வெள்ளி, ஜூன் 24, 2011

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர்களின் தலைமையிலான அரங்கக் கூட்டம்

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர்களின் தலைமையிலான 
அரங்கக் கூட்டம்

கருத்துரை 


டாக்டர். வே. வசந்தி தேவி, முன்னாள் பல்கலை. துணைவேந்தர்,

பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்,

பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,

பேரா. ப. சிவக்குமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

பேரா. அ. கருணானந்தம், சமச்சீர்க் கல்வி பாட நூல் உருவாக்கத்தில் பங்குபெற்றவர்,

திரு. கன். மோகன், மக்கள் சக்தி கட்சி,

திரு. கோ. சுகுமாரன், மனித உரிமைகள் கூட்டமைப்பு, புதுச்சேரி,

புலவர். கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழாசிரியர் கழகத் தலைவர்,

பேரா. மு. திருமாவளவன், மக்கள் விடுதலை இயக்கம்,

ழுத்தாளர் பா. செயப்பிரகாசம், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி,

கவிஞர். இன்குலாப்,

பேரா. இரத்தினசபாபதி,

திரு. செல்வி, மக்கள்ஜனநாயகக் குடியரசுக் கட்சி,

திரு. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,

திரு.இனியன் சம்பத், தமிழ் தேசிய மக்கள் கட்சி,

திரு. தமிழ்நேயன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,

திரு. தடா ரஹீம்,  இந்திய தேசிய லீக்,

முனைவர். அரணமுறுவல், உலகத் தமிழின முன்னேற்றக்  கழகம்,


நாள் & நேரம்   
 

05.07.2011,
 

செவ்வாய், மாலை 6 மணி     
இடம்:-

 ICSA அரங்கம், எழும்பூர்
(மியூசியம் அருகில்)

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் முயற்சியைக் கண்டிப்போம்!

        கல்வியாளர்களும் சமூக சமத்துவத்தில் அக்கறையுள்ளோரும் தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தங்களின் விளைவாக இந்தக் கல்வியாண்டிலிருந்து எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என முந்தைய தமிழக அரசு ஆணையிட்டிருந்தது.

      கல்வியாளர்கள் அனைவரும் பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளது போல எல்லோருக்கும் பொதுப்பள்ளி, தாய்மொழியில் கல்வி, பொதுப்பாடத் திட்டம் ஆகிய மூன்றும் கூடிய உண்மையான சமச்சீர்க் கல்விக்காகவே போராடியபோதிலும், முதற்கட்டமாக பொதுப்பாடத்திட்டம் மட்டும் என்கிற அளவிலாவது இன்று இது நடைமுறையாகிறதே என்ற அளவில் வரவேற்றோம்.

     கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலமைந்த ஒன்பது பேர் குழு அளித்த அறிக்கை, பின் அதன் மீது அமைக்கப்பட்ட விஜயகுமார் குழு அறிக்கை ஆகியவற்றினடிப்படையில் தேர்ந்த கல்வியாளர்களைக் கொண்டு விரிவாக விவாதம் நடத்தி, பாடத்திட்டங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு கருத்துக்கோரி, வேறெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையாகச் செயற்பட்டு இதற்கான பாடத்திட்டங்களும் பாடநூல்களும் உருவாக்கப் பட்டன. 200 கோடி ரூபாய்களுக்கும் மேல் செலவிட்டு ஒன்பது கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

       இதற்கிடையில் நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறை யிலுள்ளதைப் பயன்படுத்தி அதனடிப்படையில் தாங்கள் உயர்வான பாடத்திட்டத்தைச் சொல்லித் தருவதாக விளம்பரப்படுத்திப் பெருங் கல்விக்கொள்ளையை நடத்தி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர்கள் சமச்சீர்க் கல்வித் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். சென்ற ஏப்ரல் 2010ல் உயர் நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் அரசின் உரிமையை ஏற்றுக் கொண்டது. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் செப்டம்பர் 2010ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அங்கும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டது. வேறு வழியின்றி அவர்களும் இதை ஏற்க வேண்டியதாயிற்று. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சென்ற கல்வி ஆண்டில் இது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் பட்டது.

      இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளி முதலாளிகள் புதிய அரசிடம் சமச்சீர் கல்விக்குத் தடை கோரி அழுத்தம் கொடுத்ததால் புதிய அரசும் உரிய முறையில் ஆய்வு எதையும் செய்யாது அவசரக்கோலத்தில் சமச்சீர்க் கல்வி நடைமுறையாக்கத்தை இந்த ஆண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பின்னர் அதற்குரிய சட்டத்திருத்தத்தையும் செய்தது. இதற்கெதிரான கல்வியாளர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன.

      வேறு வழியின்றி பொதுக்கல்வியில் அக்கறையுள்ள எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்றோம். நமது வாதங்களை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் புதிய அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டதைக் கணக்கில் கொண்டு, மாணவர் நலனில் அக்கறை கொண்டு சமச்சீர்க் கல்வியை அரசு நடைமுறைப்படுத்தும் என நம்பினோம்.

     ஆனால் பிடிவாதமிக்க தமிழக அரசோ, மாணவர்களுக்கு மேலும் பல வாரங்கள் கல்வி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் 1, 6ம் வகுப்புகளுக்குச் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சமச்சீர்க்கல்வியைத் தொடர வேண்டும் எனவும் பிற வகுப்புகளைப் பொருத்தமட்டில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து பாடத்திட்டங்களையும் நூல்களையும் மூன்று வாரங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து இறுதித்  தீர்ப்பை அளிக்க வேண்டும் எனவும் கூறியது.

       குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருதியிருந்தால் அதுவே அதைச் செய்திருக்க வேண்டும். மாறாக சமச்சீர்க் கல்வியை ஒத்திவைக்க ஆணையிட்ட மனுதாரரிடமே அப்பொறுப்பை உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு ஒன்பது பேர் குழுவை நமது கருத்திற்கு ஆதரவானவர்களைக் கொண்டே நிறுவியுள்ளது. தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர் தவிர தமது பிரநிதிகள் என இருவர், கல்வியாளர்கள் என்கிற பெயரில் இரு பெரும் மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர்கள் முதலானோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசு அதிகாரிகள் மூவர், லேடி ஆண்டாள் பள்ளி, டி. ஏ. வி. பள்ளி, பத்மா சேஷாத்திரி பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த விஜயலஷ்மி சீனிவாசன், ஜெயதேவ் , திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோரடங்கிய இக் குழு சமச்சீர்க் கல்விக்கு நீதி செய்யாது என கல்வியாளார்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அன்பார்ந்த பொதுமக்களே, பெற்றோர்களே!

     சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைத்திருப்பதற்கு அரசியல் காழ்ப்பு காரணமல்ல, பாடத்திட்டம் மற்றும் பாடநூற்களின் தரக்குறைவே காரணம் எனத் தமிழக அரசு கூறுகிறது. ‘சோ’ போன்ற மெட்ரிகுலேஷன் பள்ளி ஊதுகுழல்களும் அதையே திருப்பிச் சொல்கின்றன.

   இது உண்மையன்று எனக் கல்வியில் பலகாலம் அனுபவமுள்ள கல்வியாளர்களாகிய நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்களும் கல்வி வல்லுனர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் இது. ஆசிய அளவில் புகழ்பெற்ற ‘மேட் சய்ன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ராமானுஜம், இந்திய அளவில் புகழ்பெற்ற ‘ராமானுஜம் கணித உயராய்வு ஆராய்ச்சி நிறுவன’த்தின் முனைவர் யுவராஜ், ஆங்கில மொழிப் பயிற்றுவிப்பில் அனுபவப்பட்ட முனைவர் நளினி, புகழ்பெற்ற கல்வியாளர்கள் முனைவர் மாடசாமி, வ.கீதா, முனைவர் வெற்றிச் செல்வன், பேரா. கருணானந்தன், எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் முதலான 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஓராண்டுக்கும் மேல் உழைத்துத் தயாரித்த நூல்கள் இவை. புகழ் பெற்ற கல்வியாளர் கிருஷ்ணகுமார் (என்.சி.இ.ஆர்.டி.) நேரடியாக வந்திருந்து இக்குழுவின் செயற்பாடுகளையும் உருவாகியுள்ள பாடத்திட்டத்தையும் பாராட்டிச் சென்றுள்ளார்.

     இத்தகைய வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் நூல்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளை வைத்து மதிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல.

      சென்ற திமுக அரசு இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடத்திட்டதில் தனது புகழைப் பாடிக் கொள்ள சில பகுதிகளைச் சேர்த்துள்ளதை நாங்களும் கண்டிக்கிறோம். இவற்றை நீக்கி நடைமுறைப்படுத்த நீதிமன்றம் வாய்ப்பளித்துள்ளது. தேவையானால் அப்பகுதிகளை நீக்கி இந்த அரசு இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தலாம்.  தரம் தொடர்பாக ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து தேவை எனக்கருதினால் வரும் ஆண்டுகளில் இதில் தேவையான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்து கொள்ளலாம். மாறாக எல்லாம் முடிந்த பின் இதனை ஒத்தி வைப்பதை மாணவர் நலனில் அக்கறையுள்ள யாரும் ஏற்க இயலாது. ஏற்கனவே மூன்று வாரங்கள் வீணாயிற்று. குறைந்தபட்சம் மேலும் மூன்று வாரங்கள் வீணாவது நிச்சயம். இதை அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

      உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க இன்று 1, 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்தும் அரசு பாடநூல்களில் வேண்டாத பகுதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது அரசின் திட்டங்கள் என வரும் பகுதிகளையெல்லாம் நீக்கச் சொல்லி இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘புதிய ஆத்திச்சூடி’, ‘ஒள’ வரிசை எழுத்துக்களை முதல் வகுப்புப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யும் பகுதி எல்லாம் நீக்கப்படுவதை யாராலும் விளக்க இயலவில்லை.
   
     சூரிய கிரகணத்தையும் பகல் இரவையும் விளக்கும் படங்களில் சூரியன் இடம் பெறுகிறது என்கிற காரணத்தாலும், காந்தத்தில் வடக்கு தெற்கு துருவங்கள் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் வேறுபடுத்தப் பட்டுள்ள காரணத்தாலும் அவையும் நீக்கப்படுகின்றன. ஆக சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமல்ல எனத் தமிழக அரசு சொல்வது முழுப் பொய் என விளங்குகிறது.

    இக்குழுவிடமிருந்து சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டமும், நூல்களும் தரமாக இல்லை என்று ஒரு அறிக்கையைப் பெற்று, அதனடிப்படையில் புதிய பாடத்தை உருவாக்கக் காலம் தேவை என நீதிமன்றத்தில் கூறி சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி வைக்க அரசு முயலும் என நாங்கள் அஞ்சுகிறோம்.

    ஒன்றை இந்த அரசுக்கும், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவிற்கும் சுட்டிக்காட்டுகிறோம். உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள ஆணையால், இக்குழு சமச்சீர்க் கல்வியை மாற்றி வேறுமுறைகளுக்குள் செல்கிற முயற்சிக்குள் நுழையக் கூடாது எனவும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான அம்சங்களையே கருத வேண்டும் எனவும் தெளிவாகக் கூறியுள்ளது. இதைப் புறக்கணித்து சமச்சீர்க் கல்வியை நிறுத்திவைக்கும் நோக்கில் பரிந்துரைகளைச் செய்வது நீதிமன்ற அவமதிப்பிற்குரியது.

அன்பார்ந்த பெற்றோர்களே!

    எல்லோர்க்கும் சம கல்வி என்பதை  சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்க வைக்க விரும்புவோரால் ஏற்க இயலாது. பள்ளிக் கல்வியில் நான்கு பாடத்திட்டங்கள் என்பது வேறு பல நாடுகளிலும் மாநிலங்களிலும் இல்லாத நடைமுறை.  மேற்தட்டினரும் அடித்தட்டினரும் ஒரே பாடத்தைப் படிப்பதா என ஆத்திரப் படுபவர்களால் உருவாக்கப்படது இது. குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த நாடல்லவா இது. அன்று அதை எல்லா மக்களும் இணைந்து நின்று எதிர்த்ததால் அரசு கைவிட்டது. இன்றும் கல்வியாளர்களாகிய நாங்கள் மட்டுமின்றி எல்லோரும் இணைந்து நின்று குரல் எழுப்பினால்தான் எல்லோருக்குமான பொதுக் கல்வியை உருவாக்க முடியும். அதற்கான திசையில் ஒன்றிணைவோம். உலகில் பல நாடுகளிலும் பொதுப்பள்ளி முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டமே கடைபிடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் நூற்களும் தரமானவை என நாங்கள் உறுதி கூறுகிறோம்.

தமிழக அரசே!

சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்காதே !
 

நீதி மன்றத் தீர்ப்புகளை அவமதிக்காதே !
 

பாடநூல் மதிப்பீட்டுக் குழுவைத் திருத்தி அமை !
 

இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை எல்லா வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்து !
 

அரசியல் காழ்ப்புணர்வுடன்  அவசியமான பகுதிகளை நீக்காதே !
 

பாரதிதாசனிலும் சங்கப்பாடல்களிலும் கைவைக்காதே  !
 

மாணவர்களுக்குப் பாடம் நடத்தாமல் காலத்தை வீணாக்காதே !

பெற்றோர்களே ! ஆசிரியர்களே ! மாணவர்களே !

கல்வியில் சமத்துவத்தை  நிலைநாட்டுவோம் !
 

சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தக் களம் காண்போம் !
 

ஒன்றிணைவோம் ! போராடுவோம் !

சமச்சீர்க் கல்விக்கான கல்வியாளர்கள் குழு
3/5, முதல் குறுக்குத்தெரு, 

சாஸ்திரி நகர், 
அடையாறு , 
சென்னை – 20 
செல்பேசி: 94441 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக