புதன், ஜூன் 29, 2011

முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.

முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.

                                                                                      - மு. சிவகுருநாதன்


           60 ஆண்டுகளுக்கு மேலான சுதந்தர இந்தியாவில் இந்திய அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.  எனவேதான் மத்திய அரசு அடிக்கடி நிறைய உரிமைச் சட்டங்களை இயற்றி வருகிறது.  ஆனால் இதுவும் ஒரு ‘பே­ஷன்’ போலாகிவிட்டது. 


            இதுவரை இயற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டங்களில் ஓரளவிற்கு பயன்பாட்டுக்கு வந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 ஆகும்.    இச்சட்டத்தை மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மீறுவது வெளிப்படையாகத் தெரிந்தும் சட்டம் இன்னும் ஏட்டளவில் மட்டும் இருப்பது வேதனையளிக்கிறது.


            ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பி.ஜே. தாமசை கடும் எதிர்ப்பிற்கிடையே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்து உச்சநீதிமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.  அதுபோல ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.  தமிழகத்திலும் பல்வேறு புகார்களுக்கு உள்ளான முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  ஸ்ரீபதி மாநிலத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர்களைப் போன்ற முன்னாள் அதிகாரிகள் இச்சட்டத்தை மீறும் இந்நாள் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.  மேலும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.


            தமிழக அரசின் பல்வேறு துறைகள் இச்சட்டத்தை துளி கூட மதிப்பது கிடையாது.  இதில் தமிழக அரசின் வருவாய்த் துறைக்கு முதலிடம் வழங்கலாம்.  வேறு பல துறைகள் தகவல்கள் என்ற பெயரில் தவறான தகவல்களை அளித்தும் இச்சட்டத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.   இச்சட்டத்தின் கீழான மேல்முறையீடுகளை உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையங்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். 


            தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள், குழந்தைகள், மகளிர், சிறுபான்மையினர் ஆணையங்கள், தகவல் ஆணையம், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் போன்ற பல அரசியல் சட்ட அமைப்புக்களுக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளை நியமனம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.  இதன் மூலம் அடிப்படை உரிமைகளை பாமர மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை மத்திய-மாநில அரசுகளே தடுத்து விடுகின்றன.


            தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இடையூறாகவே கருதுகின்றன.  எப்படியாவது இச்சட்டத்தை முடக்கிப் போட தங்களால் இயன்ற வேலைகளை அவை செய்து வருகின்றன.  இச்சட்டத்தின் மூலம் இவர்களின் பல்வேறு முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.   இச்சட்டத்திற்குட்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிலளிக்க மறுப்பது ஒரு புறமிருக்க அடிக்கடி இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்து சட்டத்தை பலவீனப்படுத்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. 


            ஏற்கனவே தேசப் பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி ராணுவம், இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டுள்ளது.    இத்தகைய காரணங்களால் இங்கு நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வராமற்போய் விடுகின்றன.    தற்போது சி.பி.அய்.க்கும் இச்சட்டத்திலிருந்து விலக்களிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.


            சி.பி.அய்.இன் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளதென்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே உண்டு.   அதன் செயல்பாடுகள் பலவும் இக்குற்றச்சாட்டை உறுதி செய்யக் கூடியவை.   பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பு பல்வேறு கால கட்டங்களிலும் விமர்சனத்திற் குள்ளாக்கப்பட்டுள்ளது.    இத்தகைய அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிக்கும் முடிவை இன்றையச் சூழலில் அரசு எடுத்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.


            விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் இன்று பன்னாட்டு ரகசியங்கள் வெளிவருகின்ற, தகவல் தொழில் நுட்பங்கள் மலிந்த சூழலில் வழக்கின் விவரங்கள் வெளியானால் அவ்வழக்கு பாதிப்படையும் என்று அரசு செல்லும் விளக்கங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை.   பல அறிக்கைகளும் இங்கு முன்கூட்டியே வெளியாவது அடிக்கடி நடப்பதுதானே!   இன்றைய உலகில் எதையும் ரகசியம் என்று பாதுகாத்து விட முடியாது.


            2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சி.பி.அய்-இன் செயல்பாட்டை வைத்து அதன் நேர்மையை அளவிட முடியாது.  இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த வழக்கில் கூட சி.பி.அய். மீது கண்டங்கள் உண்டு.  இன்னும் துணைக் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் அது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது.  எனவே தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.அய்-யை விலக்களித்திருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.


            தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதில் பிரதமர் அலுவலகம் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது.   தேசிய ஆலோசனைக் குழுவின்  (NAC- National Advisory Committee)  தலைவரான சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், செலவுகள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வழங்க மறுப்பது சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது. 


            2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், இஸ்ரோ எஸ் பாண்ட் ஊழல் போன்ற பிரதமர் அலுவலகம் தொடர்புடைய எந்த ஊழலிலும் பிரதமருக்குத் தொடர்பில்லை, அவர் கறை படியாதவர், அவருக்கு இணையான பரிசுத்தமானவர் உலகில் யாருமில்லை என்று தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கூட இவ்வளவு ஆதரவுப் பிரச்சாரம் இல்லையென்று கருதுகிறேன்.  அமெரிக்கச் சார்பாளரான மன்மோகன் சிங்குக்கு உள்ள ஆதரவுப் பிரச்சாரம் நம்மையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது.  லோக்பால் அதிகார அமைப்பிற்குள் பிரதமரை உள்ளடக்கக் கூடாதென முன்னாள் காங்கிரஸ் ஆதரவு போலிச் சாமியார் யோகா குரு ராம்தேவ், தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்று மன்மோகனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. 


            லோக்பால் மசோதா பிரச்சினையில் முன் நிற்கும் அன்னா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளும் நம்பகமானவர்கள் இல்லை.  ஒட்டு மொத்த இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இல்லை.   இவர்கள் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினரிடையே மட்டும் செல்வாக்கு பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.   லோக்பால் மசோதா வந்து விட்டால் இந்தியாவில் ஊழலே ஒழிந்து விடும் என்றெண்ணுவது நடுத்தர வர்க்க மனோபாவமன்றி வேறில்லை.  இவர்களுடைய வலதுசாரி ஆதரவும் சாய்வும் பா.ஜ.க.வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றப் பயன்படுமே தவிர ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.


            அன்னா ஹசாரே குழுவினருக்கு பெருகி வரும் ஆதரவை மடை மாற்ற காங்கிரஸ் யோகா குரு ராம்தேவைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்து, அதில் தோல்வியடைந்ததால் ராம்தேவின் உண்ணாவிரதத்தை இரவோடு இரவாக காலி செய்தது மட்டுமல்லாமல் சி.பி.அய்., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைக் கொண்டு ராம்தேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்ய மிக வேகமாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இந்தத் துறைகளும் அரசும் இவ்வளவு நாட்கள் என்ன செய்துகொண்டிருந்தன?.    யோகா ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கும்பல்கள் அமோக ஆதரவளித்ததுடன் இந்துத் தீவிரவாதி பிரஞ்யாவும் அவருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது அவரது அரசியலை வெளிக் கொணர்ந்தது.


            நாடு சுதந்தரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழல் வழக்குகளில் யாருக்கும் எந்த தண்டனையும் வழங்கப்பட்டதில்லை என்ற போது இந்த லோக்பால் சட்டம் மட்டும் என்ன செய்து விடப்போகிறது?  இங்கு உரிமைச் சட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் அதற்கும் ஏற்படும்.

           அடுத்ததாக 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளின் தொடக்கக் கல்வியை உறுதி செய்ய ‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009’ இயற்றப்பட்டது.  இச்சட்டம் ஏப்ரல் 01, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இந்த உரிமைச் சட்டமும் எந்த மாநிலத்திலும் முறையாக அமல்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை.  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இதற்கென குழந்தைகள் ஆணையங்கள் மற்றும் இச்சட்டத்தைச் செயற்படுத்த ஏதுவான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. 


            இச்சட்ட அமலில் உள்ள 2-வது ஆண்டிலும் கூட இந்நிலை நீடிப்பது வருந்தத்தக்கது.  இந்தக் கல்வியாண்டு தொடங்கியதும் சமச்சீர் கல்வி குறித்த வீண் பிடிவாதத்திலும் பாடத்திட்டம், பாடநூற்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்ற முடிவை எதிர்பார்த்து அனைத்துத் தரப்பினரும் காத்துக் கொண்டுள்ளனர்.  நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு கல்விக் கட்டணத்தை வரையறை செய்தும், தனியார் பள்ளிகள் இன்னும் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உரத்த குரல் கொடுக்கின்றர்.  இதற்கும் தமிழக அரசு செவி சாய்த்து கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடும்.


            தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணம் கட்டுவோருக்கு தனிவகுப்பும் நிர்வாகம் கேட்கும் கட்டணத்தை செலுத்தியோருக்கு தனி வகுப்பும் நடத்தப்படுகின்றன.  இந்த நவீன தீண்டாமையை கேள்வி கேட்க அரசு எந்திரம் தயராக இல்லை.  இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 25% இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனச் சொன்ன கல்வி உரிமைச் சட்டம் குறித்து பேசத்தான் ஆட்கள் இல்லை.   அப்படி பேசினாலும் அவை மத்திய - மாநில அரசுகளின் காதுகளுக்கு விழப் போவதில்லை.   பிறகு ஏன் இப்படி உரிமைச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?  இப்படியெல்லாம் சட்டம் இருப்பதாக சொல்லிக் கொண்டு உலக அரங்கில் வல்லரசு என்றும் மக்களின் உரிமைகளை மதிக்கப்படக் கூடிய நாடென்றும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பான்மை வேண்டுமென்றும் அடம் பிடிக்க மட்டுமே பயன்படும்.


            இந்தியாவின் தானியக் களஞ்சியங்களில் எவ்வளவு மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கெட்டழிந்தாலும் உணவு உரிமைச் சட்டம் பட்டினிச்சாவு களையும் வறுமையையும் தடுத்து விடப்போவதில்லை.    ஆனாலும் மத்திய அரசு உணவு உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரும்.  இதன் மூலம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உணவு உரிமைகள் கூட கேள்விக்குறியாக்கப்படும்.


            அடுத்ததாக மத்திய அரசு கொண்டு உத்தேசித்துள்ளது நீதி பெறும் உரிமைச் சட்டமாகும்.  இதற்கான வரைவுச் சட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.  மூன்றாண்டுகளுக்கு மேல் நிலுவையிலிருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பைசல் செய்வது என்ற பெயரில் கிட்டத்தட்ட தள்ளுபடி செய்வதையே இந்த உரிமைச் சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.  இது யாருடைய உரிமையைப் பாதுகாக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.


            இன்று பல்வேறு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.  இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.  முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட காவல்துறையின் அலட்சியங்கள், நீதிமன்ற அமைப்பிலுள்ள குறைபாடுகள், ஆட்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் அந்த வகையில் உள்ளன. 

            நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் மற்றும் பணியாளர்களை நியமித்தல், விரைவு நீதிமன்றங்களை அமைத்தல், நடுவர் மன்றங்கள் அமைத்து இரு தரப்பையும் அழைத்து பேசி முடிக்கக் கூடிய வழக்குகளை விரைந்து தீர்த்தல் போன்ற பல்வேறு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதை கைவிட்டு விட்டு மத்திர அரசு நீதி பெறும் உரிமைச் சட்டம் என்றதொரு எதற்கும், எவருக்கும் பலன்தராத ஒரு சட்டத்தை இயற்றுவதிலேயே மும்முரம் காட்டுவது சரியல்ல.


            இங்கு ஏற்கனவே அமலில் உள்ள உரிமைச் சட்டங்களின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகளை அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும்.  இவற்றைக் கண்காணிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்காத அரசு, அரசு அமைப்புகளும் இத்தகைய உரிமைச் சட்டத்தின் மூலம் மட்டும் வழங்கி விட முடியும் என எதிர்பார்ப்பது அறிவீனம்.


            இதற்கான நடவடிக்கைகள் மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் எடுக்கப்பட வேண்டும்.  அதுவரை உரிமைச் சட்டங்களினால் எவ்வித பலனும் விளையப் போவதில்லை.  அரசு மக்கள் நல அரசாக செயல்படாத வரையில் உரிமைச் சட்டங்கள் வெறும் கானல் நீரே. 
பின்குறிப்பு:-
             இதை எழுதிக்கொண்டிருக்கும்போது  வழக்கறிஞர் எஸ்.சத்திய சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்து  தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு கட்டாய இலவச கல்வித்திட்ட விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கையாக வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு  ஆணையிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக