திங்கள், நவம்பர் 21, 2016

55. தேர்வுகள் - மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி


55. தேர்வுகள் - மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 

(அகரம் வெளியீடாக வந்துள்ள நா. முத்துநிலவன் எழுதிய ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ என்ற கல்விச் சிந்தனைகள் – கட்டுரைத் தொகுப்பு நூல் குறித்த பதிவு.)



     கல்வியைப் பற்றி இந்தச் சமூகம் கவலைப்பட்டேயாக வேண்டும். ஆனால் அப்படியான கவலை பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை. கல்வி பற்றிய கவலைகள் இங்கு தேர்வுகள், மதிப்பெண்கள் பற்றியதாக மடைமாற்றம் பெற்றுள்ளது. கல்வியென்பது இவற்றில் மட்டும் இருப்பதான பாவனை இங்கு நிகழ்கிறது.

     கல்வி குறித்த தப்பெண்ணங்கள் நமக்கு அதிகம். கோணிப்பையில் பணத்தை அள்ளிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அதே பையில் அறிவை வேண்டிய மட்டும் அள்ளிச் செல்வது கல்வி என பெரும்பான்மையான சமூகம் கற்பிதம் செய்துகொண்டுள்ளது. ஆனால் கல்வி, அறிவு என்பதற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென உணர்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

    கோயில்களைப் போல பள்ளிகளும் மிகவும் கெட்டித்தட்டிப்போன இறுகிய அமைப்பாக உள்ளது. இதன் உள்ளேயுள்ள கசடுகள், அழுக்குகள் வெளியாருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அமைப்பிற்குள்ளிலிருந்து யாராவது சொன்னால்தான் உண்டு.

    கல்வி குறித்த சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் ஒரு சிலரேனும் கல்வி பற்றித் தொடர்ந்து பேசிவருவது பாராட்டிற்குரியது. சமூக அக்கறை உடைய ஆசிரியர்கள் சிலரின் கல்வி, பள்ளிகள் குறித்த சிந்தனைகள் இந்த அமைப்பைச் சீர்செய்யவும் மறுநிர்மாணம் பண்ணவும் பயன்படலாம். அந்த வகையில் முத்துநிலவன் போன்ற ஆசிரியர்களின் கல்விச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    தமிழாசிரியர், கவிஞர், பேச்சாளார், தமுஎகச. இயக்கவாதி என்ற பல்வேறு அடையாளங்கள் உடைய நா. முத்துநிலவன் தினமணி, தீக்கதிர், ஜனசக்தி போன்ற நாளிதழ்களிலும் இணையப் பக்கங்களிலும் எழுதிய கல்வி குறித்தான 18 கட்டுரைகளை ‘அகரம்’ நேர்த்தியான வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது. அழகான அட்டை ஓவியம் ட்ராஸ்கி மருதுவின் கைவண்ணத்தில்.

     ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ என்கிற தலைப்புக் கட்டுரை “மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60 மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40 மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக் கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது”, (பக். 67) கல்விமுறை மீது விமர்சனத்தைப் பதிவு செய்கிறது.

    “படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கைத் திட்டமிட்டுக் கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரையில் கற்றுக்கொண்டு வா. சாதாரண மதிப்பெண்களோடும், அசாதாரண புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வா மகளே!”, (பக். 68) என்றும் மகளுக்கு அறிவுரை கூறுகிறாள். இப்படியான ஒரு தந்தை அனைத்து மகன்களுக்கும் மகள்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

     கல்லூரிப் படிப்பாவது பரவாயில்லை. 10, 12 வகுப்புப் படிக்கும் மகன்/மகள் அடையும் தேர்வு நெருக்கடிகள் சொற்களால் வடிக்க இயலாதவை. தேர்வுகள், மதிப்பெண்கள் வன்முறை இங்குதான் அதிகம். இதிலிருந்துதான் அவர்களைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்?

     அண்மையில் நடந்த கூட்டத்தில் ஒரு பெண் ஆசிரியர் கீழ்க்கண்ட கருத்தைக் கூறினார். “நமது வீடுகளில்/சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டுள்ளது. பெண் முழந்தைகளை படிக்க வலியுறுத்தாவிட்டாலும், அவர்கள் மிகக் கவனமாக படிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை வற்புறுத்தியும் படிக்கவைக்க இயலுவதில்லை”.

     இது மிக ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய கருத்து. பெண் கல்வியை தன் விடுதலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். கல்வியின் மூலம் உண்மையான விடுதலை சாத்தியமில்லையெனினும் ஓரளவுக்கான விடுதலையைப் பெறமுடிகிறது. ஆதிக்க உலகில் சஞ்சாரிக்கும் ஆணுக்கு அதற்கான தேவையில்லாமற் போய்விடுகிறது.

     கடந்த நூறாண்டுகளில் வெளிப்படையாகத் தெரியும் வளர்ச்சிகள், முன்னேற்றங்கள் ஒருபுறமிருக்க, சாதியம், மூடநம்பிக்கைகள், பெண் பற்றிய பார்வைகள் போன்றவை மிகவும் இறுகிப்போன பழமைவாத மதிப்பீடுகள் மீண்டும் தலைதூக்குகின்றன. இவை புதிய, புதிய வடிவங்களில் நம்மையறியாமல் நமக்குள் ஒளிந்திருக்கின்றன. கலாச்சாரம் பேசும் மத, இன, மொழிவாதிகள் நம்மை இந்தப் புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி, எப்போது மீளப்போகிறோம்?

     பெண்ணுடலைக் கொண்டே இங்கு கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம்/எழுதுகிறோம். பெண் அதிகம் படிக்காமல் இருப்பது நலம்; ஆண் படிப்பது அவசியம் என்பது போன்ற கற்பிதங்களைத் தகர்க்க வேண்டியது உடனடித்தேவை. ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகனே!’ என்றும் சொல்லவேண்டிய தேவையும் கட்டாயமும் இன்றைய சூழலில் இருக்கிறது. தோழர் முத்துநிலவன் அவ்வாறு வேறுபாடு காட்டுபவர் என்று நாம் சொல்ல வரவில்லை. கல்வியில் காட்டப்படும் பாலினப் பாகுபாடுகளின் விளைவுகள் பாரதூரமானவை. இங்கு கொடுமைகள் நடக்கின்றபோது தூக்குத் தண்டனை அனைத்தையும் ஒழித்துவிடும் என்ற புதிய கற்பிதத்தை உற்பத்தி செய்கிறோமே தவிர, உண்மையான தீர்வுகளின் அருகில் செல்வதேயில்லை.

     “ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்? கல்விமுறை, ஆசிரியர், பெற்றோர், ஊடகம், அரசுகள் ஆகிய நாம் எல்லாருந்தானே?”, (பக். 32) என்று கேட்கிறார். இந்நிலை மாற வழிகண்டோமா? தவற்றை உணர்ந்து திருத்திக் கொண்டோமா? இல்லையே! ‘நீதி போதனை’ இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அதனிடம் சரணடைவது பிரச்சினையைத் தீர்க்குமா? அரிச்சந்திரன், கண்ணகி கதைகள் மூலம் கல்வியில் போதிப்பதற்கு ஒன்றுமில்லை. அதை மீள்வாசிப்பு செய்வதே சரியாக இருக்கமுடியும் (பக். 113-118) என்று முத்துநிலவன் எழுதுகிறார். இவை நடக்கத வரையில் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை.

     சமச்சீர் கல்வியின் ஒருபடியாய் இருக்கும் பாடநூற்களை நாம் ஏற்றுக்கொண்டாலும் மிக அவசர கதியில் தயாரிக்கப்பட்ட அவற்றிலுள்ள குறைபாடுகள் களையப்படவேண்டியவை. சமச்சீர் கல்வி மற்றும் பாடநூல்கள் தொடர்பான கட்டுரைகள் இத்திசையில் பயணிக்கின்றன. தமிழ்ப் பாடநூல்களில் தமிழ் படும் பாடுகள், தமிழாசிரியர்களின் தமிழ்நடைப்பிழைகள் என தேவையானதைச் சொல்லும் கட்டுரைகளும் இதன் தொடர்ச்சியாக, தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சிக் குறைபாட்டை அலசும் கட்டுரை ஒன்றும் உண்டு. இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

    கல்வியில் ஜனநாயகம் நிலவ வேண்டியதும், இவற்றிற்கு மாற்றாக இயங்கும் சர்வாதிகாரத் தனியார் பள்ளிகளின் கொடுங்கோன்மையை விளக்கும் கட்டுரைகளும் இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியைத் கொலை/ தற்கொலை செய்துவிட்டு புதுப்புது விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்ய முடியும், இவற்றின் பிடியிலிருந்து நமது குழந்தைகளைக் காக்கும் சமூக அக்கறை இதில் வெளிப்படுவதைக் காணலாம்.

    விண்ணப்பித்து விருது வாங்கும் முறை ஆசியர்களுக்கு அவமானமில்லையா? என்று வினா எழுப்பி, சுயமரியாதை உடையவர்களுக்கு விருது மாணவர்களால் வழங்கப்படுவது மட்டுமே என்று நிருபிக்கும் கட்டுரைகள் சிறியதாக இருப்பினும் ஆழமானவை. (பக். 136, 137)

    9,11 வகுப்புகள் தேவையில்லை என பெற்றோர்களும் தனியார் பள்ளிகளும் செய்த முடிவு தற்போது அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள், அலுவலர்களையும் தொற்றத் தொடங்கியுள்ளது. இவற்றை முறியடிக்கவும், தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தவும் இம்மாதிரியான கல்விச் சிந்தனைகள் பெருகவேண்டும். சிறு துளியாய் இல்லாமல் பேரியக்கமாக மாறவேண்டும் என்பதை இன்றைய சூழல் நம்மை உந்தித் தள்ளுகிறது.



முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

நா. முத்துநிலவன்

வெளியீடு:

அகரம்

முதல்பதிப்பு: ஆகஸ்ட் 2014

இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2016

பக்கம்: 168

விலை: ரூ. 140



தொடர்பு முகவரி:



மனை எண் 01,

நிர்மலா நகர்,

தஞ்சாவூர் – 613007.



தொலைபேசி: 04362 239289.

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

எனது நூலின் சாரத்தை உள்வாங்கி, அருமையாக நூலறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே!
தங்களின் மதிப்புரை நல்ல கல்வியை நோக்கி மேலும் நான்பயணிக்க உதவும் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி, வணக்கம்.

கருத்துரையிடுக