சமச்சீர் கல்வியில் ஜெ.ஜெயலலிதாவின் வீண் பிடிவாதம்.
-மு.சிவகுருநாதன்
மு.கருணாநிதியைப்போல ஜெ.ஜெயலலிதாவும் பழைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இக்கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய,சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்க,திருத்த,சேர்க்க சென்னைஉயர்நீதிமன்றம்அனுமதியளித்திருக்கிறது.
அதைச் செய்வதை விட்டுவிட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்பதெல்லாம் அரசுப்பணத்தை வீணடிக்கச் செயலாகவே அமையும்.
மெட்ரிக் பள்ளிகள் மீது இவ்வளவு கரிசனம் கொள்ளும் முதல்வர் அடித்தட்டு குழந்தைகளின் கல்விபற்றி துளியும் கவலைப்படாமல் இருப்பதேன்? இவர்களும் ஏற்கனவே பாடநூற்களில் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களே என்பது அக்காலத்திய பாடநூற்களை எடுத்துப் பார்த்தால் எளிதில் விளங்கும்.
இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பாடங்கள் தரமற்றவை என்று சொல்லிவிட்டு 2003 இல் வெளியிட்ட அரதபழசான, பிழைகள் மலிந்த ஒரு பாடத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதை பாசிச மனோபாவமாகத்தான் அவதானிக்கமுடியும். எனவே இவர்களின் தரம் பற்றிய பேச்சு கேலிக்கூத்தாக உள்ளது.
சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கு முன்பே உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் இந்த மேல்முறையீட்டிற்கும் அதே நிலைதான் ஏற்படும் என்று நம்புவோம்.
இனி சமச்சீர் கல்வி இடைக்கால தடை மேல்முறையீடு பற்றிய செய்திகள் :
சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கொண்ட அமர்வு, தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். 2011-12ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர்.
அப்போது நீதிமன்ற தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைத்த பின்பு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும் பள்ளிகள் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அரசு வழக்கறிஞர்களுடன் டெல்லி விரைந்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால அமர்வில் மேல்முறையீடு செய்து 15ஆம் தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து டெல்லி சென்றார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் அங்குள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசின் மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது நாளை விசாரணைக்கு வருமா? என்பது தெரியவில்லை.
இதனிடையே தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து கடலூரை சேர்ந்த மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேஷ், மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை சங்கத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சமச்சீர் வழக்கில் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதன் மூலம் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க முடியும்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் கடந்தாண்டின் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நாளை முதல் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணிகள் தொடங்கும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:- WEB DUNIA-தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக