என்று மட்டம் காட்டவில்லை.. காலையில் உங்களுடன் விவாதம் முற்றுப்பெற்றது.  இப்போது யாரோ ஒருவரின் எதிர்வினைக்குப் பதில் சொன்னேன். உடனே நீங்கள் இலக்கிய கட்டபஞ்சாயத்திற்கு வந்துவிட்டீர்கள். இதுதான் விவாத நேர்மையா.... உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

இப்படிக்கு,
இலக்கிய வாசிப்பு இல்லாத, எதையும் புரிந்துகொள்ளும் தன்மையற்ற ஒருவன்..

8/20/18, 3:27 PM - +91 9#####8861:

சரிங்க நன்றிங்க...

8/20/18, 4:17 PM - +91 9#####3567:

     தோழர் எனக்கு புரியவில்லை எதனால் இவ்வளவு கடுமையாக பேசுகிறீர்கள் என்று, நீங்கள் எதிர்பார்ப்பது சமுதாயத்துக்கு பயன்படாத புத்தகத்தை விவாதிக்கிறோம் என்றா? அல்லது ஜெயமோகனை பற்றி அதிகமாக பகிர்கிறோம் என்றா? முதலில் இந்த குழுவில் நாங்கள் நிறைய இளம் எழுத்தாளர்களின் கதையை விவாதித்திருக்கிறோம். சமுதாயத்துக்கு தேவையான அல்லது பயனுள்ள கதைகள் மட்டும் தான் விவாதிக்கப்போறோம் என்ற எந்த தீர்மானமும் இந்தக்குழுவில் இல்லை என்பதை பொறுமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எழுத்தாளர்களின் படைப்பை மட்டுமே முன்னிறுத்தி இங்கு விவாதிக்கிறோம். இரண்டும் தேவை தான், சமூகப்பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கும் படைப்புகளும் தேவை, எழுத்தாளர்களின் திறனை வெளிப்படுத்தும் படைப்புகளும் தேவை. இதில் எது நமக்கு தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் கலந்துகொள்ள வேண்டாம். யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களுக்கு பிடித்தமான படைப்பாளர்களின் அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் படைப்புகள் பற்றி விவாதிக்கும்போது கலந்துகொண்டால் போதுமானது.

8/20/18, 7:17 PM - மு.சிவகுருநாதன்:

      தயவு செய்து உரையாடல்களை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும். எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எனது பதில். நான் பயன்படுத்தியது மட்டும் கடுஞ்சொற்கள் என்றால் பிறர் பயன்படுத்தியது மென்மையான சொற்களா? இது என்ன வகையான நீதி? ஜெயமோகன் எழுதிவிட்டார். என்று சொன்ன பிறகே ஜெயமோகன் சொல்லிவிட்டால் பிறர் பேசக்கூடாதா என்று கேட்கப்பட்டது. சில்லறைத்தனம் என்று சொல்வது மென்மை.... அதைக் கேள்வி கேட்டால் கடுஞ்சொல்? இதுதான் விஷ்ணுபுர தர்மமோ?

    ஜெயமோகன் உள்ளிட்ட எந்த எழுத்தாளர்கள் மீதும் எனக்குக் காய்தல் இல்லை. அதைப்போல எந்த எழுத்தாளர்களுக்கும் ரசிகர் அமைப்பதிலும் உடன்பாடில்லை. நீங்கள் ரசிகர் மன்றம் அமைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை; அது உங்கள் உரிமை.

     வாசிக்காதவன், புரிந்து கொள்ள முடியாதவன், வெற்று - சில்லறை அரசியல் பேசுபவன், வெறும் அரசியல் நோக்கம், இலக்கியம் படிக்காதவன்  எனப் பல அவதூறுகளுக்குப் பிறகும் பதில் சொல்லியிருக்கிறேன். சக மனிதனை இவ்வளவு இழிவாக மதிப்பிடும் நீங்கள் இலக்கியம் படிப்பவன் உயர்ந்தவன், கருத்தியல் பேசுபவன் கீழானவன் எனத் தீண்டாமைக் கடைபிடிப்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

    நான் இலக்கியமே வாசிக்காதவன் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? நவீன இலக்கிய நெடும்பரப்பை ஒரு வாசகன் எளிதாகக் கடந்துவிடமுடியுமா? யாரும் படிக்கல, நாங்கள் படிக்கிறோம் என்பது எத்தகைய அதிகாரம்? சிந்தியுங்கள். வாஜ்பேயியை விமர்சனம் செய்யும்போது கோபப்படுவோர், அடுத்தவனைப் படிக்காதவன் என்பதற்கும் கோபப்பட்டிருக்க வேண்டாமா?

( நதிக்கரை இலக்கிய வட்டத்தின் வாட்ஸ் அப் பதிவுகளிலிருந்து…)

     இத்துடன் அன்றைய விவாதம் முற்றுபெற்றது. அதன் பிறகு நான்கு நாள்கள் கழித்து மனுஷ்யபுத்திரன் கவிதைகளை ஜெமோ அணுகிய விதம் குறித்து நண்பர் ராஜன்குறையின் முகநூல் பதிவை குழுவில் பதிவிட்டேன். மீண்டும் விவாதம் என்றபெயரில் சுயமோக, ஜெயமோகத் தொண்டரடிப்பொடிகள் களமிறங்கினர். அதைக் கீழேக் காணலாம்.


8/24/18, 10:28 AM - மு.சிவகுருநாதன்:

நண்பர் ராஜன் குறையின் முகநூல் பதிவு...

       பாசிசம் என்ற சொல்லை சாதாரணமாகப் பயன்படுத்தி விடுகிறோம். ஆனால் உண்மையில் அது என்ன, எப்படி செயல்படும் என்பதையெல்லாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள ஜெயமோகன் எழுத்தினை தொடர்ந்து படிக்கவேண்டும். நான் இப்போதெல்லாம் படிப்பதில்லை; எதிர்வினை புரிவதும் இல்லை. ஆனால் மனுஷ்யபுத்திரன் கவிதை தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒரு கிளாசிக். பாசிச எழுத்தாளர்களுக்கான பாடநூல்.  ஒரு ஆட்டுக்குட்டியின் நோக்கிலிருந்து சொன்னால் நடுநிலை என்ற ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்தான் உண்மையான பாசிசம்.

8/24/18, 10:37 AM - +91 9#####8861:

    முகநூல் பாவம் பலரை தங்களை சிந்தனையாளர்களாக எண்ணச் செய்து விடுகிறது. உண்மையான சிந்தனையாளர்கள் சிலரை நீர்க்கச் செய்து விடுகிறது. ராஜன் குறை கிருஷ்ணன் இரண்டாம் வகை.

    முப்பது வருடங்களாக இலக்கியத்தில் இருப்பவர் அதிலும் குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளைக் குறித்து தொடர்ந்து எழுதியும் கவனப்படுத்தியும் வந்தவர் அவர் எழுதிய ஒரு படுசுமாரான கவிதையை சுமார் என்று சொன்னதற்கு ராஜன்குறை ஏன் பாசிசம் அளவுக்குப் போகிறார் என்று தெரியவில்லை.

8/24/18, 12:25 PM - மு.சிவகுருநாதன்:

    உண்மைச் சிந்தனையாளர்களைக் கண்டுபிடிக்கும் கருவி உங்களிடமும் ஜெயமோகன் போன்ற முப்பது ஆண்டு மேதமைகளிடமும் இருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது! இந்தக் கருவி அனைவருக்கும் கிடைத்துவிட்டால் இலக்கியம் மட்டுமல்ல; நாடும் செழுமையடையும்.

8/24/18, 12:37 PM - +91 9#####8861:

   அது ஏன் சார் ஜெயமோகனிடமும் என்னிடமும் இருக்க வேண்டும். நான் தானே இப்போது ராஜன் குறை நீர்த்துவிட்டார் என்று சொன்னேன். ஜெயமோகன் எங்கிருந்து வந்தார்? உண்மையில் உங்களது சிக்கல் என்ன?

8/24/18, 12:41 PM - மு.சிவகுருநாதன்:

   முப்பது வருடம் இருந்தவர் யார்? உங்கள் கருவியைக் கொண்டு  நீங்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும்

8/24/18, 12:44 PM - +91 9#####8861:

    உண்மையில் முப்பதல்ல நாற்பது வருடங்களுக்கும் மேல். அவர் தன்னுடைய முதல் சிறுகதையாக சொல்லும் நதி வெளியான வருடத்தை தன்னுடைய இலக்கிய உலக நுழைவாக ஜெயமோகன் குறிப்பிடுவார். அதனால் முப்பது வருடம் என்றேன். அக்கதை வெளிவந்தது 1987ல்.

8/24/18, 12:44 PM - மு.சிவகுருநாதன்:

இப்ப ஜெயமோகன் எங்கிருந்து வந்தார்? எனக்கேட்டது யார்?

8/24/18, 12:47 PM - +91 9#####8861:

   சிந்தனையாளர்கள் பற்றி சொன்னது நான் தான். அது ராஜன் குறையைப் பற்றி. முப்பதாண்டு இலக்கியக்காரர் என்று சொன்னது ஜெயமோகனை. அது மனுஷ்யபுத்திரன் கவிதை குறித்தான அவரது மதிப்பீடு பற்றியது. இரண்டும் வேறு வேறு. நீங்கள் இரண்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள்.

8/24/18, 12:52 PM - மு.சிவகுருநாதன்:

    நான் குழப்பிக் கொள்கிறேன். நீங்கள் தெளிவானவர்தானே! முப்பது வருடம் சொன்னதால் நான் ஜெயமோகனை இணைத்தேன் உங்களுடன். ஜெயமோகன் எங்கு வந்தார் எனகேட்டது நீங்கள். அதை உறுதிப்படுத்தவே எதிர்க்கேள்வி. இலக்கிய வாசனை நுகராத பாமரன் இப்படித்தான் இருப்பான் என்பதை நீங்களும் உங்களது கருவியும் உணரக்கூடும்!

.
8/24/18, 12:57 PM - +91 9#####8861:

   நீங்கள் பாமரனாக இருப்பது குறித்து எனக்கு எந்த சிக்கலும் இல்லை. "உண்மைச் சிந்தனையாளர்களைக் கண்டுபிடிக்கும் கருவி உங்களிடமும் ஜெயமோகன் போன்ற முப்பது ஆண்டு மேதமைகளிடமும் இருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது!" இந்தக் கருவி அனைவருக்கும் கிடைத்துவிட்டால் இலக்கியம் மட்டுமல்ல; நாடும் செழுமையடையும்"

     இது உங்கள் கூற்று. என் கூற்றுப்படி உண்மைச் சிந்தனையாளர்களை கண்டுபிடிக்கும் கருவி என்னிடம் இருக்கிறது என்று சொன்னதை நான் ஏற்கிறேன். ஏனெனில் ராஜன் குறை கிருஷ்ணன் மேல் நான் அப்படி ஒரு விமர்சனத்தை வைக்கிறேன். இதில் ஜெயமோகன் எங்கிருந்து வந்தார் என்பதே என் கேள்வி.

8/24/18, 1:27 PM - மு.சிவகுருநாதன்:

    இப்படி அறிவுப்பூர்வமான கேள்விக்கு வாழ்த்துகள். உண்மைச் சிந்தனையாளர்களைக் கண்டுபிடிக்கும் கருவி உண்மையான கவிதை, சிறுகதை, நாவல், மெய்யியல், அரசியல் எல்லாவற்றையும் கண்பிடிக்காதா? என்கிற பாமரத்தனமே அது. இப்படித்தானே நீங்களும் ஜெயமோகன்களும் சுமாரான, படு சுமரான, நல்ல, உன்னத படைப்புகளைக் (கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட) இனங்கண்டு  இலக்கியப் வாசமறியாதப் பாமரர்களும் உய்ய வழிகாட்டுகிறீர்களே! அது போதும். வாழ்க...

8/24/18, 1:29 PM - +91 9#####8861:

    சரி சார் மீண்டும் மீண்டும் உங்களை நீங்களே பாமரன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நான் பாமரத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக வாசிக்கிறேன். நம்முடைய சிந்தனை முறைகள் வேறு வேறு. Anyway வாழ்த்துக்களுக்கு நன்றி.

8/24/18, 1:33 PM - மு.சிவகுருநாதன்:

    நீங்கள் உங்களை இலக்கியங்களை கரைத்துக் குடித்து, அதில் மூழ்கியவன் என்று சொல்லிக்கொள்ளும் போது பாமரன், படிக்காதவன் என்பதெல்லாம் இழிவொன்றுமில்லை. ஏனெனில் என்மீது ஏகப்பட்ட இழிவுகளையே சுமந்த வண்ணமிருக்கிறேன். அவை என்மீது சுமத்தப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள் சுமத்தும் இலக்கிய வாசிப்பற்றவன் என்கிற இழிவும் அதனுள் அடக்கம்.

8/24/18, 1:33 PM - +91 9#####8861:

     இலக்கியம் என்பது எனக்கான அறிதல் முறை. வழிகாட்டல் என்று நீங்கள் சொன்னால் நான் அதை மறுக்கப் போவதில்லை. நான் அதை அனுபவப் பகிர்தல் என்ற சொல்லில் குறிப்பிடுவேன். "இவன் சொன்னால் அதை வாசிக்கலாம்" என்று நம்பும் சில நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். அது போல நூல்களை பரிந்துரைக்கவும் செய்கிறார்கள்.

8/24/18, 1:34 PM - +91 9#####8861::

    உங்களுக்கு இலக்கிய வாசிப்பு இல்லை என்று சொன்னதாக எனக்கு நினைவில்லை. நான் சொன்ன ஏதும் ஒன்று உங்களுக்கு அப்படி பொருள்பட்டிருந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது

8/24/18, 1:37 PM - மு.சிவகுருநாதன்:

    இதைத்தான் நான் முன்பு கைகட்டி, வாய்பொத்தி என்று சொன்னேன். “கவிதை எழுதுவது, சிறுகதை எழுதுவது பற்றிச் சொல்லுங்கள்”, என்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் அவ்வாறு சொன்னேன். ஒரு சூப்பர்மேன் வாசித்தருள, பிறர் அள்ளிப்பருக  இது ஒன்றும் தேவாமிர்தம் அல்ல.

8/24/18, 1:39 PM - மு.சிவகுருநாதன்:

பதிவுகளைப் புரட்டிப் பார்க்கவும். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை....

8/24/18, 1:40 PM - +91 9#####8861:

   உங்களுக்கு என்னதான் சார் பிரச்சினை? இக்குழுவில் யார் அந்த சூப்பர் மேன்? நீங்கள் முக்கியமென எண்ணும் நூலினை சொல்லுங்கள். விவாதிக்கலாம். அதைவிட்டு மொக்கையான அரசியல் பதிவுகளுக்கு இக்குழு உரித்தானது அல்ல. அதற்கு நிறைய டீக்கடை பெஞ்சுகள் தமிழ்நாட்டில் உள்ளன.

8/24/18, 1:41 PM - மு.சிவகுருநாதன்:

புனிதம், மொக்கை எதையும்  நீங்களே முடிவெடுக்க இயலாது.

8/24/18, 1:43 PM - +91 9#####8861:

    சரிங்க முடிவெடுக்கல. எங்களுக்கு  ஒரு நூலினை தயவுசெய்து பரிந்துரையுங்கள் திரு.சிவகுருநாதன். நிச்சயமாக நான் வாசித்து விடுகிறேன். அது குறித்து உங்களிடம் பேசுகிறேன். நான் அந்த நூலில் தவறவிடுகிறவற்றை எனக்கு தெளிவுபடுத்துங்கள்.

8/24/18, 1:43 PM - மு.சிவகுருநாதன்:

    தன் கவிதையால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனை கவிதை மோசம் என்று சொல்லும் ஜெயமோகன் மற்றும் உங்களால் அதன் அரசியலைப் பேசமுடியவில்லையே... ஏன்?

8/24/18, 1:44 PM - மு.சிவகுருநாதன்:

    நான் எப்போதும் குருவாக இருக்கவில்லை. எனக்கும் சீடனும் தேவையில்லை.

8/24/18, 1:45 PM - +91 9#####8861:

    உங்களுக்கு சீடனாக வரவெல்லாம் இங்கு யாரும் தயாரில்லை. உங்களது நூல் பரிந்துரை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது

8/24/18, 1:46 PM - +91 9#####8861:

    அக்கப்போர்களுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் நதிக்கரையில் நேரமில்லை நண்பரே. இங்கு மனுஷையும் பேசப்போவதில்லை. ஜெயமோகனையும் பேசப்போவதில்லை. அவர்களது ஆக்கங்கள் மட்டுமே விவாதிக்கப்படும்.

(நதிக்கரை இலக்கிய வட்டக் குழுப் பதிவுகளிலிருந்து..)

    எதற்கெடுத்தாலும் ஜெயமோகனையேப் பேசிவிட்டு, பிறகு இல்லை என்று கதைக்கும் கலை இவர்களுக்கு கைவரப்பெற்றுள்ளது. ஒருவேளை குரு அளித்த வரமாகக் கூட இருக்கலாம்! எடுத்துக் காட்டுவதற்காக 4 நாள்களுக்கு முந்தைய விவாதத்தின் சிலவரிகளை மீண்டும் பதிவிட்டேன்.

   அதிலிருந்தது பின்வரும் வரிகள்தான். “பல நூறு கட்டுரைகள் வழியாக ஜெயமோகன் விளக்கி விட்டார்”, என்று ஒருவர் பதிவிட்டதற்குப் பதிலாக, “இதுதான் பிரச்சினையே... ஜெயமோகன் சொல்லிட்டா பொத்திகிட்டு போயிற வேண்டியதுதானா?”, என்று நான் பதிவிட்டிருந்தேன். உடனே பொங்கி எழுந்தவர் அநாகரிகச் சொற்கள், தரம் தாழ்ந்த மொழி என்று உடனே என்னைக் குழுவிலிருந்து நீக்கினார்.

     “கைகட்டி வாய் பொத்தி” என்று நான் முதலில் அவர்களை விமர்சித்ததும், “ஜெயமோகன் சொல்லிட்டா பொத்திகிட்டு போயிற வேண்டியதுதானா?”, என்று சொல்லியதையும் அநாகரிகம் என்றால் இவர்கள் சொற்களின் நாகரிகத்தை அனைவரும் உணரவே இப்பதிவு பொதுவெளிக்கு கொண்டுவரப்படுகிறது.


8/24/18, 1:49 PM - மு.சிவகுருநாதன்:

     இதுவரையிலும் ஜெயமோகனைத்தான் பேசினீர்கள்.. உடனே எப்போது பேசினேன் என்று கேட்கத் தொடங்கிவிடுவீர்கள்... நினைவில் இல்லை என்பீர்கள்… இதுவரையில், என்ன பேசினீர்கள்?

8/24/18, 1:53 PM - +91 9#####8861:

    சரி சொல்லுங்கள். ஜெயமோகனின் கரடி என்ற சிறுகதை தவிர வேறென்ன பேசப்பட்டது நதிக்கரையில்? தி.ஜா சுந்தர ராமசாமி தொடங்கி சுனில் கிருஷ்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்ற இளம் எழுத்தாளர்கள் வரை நதிக்கரையில் விவாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முடிந்தால் ஞாயிறன்று மைய நூலகத்துக்கு வாருங்கள். பத்து மணிக்கு கூடுகை. வரவேண்டுமெனில் யுவன் சந்திரசேகர் புனைவுகளை வாசித்துவிட்டு வாருங்கள். நிகழ்வு எதற்குமே வராமல் எப்படி இவ்வளவு ஆணித்தரமாக ஜெயமோகன் மட்டுமே பேசப்படுகிறார் என்கிறீர்கள்?

8/24/18, 2:29 PM - மு.சிவகுருநாதன்:

    திரும்பத் திரும்ப நானென்ன சொல்ல... மனுஷ்யபுத்திரன் கவிதையோ அல்லது ஏதேனும் பிற படைப்பு ஒன்றை ஏற்பதோ, நிராகரிப்பதோ உங்கள் உரிமை. ஜெயமோகன் சொல்லிட்டார் என்பதாக இருக்கிறது உங்கள் பாவனை. உதாரணத்திற்கு ஒன்று கீழே.

    8/20/18 அன்று அதாவது நான்கு நாள்களுக்கு முன்பு நடந்த விவாதத்திலிருந்து சில வரிகளைப் பார்வைக்காக மீண்டும் பதிவிடுகிறேன். 

8/24/18, 2:36 PM - +91 9#####8861:

    ஒரு கேள்வியை கேட்டுவிடுகிறீர்கள். பதில் சொன்னால் இன்னொன்றுக்கு தாவுகிறீர்கள். ஜெயமோகனைத்தை தவிர என்ன பேசினீர்கள் என்று கேட்டீர்கள். பதில் சொல்லியாயிற்று. இப்ப மறுபடியும்  ஒரு குழுவில் பேசும் மொழியின் தரத்தில் இருந்து சற்று கீழிறங்கி சொற்களை பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் இறுதியாக பயன்படுத்தி இருக்கும் சொற்கள் அவ்வளவு நாகரிகமானவை அல்ல.

8/24/18, 2:39 PM - +91 9#####8861:

    மனுஷ், ஜெயமோகன் இருவரைப் பற்றியும் நான் பேசவில்லை. நீங்கள் தான் தொடங்கினீர்கள். இனியும் இதுபோன்ற தரம் தாழ்ந்த சொற்களை நீங்கள்  பயன்படுத்தக் கூடாது. மற்ற குழு உறுப்பினர்களை அது காயப்படுத்தலாம். இதைச் சொல்ல இலக்கிய பீடம் எல்லாம் தேவையில்லை. அடிப்படை மனித மாண்பு போதும்

8/24/18, 2:49 PM - மு.சிவகுருநாதன்:

   இதைவிட அநாகரிகமாக என்னைக் காயப்படுத்தியிருக்கிறீர்கள். கேட்டால் நினைவில்லை என்பீர். முந்தைய பதிவுகளைப் பார்க்கச்சொன்னேன். நான் சொல்வதற்கு பதில் சொல்லாமல் எல்லாம் ஜெயமோகனிடம் இருக்கு என்றால் விவாதத்திற்கு என்ன வேலை.... இது இரண்டு நாள்களுக்கு முன்பு இட்டது. இதில் மாண்பு, நாகரீகமற்ற சொல் என்றெல்லாம் கதைக்கும் நீங்கள், சில்லறை அது, இது வென்று  என்னை மிக மோசமாக இழிவுபடுத்தியதைப் பார்க்கவும். ஜெயமோகனை துணைக்கு வைத்துக்கொண்டு மனித மாண்பு பற்றியெல்லாம் கதைப்பது  ரொம்பவும் அபத்தம்.

8/24/18, 2:51 PM - +91 9#####8861:

   நன்றி நீங்கள் இன்னமும் உங்கள் சொற்களின் அநாகரிக தன்மையை உணராததற்காக வருந்துகிறேன். சென்று வாருங்கள்.

8/24/18, 2:52 PM - +91 9#####8861 removed you


     இவர்களது இலக்கிய அதிமேதாவித்தனத்தையும் இவர்களது இலக்கிய வாசிப்பையும் கட்டுடைக்க இவர்களது உளறல்களே போதுமானவை. இவர்களது வாசிப்பின் உச்சத்திற்கு  ஒரு சில  உதாரணங்கள் மட்டும்.

    சமீபத்தில் வந்த நூல்களுக்கு எடுத்துக்காட்டு. ஜெயமோகனின் 'நவீனத் தமிழ் இலக்கிய நூல் டிச. 1997 இல் 'காவ்யாபதிப்பகம் வெளியிட்டது. பல நூல்களும் பழைய நூல்களே! மறுபதிப்பு வந்தால் அது புதிய நூலாகிவிடுமோ! இவர்கள்தான் திருவாரூரில் யாரும் படிப்பதில்லை என்று புலம்புகிறார்கள்.  1997 இல் வெளியான ஒருநூல் எப்படி சமீபத்தில் வெளியானதாகும்? மேலும் இந்நூலை ‘கிழக்கு’ பதிப்பகம் 2011 –ல் மறுபதிப்பு செய்தது. அதுவும் சமீபமல்ல; ஏழாண்டுகள். 

   ஜெமோ வின் ‘இலக்கிய முன்னோடிகள்’ ஏழு நூற்களாக ‘தமிழினி’ 2003 இல் வெளியிட்டவற்றின் தொகுப்பே. இத்தொகுப்பை 2018 இல் ‘நற்றிணை’ வெளியிட்டது. ‘எழுதும் கலை’ நூலும் ‘தமிழினி’ வெளியீடுதான்! இப்போது வந்திருப்பது மறுபதிப்பே!

    ஜெமோ ரசிகர்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் மீது என்ன வன்மமோ தெரியவில்லை. பெயரைக்கூட ‘எஸ் ராமகிரிஸ்னன்’ என்றே எழுதுகின்றனர். அவருடைய ‘கதா விலாசம்’ டிச. 2005 விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. 

    வீ.அரசு தொகுத்த 'இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு' 2016 இல் ‘அடையாளம்’ வெளியிட்டது. சாரு நிவேதிதாவின் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ இரண்டு பாகம் வெளிவந்துள்ளது. முதல்பாகம் வெளியீடு – கிழக்கு; இரண்டாம் பாகம் ஸீரோ டிகிரி பப்ளிஷிங். இரண்டாம் பாகமே சமீபத்தில் வந்தது.

    இறுதியாக ஒன்று: 

  ஜெமோ வின் இணையதளத்தில் இலக்கிய முன்னோடிகளின் கோட்டோவியங்கள் 19 ற்குப் பிறகு 20 இடத்தை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன், கி.ரா., லா.ச.ரா., அசோகமித்ரன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், க.நா.சு., கு.அழகிரிசாமி, ப.சிங்காரம், நகுலன், அ.முத்துலிங்கம், மௌனி, ஜி.நாகராஜன் போன்ற 19 ஆளுமைகளுக்கு அடுத்த 20 வது ஆளுமை ஜெமோ. இதன் கீழே அவரது ரசிகர் சிவா சக்திவேல் என்பவரின் கடிதம் இடம்பெறுகிறது. 

    “புதுமைப்பித்தனில் ஆரம்பித்து, நாகராஜனில் முடிந்த அந்த கோட்டு ஓவியத்தின் கீழே ஒரு மூலையில் ஜெயமோகனின் படம். என்னே அவையடக்கம்!!!”, (சிவா சக்திவேல், பதிவு நவ. 21, 2017). 

        40 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்திருக்கும் ஜெமோ முதலிடத்தில் அல்லவா இருக்கவேண்டும். (சுரேஷ் பிரதீப் கவனிக்க.) இதை வன்மையாகக் கண்டிப்பதோடு முதல் இடத்திற்கு மாற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்! மத்திய அரசின் விருதை மறுத்த இன்னும் பல தன்னடக்கங்களையும் அதில் இணைக்கவேண்டும்! 21 வது இடம் யாருக்கு? கண்டிப்பாக ‘நம்ம’ சுரேஷ் பிரதீப்க்குத்தான்! 

   ஏனெனில், “தொண்ணூறுக்கு பின்பு அல்லது இரண்டாயிரத்தின் துவக்கத்தில் தமிழில் மரபை, தொன்மங்களை, வரலாற்றை மறுஆக்கம் செய்யக்கூடிய நாவல்கள் சிறுகதைகள் வரத்தொடங்கின. தற்போதைய பொதுப்போக்கு என்பது மிகக்கறாரான சொற்சிக்கனத்தோடு பேசுபொருளின் அனைத்து கோணங்களையும் விரித்தெழுவது. தமிழில் சுரேஷ் பிரதீப், அனோஜன் பாலகிருஷ்ணன், நவீன் முதலியவர்கள் இதற்கு உதாரணம்”.


(நவீன இலக்கிய வாசிப்பற்ற திருவாரூர் பகுதியில் அவற்றைக் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடான வாட்ஸ் அப் குழு விவாதம் முக்கியத்துவம் கருதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது.)