கல்வி உரிமையும்
களவு போன கல்வியும்
(நூலறிமுகம்… தொடர்: 017)
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது
மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த
நூல்கள் குறித்த பதிவு.)
இவனுக்கு அப்போது மனு என்று பெயர்
“சின்னச் சின்ன வாக்கியங்களில்
தனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை அவர் வடித்து வைக்கிறார். அனைத்துக்
கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும் இந்த சின்ன வாக்கியங்களும், பத்திகளும் நம்மை எளிதில்
கவர்ந்து உள்ளிழுத்துக் கொள்கின்றன. அதனாலேயே வாசிப்பது இலகுவாகிறது. சொல்ல வந்த விஷயத்தை
ஒரே நேர்கோட்டில் சொல்வது, அதை சுவாரஸ்யமாகச் சொல்வது தோழர் எட்வினுக்கு வெகு நேர்த்தியாக
கைவந்திருக்கிறது”, என்று முன்னுரையில் கவின்மலர் குறிப்பிடுகிறார்.
எட்டாண்டுகளுக்கு
முன்பு வெளியான நூல் என்றாலும் சற்றுத் திரும்பிப் பர்க்கவும் மதிப்பீடு செய்யவும்
உதவும். உதாரணமாக,
“பத்தாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகளே வேண்டாம்.
பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில்
இப்போது உள்ள முறையை மாற்றி ‘செமஸ்டர் முறை’யை அறிமுகப் படுத்தலாம்”, (பக்.53) ‘எது
செய்யக் கல்வி’ கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
இன்று எவ்வளவோ தூரம் தள்ளி வந்திருக்கிறோம். +1 க்கு
பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பிற்கு கடுமையான முறையிலான தேர்வு என்ற நிலையை எட்டியுள்ளோம்.
‘கொரோனா’ காலத்தில் கூட தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று அடம்பிடிப்பதைப் பார்க்கிறோம்.
20 கட்டுரைகள் நிறைந்த இத்தொகுப்பில் கல்வியைவிட
குழந்தைகளைப் பேசிய கட்டுரைகளே அதிகம். குழந்தைகளைப் பேசுவதும் கல்வியைப் பேசுவதுதானே!
அவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது. அதனால்தான் தன்னைத் தவிர அனைவரையும் குழந்தைகளாக
மாற்றிவிட விரும்புகிறார் ஆசிரியர்.
மனு எல்லா காலத்திலும் இருக்கிறான்.
அவன் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது என தலைப்புக் கட்டுரை எடுத்துரைக்கிறது.
(பக்.72, இவனுக்கு அப்போது மனு என்று பெயர்)
ரூப் கன்வர் கொலை (சதி), நெ.து.சுந்தரவடிவேலுவின்
தமிழ்ப்பற்று, திப்புவின் வீரமரணம், பெருந்தலைவர் காமராஜர், ஜென் கதை, ஞாயிற்றுக் கிழமை
சிறப்பு வகுப்புக் கொடுமை, வாங்கப்படும் வாக்குகள், இளைய மருத்துவனின் எதிர்வினை, மணற்கொள்ளை,
புவி வெப்பமயமாதல், நீராதாரச் சேமிப்பு என ஒரு சமூகத்தை உற்றுநோக்கும் படைப்பாளிக்கு
சொல்ல எவ்வளவோ இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெறுமனேச் சொல்லிவிடாமல் தனது பாணியில்
எட்வின் அரசியல்மயப் படுத்துகிறார் என்றே சொல்ல
வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது.
7 B னா சும்மாவா?
முகநூல் நிலைத்தகவல்களைத் தெரிவு செய்து கோட்டோவியங்களுடன் அழகான வடிவமைப்பில்
நூல் தாயாரிக்கப் பட்டுள்ளது. நூலில் உள்ளவை கிட்டத்தட்ட கவிதைகள்.
“நீ படிச்சு என்னவாவ?
கலக்ட்ராவேன்.
கலக்டராயி?
டி.வி. பார்ப்பேன். எல்லாருக்கும் சாக்லெட்
வாங்கித் தர்ருவேன். ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்.
குழந்தைகள் இப்படியே வளரட்டும். (பக்.23)
இதைப் படிக்கும்போது விக்ரமாதித்யனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அது
வெறொன்றுமில்லை.
“குழந்தைகள்
குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்”, - விக்ரமாதித்யன்
குழந்தைகளிடம் கொட்டு வாங்கிய உதவித் தலைமையாசிரியரை நீங்கள் பார்த்திருக்க
முடியுமா?
“……………
“வேணாம் ஒங்களையே கொட்டலாம்”.
“சரிங்க பெரிசு கொட்டுங்க…”
“கொட்டுன்னுட்டு மரமாட்டமா நின்னா எப்படி கொட்டுவேன்?
குனிங்க…”
குனிந்து வாங்கினேன்.
“7 பி னா சும்மாவா?’ என்றபடியே ஒரு கொட்டு
கொட்டினாள்.
கொடுப்பினை இருந்திருக்கு நேத்தெனக்கு. (பக்.13)
அந்தக் குழந்தைகள் கூட கொடுத்து வைத்தவர்கள்! தலைகுனிந்து கொட்டு வாங்கும் எட்வின்களிடம்
வந்து சேர்ந்ததால்.
“கீர்த்தனா சாப்பிட அழைத்ததை கவனிக்கவில்லை நான்.
கோவத்தோடு கத்தினாள்.
“இரா.எட்வின் சாப்பிட வாங்க…”
“ஏண்டி அப்பா இல்லையா நான்?”
“அப்ப எட்வின் இல்லையா நீங்க?”
அதானே”. (பக்.39)
குழந்தைகள் உலகில் அப்பாவாகவும் எட்வினாகவும்
இருப்பதை விடவும் குழந்தையாக இருக்க வேண்டிய கட்டாயமாகும். அப்போதுதான் அதிகாரங்கள்
இல்லாது சமத்துவம் நிலவும். அப்பா, ஆசிரியர்
எல்லாம் அதிகாரப் பீடங்கள்தான்.
“உம்மன் சாண்டி”, என்று முதலமைச்சரை
பெயர் சொல்லி அழைக்கும் உரிமையையும் பக்குவத்தையும் அங்கு குழந்தைகளும் முதல்வரும்
பெற்றிருக்கிறார்கள். “குழந்தைகளை குழந்தைகளாக இயங்க அனுமதி அங்கு உண்டு”, என்ற இறுதிவரி
பெரிய அரசியல் விமர்சனமாக முன்நிற்கிறது.
சில கவிதைகளாகவே உருப்பெற்றிருக்கின்றன.
“சாமி வேஷம் போட்ட குழந்தைகளை
உங்களுக்குப் பிடிக்கும்தானே?
சாமி வேஷம் போட்டாலும்
குழந்தைகளை எனக்குப் பிடிக்கும்”, (பக்.63)
என் கல்வி என் உரிமை
நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசையில் கவிஞர் எட்வினின் 10 கட்டுரைகள் இத்தலைப்பில்
நூலாக்கம் பெற்றுள்ளது. பெருந்தொழில்கள், கல்வி மட்டுமல்ல; தெருவோர ‘சிப்ஸ்’ விற்பனையையும்
முதலாளித்துவம் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டது. “எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து
கல்வியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டால்”, என்று நம்பிக்கை விதைக்கிறார். மறுபக்கம்
எல்லாம் கானல் நீராகத்தான் இருக்கிறது. முதலாளித்துவம் அரசுகளையும் தன் கட்டுப்பாட்டில்
கொண்டுவந்து விட்டன.
தேர்வறையில் பெஞ்ச் போடச் சொல்லும் 6 பி மாணவி. “உறுதியாகச் சொல்லலாம். நாங்கள்
கங்குகளை தயாரித்து சமூகத்திற்குத் தருகிறோம்”, இந்தக் கங்குகளின் எண்ணிக்கை இன்று
அருகி வருகிறது. பறவைகளுக்குக்கூட சிவப்பு விவரப் புத்தகம் உண்டு. இவர்களின் எண்ணிக்கை
குறைவது பலருக்கு மகிழ்ச்சி. இனி கேள்வி கேட்க, எதிர்க்குரலெழுப்ப பெரும்பான்மை ‘பிராய்லர்’
குழந்தைகளால் இயலாது. இது முதலாளித்துவத்தின் சூழ்ச்சிதான். எல்லாவற்றையும் எதிர்கொள்ள
வேண்டிய கட்டாயமிருக்கிறது.
நாளந்தா பல்கலைக்கழக தீப்பந்தங்களுக்கு மத்தியில் 10,000 மாணவர்களுக்கு
உண்டுறைவிடக் கல்வி அளிக்க முடிந்திருக்கிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது
நம் மண்ணின் கனவாகவே இருப்பதைச் சுட்டுகிறார்.
கல்விக்கடன் வலையில் மாணவர்கள் எவ்வாறு சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை ‘கடன்
வாங்கிப் படித்தல்’ கட்டுரை விவரிக்கிறது. (பக்.17) குழந்தைகளோடு நாம் எவ்வளவுதான்
நெருங்கினாலும் நம்மால் இயலாத காரியங்களை சாதிக்கும் திறன் அம்மாவுக்கு உண்டு என்பதையும்
ஒரு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
எவ்வளவுதான் கல்வி உரிமையைப் பற்றிப் பேசினாலும்
இறுதியில் அது களவுபோகும் உரிமையாகவே இருக்கிறது. மருத்துவப் படிப்பை ‘நீட்’டால் தோற்றோம்,
இனி கலை, அறிவியல் படிப்புகளையும் பொது நுழைவுத் தேர்வால் தோற்கப்போகிறோமா? இனி நாம்
என்னதான் செய்வது? விழிப்புணர்வு பெறுதலும் முடிந்தவரை போராடுவதுமே ஒற்றை வழியெனக்
கிடக்கிறது.
நூல் விவரங்கள்:
இவனுக்கு அப்போது மனு என்று
பெயர்
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்,
77, 53 வது தெரு, 9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை – 600083.
பேச: 044 24896979
இணையம்: www.sandhyapublications.com
மின்னஞ்சல்: sandhyapathippagam@gmail.com
இரா. எட்வின்
முதல்
பதிப்பு: 2012
பக்கங்கள்: 104
விலை: ₹ 70
7 Bனா சும்மாவா?
இரா. எட்வின்
முதல்
பதிப்பு: நவம்பர் 2016
பக்கங்கள்: 64
விலை: ₹ 40
வெளியீடு:
வானம்,
M 22, 6 வது அவென்யூ,
ராமாபுரம்,
சென்னை – 600089.
கைபேசி: 9176549991
மின்னஞ்சல்: noolvanam@gmail.com
என் கல்வி என் உரிமை
இரா. எட்வின்
மூன்றாம்
பதிப்பு: பிப்ரவரி 2017
பக்கங்கள்: 32
விலை: ₹ 20
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),
41, பி சிட்கோ
இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
044-26258410, 26251968,
26359906, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக