திங்கள், ஜூன் 20, 2011

சாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழிஅனுபவித்ததுண்டா?

சாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழி அனுபவித்ததுண்டா?                    

                                                                           -மு.சிவகுருநாதன் 


         2 ஜி அலைக்கற்றை வழக்கில்  முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும் தி.மு.க. எம்பியுமான   கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி   நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஆகியோர் தாக்கல் செய்த பிணை  மனுவை உச்சநீதிமன்றம்   தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே அணுகி பிணை  கோரலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 
           இன்றைய விசாரணையில், கனிமொழி ஒரு எம்.பி.என்றும் , எனவே  அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பாரென்றும், சாட்சிகளை கலைப்பார் என்று  நீதிமன்றம் கருதினால் இவரது வீட்டில் ரகசிய காமிரா வேண்டுமானாலும் ‌பொருத்திக்கொள்ளட்டும் என்ற இவரது வழக்கறிஞர்  வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்ற நிலைக்கு கனிமொழியும் கருணாநிதியும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 
        கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். எனவே அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். ஆகவே அவர்களுக்கு பிணை  வழங்கக் கூடாது என்று சி.பி.அய்.தாக்கல் செய்த  மனுவில் கூறியது. 

         இருவரும் கூறுவதுபோல் கலைஞர் தொலைக்காட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தானே தவிர   கடன்தொகை அல்ல என்றும் சி.பி.அய். குற்றம் சுமத்தியது. இதை ஏற்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிமொழி,சரத்குமார் ஆகியோரின் பிணை மனுவை இன்று (20 .06 .2011)  விசாரித்து பிணை  வழங்க மறுத்து விட்டது.


        குற்றவியல் சட்டத்தின் 437 வது பிரிவின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களில் பெண் என்ற வகையில் பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை நாட நீதிபதி அறிவுறுத்திருக்கிறார்.
 
      முன்னதாக  இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக திடீரென அறிவித்தனர். இதற்கான காரணம் தெரியவில்லை.


        நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு ஏதோஒரு வகையில் வேண்டியவர் என்றாலோ இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கு என்ன நடந்ததென்பதை சம்மந்தப்பட்டவர்கள்தான் விளக்கவேண்டும்.

        அதனால்   2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும்  நீதிபதிகள் பி.எஸ். சவ்ஹான் , ஜி.எஸ். சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்து இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

     கனிமொழி பெண் என்பதால் பிணை வழங்கவேண்டுமெனவும் வாதிடப்பட்டதாக தெரிகிறது. ஊழல் வழக்கில் ஆண்-பெண் பேதம் பார்க்கச் சட்டத்தில் இடமில்லை. 
  
    ஒரு  சாதாரணப் பெண் படும் துன்பங்கள்,துயரங்களில் துளியளவாவது கனிமொழி அனுபவித்ததுண்டா? அவரது கவிதைகள் என்று சொல்லப்படும் எழுத்துக்களிலாவது அடித்தட்டுப் பெண்களின் வலிகளும் வாதைகளும் வெளிப்பட்டதுண்டா? இந்த மாதிரியான கற்பனையான ஒன்றை கனிமொழியால் எப்படி படைக்கமுடியும்? 


      சாரு நிவேதிதா போன்ற துதிபாடிக்கும்பல்கள் வேண்டுமானால் தனக்கு பின்னால் கிடைக்கப்போகும் சலுகைகளுக்காக கனிமொழியின் கவிதைகளில் ஏதேனும் இருப்பதாக உளறி வைக்கலாம். இன்று எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக்கக்கான பெண்ணியக் கவிஞர்களுடன் கனிமொழியை ஒப்பிடவேமுடியாது.

     அம்மா சாதியில் மணமகன் பார்த்து தொழிலதிபர் அதிபன் போசை திருமணம் செய்துகொண்டது, பிடிக்காதவுடன் மணமுறிவு பெற்றது உள்ளிட்டவைகள் சாதாரணப் பெண்ணின் வாழ்வில் நடைபெற்றிருக்க முடியுமா? பசி,பட்டினி கிடந்ததுண்டா? குளிரூட்டப்பட்ட அறை, வாகனங்கள் இன்றி இருக்கமுடியுமா? எனவேதான் திகார் சிறையை விட்டு  வெளியே வரத் துடிக்கிறீர்கள்.

        கனிமொழியை  அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை என்றும் சொல்லி நீதிபதியின் மனத்தை மாற்ற முயன்றிருக்கிறார்கள். அப்பாவியான வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ஒரு நியாயம், கனிமொழிக்கு ஒரு நியாயமா?   


        இரு பெண்குழந்தைகளை பராமரிக்கவேண்டிய பொறுப்பில் இருந்த 
முத்துலட்சுமி வீரப்பன் மீது போடப்பட்ட தடா வழக்குகளுக்காக பல ஆண்டுகள் மைசூரு  சிறையில் வாடியபோது இந்த கருணாநிதியும் கனிமொழியும் ஏதேனும் செய்ததுண்டா?


           உங்களுக்கு ஒரு பெண் இருந்து அந்தப்பெண் சிறையில் வாடினால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்ற கேள்வியே கருணாநிதியின் முன் நிற்கிறது. எல்லார் வீட்டுப்பெண்களும் கருணாநிதி சொல்வது உண்மை எனக்கொன்டாலும் ரூ 214 கோடி கடன் வாங்கும் அளவிற்கு இருந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கவேண்டிய தேவையிருக்குமா என கருணாநிதி யோசிக்கட்டும்.

            பெற்ற பாசம் கண்களை மறைக்க மு. கருணாநிதி நாளை (21.06.2011)   கனிமொழியை பார்க்க தில்லி  திகார் சிறைக்கு செல்லவிருக்கிறார். இந்த முறை சோனியாகாந்தியை சந்தித்து சி.பி.அய். நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயற்சி செய்யலாம். மிக விரைவில் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூடி கனிமொழி வழக்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

            கருணாநிதிக்கு தற்போது தேவை கனிமொழியின் விடுதலை மட்டுமே. ஆ.ராசா,சரத்குமார் ஆகியோரின் விடுதலை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்கள் இப்போதாவது அப்ரூவராக மாறினால் அவர்களுக்கு நல்லது. இருப்பினும் அவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெற்றேயாகவேண்டும். 

           ஆ.ராசா திகார் சிறையில் இருப்பதால் அவரது கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி நடிகை குஷ்புவுக்கு அளிக்கப்படலாமெனத் தெரிகிறது. கனிமொழி உள்ளிட்ட எந்த ஆங்கில  ஊடக விவாதங்களில் குஷ்பு  மட்டுமே பங்குபெறுகிறார். கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் பிணை மறுத்த விவகாரத்திலும் தி.மு.க.வின் குரல் அவர் மட்டுமே. தி.மு.க.விற்கு குடும்பங்களின் கொள்கையைத் தவிர வேறு கொள்கை இருக்கிறதா என்ன? எனவே யார் அந்தப் பதவியில் இருந்தாலென்ன? 
        
             தி.மு.க.என்ற அண்ணாவின் உழைப்பை அறுவடை செய்த மு.கருணாநிதி, தனது குடும்பங்களே கட்சி என்று மாற்றி குடும்ப உறுப்பினர்களை மட்டும் பதவி அளித்து கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்டினார். அதன் பலனை மு.கருணாநிதி தற்போது அனுபவிக்கிறாரென்றுதான் சொல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக