புதன், ஜூன் 22, 2011

ஆசிரியர்கள் என்ன கொத்தடிமைகளா?

ஆசிரியர்கள் என்ன கொத்தடிமைகளா?   

                                                                                   -மு.சிவகுருநாதன் 

          சமச்சீர் கல்விக்கெதிராகவும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கு எதிராகவும்  தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழக அரசு தற்போது ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நினைத்து முதல் மற்றும் ஆறாம் வகுப்புப் பாடநூற்களில் கிழிக்கும்,ஒட்டும்,அடிக்கும்,திருத்தும் வேலைகளை வாங்கிவருகிறது. இது வன்மையாக கண்டிக்கவேண்டிய ஒன்றாகும்.

           ஆசிரியர் இயக்கங்கள் இதைப்பார்த்துக்கொண்டு வாய்மூடி மவுனமாக இருக்கின்றன. ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைகிறேன் என்று சொல்லிக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நபர் குழு (!?)  வின் பாதிப்புக்களை கண்டும் காணாததுபோல் இவ்வியக்கங்கள்  இருந்தன. அதற்குக் காரணம் அனைவரும் அறிந்ததுதான். வரப்போகும் சட்ட மேலவை உறுப்பினர் (MLC )பதவிக்காக சங்க உறுப்பினர்களை இவர்கள்  பணயம் வைத்தனர்.

        ஆனால் இப்போது சட்டமேலவை இல்லை என்றாகிவிட்டது .இனி எந்தப் பதவியும் கிடைக்காது என்பது உறுதியான நிலையிலும் பேசா மடந்தைகளாக இருப்பது கேவலமானதாகும்.   இதுவரை நடந்துவருகின்ற சமச்சீர்கல்வி விவகாரங்களில் எவ்வித கருத்தையும் கூறாமல் இவ்வியக்கங்கள் அமைதி காப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால்தான் அரசு இந்த கிழிக்கும் வேலைகளில்  ஆசிரியர்களையே ஈடுபடுத்திருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

        சமச்சீர்கல்விப் பாடபுத்தகங்கள் தரமற்றவை என்று அரசு சொல்லிவரும்  இவ்வேளையில் சில இயக்கங்கள் சந்தடிசாக்கில் செயல்வழிக்கற்றல் முறையை ரத்து செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  செயல்வழிக்கற்றல் முறையை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சமச்சீர்கல்வியே கேள்விக்குறியாகியுள்ள இந்நிலையில் அதைப்பற்றி பேசுவதில் பொருளில்லை. 

         முந்தைய கருணாநிதி அரசு மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்றார்கள். சமச்சீர்கல்வியை ஆதரிக்கிறோம் என்றும் சொன்னார்கள். பாடநூற்கள் உலகத்தரமாக இல்லை; எனவே அதை மாற்றவேண்டும் என்பதே எங்களது  நோக்கம் என்றுகூட சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன?
       கருணாநிதியின் பெயர் குறிப்பிடப்படும் பக்கங்கள்  மற்றும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையை நீக்குவது  என்ற பெயரில் அதை மட்டுமல்லாது, தான்தோன்றித்தனமாக அப்துல் ரகுமான் கவிதை, பாரதிதாசன் ஆத்திச்சூடி, ஔ -எழுத்து அறிமுகம், சூரிய கிரகணம், சட்டக்காந்தம், குழந்தைகளுக்காக வரையப்பட்ட படங்கள், தமிழ்நாடு வரைபடம், தமிழ் மாதங்களைச் சொல்லும் பாடல் என்று பல்வேறு பக்கங்கள், தாள்களை நீக்கும், கிழிக்கும், அழிக்கும் வேலைகளை தமிழக அரசு செய்துகொண்டுள்ளது.

             தமிழக அரசு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதற்கு நேரெதிராக முந்தைய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியும் சமச்சீர்கல்வியின் மீது கொண்டுள்ள வெறுப்பும் மேற்கண்ட பல்வேறு நடவடிக்கைகளிருந்து தெரியவருகிறது. தனியார் பள்ளி முதலாளிகளான கல்விக் கொள்ளயர்களுடன் தமிழக  அரசு ஏற்படுத்திக்கொண்டுள்ள கூட்டணியை  நிருபிக்க சமச்சீர்கல்வியை ஆராய அரசு நியமித்த குழுவே சான்று.

        சமூகத்தைப் பாதிக்கும் இந்நிகழ்வுகளை கண்டும் காணாததுபோல் இருப்பது அறியுடைமை ஆகாது. ஊடகங்களும் தமிழ் அறிவுலகமும் இந்த அநியாயத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கவேண்டும். 
11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் அரசு பாடத்திட்டம்,பாடநூற்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளி கல்விக்கொள்ளையர்கள் 1 முதல் 10 வகுப்பு வரை   உள்ள பாடங்கள் மட்டும் தரமற்றவை என்று சொல்லும் இரட்டைவேடத்தை அம்பலப் படுத்தவேண்டும். இதற்குத் துணைபோகும் ஜெயலலிதாவின் அரசையும் கண்டிக்கவேண்டியது சமூக உணர்வாளர்கள் அனைவரின் பொறுப்புமாகும்.

       தமிழக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்கும், பழிவாங்கும் என்று இனியும் அமைதி காக்காமல் மாணவர்கள் மற்றும் சமூகம் குறித்தான தங்களது அக்கறையை உடன் வெளிப்படுத்தவேண்டியது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் இன்றியமையாத கடமையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக