சனி, ஜூன் 11, 2011

சமச்சீர் கல்வி: அரசு இன்று முடிவு

சமச்சீர் கல்வி: அரசு இன்று முடிவு

           சென்னை, ஜூன் 10: 
 
        சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சனிக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.  
 
         சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 3 மணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.  
 
      இந்தத் தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு சமச்சீர் புத்தகங்களை மீண்டும் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாகத்
தெரிகிறது.  
 
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியது: 
 
      சமச்சீர் கல்வி சட்டத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் சனிக்கிழமை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதன்பிறகே, இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் ஜூன் 15-ல் திறக்கப்படும் என்ற அறிவிப்பில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  
 
       பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதற்காக 6.5 கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  சமச்சீர் கல்விப் பாடத்திட்டம், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  பழையப் பாடத்திட்டத்தின் படி, புதிதாகப் புத்தகங்களை அச்சிடுவதற்காக பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  
 
      உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, பழையப் பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சிடுவதிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.  பழையப் பாடத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்துக்கும் குறைவான புத்தகங்களே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஜூன் 15-ம் தேதிக்குள் ஒரு வகுப்புக்குக் கூட புத்தகங்கள் முழுமையாக அச்சிட்டு வழங்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
     பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 65 லட்சம் புத்தகங்கள் அச்சிடுவதற்கு முன்னுரிமை வழங்கி பணிகள் நடைபெற்று வந்தன.  புத்தகங்களை பைன்டிங் செய்வதற்கு போதிய ஆள்கள் இல்லாதது, பதிப்பாளர்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த வேகத்தில் பணிகள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.  
 
       ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மொத்தமாக 6.5 கோடி புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதம் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.  தயாராக உள்ள சமச்சீர் பாடப்புத்தகங்களை இந்த ஆண்டு பயன்படுத்தினால் மட்டுமே மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 
      சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள தமிழ்ப் புத்தகங்களால் மட்டுமே சர்ச்சை எழுந்துள்ளது.  எனவே, இதில் ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கிவிட்டோ அல்லது தமிழ்ப் பாடப்புத்தகங்களை மட்டும் மீண்டும் அச்சிட்டோ பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கோருகின்றனர்.
 
நன்றி:- தினமணி  11.06.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக