சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்தது சரியா?
-மு.சிவகுருநாதன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜெ. ஜெயலலிதா இவ்வாண்டு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நிறுத்தி வைத்து அது பற்றி ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சொல்லி மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். கல்விக் கொள்ளையில் ஈடுபடும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நீதி மன்றங்கள் மூலம் கூட கிடைக்காத அரிய வாய்ப்பு இப்புதிய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க வியம் என்னவென்றால் ஒப்பீட்டளவில் அ.இ.அ.தி.மு.க.காரர்களைவிட அதிக அளவில் கல்வி நிறுவனங்களை நடத்தி கல்விக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க. காரர்கள் என்பதுதான்.
சமச்சீர் கல்வி பற்றி நமக்கும் நிறைய விமர்சனங்கள் உண்டு. வெறும் மதிப்பெண் பட்டியல், பாடத்திட்டம், பாடநூற்கள் ஆகியவற்றில் மட்டும் ஒர்மை இருந்தால் மட்டும் அது சமச்சீர் கல்வி என்று ஆகிவிடாது. அரசு அமைத்த ச.முத்துக்குமரன் குழுவும் இன்னபிற குழுக்களும் கல்வியாளர்களும் பாடநூற்களில் மட்டும் சமத்துவம் பேணப்படுவதை சமச்சீர் கல்வி என்று ஒத்துக்கொண்டதில்லை. சென்ற தி.மு.க. அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் ஆழ்ந்த அக்கறை கொண்டு இதைச் செயல்படுத்த முன்வரவில்லை என்பதுதான் உண்மை. 2006இல் ஆட்சியதிகாரத்திற்கு வந்த தி.மு.க. அரசு தன்னுடைய இறுதிக் காலத்தில் 2010-2011ஆம் கல்வியாண்டில்தான் சமச்சீர் கல்விக்கான புதிய பாடத்திட்டங்களை முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கான காரணம் பல்வேறு தரப்புக்களில் இதற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தமே என்றால் அது மிகையில்லை. தி.மு.க. அரசு தன்னெழுச்சியாக இத்திட்டத்தைக் கொண்டுவரவில்லை என்பதே உண்மை.
தொடக்கக் கல்வியில் (முதல் ஐந்து வகுப்புகள்) பயிற்று மொழி தமிழாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களால் பல்லாண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இதை எந்த ஆட்சியாளரும் கண்டு கொள்வதில்லை. ச. முத்துக்குமரன் இதை முன்னாள் முதல்வர்
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கும் பாடநூற்களுக்கும் எப்படியும் தடை பெற்றுவிடவேண்டும் என நீதிமன்றத்தை நாடிய மெட்ரிக் கல்விக் கொள்ளையர்கள் அரசின் பாடத்திட்டத்தை (Syllabus) மட்டும் ஏற்றுக்கொண்டு பாடநூற்களை (Text Books) தாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்ற உத்தரவையும் பெற்றனர். ஆனால் நமது புதிய அரசு அதற்குக் கூட வேலை வைக்காமல் சமச்சீர் கல்வித் திட்ட புதிய பாடநூற்களை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதன் மூலம் கல்விக் கொள்ளைக்கு மீண்டும் வழி வகுத்துள்ளது. இனி அவர்கள் தத்தமது வியாபாரத்தைத் தொடரலாம். CBSE பள்ளிகளாக மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. நீதியரசர் ரவிராஜபாண்டியன் குழுவின் கல்விக் கட்டண வரையறை எப்போது வருமென யாருக்கும் தெரியாது. அதுவரையில் அவர்களது கொள்ளையை அரசு கூட தடுக்காது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக இதுவரையில் எந்தப் புகாரும் அரசுக்கு வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தினமும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பள்ளியின் தாளாளர் கூட கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல், குடும்பங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, நீரோ மன்னனுக்கு இணையான மு. கருணாநிதியின் செயல்பாடு, மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றால் வெகுண்டெழுந்த மக்களின் தீர்ப்பே ஜெயலலிதாவின் வெற்றி. ஜெயலலிதாவின் தடலாடி அரசியலை நன்குணர்ந்தபோதும் கருணாநிதி வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வர கருணாநிதியின் செயல்பாடுகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைககள் வாக்களித்த மக்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும் சமச்சீர் கல்வி மீது ஈடுபாடு இலலை என்று சொன்னோம். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 01, ஏப்ரல் 2010 முதல் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டம் 6 முதல் 14 வயதெல்லை வரையுள்ள குழந்தைகளை மட்டும் உள்ளடக்கிய பல்வேறு குறைபாடுகளைக் கொண்டது என்பது ஒருபுறமிருக்க கல்வி உரிமைச் சட்டத்திற்கான எவ்வித மேல் நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
சென்ற தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாடநூற்கள் குறைகளற்றது என எந்தக் கல்வியாளரும் சொன்னதில்லை. முதல் மற்றும் ஆறாம் வகுப்புப் பாடநூற்களிலுள்ள பல்வேறு வகையான குறைபாடுகளை பலர் சுட்டிக் காட்டியுள்ளனர் (என்னுடைய வலைப்பூவில் அதுகுறித்த கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது).
பார்க்க: ‘சமச்சீர் கல்வி’ பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது?
http://musivagurunathan.blogspot.com/2011/01/blog-post_3170.html
இந்த ஆண்டில் 2 முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 7 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடநூற்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியிடப்பட்டன. அதில் மு.கருணாநிதியின் பாடல் மற்றும் அன்றைய ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தும் கருத்துகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தில் ரூ.214 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பல கோடி புத்தகங்களை நிறுத்தி வைப்பது என்ற முடிவு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் வெளியிடப்பட்ட பாடநூற்கள் குறைகளற்றவை என்றோ இவைதான் சமச்சீர் கல்விக்கு சர்வரோக நிவாரணி என்றோ யாரும் கூறவில்லை. ஆனால் இப்பாடநூற்கள் சமச்சீர் கல்விக்கான முதல்படி என்பதும் இத்தகைய தரத்திலான பாடநூற்கள் நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகள் கடந்தநிலையிலும் என்றும் வந்ததில்லை என்பதை முந்தைய பாடநூற்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவரும் இநத நேர்மையான முடிவுக்கு வர முடியும்.
சில குறைபாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் தரத்திற்கு இணையாக இதுவரை பாடப்புத்தகங்கள் வெளியாகவில்லை என்கிறபோது இதற்கு முந்தைய பாடநூற்களும் எவ்வளவு கேவலமான நிலையில் இருந்தன என்பது எளிதில் விளங்கும். பழைய பாடநூற்களையே இந்த ஆண்டு மீண்டும் பயன்படுத்துவதென்பது இளைய சமுதாயத்தின் அறிவுத் தேடலை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியாகும். முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் சென்ற கல்வியாண்டு (2010 - 2011) பயன்படுத்திய புத்தகங்களை ஒதுக்கிவிட்டு அதற்கு முந்தைய ஆண்டு (2009 - 2010) பயன்படுத்திய 2003 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பழைய பாடநூற்களுக்குத் திரும்புவது இந்த ஆட்சியாளர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கலாம்.
ஏழாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் எம்.ஜி.இராமச்சந்திரன் பற்றிய பாடம் ( ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.’ ) உள்ளது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்கள் எழுதிய திரைப்படப் பாடல் வரிகளைக் கொண்டு எம்.ஜி.ஆரின் புகழைப்பாடும் பாடமது.ஆனால் இதைப்போல ஒரு படத்தை சமச்சீர் கல்வி புதிய பாடத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் துணைப்பாடமாக சேர்த்துள்ளார்கள்.ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்’ என்ற பாடம் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது கல்வியாளர்களால் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கொரு முறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற NCERT விதிமுறைகளுக்கு முரணாணது என்பதை கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பாடத்திட்டத்தை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்வது சமச்சீர் கல்வியின் போதாமைகளை இட்டு நிரப்ப பயன்படாது. மாறாக மாணவர்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவே அமையும். தற்போது வெளியிடப்பட்ட பாடநூற்கள் தரமாக இல்லை என்று கூறிவிட்டு அதையும் விட கீழான ஒரு பாடத்திட்டத்தைப் பயன்படுத்த முனைவது மெட்ரிக் பள்ளி கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவான நிலை என்பதுதான் உண்மை.
தி.மு.க.வும் சரி, அ.தி.மு.க.வும் சரி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பாடப்புத்தகங்களை மாற்றி தங்களது கொள்கைகளையும், கருத்துக்களை பிஞ்சு மனங்களின் மூளையில் பதிக்கும் வேலையில் தீவிரம் காட்டுகின்றனர். குழந்தைகள் படிக்கும் புத்தகங்களில் தங்களது பெருமைகளை தாங்களோ அல்லது மற்றவர்களை விட்டு எழுத வைத்து உள்ளே நுழைத்து விடுகிறார்கள்.
ஆட்சி மாறினால் அமைச்சர்கள் மாறுகிறார்கள். காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், செயலாளர்கள் மாறுகிறார்கள். இதெல்லாம் நிர்வாக அளவில் செய்யப்படும் மாற்றங்கள். குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகங்கள் ஏன் மாறுகிறது? பாடநூற்கள் பொதுவாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சியின் சாயல் படிந்து தயாரிக்கப்படுகிறது. எனவேதான் அடுத்த கட்சி உடன் மாற்றத் துடிக்கிறது. தேர்தலை சுதந்திரமாக நடத்த இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. ஆனால் பாடத்திட்டங்களை, பாடநூற்களை வடிவமைத்துத் தர வருங்கால குடிமக்களை சிறப்பான முறையில் உருவாக்க ஒரு சுயேட்சையான கல்வி வாரியம் இல்லை. எப்படி புரிந்து கொள்வது?. ஆளுங்கட்சிகளின் அடிவருடிகளாக மாணவர்களை உற்பத்தி செய்ய ‘தமிழரசு’ இதழைப் போன்று அவர்கள் தயாரிக்கும் புத்தகங்களை எத்தனைக் காலந்தான் படிக்க வைப்பது என்று தமிழ்ச் சமூகம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
முன்னாள், இந்நாள் கல்வி அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஆசிரியர்கள் மட்டுமே கல்வியாளர்களாக உருமாறி ஆளுங்கட்சிக்கு இணக்கமான ஒரு பாடத்திட்டத்தை வரைந்து அதை குழந்தைகள் மீது சுமத்துவது தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆளும் கட்சி கல்வியாளர்களைக் கொண்டு எப்படி பாரபட்சமற்ற பாடத்தை தயாரிக்க முடியும் என்று தெரியவில்லை. இப்புதிய அரசு அமைக்கும் வல்லுநர் குழுவும் எப்படிச் செயல்படும் என்பதற்கு பழைய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்கள், சமூக அறிவியல், அதிலும் குறிப்பாக வரலாறு, குடிமையியல் பகுதிகளில் தங்களது சுய புராணங்களைப் பாடவும் தங்களது எழுத்துக்களை இணைத்துக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். ஆறாம் வகுப்பு சமூக அறிவியலில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் அறிமுகம் செய்தவர்கள், ஐந்தாம் வகுப்புப் பாடத்திலும் அதையே செய்திருக்கிறார்கள். புதிய தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்ளிட்ட படங்கள் 9ஆம் வகுப்பு சமூக அறிவியலில் காணக் கிடைக்கின்றன. திருநங்கைகள் பற்றிப் பேசும்போது கூட அரசின் நலத்திட்ட சேவைகள் பட்டியலிடப்படுகின்றன.
இன்றைய உள்ளாட்சி அமைப்புக்களுக்கு சோழ மன்னர்களின் குடவோலை முறையை முன்னுதாரணமாக குறிப்பிடத் தவறுவதில்லை (5-ம் வகுப்பு சமூக அறிவியல், பக். 82). ஆறாம் வகுப்பில் புத்தரின் காலம் கி.மு. 563 - கி.மு. 483. ஆனால் ஒன்பதாம் சமூக அறிவியல் கி.மு.567 - கி.மு. 487 என்று சொல்கிறது. இப்படியான குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குறைகளிருப்பினும் "போர்களின் மக்களின் நலனுக்காகவா? அல்லது மன்னர்களின் நலனுக்காகவா?" என்று சிந்திக்கச் சொன்ன (5-ம் வகுப்பு சமூக அறிவியல் பக்.108) பாடப்புத்தகத்தை நாம் இதுவரை கண்டதில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
மு.கருணாநிதி உள்ளிட்ட கழகக்கண்மணிகள் எழுதிய பாடல்களையும் பாடங்களையும் நீக்கிவிட்டு இப்பாடநூற்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்யாமல் முடக்குவது இழிசெயலின்றி வேறில்லை. இதைப் போல நீக்குவதற்கு பல முன்னுதாரணங்கள் இருந்தும் அவற்றை எல்லாம் புறமொதுக்கிவிட்டு இப்புதிய அரசு மெட்ரிக் பள்ளி கல்விக் கொள்ளையர்களின் சூழ்ச்சிக்கு பணிந்திருக்கிறது. புதிதாக அமைக்கப்படும் வல்லுநர் குழு இதைவிட சிறப்பான பாடங்களை எழுதுமா என்பது கேள்விக்குறியே.ஆனால் நடைமுறையில் அதற்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. புதிய ஆளுங்கட்சிக்கு இணக்கமான பாடத்தை எழுதும் வேலையே நடைபெறும் என்றே நம்ப இடமிருக்கிறது.
இப்போதிருக்கும் பழைய பாடநூற்களின் பிழைகளைப் பட்டியலிட பக்கங்கள் போதாது. ஒரு சிறிய உதாரணம் மட்டும் இங்கே தருகிறேன். 8ஆம் வகுப்பு சமூக அறிவியலிலுள்ள பிழைகளை பக்கவாரியாக பல நூற்றுக் கணக்கில் பட்டியலிட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆட்சியிலிருந்த அவர்கள் எந்தவொரு திருத்தத்தையும் செய்யவில்லை. அவர் சுட்டிக் காட்டிய பிழைகள் உண்மையானவை. அந்தத் ‘தரமான’ பாடநூலைத் தான் மாணவர்கள் இவ்வாண்டும் படிக்கப் போகிறார்கள்.
சர்வாதிகாரத் தன்மை உண்டாக்கக் கூடிய அளவிலான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் இந்த அரசை கேள்வி கேட்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு சிரமமான காரியமாக இருக்கிறது. அவர்கள் அதிகபட்சமாக வேண்டுகோள்தான் விடுக்க முடிகிறது. இது ஜனநாயகத்தின் உச்சபட்ச சோகம் என்று நினைக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதை விமர்சிக்கக் கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.விற்கு எந்தவொரு கொள்கையும் சமூகப் பிரச்சினைகள் குறித்த புரிதலும் விரிந்த பார்வையும் கிடையாது. எனவே அவர்களிடம் எதையும்எதிர்பார்க்கத்தேவையில்லை.தே.மு.தி.க.
அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சமச்சீர் கல்வி குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறுகிறார் (த சன்டேஇந்தியன் பேட்டி:-30 மே-12 ஜூன் 2011)
இடதுசாரிகள் மட்டுமே இது குறித்து சற்றுக் கூடுதலாக பேசி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியான அவற்றிற்கும் சில எல்லைகள் இருக்கலாம். முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க. திகார் முன்னேற்றக் கழகம் என்ற அளவில் சுருங்கிப் போய் விட்டபடியால், ஊழல் வழக்கு விசாரணைகள், வழக்குகள், சிறைகள் ஆகியவற்றைத் தாண்டி வந்து உள்ளார்ந்த ஈடுபாட்டோடு இப்பிரச்சினையைப் பற்றி அவர்கள் பேசப்போவதில்லை. தங்களுக்கு வாக்களிக்காமல் ஜெயலலிதாவிற்கு வாக்களித்த மக்கள் அதற்கான பலனை அனுபவிக்கட்டும் என்று தி.மு.க. தலைமையும் அதன் உடன்பிறப்புகளும் மிகவும் கேவலமான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவர்கள் மக்கள் பிரச்சினைகள் பற்றி கண்டிப்பாக பேச மாட்டார்கள். ஆறாம் வகுப்பு சமூகஅறிவியலில் அண்ணல் அம்பேத்கரை அறிமுகம் செய்ய வேண்டிய இடத்தில் கூட கருணாநிதி புராணம் பாடிய இவர்களுக்கு சமச்சீர் கல்வி பற்றி கேள்வி கேட்கும் அருகதை இல்லைதான்.
சுயேட்சையாக சமூகத்தின்பால் அக்கறை கொண்டு செயல்படும் கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகள் சமச்சீர் கல்வி நிறுத்தம் பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். இது சமூகத்தின் வெகு சொற்பமான நடவடிக்கையே. மேலும் சிறுபத்திரிகை சார்ந்த அளவில் குறைந்த சில அறிவுஜீவிகள் மட்டும் இப்பிரச்சினை குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பான்மை சமூகமும் அறிவுலகமும் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருக்கின்றன. இதையும் தமிழ்ச் சமூகத்தின் அவலமாகத்தான் கணிக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தமிழ்ச் சமூகத்தில் அறிவுலகமே இல்லை என்று சொல்லி விடலாம் போலிருக்கிறது. அறிவாளிகள் என்று நம்பப்படுகிறவர்களும், இதழ்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் கூட இவ்விரண்டு கட்சிகளின் எடுபிடிகளாக மாறிப்போனது அல்லது மாற்றியமைக்கப்பட்டதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது.
சமச்சீர் கல்வி என்பது யாருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும். அதில் தி.மு.க.வின் சமச்சீர் கல்வி, அ.இ.அ.தி.மு.க.வின் சமச்சீர் கல்வி என்று இரு வேறு முகங்களுடன் இருக்க முடியாது. மக்களின் பணம் வீணாக்கப்படுவது குறித்த பிரக்ஞையின்றி 15 நாட்களில் பாடநூல்களை அச்சடிக்க முடியுமா என்ற எண்ணம் கூட இல்லாமல் அவசர கதியில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தகங்கள் அச்சாகி வருவதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதே உண்மையான நிலவரம். பாடநூற்கள் எப்படியும் டிசம்பர் மாதம் (2011) வரை தவணை முறையில்தான் சென்றடையும்.
இப்பிரச்சினை குறித்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜுன் 08 ,2011 அன்று நடைபெற இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூட நீதிமன்றம் ஒதுங்கி விடக்கூடும். தற்போது வெளியிடப்பட்ட புத்தகங்களை திருத்திப் பயன்படுத்த உத்தரவிடும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. இதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளுமா எனத் தெரியவில்லை. சமச்சீர் கல்வி புத்தகங்களையும் பழைய புத்தகங்களையும் அரசியல் தலையீடு இல்லாத அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழு ஒப்பிட்டு ஆய்வு செய்வது எதைப் பின்பற்றுவது என முடிவுக்கு வருவதே நேர்மையான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் அதற்கான சாத்தியங்களே இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக