செவ்வாய், ஜூன் 07, 2011

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கருணாநிதியிடம் பேசியபிறகு தி.மு.க.போராட்டமாம்!

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கருணாநிதியிடம் பேசியபிறகு தி.மு.க.போராட்டமாம்!   
                                                            -மு.சிவகுருநாதன் 
         சமச்சீர் கல்விக்கு ஆதரவான  நீதிமன்ற வழக்குகளை முறியடிக்கவேசமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட முன் வடிவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இனி நீதிமன்றங்கள் இதில் தலையிட வாய்ப்பில்லாமல் போகும். 

        சட்டமன்றத்தில் இதனை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்த தி.மு.க.சட்டமன்றக்கட்சித்தலைவர் மு.கருணாநிதியிடம் பேசியபிறகு போராட்டம்  பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இதற்கு என்ன உயர்நிலை செயல்திட்டக் குழுவையா கூட்டபோகிறார்கள்!

         மு.கருணாநிதி இதற்கு போராட்டம் நடத்துவது குறித்துக் கேட்டால் என்ன சொல்வார்? போராட்டம் நடத்தினால்  கனிமொழியை விடுதலை செய்துவிடுவார்களா என்றுதான் கேட்பார்.

          அந்த அளவிற்கு பிள்ளைப்பாசம் அவர் கண்களை மறைக்கிறது. நாடு,மக்கள்(தன்  மக்கள் அல்ல;பொதுமக்கள்),குழந்தைகள்,கல்வி பற்றியெல்லாம் கவலைப்பட அவருக்கு நேரமேது? 

           புதிய தலைமைச்செயலகக்கட்டிட மீன்கள் மீது வைத்த அன்பில் கொஞ்சமேனும் நாட்டின் மீது வைத்திருந்தால்  இந்நிலை வந்திருக்காது.இவர்களை இனியும் நம்பிப் பலனில்லை;மக்கள்தான் இனி போராடவேண்டும்; வேறு வழியில்லை.

        முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரா.கல்யாணி,அ.மார்க்ஸ் ,பேரா.வசந்திதேவி ஆகிய கல்வியாளர்கள் சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக சொன்னார்.இப்போது மட்டும் இவர்களை துணைக்கழைக்கும் அமைச்சர் இதுபோன்ற பல்வேறு கல்வியாளர்களின் கருத்துக்களை முன்பே கேட்டிருந்தால் கல்வியின் நிலை  இன்னும் மேம்பட்டிருக்குமே. என்ன செய்வது? அதிகாரம் கண்ணை மறைக்கக்தானே  செய்கிறது!

இனி சமச்சீர் கல்வி திருத்த மசோதா பற்றிய செய்தி :

சமச்சீர் கல்வி திருத்த மசோதா தாக்கல்

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.

     அதில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு பள்ளிக் கல்வியைப் பொறுத்த அளவில் 2010ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டம் இயற்றப்படுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

     இவை அனைத்தையும் பரிசீலித்ததின் பேரில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், அனைவருக்கும் பொதுவான பள்ளிக்கல்வி முறையை கொண்டு வருவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை அங்கீகரித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த சட்டத்தின் ஒரு சிலவற்றை செல்லாது என நீக்கம் செய்துள்ளது. இதில் வேறு சில வகை முறைகளை திருத்துவதற்காக அதிகாரம் வழங்கி உள்ளது.

     1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவுகள் பதவி வழி உறுப்பினர்களால் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வாரியத்தின் பிற உறுப்பினர்கள் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

      இந்த வாரியம் மத்திய சட்டத்தின்படி கல்வி அதிகார அமைப்பாக பணியாற்றுவதற்கு அரசினால் அறிக்கை வாயிலாக குறித்துரைக்கப்படும் அதே வாரியமாக இருக்குமா? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

     தமிழ்நாடு சட்டத்தின்படி அறிமுகப்படுத்த கருதப்பட்ட பாடத்திட்டத்தை பொறுத்த அளவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடத் திட்டமானது பல்வேறு பாடங்களில் உதாரணமாக கணக்கியல், அறிவியல், ஆங்கிலம் போன்றவற்றில் தரத்தையும் உள்ளடக்கத்தையும் பொறுத்த அளவில் தகுதியில் குறைந்ததாக காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்தை தகர்ப்பதாக இருக்கிறது.

      புதிய முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய பாட நூல்களை ஆய்வு செய்தால், அதில் ஆக்கப்பூர்வமான கல்வி கற்றல் மற்றும் பாடத்திட்டத்துக்கு வெளியே கல்விக் கற்றல் ஆகியவை தேசிய கலைத் திட்ட வடிவமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டபடி ஏற்றதாக இல்லை என்பதை காணலாம். இது தமிழ்நாட்டு மாணவர்கள், உயர் கல்விக்காக தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும் போது இந்த நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமமாக இருக்காது.

      எம்.பி. விஜயகுமார், முனைவர் முத்துக்குமரன் குழுக்களின் அறிக்கையில் கொடுக்கப்பட்ட முக்கியமான ஒரு சில பரிந்துரைகள் வகை செய்யப்படவில்லை. எனவே பாடத் திட்டம் ஒன்றை தக்க முறைகளில் உருவாக்குவதில் உதவி செய்வதற்கான ஆலோசனை அமைப்பு எதுவும் இல்லை. பொதுவான பாடதிட்டத்தை வகுக்கவும் பாட நூல்களை வகுப்பதற்கான தகுதி வாய்ந்த அமைப்பு எதுவும் இல்லை.

     இரண்டாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலுமான வகுப்புகளுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கொண்டு வந்துள்ள புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் அறிவிக்கப்படவில்லை.

     சமச்சீர் கல்வி என்பது பொதுவான பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் வகுப்பது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமானவற்றை கொண்டவைகளாகும். முனைவர் முத்துக்குமரன் குழுவினால் செய்யப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை மாணவர்கள் நலன் கருதி விரிவாக ஆய்வு செய்வது தேவையான ஒன்று.
 
      மாணவர்களை மதிப்பிட்டு கணிக்கும் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாததாக ஆகி உள்ளது.

      இந்த அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வழிமுறைகளை வழங்கி, ஆலோசனை பெறுவதற்கு குழு ஒன்றை நியமிக்க கருதுகிறது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க சமச்சீர் கல்வி முறை சட்டத்தை திருத்துவது அவசியமாகிறது.

      சமச்சீர் கல்வி சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை விட்டு விடுவதும் அவசியமானதாக உள்ளது. பாடத்திட்டங்களும், பாட நூல்களும் இந்த சட்டத்தின் நோக்கங்களை முழுவதுமாக நிறைவு செய்வதாக இல்லை. உலக சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இல்லை.

      எனவே அனைத்துப் பிரிவினருக்கும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வல்லுனர்களைக் கொண்ட உயர் அதிகாரக் குழு நியமித்து புதிய பாடத் திட்டம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. இதற்கு ஏற்ப இந்த சட்டம் திருத்தப்படும்.

     இதையடுத்து இந்த சட்ட திருத்தம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதலமைச்சர் ஜெயலலிதாவும், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகமும் விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இந்த சட்ட திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

     இதனை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நன்றி:- நியூ இந்தியா நியூஸ் .காம்  

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக