வெள்ளி, ஜூன் 10, 2011

சமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

 

சென்னை:  வெள்ளிக்கிழமை, ஜூன் 10, 2011, 16:57


நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போத நடைமுறையில் உள்ள மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் இது நீட்டிக்கப்படவிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.

அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?

சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.

இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. அது யாருக்கு இழப்பு?

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதா?. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?

இப்படி திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி:- ஒன்இந்தியா- தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக