வியாழன், ஜூன் 30, 2011

இன்னும் இடித்து முடிக்கப்படாத ஓர் அடிமைச்சின்னம்!

இன்னும் இடித்து முடிக்கப்படாத ஓர் அடிமைச்சின்னம்!   

                                                                           -மு.சிவகுருநாதன் 
    


        திருவாரூரிலிருந்து  திருத்துறைப்பூண்டி  சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஒருவேளை நீங்கள் இதை கவனித்திருக்கக்கூடும். 
திருவாரூரிலிருந்து 10  கி.மீ.தொலைவில் மாவூரில் ஒரு பெரிய குளத்தின் நடுவே ஓர் சிறிய மாளிகையும் அதை சென்றடைவதற்கு எதுவாக இருபுறமும் நீண்ட பாலமும் கொண்ட மாவூர் சர்மாவின் பங்களாதான் இது.

        தஞ்சை மாவட்டந்தோறும் இது மாதிரியான நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களை ஏதேனும் ஒரு வடிவில் நாம் காணமுடியும். அதுவும் கீழத் தஞ்சை என்றழைக்கப்படும் தற்போதைய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பல பண்ணையார்களின் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு ஆட்ப்பட்டவை. 

         பி.எஸ்.ஆர். போன்ற கம்யூனிஸ்ட் தோழர்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக சாணிப்பால், சவுக்கடி ஆகிய எண்ணி லடங்காத கொடுமைகள் முடிவுக்கு வந்தன. இதற்கு இம்மக்கள் கொடுத்த விலை மிக அதிகம்; உயிர்ப்பலிகள் ஏராளம்.  

           இக்கொடுமைகளை அனுபவித்த பலர் இன்னும் அக்கொடிய நினைவுகளுடனே உள்ளனர். மாவூர் சர்மாவுக்கு வேண்டுமானால் இது பகட்டை,ஆடம்பரத்தை வெளிக்காட்டும் அம்சமாக இருக்கலாம். சாதீய, பண்ணையடிமைக்கொடுமைகளை அனுபவித்த அடித்தட்டு மக்களுக்கு இது ஓர் அடிமைச்சின்னமே. 
         சில மாதங்களுக்கு முன்பு இந்த மாவூர் சர்மா பங்களாவின் பாலப் பகுதிகள் இடிக்கப்பட்டது.  மையத்திலுள்ள சொகுசு அறை மட்டும் இன்னும்  இடிக்கப்படாமல் எஞ்சியுள்ளது. இந்த அடிமைச் சின்னத்தின் மிச்சங்களும் கூடிய விரைவில் இடிக்கபடுவது நம்  மனத்திற்கு மகிழ்வளிக்கும்  விஷயமாக இருக்கும்.

         நவீன உலகிலும் எண்ணற்ற அடிமைச் சின்னங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தன்குடும்பத்தின் மூன்று பேருக்காக  மும்பையில் 4000 கோடி ரூபாயில் கட்டியுள்ள மாளிகையும் இந்தியாவின் அடிமைச்சின்னமே. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் மற்றவர்களுக்கு முன்னுதாரமாக  செயல்பட வேண்டுமென முகேஷ் அம்பானிக்கு அறிவுரை சொல்லும் ரத்தன் டாட்டா என்ன செய்துகொண்டுள்ளார் என்பது  உங்களுக்குத் தெரியுந்தானே! 

         மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மார்க்சிஸ்டுகள் ரத்தன்  டாட்டாவிற்கு  வாங்கிக்கொடுத்த விவசாய நிலங்களை மீண்டும் அவ்விவசாயிகளுக்கே   வழங்குவதென அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி முடிவெடுக்கிறார்.  அம்மாநில அரசு எடுத்த முடிவிற்கு தடை வாங்குவதற்காக ஒவ்வொரு நீதிமன்றமாக படியேறும் ரத்தன் டாட்டா யாருக்கு முன்னுதாரணமாக இருக்கப்போகிறார்? 

        ஆங்கிலேயர்களின் அடிமைச் சின்னங்கள் தகர்க்கப்படவேண்டுமென சிலர் இன்னும் சொல்லிக்கொண்டுள்ளனர். அதையும்விட கொடிய சாதீய, நிலப்பிரபுத்துவ, முதலாளிய, இந்துத்துவ அடிமைச் சின்னங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இவைகளும்  தகர்க்கப்ப்படும்போதுதான் நாட்டில் சமத்துவம் நிலவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக