செவ்வாய், ஜூன் 14, 2011

சமச்சீர் கல்வியை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.

சமச்சீர் கல்வியை உறுதி செய்த உச்சநீதிமன்றம். 
                                                                 
                                                                    -மு.சிவகுருநாதன் 



        தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்ற கல்வியாண்டில் (2010 -2011 )அறிமுகம் செய்யப்பட்ட    சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டிலும் , முதல்  மற்றும் ஆறாம் வகுப்புகளில் தொடர வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. அரசின் மேல் முறையிட்டு மனு மீது விசாரணை நடத்திய  விடுமுறை கால நீதிபதிகளான  சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கினர். இதை   சமச்சீர் கல்விக்கு ஆதரவான தீர்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
  
       தமிழக அரசின்  தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் 9 பேர் கொண்ட நிபுணர்  குழு என்ன மாதிரியான அறிக்கை அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தமிழக அரசு அதிகாரிகள் அரசுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள். கல்வியாளர்கள் என்ற போர்வையில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுடன் மெட்ரிக் பள்ளி கல்வித்தந்தைகள் (!?) இடம் பெறுவர். NCERT பிரதிநிதிகள் ஏதேனும் கருத்து சொன்னால் உண்டு.ஆனால் அவை ஏற்கப்படுமா என்பது சந்தேகமே.

       கல்வி சமமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையை உச்சநீதிமன்றம்  இத்தீர்ப்பின் மூலம்  உறுதிசெய்துள்ளது. நான்கு கல்விவாரியங்களில் இரண்டு வகுப்புகளில் ஒரே பாடம் எஞ்சிய 8 வகுப்புக்களுக்கு வேறு பாடத்திட்டம்,பாடப்புத்தகம் என்று நீதிமன்றம் முரண்பட்ட தீர்ப்பு வழங்காது என நம்பலாம்.

  
      முதல் மற்றும் ஆறாம் வகுப்புக்களில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம், பாடநூற்கள் ஆகியவற்றை அனுமதித்துவிட்டு பிற வகுப்புப் 
பாடத்திட்டம், பாடநூற்களை மட்டும் ஆய்வு செய்வதென்பது பெரிய முரணாக இருக்கிறது. நீதிமன்றங்கள் அரசுக்கு எதிரான வழக்குகளில் பெரும்பாலும் மென்மையான போக்கைக் கடைபிடிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளன. அதைப்போல இந்த வழக்கையும் கருதவேண்டியுள்ளது.   
      மத்திய அரசிடம் மோதல்போக்கை கடைபிடிக்கப் போவதில்லை என்று தில்லியில் அறிவித்துவிட்டு வாக்களித்த அப்பாவி பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஏன் மோதல் போக்கை கையாள்கிறார் என்பதுதான் விளங்கவில்லை. 
ஜெ.ஜெயலலிதாவிற்கு தவறான வழிகாட்டல் இருப்பதை நாம் அவதானிக்கமுடிகிறது.
        நிபுணர்  குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருவார காலமும்   அந்த அறிக்கையின் மீது  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கஒரு வார காலக்கெடுவும்   உச்சநீதிமன்றம்  வழங்கியுள்ளது. நமக்கு  ஏற்கனவே பள்ளிகள் திறக்க இரு வாரம் காலம் கடத்தியாகிவிட்டது. இனியும் 3 வாரங்கள் வீணடிப்பது மாணவர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரையும்   பாதிக்கும். 

       இதுவரை 10 வேலை நாட்கள் வீணாகியுள்ளது. மொத்தமாக 25  வேலைநாட்கள் பாழாகும். அதை சனிக்கிழமைகளில் ஈடு செய்தாலும் பாதிப்பு இல்லாமற்போகாது. இனி வரப்போகும் வடகிழக்குப்பருவமழை காலகட்டத்தில் கனமழையால் பலநாட்கள் விடுமுறை அளிக்கவேண்டிவரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசுக்கு இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்வது யாரென்பதுதான் தெரியவில்லை.

       சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால் அரசு  மகிழும். ஆனால் சமச்சீர்கல்விக்கு ஆதரவாக  தீர்ப்பு வருமேயானால் அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.அப்போது இன்னுமொருவாரம் மாணவர்கள் காத்திருக்கவேண்டும்.


           சமச்சீர்கல்வி பாடநூற்களை பயன்படுத்துவதென்றால்  எந்த சிக்கலுமில்லை. பழைய பாடநூற்கள் என்றால் அதை அச்சிட்டு வழங்க பல மாதங்கள் ஆகலாம். நீதிமன்றத்தில் வேண்டுமானால் அச்சிட்டப்பட்டுவிட்டதாக பொய் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று.


        நாடே இவ்வளவு பிரச்சினைகளில் சிக்கித்தவிக்க  ஆசிரிய இயக்கங்கள் என்னசெய்து கொண்டிருக்கின்றன? சமச்சீர் கல்வி சிக்கல் குறித்து எந்ததொரு இயக்கங்களும் சரிவர பேசவில்லை என்பது  கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயக நாட்டில் யாரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தத் தயங்குவது மிக மோசமான நிலையாகும்.

          நீதிமன்றங்கள் சமச்சீர்கல்விக்கு ஆதரவான தீர்ப்பு அளிப்பதைத் தவிர  வேறுவழியில்லை என்றே கருதவேண்டியுள்ளது. எதிரான தீர்ப்பை வழங்கினால் அது தன் முந்தைய தீர்ப்புகளிருந்து மீறியதாகவே இருக்கும்.

       இந்த மேல்முறையீட்டை    செய்யாமல் இருந்தால் அனைத்து  சிக்கல்களுக்கும்   நல்ல தீர்வு கிடைத்திருக்கும். எதற்க்கெடுத்தாலும் வழக்குப் போடுவதையே வழக்கமாகக் கொண்ட ஒருவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக