ஞாயிறு, மே 31, 2020

பாசிசத்தை எதிர்கொள்ளத் தேவையான மொழி


பாசிசத்தை எதிர்கொள்ளத் தேவையான மொழி 

(நூலறிமுகம்… தொடர்: 045)


 மு.சிவகுருநாதன்  


(புதிய ஜனநாயகம் வெளியிட்ட   கார்ப்பரேட் – காவி பாசிசம்’
என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்த பதிவு.)




     உலகம் கார்ப்பரேட் பாசிசத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதற்கு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று பெயர்கள் சொல்லப்பட்டாலும் இதற்குள் ஒளிந்திருப்பது பாசிசமே. இந்தியச் சூழலில் இடதுசாரிகள் கார்ப்பரேட் பாசிசத்துடன் கூடவே காவிப் பாசிசத்துடனையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்களில் நமது ஆயுதங்களை எதிரிகளே முடிவு செய்கிறார்கள் என்பதைப் போல நமது மொழியையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். கடும் போராட்டங்களுக்கு மத்தியிலும் அனல் சொற்களுடனும் அவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சற்று மோசமானதுதான். நம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்? 

    புதிய ஜனநாயகம் குழுவினர் (மகஇக, மக்கள் அதிகாரம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையம்) கார்ப்பரேட் – காவிப் பாசிசத்திற்கெதிராக எழுதிய 29 கட்டுரைகளில் 9 தலைப்பாக இந்நூலில் தொகுத்துள்ளனர். வினவு இணையதளத்திலுள்ள (www.vinavu.com) 77 கட்டுரைகளில் தலைப்புகள் பிற்சேர்க்கையில் தரப்படுகின்றன. 

  தனியார் மயத்திற்கு கார்ப்பரேட் முதலாளிகளின் சேவையாளர்களாக மாறியுள்ள மோடி அரசைப் பாதுகாக்க   ஆர்.எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டு திசை திருப்பும் உத்திகளைப் பயன்படுத்தும். “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குதல், ராமன் கோவில், வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல், பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளைக் கிளறுவதன் மூலம் கிளப்பப்படும் காவிப் புழுதி, மோடியின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை மறைக்கப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்குப் பயன்படும்”, (பக்.19) ஜூன் 2014 இல் எழுதியதுதான் இன்றும் நடக்கிறது. 

    சுரங்கங்கள், தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட்டுகளுக்காக பல லட்சம் ஹெக்டேர் நிலங்களும் காடுகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சூழலியல் பாதுகாப்பு விதிகள், சட்டங்கள் ஒவ்வொன்றையும் ஒழித்துக் கட்டத் தொடங்கியிருக்கும் மோடியின் ‘வளர்ச்சி’ அரசியலின் முதல் பலியாக சுற்றுச்சூழல் உள்ளது. (பக்.20)

     நவம்பர் 8 இரவில் 500 1,000 செல்லாது என மோடி அறிவிக்க அடுத்த நாள் தினசரிகளில் மோடி படத்துடன் Pay tm சீன கம்பெணியின் விளம்பரம் வருகிறது. 4 ஜி, ஆதார் எல்லாம் மக்களை கண்காணிக்கும் சாதனங்களே. நந்தன் நிலேகனி, ரிலையன்ஸ் ஜியோ, மோடி போன்றவர்களின் டிஜிட்டல் இந்தியா அலது டிஜிட்டல் பாசிசம் என்பதைத் தெளிவாக வரையறுக்கிறது. (பக்.31)

     நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திருட்டு, ஒரே தேசம், ஒரே பண்பாடு என்ற பாசிசக் கொள்கையை சுமந்துவரும் சரக்கு மற்றும் சேவை வரி, 13 பேரை சுட்டுக்கொன்று, நவீன ஜாலியன் வாலாபாக்கை முடித்து மீண்டும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் ‘வளர்ச்சி’க் கொள்கை, தொழிற்சங்க உரிமை கேட்டதற்கு 13 தொழிலாளிகளை தூக்கிலிடச் சொல்லும் பா.ஜ.க. என கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாள் படையாக மோடி அரசு செயல்படுவது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

    பொதுத்துறை வங்கிகளைக் கொள்ளையிட்டும் தனியாருக்குத் தாரை வார்க்கும் நரேந்திரமோடி எப்படி காவலாளியாக இருக்க முடியுமென்பது இயல்பான கேள்வி. ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகளைப் போல விளைநிலங்களைக் கார்ப்பரேட்களுக்கு கையகப்படுத்துவதும் நிலக் கொள்ளையை விவரிக்கிறது மற்றொரு கட்டுரை. 

   புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் 9 தனியார் கம்பெனிகளுடன் பெயருக்கு இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் என்ற பொதுத்துறை நிறுவனத்தையும் இணைத்து ஏமாற்று வேலைகளில் இறங்கியுள்ளனர். இனி விவசாயிகளின் பாதுகாப்பு கார்ப்பரேட்கள் கைகளில்; அரசுக்கு எவ்வித தொடர்புமில்லை. சந்தைகளில் விவசாயிகளுக்கு ஆதாரவிலையை உத்தரவாதப்படுத்த வேண்டிய மத்திய அரசு டிஜிட்டல் மய போட்டிகளில் விவசாயிகளே ஆதாயம் பார்த்துக்கொள்ள வேண்டுமென தனது பொறுப்புகளைக் கைவிடுகிறது. 

    கல்விப்புலம் கார்ப்பரேட் – காவிமயமாதலை இத்தலைப்பிலுள்ள 4 கட்டுரைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன. உலக வர்த்தக அமைப்பின் ‘காட்ஸ்’ ஒப்பந்தம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றின் வாயிலாக கல்வியை முற்றாக தனியார் மயமாக்கவும் காவிமயமாக்கவும் அதி விரைவான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. “புதிய கல்விக் கொள்கை மாணவர் – ஆசிரியர் – கல்வி நிறுவனம் என்ற கட்டமைப்பைத் தகர்த்து, அதற்குப் பதிலாக ‘மூக்ஸ்’ (Massive Online Open Course) எனப்படும் மாபெரும் திறந்தவெளி இணையப் பாடத்திட்டங்களை முன்வைக்கிறது”, (பக்.85) இது இன்றைய ‘கொரோனா’ சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எளிதில் நம்முள் நுழைக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். 

   அனிதாக்கள், ரோகித் வெமுலாக்கள் (தற்)கொலைகள் இன்றைய கல்வியை ஆட்டுவிக்கும் பாசிச அரசுகளின் கோர முகத்தை நமக்குக் காட்டுகின்றன. மருந்துவம், பொறியியல், உயர் படிப்புகள் மட்டுமல்ல; வருங்காலத்தில் கலை அறிவியல் கல்லூரிகளிலும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு இடமிருக்காது. காவிப் பாசிசத்தின் வருணாஸ்ரமக் கொடுங்கரங்கள் கல்வியை விழுங்கிக் கொண்டுள்ளன. 

    ஆர்.எஸ்,.எஸ். ‘ஷாகா’ விற்குப் பதிலாக இன்று யோகா முன்வைக்கப்படுகிறது.  பரத நாட்டியத்தைக் கைப்பற்றியதைப் போன்று ‘சர்வதேச யோகா தின’க் கொண்டாட்டங்களின் கூத்து நடக்கிறது. இதன் பின்னாலும் சங்க் பரிவார் கார்ப்பரேட் சாமியார்களின் கூட்டம் இருக்கிறது. உண்மையில் யோகாவிற்கும் வேத பார்ப்பனிய மரபிற்கும் யாதொரு தொடர்புமில்லை. இது அவைதீகம் சார்ந்த ஒன்று. இதைத் திருடி தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள் இவற்றையும் சந்தைப்படுத்தவே முனைகின்றனர். 

   மாட்டுக்கறி உண்ணும் கலாச்சாரத்தைத் தொடங்கியவர்கள் பிராமணர்களே என்பதை வேதங்களும் அது தொடர்பான ஆய்வுகளும் காட்டும். சமண, பவுத்த, ஆசீவக மரபான கொல்லாமை, ஊன் உண்ணாமைக் கொள்கையை பசுவின் மீது ஏற்றி மதவெறுப்பு சொல்லாடல்களை வளர்த்து வருகின்றனர். உண்மையில் இவர்களுக்கு பசுவின் மீதோ, விவசாயிகள் மீதோ அக்கறை இல்லை. இங்கு மாட்டுக்கறி பெருவணிகர்கள் யார்? எல்லாம் வியாபாரமாக்குவதுதான் சங்கிகள் பேசும் ‘சுதேசியம்’’ இது  உண்மையில் விதேசியமே! 

    ஆண்டாள் சர்ச்சையில் ஜீயர், ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரது ஆபாச, வக்கிர, வன்முறைப் பேச்சுகளை மறைந்த பத்தரிக்கையாளர் ஞாநி, காலச்சுவடு போன்ற ‘பின்வரிசை’ சித்தாந்திகளின் எதிர்வினையை ‘பார்ப்பனப் பொறுக்கிகள்’ என்ற கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது. (பக்.121-127) 

    தென்னிந்தியக் கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என்று பெருந்தன்மையுடன் சொன்ன தருண் விஜயை மேற்கோள் காட்டி, இந்தக் காவிக் காட்டுமிராண்டிகள், பிணந்தின்னிகளுடன் மனிதர்களாகிய நாம் எப்படி சேர்ந்து வாழ இயலும்? என்று கேள்வி எழுப்புகிறது, பசுவை வாங்கி வந்ததற்காக பெஹ்லு கான் கொலை செய்யப்பட்டது குறித்த கட்டுரை.  (பக்.135) 

    கல்புர்கி, கோவிந்த பன்சாரே, தபோல்கர் கொலைகளைப் போன்று பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற பத்தரிக்கையாளர் கௌரி லங்கேஷின் கொலை என கிரிமினல்களின் கூடாரமாக இந்துத்துவச் சக்திகள் வளர்ந்துள்ளதை எடுத்துக் காட்டப்படுகிறது. குஜராத் சோராபுதின் போலி மோதல் படுகொலை வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் எழுப்பும் கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. நீதிபதிக்குக் கூட நீதி வழங்க நீதிமன்றங்களால் இயலவில்லை. பாசிசம் எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. 

     ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஆர்.எஸ்.எஸ். கும்பலையும் அவர்களது தேசபக்தி வேடத்தையும் கலைக்கிறது ஒரு கட்டுரை. இத்தகைய கொடிய வன்முறைகளில் தனிநபர்கள் ஈடுபடும்போது அதற்கு உளவியல் காரணங்கள் சொல்லப்படும். ஆனால், ஓர் அமைப்பு, ஒரு சமூகம் இத்தகைய வன்முறையைக் கைகளில் எடுக்கும் பாசிசத்தை கடுமையான மொழிகளில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

    கவுதம் நவ்லாக்கா, ஆனந்த் டெல்தும்டே, கவிஞர் வரவரராவ் போன்ற சிவில் உரிமைச் செயல்பாட்டாளர்களை சிறையிலடைத்து பழி தீர்க்கிறது இந்த பாசிச மோடி அரசு. நீதிமன்றங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகைய நடவடிக்களுக்கு உதவுகின்றன. கவுதம் நவ்லாக்கா, ஆனந்த் டெல்தும்டே போன்றோரது பிணையை ரத்து செய்து அம்பேத்கர் பிறந்த நாளில் கைது செய்யும் உச்சநீதிமன்றம், கோவை தீண்டாமைச் சுவரால் 17 பேரை கொன்ற குற்றவாளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை அளித்தது சரியானதே என்று வாதிடுகிறது. இதைத்தான் நீதிமன்றங்களை நம்பியிருக்கும் அப்பாவி மக்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. 

   “அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து, என்று தொடங்கி இப்போது, தான் கோரிய வண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்குக் கட்டுப்பட மறுக்கும் சி.பி.ஐ. தலைமை, தொந்தரவு கொடுக்கும் தகவல் ஆணையம், இந்துக்களின் உனர்வை மதிக்காத நீதிமன்றம், பிறகு எதிர்க்கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை’த் ‘தேசத்தின் எதிரி’யாகச் சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருப்பதை”, (பக்.177) சரியாகவே இனங் காண்கிறது ஒரு கட்டுரை. 

    பிர்லா, சஹாரா போன்ற கார்ப்பரேட் நிறுவன ஆவணங்களிலிருந்து, நடந்த முறைகேடுகளை மூடிமறைக்க சி.பி.அய்., உச்சநீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு ஆணையம், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்பதுதான் இந்த பாசிச ஆட்சியின் அவலமாகப் பார்க்க வேண்டியுள்ளது. (பக்.186)

     ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஒரு குமாரசாமிதான் இருந்தார். ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் என தீர்ப்பை விமர்சிக்கிறது. (பக்.194)

    “கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது”, (பக்.12) என்று முன்னுரை சொல்கிறது. 

    ‘எந்த நிறுவனத்தையும் நம்ப முடியவில்லை’ என்ற கையறு நிலையில் நின்று தேர்தல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறாகள். ‘இந்துத்துவ பாசிசத்தின் மீதான பயம்’ என்பது ஜிக்னேஷ் மேவானி கூறுவதைப்போல மக்களிடம் மட்டும் நிலவவில்லை. மக்களைக் காட்டிலும் அந்தப் பயம் தேர்தல் கட்சிகளைத்தான் அதிகமாகமாகப் பிடித்தாட்டுகிறது”, (பக்.201)

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசும் கப்பற்கடையும் கைவிரித்த நிலையில் மீனவர்களே படகுகளையும் காணமற்போன மீனவர்களையும் தேடும் நிலை ஏற்பட்டது. “விமானமும், ஹெலிகாப்டரும், கப்பல்களும் இந்த மீனவர்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருந்திருந்தால், மேலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்”, (பக்.2020), உண்மைதான். கப்பல் படை பயன்படாது என்று முடிவு செய்த மீனவர்கள் தங்களைத் தாங்களே மீட்டுகொண்டார்கள்.

   எனவே, “தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க முடியுமா”, என்ற ஐயமும் இதைப் போன்றதுதான்”, (பக்.203) என
    “Be Realistic, Demand the Impossible!” என்ற 1968 இல் நடந்த பிரெஞ்ச்க் கிளர்ச்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள் எழுப்பிய முழக்கம் எடுத்துக்காட்டப்படுகிறது.

     இது இன்றைய நிலைமைகளை உணர்வதாக இல்லை. பாசிசம் முன்பைவிட வலுவாக உள்ளது. அரசு எந்திரமும் காவல்துறை, துணை ராணுவம், ராணுவம் என அதன்  பலம் பலமடங்கு கூடியுள்ளது. மெரினா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டங்களின் முடிவு எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதையும் உணர்தல் அவசியம். ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று அமைதிவழிகளைத் தேர்வு செய்யும்போதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. இதைச் செய்வது ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் அல்ல; ஜனநாயக ஆட்சி செய்யும் நவ பாசிஸ்ட்கள்; கூடவே கார்ப்பரேட்கள் கரம் கோர்க்கிறார்கள். எனவே வழமையான சூத்திரங்கள் இத்தகைய பாசிசத்தை எதிர்கொள்ளப் போதுமானவை அல்ல; இன்றைய நிலையில் பரப்புரைகள் வழியாக மக்களை விழிப்புணர்வும் அரசியல் மயப்படுத்துவதும் ஒரு உத்தி என்றே கொள்ளலாம். அந்த வகையில் இந்த நூலுக்கும் இடமுண்டு. 

நூல் விவரங்கள்:

கார்ப்பரேட் – காவி பாசிசம்

புதிய ஜனநாயகம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

வெளியீடு: 

புதிய ஜனநாயகம்

முதல் பதிப்பு: மார்ச் 2019
பக்கங்கள்: 208
விலை: 100 (மக்கள் பதிப்பு)

 தொடர்பு முகவரி: 

 புதிய ஜனநாயகம்,
110, இரண்டாவது தளம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை – 600041.

அலைபேசி: 9444632561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்,       திருவாரூர் 

முகநூல்: முனியப்பன் சிவகுருநாதன்


வலைப்பூ: மு.சிவகுருநாதன்


வலைப்பூ: பன்மை


twitter 


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
அலைபேசி:    9842402010

இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!


இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!

(நூலறிமுகம்… தொடர்: 044)


 மு.சிவகுருநாதன்  


(ரோமுலஸ் விடேகர் எழுதி,  ஓ. ஹென்றி பிராசின்ஸ் மொழிபெயர்த்த,  இந்தியப் பாம்புகள்’ என்ற நூல் குறித்த பதிவு.)



     பாம்புகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளும் புனைவுகளும் சமூகத்தில் அதிகம். அதை அகற்றாமல் பாம்புகளை பாதுகாக்க இயலாது. ச.முகமது அலி எழுதிய  'பாம்பு என்றால்?' என்ற நூல் தமிழில் குறிப்பிடத்தக்க ஒன்று. பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை டிசம்பர் 2008 இல் வெளியிட்ட இந்நூல் குறித்த அறிமுகத்தை பின்வரும் இணைப்பில் காணலாம்.


   கல்விக்காக 1951 இல் சென்னை வந்த ரோமுலஸ் விடேகர் 1969 இல் சென்னை பாம்புப் பண்ணையையும் 1974 இல் சென்னை முதலைப் பண்ணையையும் தொடங்கினார். இவரது Common Indian Snakes: A Field Guide (1978), Snakes of India (2004), Lizards (2006)  ஆகிய நூல் சிறப்பானவை. இவற்றில் ‘Common Indian Snakes: A Field Guide’ என்ற நூலின் ஓ.ஹென்றி பிரான்சிஸ் தமிழாக்கத்தை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. இது இந்தியப் பாம்புகள் பற்றிய ஒரு பொதுவான வழிகாட்டி நூலாகும். வண்ண, கருப்பு, வெள்ளைப் படங்களும் இந்நூலில் உண்டு. 

  • பாம்புகளைக் கொன்றுவிட்டால் அதன் இணை பழிவாங்கும்.
  • கண்ணைக் கொத்தும்.
  • பாம்பு பால் குடிக்கும்.
  •  இசைக்கேற்ப நடனமாடும்.
  • பாம்புத்தலையில் ‘நாகமணி’ உள்ளது.
  •  உழவன் பாம்பு தொழுநோயை உண்டுபண்ணும்.
  • கொம்பேறி மூர்க்கன் கடிபட்டவனின் பிணம் எரிவதைப் பார்க்கும்.
  •  வளையம் போன்ற உடலமைப்பு கொண்ட பாம்பு தீண்டினால் உடலில் கட்டுக்கள் தோன்றும்.
  • நாகப்பாம்பும் சாரைப்பாம்பும் இனச்சேர்க்கை செய்யும்.
  • வால் மொட்டையாக இருப்பதால் இருதலைப் பாம்பு, (பக்.103-106)

            என்பது போன்ற மூடநம்பிக்கைகள் ஏராளம். நச்சுப் பாம்புக்கடிக்கு மந்திரம் ஓதுதல், மூலிகை வைத்தியம், தொலைபேசி சிகிச்சை என பல உள்ளன. இதெல்லாம் பயனளிப்பவை அல்ல. பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதால் இம்முறைகளினால் கடிபட்டோர் உயிர் பிழைத்திருக்கலாமே தவிர இந்த வைத்திய முறைகளால் அல்ல என்பதை மக்கள் சமூகம் முதலில் உணரவேண்டும். 


   இந்தியாவில் காணப்படும் நஞ்சற்ற 20 வகையான பாம்பினங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்திய மலைப் பாம்பு, சாதாரண உழவன் பாம்பு, இருதலை மணியன், பச்சைத் தண்ணீர் பாம்பு, சாரைப் பாம்பு, கொம்பேறி மூர்க்கன், கண்கொத்திப் பாம்பு போன்றவை அவற்றுள் சிலவாகும்.

   இந்தியாவில் நான்கு வகையினத்தைச் சேர்ந்த பாம்புகளே நஞ்சானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் சில (10) இந்நூலில் விளக்கப்படுகின்றன. 

  • கட்டுவிரியன் (சாதாரண  கட்டுவிரியன், பட்டைக்  கட்டுவிரியன்)
  • இந்திய நாகம் (ஒற்றைச் சக்கர, இரட்டைச் சக்கர இந்திய நாகம், ராஜநாகம்)
  • நாணற்குச்சி பவளப்பாம்பு
  • வலைக் கடியன் கடற்பாம்பு
  • விரியன் (கண்ணாடி, புல், சுருட்டை விரியன்)  

  
    நஞ்சுப் பாம்பின் கடிக்கு ‘நஞ்சுமுறி மருந்து’ ஒன்றே தீர்வாகும். மும்பையிலுள்ள ஹாஃப்கின் நிறுவனம் குதிரைகளில் உடலில் நான்கு நச்சுப் பாம்புகளின் நீர்த்த நஞ்சை மெதுவாக செலுத்தி, அதன் உடலில் குறிப்பிட்ட அளவு எதிர்ப்பு சக்தி உருவானதும், அதிலிருந்து ரத்தத்தை வெளியேற்றி ஊநீரைப் பிரித்து உறைநிலையில் காயவைக்கப்பட்டு, 10 மி.லி. குப்பிகளில் அடைக்கப்பட்டு இந்தியாவிலுள்ள நான்கு பெரும் நச்சுப்பாம்புகளின் கடிக்கு அருமருந்தாக திகழ்வது விளக்கப்படுகிறது. (பக்.113) 

  பாம்பு பற்றிய குறிப்புகள், பாம்புக்கடியின் அறிகுறிகள், முதலுதவி சிகிச்சைகள் விளக்கப்படுகின்றன. இந்தியாவில் தென்படும் பாம்புகளின் பட்டியல், வட்டார வழக்கில் பாம்புகளின் பெயர்கள், பாம்புகளை அடையாளம் காணும் குறிப்புகள், குறிப்பாக நஞ்சுப்பாம்புகளை இனங்காணும் ஆறு வழிமுறைகள், கலைச்சொற்கள் என விரிவான தகவல்கள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. பாம்புகளைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் சூழலியல் ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இந்நூல் அமையும்.

நூல் விவரங்கள்:

 இந்தியப் பாம்புகள்

ஒரு வழிகாட்டி நூல்

 ரோமுலஸ் விடேகர் 

(தமிழில்)  ஓ. ஹென்றி பிராசின்ஸ்  

முதல் பதிப்பு: 1999
மூன்றாம் பதிப்பு: 2011

பக்கங்கள்: 168
விலை: 60

 வெளியீடு: 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

இயக்குநர்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,
நேரு பவன்,
5 இன்ஸ்டிடியூஷனல் ஏரியா,
பேஸ் II, வஸந்த குஞ்ச்,
புதுதில்லி – 110070.

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்,       திருவாரூர் 

முகநூல்: முனியப்பன் சிவகுருநாதன்


வலைப்பூ: மு.சிவகுருநாதன்


வலைப்பூ: பன்மை


twitter 


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
அலைபேசி:    9842402010