சனி, ஜூன் 04, 2011

வில்லூர் சாதிக் கலவரம் : துப்பாக்கிச் சூடும் அதன் பிறகும் உண்மை அறியும் குழு அறிக்கை

வில்லூர் சாதிக்கலவரம் : துப்பாக்கிச் சூடும் அதன் பிறகும்

உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                                      மதுரை
                                                                ஜூன் 4, 2011 

     மதுரை மாவட்டம், மதுரை - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தையும், மதுரை - தென்காசி நெடுஞ்சாலையிலுள்ள தி.கல்லுப்பட்டியையும் இணைக்கும் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள வில்லூர் கிராமத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் சுமார் 3500 குடும்பங்கள் அகம்படியர் (தேவர்) சாதியைச் சேர்ந்தவர்கள். தலித் குடும்பங்கள் (பறையர்கள் மற்றும்  தேவேந்திரர் எனப்படும் பள்ளர்கள்) சுமார் 200.  இதர சாதிகளைச் சேர்ந்த சில குடும்பங்களும் உள்ளன. தலித் குடும்பங்களின் எண்ணிக்கை முன்னர் அதிகம் இருந்ததாகவும் தற்போது தீண்டாமை சற்றே குறைவாக உள்ள நகர்ப்புறங்களை நோக்கி பலர் இடம்பெயர்ந்து விட்டதால் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அறிகிறோம். தேவேந்திரர் குடும்பங்கள் தற்போது 100க்கும் குறைவாகவே உள்ளதென்கிறார் அவ்வகுப்பைச் சேர்ந்த முருகன்.

     சென்ற மே 1 அன்று இரவு நடைபெற்ற சாதிப் பிரச்சினையை ஒட்டிய ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்ததும், 70 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டதும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தன. தொடர்ந்து அங்கு தலித் மக்கள் அச்சம் நிறைந்த நிலையில் வாழ்வதாகவும் எங்களுக்குச் செய்திகள் கிடைத்தன. இதை ஒட்டி உண்மை நிலையைக் கண்டறிய கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் குழு சென்ற மே 28 அன்று வில்லூர் சென்றது.

குழு உறுப்பினர்கள்:

1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,       
2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை,

      வெளியார் யாரையும் காவல்துறையினர் ஊருக்குள் அனுமதிக்காத நிலையில் மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் மற்றும் பேரையூர் துணைக் கண்காணிப்பாளர் திரு. அன்வர் ஷா ஆகியோரைத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று ஊருக்குள் சென்று இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினோம். வில்லூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஆய்வாளர் திரு. ம செல்வராஜிடம் வழக்கு விவரங்களை அறிந்துகொண்டோம்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி:

    மிக மோசமாகத் தீண்டாமை கடைபிடிக்கப்படும் கிராமமாக வில்லூர் உள்ளது. இதை நேரில் நாங்கள் உறுதி செய்து கொண்டோம். ஊருக்குள் உள்ள பொது வீதிகள் வழியாக தலித்கள் யாரும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வைத்திருக்கும் தலித் மக்கள் ஊருக்கு வெளியிலேயே வண்டியை நிறுத்தித் தள்ளி வரவேண்டும். தேநீர்க்கடைகளில் சமமாக உட்கார்ந்து தேநீர் அருந்த முடியாது. தனிக் குவளை அல்லது ப்ளாஸ்டிக் குவளையில்தான் அருந்த வேண்டும். இந்நிலையைத் தவிர்ப்பதற்கு தலித்கள் தேநீர்க்கடைக்கே போவதில்லை அல்லது பாத்திரத்தில் தேநீர் வாங்கி வந்து வீட்டில் அருந்துகின்றனர். ஊர்க் குளத்தில் ஒதுக்கப்பட்ட துறையில் ஓரமாகத்தான் குளிக்க வேண்டும். பேருந்துகளிலும் கூட சமமாக உட்காரக் கூடாது. ஒதுங்கி ஓரமாகத்தான் உட்கார வேண்டும். 12 பேர் கொண்ட சாதி இந்துக்களின் குழு இவற்றைக் கண்காணித்துக் கடுமையாகச் செயல்படுத்தி வருகிறது. செருப்பு மற்றும் வேட்டி அணிந்து வீதிகளில் செல்வதற்கும்கூட ஒரு சமயத்தில் தடை இருந்து வந்துள்ளது.
நாங்கள் ஊருக்குள் நுழைந்து சாலையோரத்திலிருந்த ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தவரிடம் பேசினோம். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அவர் தேவர் சாதியைச் சேர்ந்தவர். “வேற ஒண்ணும் இல்லீங்க. அவய்ங்க தெரு ஒரு மைல் தாண்டி இருக்கு. அங்கேயிருந்து வண்டியில ஏறி வரணுங்கிறாய்ங்க.” என்றார். வந்தால் என்ன என்று நாங்கள் கேட்டபோது அவருக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தும் காலம் காலமாகவும் அப்படி நடந்ததில்லை என்றார். பிறகு அவரே, ”எல்லோரும் அப்படியில்லே. அந்த ஒரு குடும்பமும் அவய்ங்க பங்காளிகளுந்தான் அப்படிப் பண்றாய்ங்க” என்றார்.

    அவர் குறிப்பிட்டது தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த முருகன் என்பவர் குடும்பத்தை. அந்தக் குடும்பம்தான் அந்தச் சமூகத்தில் சற்று வசதியானது. சாகுபடி, ரியல் எஸ்டேட், கிரானைட் தளத்துடன் கூடிய மாடி வீடு, மோட்டார் சைக்கிள், எல்.சி.டி. தொலைக்காட்சிக் கருவி, ட்ராக்டர் ஆகியவற்றுடன் கூடிய ஓரளவு வசதியான குடும்பம். முருகனின் சகோதரர் தங்க பாண்டியன் (24) ஆசிரியர் பயிற்சி முடித்தவர். அவர்களின் இந்த வசதியும், அதன் அடிப்படையிலான சுயமரியாதையும் சாதி இந்துக்களின் கண்ணை உறுத்தியதை யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

    சம்பவத்தன்று (ஏப்ரல் 30 மாலை) முருகன், திருச்செந்தூர் கோயில் செல்வதென முடிவு செய்துள்ளார். கள்ளிக்குடியிலிருந்த அவர் செல்போனைக் கொடுத்தனுப்புவதற்கென தனது தம்பி தங்கபாண்டியனை வரச் சொல்லியுள்ளார். அவசரம் என்பதால் அவர் டி.என் 58, இசட் 8080 என்கிற எண்ணுள்ள மோட்டார் சைக்கிளில் விரைந்துள்ளார். எனினும் அவர் வீட்டிலிருந்து சுமார் 100 மீ தொலைவிலுள்ள கருப்புசாமி தெருவிற்கு வந்தபோது சாதி இந்துக்களால் மறித்து நிறுத்தப்பட்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த தங்கபாண்டியன் வாகனத்தை விட்டுவிட்டு ஒடியுள்ளார். வாகனத்தை சாதி இந்துக்கள் தம் வசம் வைத்துக்கொண்டனர். தங்கபாண்டியன் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

     இங்கொன்றை நினைவு கூர்வது அவசியம். சென்ற செப்டம்பர் 2010ல் தங்கபாண்டியனுக்கு இதேபோல ஒரு அனுபவம் ஏற்பட்டது. அப்போதும் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதற்காகத் தாக்கப்பட்டுள்ளார். புகார் கொடுக்கக்கூடாது எனவும் மிரட்டப்பட்டுள்ளார். இதையொட்டி காவல்துறையினர் சமாதானக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். முருகனை இதில் பங்குபெற அழைத்தபோது அவர் பயந்துகொண்டு செல்லவில்லை.

    சமாதானக் கூட்டத்திற்கு வந்து தங்கள் முடிவுக்குக் கட்டுப்படவில்லை என்பதற்காக தேவர் சாதியினர் செப் 4, 2010 அன்று ஒரு பேருந்தை மறித்துப் பிரச்சினை செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்கம்போல ஒரு கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர். அதன்படி கிழக்குப் புளியம்பட்டி விளக்கு பகுதியில் தலித்களுக்குத் தனிப் பாதை அமைத்துக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பொது வீதிகளில் தலித்கள் வாகனத்தில் பயணிக்கக் கூடாது என்பதற்கு ஒரு நிர்வாக ஏற்பு வழங்கப்பட்டது. இதுபற்றி இந்து நாளிதழ் காவல்துறையிடம் விசாரித்தபோது, “இது நீண்ட நாட்களாக இருந்து வரும் பழக்கம். தலித்களே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பழக்கம். யாரும் அவர்களைத் தடுப்பதில்லை. அவர்களாகவே பொது வீதிகளில் வாகனங்களில் பயணம் செய்வதில்லை.’’ எனக் காவல்துறை சார்பாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது (பார்க்க: தி இந்து, செப் 16, 2010). எனினும் இவ்வாறு திட்டமிடப்பட்ட சாலைவழி சில சாதி இந்துப் பட்டாதார்களுக்குரியதாக இருந்ததால் அது சாத்தியமாகவில்லை. இது சென்ற ஆண்டு நிகழ்வு.

    இம்முறை காவல்துறை சரியாகச் செயற்பட்டுள்ளது. கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துள்ளார். தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை மறித்துப் பிரச்சினை செய்த பகத்சிங், கரந்தமலை, சமயன், பாலமுருகன், சதீஷ்குமார் என்கிற 5 சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டனர். அன்று மாலை சமாதானக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

   எனினும் சமாதானக் கூட்டத்தில் பெருந்திரளாகக் கூடிய சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்ட ஐவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி அடாவடியாகப் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கு மீறிப் போயுள்ளது. தாறுமாறாகப் பேசியுள்ளனர். இச்சமயத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சாதி இந்துக்களில் ஒரு தரப்பினர் முருகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளைத் தாக்கினர். முருகன் வீட்டு சலவைக் கற்தளம் மற்றும் அருகில் இருந்த தகரக் கொட்டகை எல்லாம் சேதமடைந்துள்ளன. முருகன், லட்சுமி, இருளப்பன் ஆகிய மூவர் வீடுகளுக்கு இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது.

    தடுக்க முயன்ற போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். போலீசார் பலர் காயம்பட்டதாகவும் கூறப்படுகிறது. கண்காணிப்பாளர், உதவிக் கன்காணிப்பாளர் ஆகியோரின் வாகனங்களும் சேதமாகியுள்ளன. வில்லூர் காவல் நிலையமும் தக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காது போன சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காளிமுத்து (18) என்பவர் காயமடைந்துள்ளார். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. முத்தையா, பழனி என மேலும் இருவரும் இத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர். போலீசார் அடித்துக் கூட்டத்தைக் கலைத்துள்ளதோடு 71 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவ்வளவு பேரும் சாதி இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீடுகள் தாக்கப்பட்ட மூன்று தலித்கள்,  தாசில்தார் முதலானோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் எட்டு வழக்குகள் (63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71/2011) இவர்கள்மீது பதிவு செய்யப்பபட்டுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 3 (1)-(10) கிளாஸ் 5, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு 3 (1), மற்றும் இ.த.ச பிரிவுகள் 147, 148, 307, 332 முதலான பிரிவுகளில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     சாதி இந்துக்கள் சார்பாக பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. சுப்புலட்சுமி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (72/2011). எனினும் இதன் அடிப்படையில் யாரும் கைது செய்யப்படவில்லை. திண்டுக்கல் பகுதி டி.ஐ.ஜி சஞ்ஜய் மாதூர், தென் மண்டல ஐ.ஜி மஞ்சுனாதா ஆகியோர் வில்லூர் வந்தனர். சுமார் 500 காவலர்கள் வில்லூரில் குவிக்கப்பட்டனர். இது போன்ற தீண்டாமை வடிவங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது என உயர் அதிகாரிகள் அறிவித்ததும் இதழ்களில் வந்தன.

      கிட்டத்தட்ட சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதம் கழித்து நாங்கள் வில்லூருக்குச் சென்ற போதும் யாரும் பிணையில் விடுதலை செய்யப்படவில்லை. எனினும் அடுத்தடுத்த நாட்களில் சிறையிலிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிணையில் வந்து கொண்டிருப்பதாக அறிகிறோம். குறிப்பிடத்தக்க அளவிற்குப் போலீஸ் பாதுகாப்பு இன்று வரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலித் பகுதியில் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலித் பகுதியில் முருகன், அவர் மனைவி பழனியம்மாள் முதலியவர்களைச் சந்தித்தோம். சம்பவத்தன்று போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதிருந்திருந்தால் நிச்சயம்  சில கொலைகள் விழுந்திருக்கும் என்றனர். சாதி இந்துக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் என்றைக்கும் தங்கள் குடும்பத்திற்கு ஆபத்து வரலாம் எனவும் அச்சம் தெரிவித்தனர். உரக்கப் பேகூட அச்சப்பட்டனர். அங்கு கடைபிடிக்கப்படும் தீண்டாமை வடிவங்களையும் விளக்கினர்.

   பஞ்சாயத்துத் தலைவர்களாகப் பெண்கள் உள்ள எல்லா கிரமங்களையும் போலவே வில்லூரிலும் திருமதி. சுப்புலட்சுமி தலைவராக இருந்தபோதிலும் அவரது கணவர் திரு. சக்திவேலுவே அங்கு தலைவராக மதிக்கப்படுகிறார். தங்கபாண்டியன் மறிக்கப்பட்டு வாகனம் கைப்பற்றப்பட்டது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், போலீசார் அடுத்த நாள் விசாரித்தபோது காளியம்மன் கொவிலில் வைக்கப்பட்டிருந்த வண்டியை எடுத்து ஒப்படைத்ததாகவும், ஐந்து பேரை விசாரிக்க வேண்டும் எனச் சொன்னபோது அவர்களையும் ஒப்படைத்ததாகவும் அவர் சொன்னார். விசாரிக்க அழைத்துச் சென்றவர்களைக் கைது செய்து விட்டதாகவும், மாலையில் பேச்சுவார்தை தடித்து இப்படி ஆகிவிட்டதாகவும் கூறினார்.

   வாகனத்தில் செல்லக்கூடாது போன்ற தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைப் பற்றிக் கேட்டபோது இதெல்லாம் ரொம்ப காலமாக வழிவழியாக வந்த பழக்கம் என்றார். மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை என்கிற பொருள் அதில் வெளிப்படையாக இருந்தது. வாகனங்களில் தலித்கள் செல்வது பிரச்சினை ஆகாமல் இருப்பதற்கான ஒரே வழி சென்ற ஆண்டு முடிவெடுத்தது போல தலித்களுக்குத் தனிச் சாலை அமைத்துக் கொடுப்பதுதான் என்றார். கிட்டத்தட்ட இதுவே அங்குள்ள சாதி இந்துக்களின் பொதுக் கருத்து எனலாம். 

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்:

1. 2010லும், 2011லும் காவல் துறையினர் மேற்கொண்ட அணுகல் முறைகளிலுள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. இம்முறை காவல்துறையினர் உரிய நடவடிக்கையைச் சரியாக எடுத்துள்ளனர். உயர் அதிகாரிகள் முகாமிட்டு இதுபோன்ற தீண்டாமைகளை சகித்துக் கொள்ள முடியாது என வெளிப்படையாக எச்சரித்ததும் பாராட்டத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகளில் இரு சாதிகளைச் சேர்ந்தவர்களையும் சமமாகக் கைது செய்வதே காவல்துறையின் வழக்கம். அவ்வாறின்றி இங்கு கலவரத்திற்குக் காரணமான தரப்பினர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய உயர் அதிகாரிகள் உள்ளூர் சாதிகளைச் சேர்ந்தவர்களாக அல்லாது வெளி மாநிலத்தவர்களாக இருப்பது இத்தகைய நடுநிலையான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக உள்ளது.

2.   சூழல் கொந்தளிப்பாக இருந்தும், போலீஸ் மேலேயே தாக்குதல் நடத்தப்பட்டும் கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் ஆத்திரப்படாமல் பொறுமையாகச் செயல்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும் யாரும் சாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் இது போன்ற ஒரு சாதிக் கலவரத்தின்போது அன்று அங்கு பதவியில் இருந்த கண்காணிப்பாளர் எல்லாம் முடிந்தபின் வந்து எந்த எச்சரிக்கையும் செய்யாமல் இருவரைச் சுட்டுக் கொன்றது இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

3. தலித் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது. சாதி இந்துக்கள் மத்தியில் கடும் வன்மம் நிறைந்துள்ளது. காவல்துறைப் பாதுகாப்பு குறைக்கப்படும் பட்சத்தில் தலித் மக்கள், குறிப்பாக முருகன் குடும்பம் தாக்கப்படும் வாய்ப்புள்ளது.

4. இவ்வளவு நடந்த பின்னும் எந்த அரசியல் கட்சியும் இது குறித்து எந்த அக்கறையும் காட்டாததும், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடந்துகொள்வதும் கண்டிக்கத்தக்கது.

5. பல ஆண்டுகளாக மிக மோசமான தீண்டாமை ஒதுக்கல்கள் இங்கே நடைமுறை யிலிருந்தும் 1989ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் 1995ம் ஆண்டு விதிமுறைகள் ஆகியவற்றின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இப்போதுதான் இச்சட்டம் முதன்முறையாகப் பயன் படுத்தப்படுகிறது என்று அறிகிறோம். இதற்கு யார் பொறுப்பாளர்கள்? ஒரு பக்கம் இச்சட்டத்தை வன்மையாகக் கடைபிடிக்காத அரசு, இன்னொரு பக்கம் இச்சட்டத்தைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்காத அமைப்புகள் இரண்டும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

6. எக்காரணம் கொண்டும் தலித் அமைப்புகளுக்குத் தனிப் பாதை அமைத்துக் கொடுப்பது இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. மாறாகக் காலங் காலமாக நடைமுறையிலுள்ள ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு ஏற்பு வழங்குவதாகவே இது அமையும். பொதுப் பாதைகளில் எல்லோரும் சென்று வருகிற நிலையை எற்படுத்தும் நோக்கிலேயே அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டும். 

7. ஒரு பக்கம் தீண்டாமைக்கெதிரான இன்றைய சட்டங்களை வன்மையாகப் பயன்படுத்துதல், இன்னொரு பக்கம் தலித் மக்களுக்கான பாதுகாப்புகளை மேம்படுத்துதல், இவற்றோடு இணைந்து தொடர்ந்து அமைதிக் கூட்டங்கள் மூலமாக இரு தரப்புகளுக்குமிடையிலான உரையாடல்களை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

8. இப்பகுதிகளில் நடைமுறையிலுள்ள தீண்டாமை வடிவங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்களும் இம்முயற்சிகளில் கவனம் கொள்ள வேண்டும்.

9. 1990களில் வில்லூரில் ஒரு காவல் நிலையம் ஏற்படுத்த அரசு அறிவிப்பு செய்தபோதே சாதி இந்துக்கள் இதை எதிர்த்துள்ளனர். இன்றளவுக்கும் இக்காவல் நிலையம் எந்த வசதியும் இன்றி அமைந்துள்ளது. எல்லாவிதமான அகக் கட்டுமானங்களுடனும் அமைந்த காவல் நிலையம் ஒன்று தலித் மக்கள் வசிக்கக் கூடிய கிழக்குத் தெருவிற்கு அருகாகக் கட்டப்பட வேண்டும்.

நன்றி:

    வில்லூருக்கு நாங்கள் வந்தவுடன் தடுக்கப்பட்டபோதும் திரு. அஸ்ரா கார்க்கைத் தொடர்பு கொண்டு பேசியவுடன் அனுமதிக்கப்பட்டோம். திரு. அஸ்ரா கார்கிற்கும் துணைக்கண்காணிப்பாளர் திரு. அன்வர் ஷாவிற்கும் எங்கள் நன்றிகள். முந்தைய நாள் (மே 27) அருகிலுள்ள வத்திராயிருப்பு  புதுப்பட்டிக்கு இதே போன்ற ஒரு ஆய்வுக்காக நாங்கள் சென்றபோது விருதுநகர் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரனால் 15 நாட்கள் வரை உள்ளே செல்லக் கூடாது எனத் திருப்பி அனுப்பப்பட்டோம். எங்கள் நோக்கம் நடுநிலையாய் நின்று ஆய்வு செய்து சமூக ஒற்றுமைக்கு வழி செய்வதே. பிரச்சினை ஓரளவு அடங்கிய பின்புதான் புதுப்பட்டிக்குச் சென்றோம். அப்படியும், “இப்போது சென்றால் காவல் துறைக்கு எதிராகத்தான் மக்கள் கருத்துச் சொல்வார்கள்’’ எனச் சொல்லி நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டோம். பதினைந்து நாள் கெடுவிற்குப் பின் மீண்டும் சென்று ஆய்வு செய்து, அங்கு நீண்ட நாட்களாக நடந்து வரும் இரு தலித் பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் குறித்த எங்கள் அறிக்கை வெளியிடப்படும்.



 
  
தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020. செல்: 94441 20582.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக