களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான,
சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்
மு.சிவகுருநாதன்
(மத்தியக் கல்வி வாரியத்தால்
(CBSE) அங்கீகரிக்கப்பட்டு நொய்டா ‘மதுபன் எஜுகேஷன்ஸ் புக்ஸ்’ வெளியிட்ட ‘தமிழ் அருவி;
எனும் பெயரிலான தமிழ்ப்பாடநூல்கள் மிக மோசமான புராணக்குப்பைகளைப் பாடமாகக்கொண்டு, வரலாறு, மொழி ஆகியவற்றைத் திரிக்கும்
வேலைகளைச் செய்கின்றன. ‘நாசா வியந்த திருநள்ளாறு’ (4 தமிழ்) என்ற பாடம் இடம்பெற்றுள்ளது.
வரலாறு, மொழி குறித்த பல்வேறு தவறான செய்திகள் இப்பாடநூலில் இடம் பெறுகின்றன. அதுகுறித்து
இதுவரையில் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
அவர்களின் 5 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான பொய்ச் செய்திகள் இடம்பெற்றுள்ளதைக் குறித்த மூன்றாவது கட்டுரை இது. இரண்டு, மூன்று வகுப்புகளில்
பாடநூல்களின் சில செய்திகளும் இங்கு பேசப்படுகின்றன.)
சமூக வலைத்தளங்கள் இல்லாத காலகட்டத்தில்
கைகளால் எழுதியும் அச்சிட்டும் தலபுராணங்களையும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளை
சிலர் வெளியிட்டு வந்தனர். அவை பெரும் மக்கள் திரளைச் சென்றடைந்ததில்லை. தற்போது பல்கிப்
பெருகியுள்ள சமூக ஊடகங்கள் போன்ற இணைய வெளிகளில் இத்தகைய புனைவுகளைப் பரப்புவது மிகவும் எளிதாக உள்ளது. அந்த வகையில் பரப்பப்படும்
இப்பொய்ச் செய்திகள் மீண்டும் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் வெளியிட்டவர்
அல்லது எழுதியவர் பெயர்கள் மற்றும் ஆதாரத்தரவுகள் எதுவும் இருப்பதில்லை.
இம்மாதிரியான புனைவுகள் இன்று பாடநூல்களை ஆக்ரமிக்கத்
தொடங்கியுள்ளன. தமிழக அரசின் பாடநூல்களில் ஒன்றிரண்டு இடம்பெற்று பெருத்த சர்ச்சைகளுக்கு
உள்ளாகியுள்ளது. சிபிஎஸ்இ யால் அங்கீகரிக்கப்பட்ட நொய்டா ‘மதுபன் எஜுகேஷன்ஸ் புக்ஸ்’
வெளியிட்ட ‘தமிழ் அருவி’ யில் நான்காம் வகுப்பில் திருநள்ளாறும், ஐந்தாம் வகுப்பில்
சிதம்பரம் பற்றிய புனைவுகளும் ஆக்ரமித்துள்ளன. இளம்பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சேற்றும்
இக்கொடுமைகள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு இயல் 2 ‘ஆன்மீகத்தில் ஓர் அறிவியல் உரைநடை - சிதம்பர இரகசியம்’
என்னும் பாடம் இருக்கிறது. இப்பாடத்தை சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளி ஆசிரியை
திருமதி பு. லாவண்யா ஶ்ரீதர், D.T.Ed., M.A., B.Ed., M.Phil., எழுதியதாக முன்பக்கம் சொல்கிறது. பல குழுக்கள்
இணைந்து எழுதப்படும் அரசுப்பாடநூல்களில் கூட தவறுகள் இருக்கின்றன. ஒருவரே ஒரு பாடநூலைத் தயாரிப்பது என்பதே ரொம்ப அபத்தமானது.
முதலில் பாடம் முழுதும் பார்த்துவிடுவது நல்லது.
“தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில்,
நடராஜர் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும். இக்கோவிலுக்கு என்று சிறப்பான வரலாறு உள்ளது.
இதில் சிதம்பர் நடராஜர் கோவில் ரகசியமும் ஒன்று.
சிதம்பரம் நடராஜர் கோவில் இரகசியம் என்று பலரும்
பல செய்திகளைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோவிலில் அறிவியல், பொறியியல், புவியியல்,
கணிதவியல், மருத்துவவியல் குறித்த பல ஆச்சரியங்கள் உள்ளன.
நமது முன்னோர்கள் அனைத்துத் துறைகளிலும் பயணித்துள்ளனர்.
அவர்களின் அறிவியல் அறிவு பற்றியும், சிதம்பரம் நடராஜர் பற்றியும் இப்பாடப்பகுதியில்
காண்போம்.
இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின்
பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியில் உள்ளது. பஞ்சபூதக் கோவில்களில் ஆகாயத்தைக்
குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயமும், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயமும், நிலத்தைக்
குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. அதாவது
சரியாக 79 டிகிரியில், 41 நிமிட கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இன்றைய காலக்
கட்ட்த்தின் google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று
பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த துல்லியம் அன்றைக்கே கணிக்கப்பட்டுள்ளது என்பது
மிகபெரிய ஆச்சரியமாகும். ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயமே
இக்கோவிலாகும். மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில்
9 நுழைவுவாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றன.
கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை
21,6000 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்குச் சராசரியாகச்
சுவாசிக்கும் 21,600 தடவையைக் குறிக்கின்றது. (15X60X24=21,600) இந்த 21,600 தகடுகளை
வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில்
இருக்கும் ஒட்டு மொத்த நாடிகளைக் குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின்
பல பாகங்களுக்குச் சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
திருமந்திரத்தில்
“திருமூலர்”
“மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே!” என்று கூறுகிறார்.
அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம்; அதுவே சிதம்பரம்;
அதுவே சதாசிவம்; அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிக்கின்றது.
“பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது.
இது நமது உடலிலுள்ள இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏறவேண்டும்.
இந்தப் படிகள் “பஞ்சாட்சரப்படி” என்று அழைக்கப்படுகின்றன.
இதுவே ‘சி, வா, ய, ந, ம’ என்ற ஐந்து எழுத்து மந்திரம் ஆகும்.
“கனகசபை” பிற கோவில்களில் இருப்பதைப் போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன.
இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன.
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 வழிகளையும்
குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளைக் கொண்டுள்ளன. இது 64 கலைகளைக்
குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல, பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக்
குறிக்கின்றன.
பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான
சக்தியைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும் அர்த்த
மண்டபத்தின் பக்கத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றன. சிதம்பரம்
நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ‘ஆனந்தத் தாண்டவம்’ என்ற கோலம் “cosmic dance” என்று
பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு சிதம்பரம் கோயில் ஓர் ஆன்மீகத் தலமாக மட்டும்
இல்லாமல் பல அறிவியல், கணிதவியல், விண்வெளி இரகசியங்களையும், நம் முன்னோர்களின் அறிவுக்
கூர்மையும், அவர்களின் அனுபவங்களையும் பல்வண்ணத் திறமைகளையும் நாம் அறியக் கூடிய ஒரு
களஞ்சியமாக உள்ளது”. (பக், 34-37)
அறிந்து கொள்க
நடராஜர் - நடனக் கலைகளின் ராஜன் நடனராஜன். இதுவே காலப்போக்கில் மருவி
நடராஜர் என்றானது. (பக்.34)
புதிய கல்விக்கொள்கை ஒருவேளை அமலானால் இம்மாதிரியான
பாடநூல்கள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் என்பதை அவதானிக்கலாம். இதிலுள்ள மூடக்கருத்துகள்
ஒருபுறமிருக்க, எங்கிருந்து களவாடப்பட்டதை முதலில் காண்போம். இப்பாடநூலில் முதல்பதிப்பு
2018 என்று அச்சாகியுள்ளது.
மேற்கண்ட பல்வேறு இணைய இணைப்புகளில் இந்த மூடநம்பிக்கையூட்டும்
பொய்ச்செய்திகள் உள்ளன. இவற்றில் ஆதாரங்களோ, எழுதியவர்கள் பெயர்களோ இருக்காது. இவற்றை
வரிக்குவரி ‘காப்பி’, ‘பேஸ்ட்’ செய்து இப்பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடநூல்
சிபிஎஸ்இ அங்கீரித்தது வியப்பு. இதன்மூலம் அவர்களது தரமும் வெட்ட வெளிச்சமாகின்றது.
இப்பாடத்தில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும்
அறிவு, பகுத்தறிவு, அறிவியல், என எதற்கும் தொடர்பில்லாதது. பக்திச் சொற்பொழியாற்றும்
சிலர் கிளப்பிவிடும் மோசடிகள் இவை. மோடியின் ஆட்சியின் இந்திய அறிவியல் மாநாடுகள் கூட
இம்மாதிரி ‘சர்க்கஸ் கூடாரமாக’ மாறிவிட்டதைக் கண்டு மனம் வெதும்பி, இனி இம்மாநாடுகளுக்கு
வரமாட்டேன் என்று அறிவித்தார் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். பிளாஸ்டிக்
சர்ஜரி (பிள்ளையார்), சோதனைக்குழாய் குழந்தைகள் (கவுரவர்கள்), பிரம்மச்சாரியான ஆண்மயில்
- கண்ணீரால் கர்ப்பமாகும் பெண் மயில், மோடி ஈர்ப்பு அலைகள் என்று கணக்கற்ற பிதற்றல்கள் உண்டு. இவற்றை நாம்
எதோ ஒரிடத்தில் அடிக்கடி கேட்டு வருகிறோம்.
ஆனால் இவை குழந்தைகளுக்கான பாடநூலில் இடம்பெறுவதை எப்படி அனுமதிப்பது? இவற்றுக்கு மத்தியக்
கல்வி வாரியம் அங்கீகாரம் அளிப்பது இன்னும் வெட்கக்கேடான செயல்.
இந்த அபத்தங்களைப் பரப்புரை செய்யும் ஆட்களை
நமது பள்ளிகள் கைநீட்டி அழைத்து உற்சாகப்படுத்துகின்றன. மின்வேதியியலாளர் காந்தி லெனின்
என்பவர் பல பள்ளிகளுக்குச் என்று இவ்வாறு அறிவியல் போர்வையில் பக்தியுரையாற்றி வருகிறார்.
தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாவட்டக் கூட்டத்தில் இடம்பெற்ற அவரது பேச்சுகள் பற்றி நான்
முன்பே எழுதியுள்ளேன். இவரை ‘அப்துல்கலாமின் வாரிசு’ என்று பள்ளிகளில் அறிமுகம் செய்கின்றனர்.
அக்கட்டுரை ‘கல்வி அறம்’ நூலில் இடம்பெற்றுள்ளது. திரு சூரியகுமார் (ஆதலையூர்) என்னும்
சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் இவ்வாறான பக்தி மற்றும் இந்துப் பெருமைப் பரப்புரைகளில்
ஈடுபடுகிறார். ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சியின்போது, இவற்றிற்கெல்லாம் ஆதாரம் உள்ளது
என்று சொன்ன இவர், ஆதாரம் கேட்டபோது, எவ்வித ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இவர்கள் ஆதாரமாக முன்வைப்பது இணையத்தில் வெளியாகும் பொய்த்
தகவல்களன்றி வேறு எதுவுமில்லை. அரசும் ஆதிக்க சக்திகளும் சாதகமாக இருந்தால் இத்தகைய
‘கோயபல்ஸ்’ பரப்புரைகளில் ஈடுபடலாம் என்கின்ற நிலை உருவாகியுள்ளதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.
இன்னும் பல்வேறு அபத்தங்கள் கொண்டதாக இந்தத்
‘தமிழருவி’ப் பாடநூல்கள் இருக்கின்றன.
‘தெரிந்து கொள்வோம்’
என்னும் தலைப்பில் கீழக்கண்ட செய்தி உள்ளது.
“உலகிலேயே மிக பிரம்மாண்டமான விண்வெளி ஆய்வகமான
நாசாவின் வாயிலில் மிகப்பெரிய நடராஜர் சிலை உள்ளது. நடராஜர் ஆன்மீகத்தைத் தாண்டிய ஒரு
அறிவியலாக திகழ்கிறார்”. (பக்.36)
இது முற்றிலும் தவறான செய்தி. அமெரிக்காவின்
வாஷிங்டனில் ‘நாசா’வின் தலைமையகம் அமைந்துள்ளது. CERN ஆய்வுக்கூடம் சுவிட்ஜர்லாந்தின்
ஜெனிவாவிற்கு அருகில் உள்ளது. நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கூடம். CERN ஒரு அணு ஆராய்ச்சிக்
கூடம். இந்தியாவின் அன்பளிப்பாக வந்து சேர்ந்த சிலையை CERN வில் வைத்துள்ளனர். இந்தியச்
சிலைகள் மீது ஐரோப்பியர்களுக்கு உள்ள ஈர்ப்பு உலகறிந்தது. இதன் சந்தை மதிப்பு மிக அதிகம்.
அதனால்தான் இங்கிருந்து சிலைகள் களவாடப்படுகின்றன.
‘தெரிந்து கொள்வோம்’ எனும் தலைப்பில் இன்னொரு
செய்தியும் உள்ளது.
இரகசியத்திற்குப்
பெயர் பெற்ற சிதம்பரம் கோவில் கோபுரத்தில் இந்திய திருநாட்டின் சுதந்திர நாளான ஆகஸ்டு
15 -ஆம் தேதி கிழக்கு வாசல் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும். விடுதலை உணர்வுடன்
கோவிலுக்கு வரும் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவர். (பக்.37)
விடுதலை நாள், குடியரசு நாள் ஆகியவற்றின் போது
எங்கும் தேசியக்கொடியேற்ற அனுமதி உண்டு. அன்று எல்லாரும் விடுதலை உணர்வுடன் இருப்பர்
என்பதில் அய்யமில்லை. இதை கோயிலின் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு
வாயிலை அடைத்திருக்கும் ‘தீண்டாமைச் சுவரை’ முதலில் அகற்றிவிட்டு அனைத்து இந்து மக்களுக்கும்
கோயிலைப் பொதுவாகத் திறந்துவிட்டுவிட்டு, பின்னர் தேசம், விடுதலையுணர்வு பற்றிக் கதைப்பது
நல்லது.
‘தகவல் களஞ்சியம்’ பகுதியில் “‘தமிழ்த்தாத்தா’
என்று, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கின்றோம்.
அதுபோல ‘தமிழ்ப்பாட்டி’ ஔவை ஆவார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள தமிழ்ச் சங்கத்தார்
கோவிலில், தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இறையனார் பக்கத்தில், ஔவையார் அமர்ந்திருப்பது
போன்ற சிலை இடம் பெற்றிருக்கிறது”. (பக்.08)
அப்துல் கலாம் பெற்ற விருதுகளில் ‘1998 – வீர் சவர்கார் விருது’ (பக்.57) சொல்லப்படுகிறது. ‘அறிந்து கொள்க’ பகுதியில்,
A.P.J. அப்துல் கலாம் எனும் தலைப்பில் “வாழ்க்கையில் வெற்றி
பெற வேண்டுமானால், நல்ல நண்பர்கள் தேவை.வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால்,
ஓர் எதிரியாவது தேவை”. (பக்.80) சரி, அப்துல் கலாமின் எதிரி யாராக இருக்கக்கூடும்?
கண்டு சொன்னால், அம்மாதிரி எதிரியைத் தேட வாய்ப்பு கிடைக்குமே!
“நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் புதைந்துள்ளது”.
(பக்.85) எல்லாவற்றையும் அறிவியலுடன்
முடிச்சிடுவது அநியாயம்.
இயல் 6 இல் ‘தமிழரின் கட்டிடக் கலை’ எனும் பாடம்
ஒன்றுள்ளது. அதில் பல்வேறு கோயில்களின் பெருமை பேசப்படுகிறது. இதுவும் சொந்த மொழிநடையில்
எழுதப்பட்டதல்ல; அனைத்து இணையப்பக்கங்களிலிருந்து களவாடப்பட்டதே! மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னால் அவர்கள் ஏதோ
ஒன்றைப் பார்த்து எழுதிவருவர். ஆசிரியர்கள் எழுதும் பாடநூலுக்கும் இதே நிலை என்றால்?
“1000 ஆண்டுகளுக்கு மேலாகப் பல நிலநடுக்கம், இயற்கைச்
சீற்றங்கள் கடந்து இன்னும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சைப் பெரிய கோவிலும், மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலும், காலத்தை வென்ற கல்லணையுமே இதற்குச் சாட்சி”. (பக்.112)
மீத்தேன், அணு உலை, நியூட்ரினோ போன்ற திட்ட
எதிர்ப்புகளின் போது மக்கள் நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று கேட்கின்றனர்.
தமிழகப்பகுதிகளில் நிலநடுக்க அபாயம் இல்லை என்று ஆளும்வர்க்கம் கூசாமல் பொய் பேசுகிறது.
கோயில் பெருமை என்று வந்துவிட்டால் நிலநடுக்கங்களைத் தாண்டி 1000 ஆண்டுகள் நிற்கிறதாம்!
வேலூர் விரிஞ்சிபுரம் – “காலம் காட்டும் கல்” என்னும்
பத்தியில் சொல்லப்படுவன:
“வேலூர்
அருகே “விரிஞ்சிபுரம்” என்ற கோவிலில் “காலம் காட்டும் கல்” இருக்கிறது. அர்த்த சந்திர
வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்தக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின்
மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று நாம் அறிந்து கொள்ளலாம்”. (பக்.113)
இவையனைத்தும் கீழக்கண்ட வலைப்பூ முகவரிலிருந்து
திருடப்பட்டுள்ளது. இந்த வலைப்பூவிலும் இடம் பெறும் கட்டுரைகள், குறிப்புகளை யார் எழுதியது,
எங்கிருந்து எடுக்கப்பட்டது என்கிற எவ்விதத் தகவல்களும் இருக்காது. அது வெறொருவரிடமிருந்து
திருடப்பட்டதாக இருக்கும். இம்மாதிரியான ‘பாசிஸ்ட்’களிடம் ஆதாரங்களை எதிர்பார்க்க முடியுமா?
“அங்கோர் வாட்” கோவிலின் சிறப்பை பல பத்திகளில்
பாடநூல் விண்டுரைக்கிறது. அதில் சிலவற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.
“இரண்டாம் “சூரியவர்மன்” இந்த இடத்தைக் கைப்பற்றியவுடன் இந்தப்
பிரம்மாண்டக் கோவிலைக் கட்டினான்”. (பக்.113,114)
“இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்திக் கட்டினால்கூட, இதுபோன்ற ஒரு கட்டடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு
பொறியாளர் கூறி உள்ளார்”. (பக்.114)
“இந்தக் காலமான 2017 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள
தொழில் நுடபம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இதன் முழு கட்டடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை.
வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு வடிவம்
பதிவாகிறது. உலகிலேயே மிகப்பெரிய கோவில் இதுவே ஆகும். இது தமிழரின் அறிவுக்கு மிகப்பெரிய
சாட்சி ஆகும்”. (பக்.114)
என்ற பக்கத்திலிருந்து
வரிக்கு வரி காப்பியாகியுள்ளது. இது பாடநூலுக்கு அழகா?
“கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையின் நீளம் 1080 அடி; அகலம்
66 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் இன்றைய அறிவியல் ஆய்வை, அன்றே பயன்படுத்திக்
கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்த்துக் கட்டிய அணை. 2000 ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி
வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே”. (பக்.115)
‘அறிந்து கொள்க’ என்னும் பகுதியில்,
“216 அடி உயரமான தஞ்சைப் பெரிய கோவில் வெறும்
12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் ஒரே கல்லால் ஆன 80 டன் (80,000 கிலோ)
எடை கொண்ட உருண்டை வடிவப் பாறை உலகையே வியக்க வைக்கிறது.
தாய்லாந்து நாட்டில் புதிய அரசாட்சி பதவி ஏற்கும்
பொழுது நமது “திருப்பாவையை” முதலில் பாராயணம் செய்த பின்னரே பதவி ஏற்கின்றனர்”. (பக்.116)
இதிலென்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? சடங்குகள் பல்வேறு வடிவங்களில் உண்டு.
அதில் இது ஒன்று; அவ்வளவே! (பாராயணம் என்றால் வேதம் / மந்திரம் ‘ஓதுதல்’ என்று பொருள்.
இது சமஸ்கிருத வேதங்களுக்குச் சொல்வது. இசைத்தல், பாடுதல் என்று சொல்லலாமே! இப்பாடநூல்களில்
தமிழ்ச்சொற்களைவிட பாராயணம், ஆரோக்கியம் போன்ற
பிறமொழிச் சொற்களே அதிகம். இதற்கு ‘தமிழ் அருவி’ எனும் பெயர் மட்டும் புதிர்!
‘மூங்கிலரிசி’ பற்றிப் பாடநூல் பேசுகிறது. பரவாயில்லை.
ஆனால் இதுவும் சொந்தச் சரக்கல்ல; அதுவும் களவாடிய சரக்காக இருப்பது வேதனை தரும் உண்மை.
இயல் 1 இல் ‘ஆரோக்கியமே ஆனந்தம் – உரைநடை’ப் பகுதியில்,
“என்னைப் போன்ற தாத்தா, பாட்டிகள் 90-100 வயது வரை ஆரோக்கியமான
வாழ்வு வாழக் காரணம் இந்தச் சிறுதானியங்களே. அதனால் தான் இன்றும் இதன் அருமையை உணர்ந்து
கோபுரக் கலசத்தில் வைத்துப் பாதுகாக்கின்றனர்”. (பக்.12)
கோபுர கலசத்தில் தானியங்களை வைத்துவிட்டால்,
அல்லது தீயிட்டு பொசுக்கிவிட்டால் போதுமா? இந்துத்துவக் கலாச்சாரத்தைப் பரப்ப ஏன் தமிழ்ப்
பாடநூலைப் பயன்படுத்த வேண்டும்? “மூங்கில் அரிசி பற்றித் தெரியுமா?”, என வினா கேட்டுப்
பதில் சொல்லப்படுகிறது.
“40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மூங்கில்
பூவிற்குள் அரிசி இருக்கும். பார்ப்பதற்குக் கோதுமை போல் இருக்கும்.இது நார்ச்சத்து
மிக்கது. உடலை வலிமையாக்கிச் சர்க்கரை அளவைக் குறைக்கும்”. (பக்.12)
இது ‘வலைத்தமிழ்’ என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
இணைப்பு கீழே உள்ளது.
அதில் இடம்பெறும்
வரிகள் பின்வருமாறு:
“40 வருடங்களுக்கு ஒரு முறை
பூக்கும். மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல்
இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும்.
மூங்கில் அரிசியின் பயன்கள்
: மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவை குறைக்கும். எலும்பை உறுதியாக்கும்.
நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்”.
மூன்றாம் வகுப்பு ‘தமிழ் அருவி’ப் பாடநூலில் ‘நவதானியங்கள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் தானியங்கள்,
பருப்புகள் வேறுபாடுகளே கிடையாதா?
“நெல், கம்பு, பாசிப்பயறு, எள், துவரை, மொச்சை,
கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை” (பக்.22)
“திரிபால -
கடுக்காய். தான்றிக்காய், நெல்லிக்காய்”, (பக்.22)
ஆயுர்வேதம் சொல்லப்படுகிறது. இந்தத் தமிழ்நூலில் தமிழ் மருத்துவ முறையான சித்த
மருத்துவம் குறித்த பேச்சே இல்லை.
‘ஓரறிவு முதல் ஆறறிவு வரை’ எனும்பாடம் தொல்காப்பிய நூற்பா அடிப்படையில்
எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது பற்றிய பேச்சு, மூச்சில்லை. (பக்.54-56) அதற்கும் இதற்கும்
தொடர்பில்லை என்பதுப்போல் பாடம் விலகி நிற்ற்கிறது.
‘பாடம் 14 இல் முத்துலெட்சுமி ரெட்டி வாழ்க்கை
வரலாறு அறிமுகம் செய்யப்படுகிறது.
“அந்தப் பெண் குழந்தை பிறக்கும் போதே ஆரோக்கியம்
இல்லாமல் பிறந்தது. எப்போதும் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தது. அதனால் அந்தக் குழந்தை
மெலிந்தே இருந்தது. இதோடு கடுமையான சளியும் சேர்ந்து கொண்டது. பள்ளியில் படித்தப் போது
கிட்டப் பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் அவசியம் அந்தப் பெண்ணுக்கு வந்தது. மருத்துவம்
படிக்கப் போனார். அப்போது ஆஸ்துமா ஏற்பட்டது. பல இரவுகளில் மூச்சு முட்டி அவரால் தூங்க
முடியாத நிலைக்கு ஆளானார். ஆச்துமாவில் இருந்து மீள முடியவில்லை.
அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகியது. மூத்த மகன்
பிறந்தான். அந்தப் பையனுக்குக் கக்குவான் இருமல் பாதிப்பு அதிகம் இருந்தது. இரண்டாவது
குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. அந்தப் பெண்ணின் முதல் தங்கையும் சிறு வயதில் அம்மை
நோயின் பாதிப்புக்கு உள்ளானார். இரண்டாவது தங்கை, திருமணம் செய்து வைத்த சில ஆண்டுகளில்
புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். “மனிதனை ஆட்டிப் படைக்கும் இந்தக் கொடிய நோய்க்குத்
தீர்வு தேடுவதில் முயற்சி எடுப்பேன்” என்று சபதம் எடுத்தார் அந்தப்பெண்.
“குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்க்கையில் நான்
ஆரோக்கியமாக இருந்ததே இல்லை” என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்ட அந்தப் பெண்தான் மருத்துவம்
படித்த முதல் இந்தியப் பெண் முத்துலெட்சுமி ரெட்டி ஆவார்”. (பக்.73,74)
மருத்துவம் படிக்கும் முன்பு, பின்பு நடந்த நிகழ்வுகளை
ஒன்றாகக் கலைத்துப்போட்டு குழப்புகிறது. தெளிவான சிந்தனை, பகுத்தறிவு வேண்டாம் என்பதே
இப்பாடநூலின் பொது நோக்கமாக உள்ளது. எனவே இங்கு வினா எழுப்புவதை முற்றாக மறுத்து ஏதோ
ஒன்றை மட்டும் தொடர்ந்து திணிக்க முயல்கிறது. மேலும்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சமூக சீர்திருத்தப்பணிகள் (தேவதாசி ஒழிப்பு), அரசியல்
பணிகள் (சட்டமேலவை) ஆகியவற்றை முற்றாக மவுனத்தில் கடக்கிறது பாடநூல்.
‘தமிழ் அருவி’ இரண்டாம் வகுப்புப் பாடநூல் சிதம்பரம்
ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளி ஆசிரியை செல்வி நா. தீபா, M.A., M.Phil., அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
‘இயற்கை’ எனும் பாடல் ஒன்றில், “இறைவன் கொடுத்த வளங்களிலே இயற்கை வளமே சிறந்ததுவாம்”,
(பக்.07) எங்கும் அவர்களது கருத்துத் திணிப்பே தொடர்கிறது.
பாடம் 02 ‘நமது கடமைகளி’ல், “முதலில் காலை எழுந்தவுடன் உங்களின் பெற்றோரை மதித்து வணங்குதல்
வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வார்த்தைகளை உணர்ந்து தெய்வத்திற்கு முதன்மையான
குருவை (ஆசிரியர்) மதித்தல் வேண்டும்”. (பக்.12)
‘இஸ்ரோ’ கே. கஸ்தூரிரங்கன் வகையறாக்கள் பரிந்துரைக்கும்
பாடம் இப்படித்தான் இருக்கும் என்று நம்பலாம். கூடவே பள்ளியையும் குருகுலமாக்கிட்டால்
போச்சு!
பாடம் 07 ஒளவையாரின் கொன்றைவேந்தன் “அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, (பக்.29)
பாடம் 16 ‘உறவுகள்’ “கடவுள் பூமிக்கு வந்தாராம்!
நாடகம் ஒன்றை செய்தாராம்”, (பக்.61)
பாடம் 23 ‘இருமடங்குகளை அறிவோம்’ “இரண்டும் இரண்டும்
நான்கு, வேதங்களோ நான்கு”, (பக். 83)
என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழல்லாதவற்றையும், இந்து மதத்தைப் பற்றிப்
பேசுவதே இப்பாடநூலின் சிறப்பாகும்! அவ்வளவு வெளிப்படையான மதப் பரப்புரைப் பாடநூலாக
இது இருக்கிறது. பேசாமல் பாடநூலின் பெயரை ‘இந்து அருவி’ என மாற்றிவிடலாம்.
“மாநிலங்களின் பெயர்களை வாய்விட்டு கூறுக”, என்னும்
தலைப்பில் கீழக்காணும் பட்டியல் உள்ளது.
- ஆந்திரா
- கேரளா
- கர்நாடகம்
- ராஜஸ்தான்
- குஜராத்
- மும்பை
- டெல்லி
- ஒரிசா
- கோவா
- பஞ்சாப் (பக்.88)
இவற்றில் மும்பை, டெல்லி இரண்டும் மாநிலமல்ல;
மும்பை மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர். டெல்லி தேசியத் தலைநகர் மற்றும் யூனியன் பிரதேசம்.
இப்பாடநூல்
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழிப் பாடநூலாகும். தமிழ்நாட்டிலுள்ள
நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இ பள்ளிகளில் இப்பாடநூல் பின்பற்றப்படுகிறது. 4 மற்றும் 5 ஆம்
வகுப்புப் பாடநூல்கள் மிக மோசமாக உள்ளது. 6 - 8 பாடநூல்கள் எப்படியிருக்குமோ என்கிற
அச்சம் மேலெழுகிறது. இப்பள்ளிகளில் நன்கு படித்த, பொருளாதாரத்தில் உயர்ந்த, நடுத்தர
வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயிலுகின்றனர். இம்மாதிரியான பாடநூல்கள்
பற்றி அவர்களது பெற்றோரின் கருத்துகள் என்ன? தங்கள் குழந்தைகள் என்ன மாதிரியான கல்வி
பெறுகிறார்கள் என்கிற அக்கறை அவர்களுக்கு இருக்கிறதா என்ற அய்யமேற்படுகிறது. மேற்பூச்சுகளை
நம்பி மோசம் போவதை என்ன சொல்வது?
“படிச்சவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோன்னு
போவான்” என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.
இதை அனுமதிக்கும் அனைத்து தரப்பிற்கு இந்த வசைமொழி பொருந்தும்.
முந்தைய கட்டுரைகளின்
இணைப்புகள்:
தனியார் பாடநூல்
சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்
புராணக் குப்பைகளைப்
பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்றும் கொடுமை