சனி, ஜூன் 18, 2011

சமச்சீர்கல்வியை ஆராய குழு :- திருடர்கள் கையில் சாவி

சமச்சீர்கல்வியை ஆராய குழு :-  திருடர்கள் கையில் சாவி    
               
                                                                                 -மு.சிவகுருநாதன் 

    

      நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோலவே   உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட   சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குழுவின் லட்சணம் பட்டியலை பார்த்ததும் புலனாகிறது. 

        தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில்  டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர்  கல்வியாளர்கள் என்ற போர்வையில் சேர்க்கப்பட்டிருப்பது அநியாயமானது.

       பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சி.பி.எம்.தமிழ் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் போன்றோரும் பல்வேறு தரப்பைச் சார்ந்த கல்வியாளர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


     அரசு அதிகாரிகளும் இந்த கல்வி வணிகர்களும் சேர்ந்து எப்படிப்பட்ட அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?  கல்வி வியாபாரிகளனைவரும் கல்வியாளர்கள் என்றால் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்! 


         நடுநிலையாக இருக்கவேண்டிய ஒரு மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் சமச்சீர்கல்விக்கு எதிராகவும் செயல்படுவது வருந்தத்தக்கது ; கண்டிக்கத்தக்கது. 


         இது ஒருவகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். இனி நீதிமன்றமே உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு புதிய நிபுணர் குழு அமைக்கப்படுவது அவசரத்தேவையாகும்.


       சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற முயன்று தோல்வியடைந்த தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர்கல்வியை ஆராயும் ஒரு குழுவில் அங்கம் வகிப்பது அபாயகரமானது.

      இன்றைய தமிழக அரசு முற்றிலும் சமச்சீர்கல்விக்கெதிராகவும் தனியார் பள்ளி கல்விக்கொள்ளை யர்களுக்கு அனுசரணையாகவும் நடந்து கொண்டிருப்பது பொதுமக்களால் நன்கு கவனிக்கப்படுகிறது. இதன் விளைவை உள்ளாட்சித்தேர்தலில்  கூட ஆளும்கட்சி எதிர்கொள்ள நேரிடலாம்.


        ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் வீண்பிடிவாதத்தால் இன்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுகூட ஜனநாயகத்தின் மீதான நெருக்கடியாகவும் உணரப்படலாம்.


        இந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது கண்டனத்திற்கு உள்ளாகாமல் இப்போதே நிபுணர் குழுவை உடனடியாக மாற்றியமைப்பது தமிழக அரசுக்கு நல்லது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக