சமச்சீர் கல்வி: 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, ஜூன் 14-
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், பழைய கல்வி முறை தொடரும் என்று அரசு அறிவித்தது.
இதனிடையே, தமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நன்றி:- தினமணி 14.06.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக