வியாழன், ஜூன் 30, 2011

இன்னும் இடித்து முடிக்கப்படாத ஓர் அடிமைச்சின்னம்!

இன்னும் இடித்து முடிக்கப்படாத ஓர் அடிமைச்சின்னம்!   

                                                                           -மு.சிவகுருநாதன் 








    


        திருவாரூரிலிருந்து  திருத்துறைப்பூண்டி  சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஒருவேளை நீங்கள் இதை கவனித்திருக்கக்கூடும். 
திருவாரூரிலிருந்து 10  கி.மீ.தொலைவில் மாவூரில் ஒரு பெரிய குளத்தின் நடுவே ஓர் சிறிய மாளிகையும் அதை சென்றடைவதற்கு எதுவாக இருபுறமும் நீண்ட பாலமும் கொண்ட மாவூர் சர்மாவின் பங்களாதான் இது.

        தஞ்சை மாவட்டந்தோறும் இது மாதிரியான நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களை ஏதேனும் ஒரு வடிவில் நாம் காணமுடியும். அதுவும் கீழத் தஞ்சை என்றழைக்கப்படும் தற்போதைய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பல பண்ணையார்களின் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு ஆட்ப்பட்டவை. 

         பி.எஸ்.ஆர். போன்ற கம்யூனிஸ்ட் தோழர்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக சாணிப்பால், சவுக்கடி ஆகிய எண்ணி லடங்காத கொடுமைகள் முடிவுக்கு வந்தன. இதற்கு இம்மக்கள் கொடுத்த விலை மிக அதிகம்; உயிர்ப்பலிகள் ஏராளம்.  

           இக்கொடுமைகளை அனுபவித்த பலர் இன்னும் அக்கொடிய நினைவுகளுடனே உள்ளனர். மாவூர் சர்மாவுக்கு வேண்டுமானால் இது பகட்டை,ஆடம்பரத்தை வெளிக்காட்டும் அம்சமாக இருக்கலாம். சாதீய, பண்ணையடிமைக்கொடுமைகளை அனுபவித்த அடித்தட்டு மக்களுக்கு இது ஓர் அடிமைச்சின்னமே. 
         சில மாதங்களுக்கு முன்பு இந்த மாவூர் சர்மா பங்களாவின் பாலப் பகுதிகள் இடிக்கப்பட்டது.  மையத்திலுள்ள சொகுசு அறை மட்டும் இன்னும்  இடிக்கப்படாமல் எஞ்சியுள்ளது. இந்த அடிமைச் சின்னத்தின் மிச்சங்களும் கூடிய விரைவில் இடிக்கபடுவது நம்  மனத்திற்கு மகிழ்வளிக்கும்  விஷயமாக இருக்கும்.

         நவீன உலகிலும் எண்ணற்ற அடிமைச் சின்னங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தன்குடும்பத்தின் மூன்று பேருக்காக  மும்பையில் 4000 கோடி ரூபாயில் கட்டியுள்ள மாளிகையும் இந்தியாவின் அடிமைச்சின்னமே. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் மற்றவர்களுக்கு முன்னுதாரமாக  செயல்பட வேண்டுமென முகேஷ் அம்பானிக்கு அறிவுரை சொல்லும் ரத்தன் டாட்டா என்ன செய்துகொண்டுள்ளார் என்பது  உங்களுக்குத் தெரியுந்தானே! 

         மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மார்க்சிஸ்டுகள் ரத்தன்  டாட்டாவிற்கு  வாங்கிக்கொடுத்த விவசாய நிலங்களை மீண்டும் அவ்விவசாயிகளுக்கே   வழங்குவதென அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி முடிவெடுக்கிறார்.  அம்மாநில அரசு எடுத்த முடிவிற்கு தடை வாங்குவதற்காக ஒவ்வொரு நீதிமன்றமாக படியேறும் ரத்தன் டாட்டா யாருக்கு முன்னுதாரணமாக இருக்கப்போகிறார்? 

        ஆங்கிலேயர்களின் அடிமைச் சின்னங்கள் தகர்க்கப்படவேண்டுமென சிலர் இன்னும் சொல்லிக்கொண்டுள்ளனர். அதையும்விட கொடிய சாதீய, நிலப்பிரபுத்துவ, முதலாளிய, இந்துத்துவ அடிமைச் சின்னங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இவைகளும்  தகர்க்கப்ப்படும்போதுதான் நாட்டில் சமத்துவம் நிலவும்.

புதன், ஜூன் 29, 2011

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி - ஊழல்

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி - ஊழல்

                                                                                         - மு. சிவகுருநாதன்


      
     இன்று ஊழல் அனைவராலும் பேசப்படுகிற வி­ஷயமாக மாறி விட்டதைத் தவிர வேறெந்த மாற்றமும் நடைபெறவில்லை.  லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே குழு முடிவு செய்யக் கூடாது; நாடாளுமன்றந்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் பிரபல வழக்குரைஞருமான கபில்சிபல் கூறுகிறார்.  

       இது ஒரு வகையில் மிகவும் பொருத்தமானதுதான்!  ஏனெனில் ஊழலின் தொடக்கமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே இருக்கிறது என்பதுதான் உண்மை.   பிறகெப்படி அவர்கள் லோக்பால் போன்ற ஊழல் தடுப்புச் சட்டங்களை இயற்றுவார்கள் அல்லது ஆதரிப்பார்கள்?   எனவே கபில்சிபல் அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.


            நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும் ஊழல்கள் நடைபெறுவதாக தணிக்கைத் துறை சுட்டிக் காட்டுகிறது.  ஆனால் இவை பற்றியும் முறையான தணிக்கை மற்றும் ஆய்வுமின்றி ஆண்டுதோறும் நிதியின் அளவு அதிகரிக்கப்படுகிறது.  பீகாரில் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சரான நிதீஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.  இத்தகைய துணிச்சல் பிரதமருக்கோ வேறு முதல்வர்களுக்கோ இல்லை.


            ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட ஒரு திட்டத்திற்கு எதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கிறார், அந்தப் பணி ஒழுங்காக நடைபெறுகிறதா என்றெல்லாம் கண்காணிக்கும் அமைப்புகள் இங்கு இல்லை.  உறுப்பினர்களின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்படும் இப்பணிகள் பல்வேறு மட்டங்களில் ஊழலுக்குக் காரணமாக அமைகின்றன.


            இந்த மேம்பாட்டு நிதிகளில் அதிகப்படியாக பேருந்து நிழற்குடைகள், பள்ளிக் கட்டிடங்கள், சிறு பாலங்கள் போன்றவை கட்டப்படுகின்றன.  இந்தியாவில் மிகவும் மோசமான நிலையில் - தரத்தில் கட்டப்படுபவை பள்ளிக் கட்டிடங்கள் என்றால் மிகையில்லை.  பேருந்து நிழற்குடைகள் அந்த இடத்திற்குத் தேவையா என்று கூட பார்க்காமல் நிறைய இடங்களில் அமைக்கப்படுகின்றன.  இவைகள் கால்நடைகள் மற்றும் சமூக விரோதிகளின் செயல்பாட்டிற்கு மட்டும் பயன்படுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது.


            முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் சுடுகாட்டுக் கூரை ஊழல் மிகவும் பிரசித்தம்.  ஆனால் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.  இது அவர்கள் கட்சி மாறியதற்கு கொடுக்கப்பட்ட பரிசாகக் கூட இருக்கலாம்.  வெறும் நான்கு தூண்களைக் கொண்டு ஒரு ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரை அமைப்பதற்கு ரூ. 40000/- வரை கணக்கு காட்டினார்கள் என்பதே மேற்கண்ட வழக்கின் சாரம்.


            தி.மு.க. ஆட்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீடு கட்ட பயனாளிகளுக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 75,000/- மட்டுமே.  தற்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பசுமை வீடு கட்டும் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 1,80,000/-.  ஆனால் சுமார் 300 சதுர அடிகளுக்குட்பட்ட நிழற் குடை அமைக்க 3 இலட்சத்திலிருந்து 7 இலட்சம் வரை கணக்கு காட்டப்படுகிறது.  இந்தத் தொகையில் ஒரு புறம் 3 வகுப்பறைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  செலவுத் தொகை, டெண்டர் போன்றவை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.


            ஒரு  உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.  திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நால்ரோட்டில்       (திருநெல்லிக்காவல் சாலை) ஒரு நிழற்குடை ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வேதரெத்தினம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.  இது அங்குள்ள வாய்க்காலில் தூண் எழுப்பி அதன் மீது கட்டப்பட்டுள்ளது.  குப்பைகள் அடைத்துக்கொண்டு நீர் வழிப்பாதையை அடைக்கும் என்பது இதை அமைத்தவர்கள் உணரவில்லை.




            இதை அமைத்ததற்கு முக்கியமான காரணம் இந்த நால்ரோட்டில் பிரியும் ஒரு சாலை மு.கருணாநிதி பிறந்த திருக்குவளைக்குச் செல்கிறது.  அடிக்கடி சொந்த ஊருக்கு கருணாநிதி செல்லும் போது கண்ணில் படும் என்பதற்காக வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் செய்ய வேண்டிய எவ்வளவோ பணிகளிருக்க அதையெல்லாம் விட்டு விட்டு திருவாரூர் தொகுதியில் வந்து நிழற்குடை அமைத்திருக்கிறார்.   திருவாரூர் - திருத்துறைப் பூண்டி சாலையில் இந்த நால்ரோடு வரை மட்டும் சாலைகள் அழகாகப் போடப்பட்டு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் சாலை யோரங்களில்  மிளிரும் வண்ணம் அமைக்கப்படும்.  இவையும் கருணாநிதிக்காகத் தான்.

       
 



   திருவாரூர் நகரத்தின் மேலவீதி - மேலக்கோபுர வாசலருகே திருவாரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான உ. மதிவாணன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7 இலட்ச ரூபாய் செலவில் சுமார் 300 சதுர அடியில் ஒரு பயணிகள் நிழலகமும் சிறு மின்விசைப் பம்பும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

           இதற்கு எப்படி ரூ. 7 இலட்சம் செலவானது என்பதை யாரும் கேட்கப் போவதில்லை.  ரூ. 3 இலட்சம் நிழற்குடைக்கு என்று வைத்துக் கொண்டாலும் ரூ. 4 இலட்சம் சிறு மின் விசைப் பம்பு அமைக்க செலவானதா என்ற கேள்வி முக்கியமானது.  தமிழகமெங்கும் ஏன் நாடெங்கும் தொகுதி மேம்பாட்டு நிதி இவ்வாறே வீணாக்கப்படுகின்றன.   இவற்றையயல்லாம் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்க லோக்பாலை மட்டும் நம்பிப் பயனில்லை.


            இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.  இந்த மாதிரியான பயணியர் நிழலகங்கள் மூன்று, நான்கு சாலைகள் கூடுமிடத்தில் அமைக்கப் படுகின்றன.  பேருந்துகள் இந்த முச்சந்திகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதால் பின்னால் வரும் வாகனங்கள் எந்த சாலையிலும் செல்ல முடியாமல் தேங்கி நிற்கக் கூடிய செயற்கையான ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுத்தப்படுகிறது.  
          இந்த மாதிரியான நிலைமையை இவ்விரண்டு பயணியர் நிழலகங்களில் மட்டுமல்லாது தேரோடும் நான்கு வீதி முனைகள், தெப்பக்குளத்தின் (கமலாலயம்) நான்கு முனைகள், மயிலாடுதுறை சாலை சந்திப்பு, விளமல் தஞ்சை - மன்னார்குடி சாலை சந்திப்பு, வாளவாய்க்கால் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலை சந்திப்பு என அனைத்து இடங்களிலும் காண முடியும்.  திருவாரூர் போன்ற வெகு சொற்ப மக்கள் தொகை கொண்ட இச்சிறு நகரத்தில் இந்த மாதிரியான முறைகேடுகளால் சாலையில் செல்லும் அனைத்துத் தரப்பினரும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது.


            தஞ்சாவூர், திருச்சி போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்ட நிழற்குடைகள் இடித்துத் தள்ளப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.  அந்த விழிப்பு திருவாரூருக்கு வர பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.  

முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.

முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.

                                                                                      - மு. சிவகுருநாதன்


           60 ஆண்டுகளுக்கு மேலான சுதந்தர இந்தியாவில் இந்திய அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.  எனவேதான் மத்திய அரசு அடிக்கடி நிறைய உரிமைச் சட்டங்களை இயற்றி வருகிறது.  ஆனால் இதுவும் ஒரு ‘பே­ஷன்’ போலாகிவிட்டது. 


            இதுவரை இயற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டங்களில் ஓரளவிற்கு பயன்பாட்டுக்கு வந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 ஆகும்.    இச்சட்டத்தை மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மீறுவது வெளிப்படையாகத் தெரிந்தும் சட்டம் இன்னும் ஏட்டளவில் மட்டும் இருப்பது வேதனையளிக்கிறது.


            ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பி.ஜே. தாமசை கடும் எதிர்ப்பிற்கிடையே ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்து உச்சநீதிமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.  அதுபோல ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.  தமிழகத்திலும் பல்வேறு புகார்களுக்கு உள்ளான முன்னாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  ஸ்ரீபதி மாநிலத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர்களைப் போன்ற முன்னாள் அதிகாரிகள் இச்சட்டத்தை மீறும் இந்நாள் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.  மேலும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.


            தமிழக அரசின் பல்வேறு துறைகள் இச்சட்டத்தை துளி கூட மதிப்பது கிடையாது.  இதில் தமிழக அரசின் வருவாய்த் துறைக்கு முதலிடம் வழங்கலாம்.  வேறு பல துறைகள் தகவல்கள் என்ற பெயரில் தவறான தகவல்களை அளித்தும் இச்சட்டத்தை குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.   இச்சட்டத்தின் கீழான மேல்முறையீடுகளை உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையங்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். 


            தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள், குழந்தைகள், மகளிர், சிறுபான்மையினர் ஆணையங்கள், தகவல் ஆணையம், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் போன்ற பல அரசியல் சட்ட அமைப்புக்களுக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளை நியமனம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.  இதன் மூலம் அடிப்படை உரிமைகளை பாமர மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை மத்திய-மாநில அரசுகளே தடுத்து விடுகின்றன.


            தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இடையூறாகவே கருதுகின்றன.  எப்படியாவது இச்சட்டத்தை முடக்கிப் போட தங்களால் இயன்ற வேலைகளை அவை செய்து வருகின்றன.  இச்சட்டத்தின் மூலம் இவர்களின் பல்வேறு முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.   இச்சட்டத்திற்குட்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிலளிக்க மறுப்பது ஒரு புறமிருக்க அடிக்கடி இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்து சட்டத்தை பலவீனப்படுத்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. 


            ஏற்கனவே தேசப் பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி ராணுவம், இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டுள்ளது.    இத்தகைய காரணங்களால் இங்கு நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வராமற்போய் விடுகின்றன.    தற்போது சி.பி.அய்.க்கும் இச்சட்டத்திலிருந்து விலக்களிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.


            சி.பி.அய்.இன் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளதென்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே உண்டு.   அதன் செயல்பாடுகள் பலவும் இக்குற்றச்சாட்டை உறுதி செய்யக் கூடியவை.   பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பு பல்வேறு கால கட்டங்களிலும் விமர்சனத்திற் குள்ளாக்கப்பட்டுள்ளது.    இத்தகைய அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிக்கும் முடிவை இன்றையச் சூழலில் அரசு எடுத்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.


            விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் இன்று பன்னாட்டு ரகசியங்கள் வெளிவருகின்ற, தகவல் தொழில் நுட்பங்கள் மலிந்த சூழலில் வழக்கின் விவரங்கள் வெளியானால் அவ்வழக்கு பாதிப்படையும் என்று அரசு செல்லும் விளக்கங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை.   பல அறிக்கைகளும் இங்கு முன்கூட்டியே வெளியாவது அடிக்கடி நடப்பதுதானே!   இன்றைய உலகில் எதையும் ரகசியம் என்று பாதுகாத்து விட முடியாது.


            2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சி.பி.அய்-இன் செயல்பாட்டை வைத்து அதன் நேர்மையை அளவிட முடியாது.  இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த வழக்கில் கூட சி.பி.அய். மீது கண்டங்கள் உண்டு.  இன்னும் துணைக் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் அது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது.  எனவே தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.அய்-யை விலக்களித்திருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.


            தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதில் பிரதமர் அலுவலகம் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது.   தேசிய ஆலோசனைக் குழுவின்  (NAC- National Advisory Committee)  தலைவரான சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், செலவுகள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வழங்க மறுப்பது சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது. 


            2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், இஸ்ரோ எஸ் பாண்ட் ஊழல் போன்ற பிரதமர் அலுவலகம் தொடர்புடைய எந்த ஊழலிலும் பிரதமருக்குத் தொடர்பில்லை, அவர் கறை படியாதவர், அவருக்கு இணையான பரிசுத்தமானவர் உலகில் யாருமில்லை என்று தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கூட இவ்வளவு ஆதரவுப் பிரச்சாரம் இல்லையென்று கருதுகிறேன்.  அமெரிக்கச் சார்பாளரான மன்மோகன் சிங்குக்கு உள்ள ஆதரவுப் பிரச்சாரம் நம்மையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது.  லோக்பால் அதிகார அமைப்பிற்குள் பிரதமரை உள்ளடக்கக் கூடாதென முன்னாள் காங்கிரஸ் ஆதரவு போலிச் சாமியார் யோகா குரு ராம்தேவ், தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்று மன்மோகனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. 


            லோக்பால் மசோதா பிரச்சினையில் முன் நிற்கும் அன்னா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளும் நம்பகமானவர்கள் இல்லை.  ஒட்டு மொத்த இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இல்லை.   இவர்கள் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினரிடையே மட்டும் செல்வாக்கு பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.   லோக்பால் மசோதா வந்து விட்டால் இந்தியாவில் ஊழலே ஒழிந்து விடும் என்றெண்ணுவது நடுத்தர வர்க்க மனோபாவமன்றி வேறில்லை.  இவர்களுடைய வலதுசாரி ஆதரவும் சாய்வும் பா.ஜ.க.வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றப் பயன்படுமே தவிர ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.


            அன்னா ஹசாரே குழுவினருக்கு பெருகி வரும் ஆதரவை மடை மாற்ற காங்கிரஸ் யோகா குரு ராம்தேவைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்து, அதில் தோல்வியடைந்ததால் ராம்தேவின் உண்ணாவிரதத்தை இரவோடு இரவாக காலி செய்தது மட்டுமல்லாமல் சி.பி.அய்., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைக் கொண்டு ராம்தேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்ய மிக வேகமாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இந்தத் துறைகளும் அரசும் இவ்வளவு நாட்கள் என்ன செய்துகொண்டிருந்தன?.    யோகா ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கும்பல்கள் அமோக ஆதரவளித்ததுடன் இந்துத் தீவிரவாதி பிரஞ்யாவும் அவருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது அவரது அரசியலை வெளிக் கொணர்ந்தது.


            நாடு சுதந்தரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழல் வழக்குகளில் யாருக்கும் எந்த தண்டனையும் வழங்கப்பட்டதில்லை என்ற போது இந்த லோக்பால் சட்டம் மட்டும் என்ன செய்து விடப்போகிறது?  இங்கு உரிமைச் சட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் அதற்கும் ஏற்படும்.

           அடுத்ததாக 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளின் தொடக்கக் கல்வியை உறுதி செய்ய ‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009’ இயற்றப்பட்டது.  இச்சட்டம் ஏப்ரல் 01, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இந்த உரிமைச் சட்டமும் எந்த மாநிலத்திலும் முறையாக அமல்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை.  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இதற்கென குழந்தைகள் ஆணையங்கள் மற்றும் இச்சட்டத்தைச் செயற்படுத்த ஏதுவான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. 


            இச்சட்ட அமலில் உள்ள 2-வது ஆண்டிலும் கூட இந்நிலை நீடிப்பது வருந்தத்தக்கது.  இந்தக் கல்வியாண்டு தொடங்கியதும் சமச்சீர் கல்வி குறித்த வீண் பிடிவாதத்திலும் பாடத்திட்டம், பாடநூற்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்ற முடிவை எதிர்பார்த்து அனைத்துத் தரப்பினரும் காத்துக் கொண்டுள்ளனர்.  நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு கல்விக் கட்டணத்தை வரையறை செய்தும், தனியார் பள்ளிகள் இன்னும் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உரத்த குரல் கொடுக்கின்றர்.  இதற்கும் தமிழக அரசு செவி சாய்த்து கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடும்.


            தனியார் பள்ளிகளில் அரசுக் கட்டணம் கட்டுவோருக்கு தனிவகுப்பும் நிர்வாகம் கேட்கும் கட்டணத்தை செலுத்தியோருக்கு தனி வகுப்பும் நடத்தப்படுகின்றன.  இந்த நவீன தீண்டாமையை கேள்வி கேட்க அரசு எந்திரம் தயராக இல்லை.  இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 25% இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனச் சொன்ன கல்வி உரிமைச் சட்டம் குறித்து பேசத்தான் ஆட்கள் இல்லை.   அப்படி பேசினாலும் அவை மத்திய - மாநில அரசுகளின் காதுகளுக்கு விழப் போவதில்லை.   பிறகு ஏன் இப்படி உரிமைச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?  இப்படியெல்லாம் சட்டம் இருப்பதாக சொல்லிக் கொண்டு உலக அரங்கில் வல்லரசு என்றும் மக்களின் உரிமைகளை மதிக்கப்படக் கூடிய நாடென்றும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பான்மை வேண்டுமென்றும் அடம் பிடிக்க மட்டுமே பயன்படும்.


            இந்தியாவின் தானியக் களஞ்சியங்களில் எவ்வளவு மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கெட்டழிந்தாலும் உணவு உரிமைச் சட்டம் பட்டினிச்சாவு களையும் வறுமையையும் தடுத்து விடப்போவதில்லை.    ஆனாலும் மத்திய அரசு உணவு உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரும்.  இதன் மூலம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உணவு உரிமைகள் கூட கேள்விக்குறியாக்கப்படும்.


            அடுத்ததாக மத்திய அரசு கொண்டு உத்தேசித்துள்ளது நீதி பெறும் உரிமைச் சட்டமாகும்.  இதற்கான வரைவுச் சட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.  மூன்றாண்டுகளுக்கு மேல் நிலுவையிலிருக்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பைசல் செய்வது என்ற பெயரில் கிட்டத்தட்ட தள்ளுபடி செய்வதையே இந்த உரிமைச் சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.  இது யாருடைய உரிமையைப் பாதுகாக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.


            இன்று பல்வேறு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.  இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.  முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட காவல்துறையின் அலட்சியங்கள், நீதிமன்ற அமைப்பிலுள்ள குறைபாடுகள், ஆட்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் அந்த வகையில் உள்ளன. 

            நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் மற்றும் பணியாளர்களை நியமித்தல், விரைவு நீதிமன்றங்களை அமைத்தல், நடுவர் மன்றங்கள் அமைத்து இரு தரப்பையும் அழைத்து பேசி முடிக்கக் கூடிய வழக்குகளை விரைந்து தீர்த்தல் போன்ற பல்வேறு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதை கைவிட்டு விட்டு மத்திர அரசு நீதி பெறும் உரிமைச் சட்டம் என்றதொரு எதற்கும், எவருக்கும் பலன்தராத ஒரு சட்டத்தை இயற்றுவதிலேயே மும்முரம் காட்டுவது சரியல்ல.


            இங்கு ஏற்கனவே அமலில் உள்ள உரிமைச் சட்டங்களின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகளை அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும்.  இவற்றைக் கண்காணிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்காத அரசு, அரசு அமைப்புகளும் இத்தகைய உரிமைச் சட்டத்தின் மூலம் மட்டும் வழங்கி விட முடியும் என எதிர்பார்ப்பது அறிவீனம்.


            இதற்கான நடவடிக்கைகள் மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் எடுக்கப்பட வேண்டும்.  அதுவரை உரிமைச் சட்டங்களினால் எவ்வித பலனும் விளையப் போவதில்லை.  அரசு மக்கள் நல அரசாக செயல்படாத வரையில் உரிமைச் சட்டங்கள் வெறும் கானல் நீரே. 
பின்குறிப்பு:-
             இதை எழுதிக்கொண்டிருக்கும்போது  வழக்கறிஞர் எஸ்.சத்திய சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்து  தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு கட்டாய இலவச கல்வித்திட்ட விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கையாக வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு  ஆணையிட்டுள்ளது.

செவ்வாய், ஜூன் 28, 2011

100 வயதை நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம்.

100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய 

விளமல் கல் பாலம்.               -மு.சிவகுருநாதன்

 


100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய 

விளமல் கல் பாலம்

              
                                      கட்டப்பட்ட ஆண்டு :1912  
               
                                       100 வது ஆண்டு:2012 
              
                                      ஆறு :ஓடம்போக்கி ஆறு 
 




        அரசுத்துறையெங்கும் ஊழல் நாறிக்கிடக்கிறது. அரசால் காட்டப்படும் பள்ளிகள், சிறு பாலங்கள் ஆகியவை 10 ஆண்டுகளைக்  கூட தமது ஆயுளாகக் கொள்ளாதவை. சாலைகள் போட்ட சில மாதங்களில் மரித்துப்போகின்றன.
 
            ஆங்கிலேயர்களால் ( டல்ஹௌசி பிரபு )  150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பொதுப்பணித்துறையால்  1912  இல் கட்டப்பட்ட ரெகுலேட்டருடன்  கூடிய விளமல் கல் பாலம் விரைவில் தனது 100 வயதை  நெருங்குகிறது. 
 
         அவ்வப்போது இப்பாலம் பராமரிப்புப்பணி  மேற்கொள்ளப்பட்டாலும் நீரை தேக்கிவைக்கும் மதகுகள் ரெகுலேட்டருடன் அமைக்கப்பட்டதோடு மேற்புறத்தில் சாலைப் போக்குவரத்திற்கும் இந்தப் பாலம் தொடர்ந்து பயன்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டவுடன் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்போது இதன் ரெகுலேட்டர் நல்லமுறையில் இயங்கி வருகிறது. 

        இன்றைய நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இம்மாதிரியான பணிகளை செய்து முடித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய பணிகள் சிலவற்றை கூட நம் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்  செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.

வெள்ளி, ஜூன் 24, 2011

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர்களின் தலைமையிலான அரங்கக் கூட்டம்

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர்களின் தலைமையிலான 
அரங்கக் கூட்டம்

கருத்துரை 


டாக்டர். வே. வசந்தி தேவி, முன்னாள் பல்கலை. துணைவேந்தர்,

பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்,

பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,

பேரா. ப. சிவக்குமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

பேரா. அ. கருணானந்தம், சமச்சீர்க் கல்வி பாட நூல் உருவாக்கத்தில் பங்குபெற்றவர்,

திரு. கன். மோகன், மக்கள் சக்தி கட்சி,

திரு. கோ. சுகுமாரன், மனித உரிமைகள் கூட்டமைப்பு, புதுச்சேரி,

புலவர். கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழாசிரியர் கழகத் தலைவர்,

பேரா. மு. திருமாவளவன், மக்கள் விடுதலை இயக்கம்,

ழுத்தாளர் பா. செயப்பிரகாசம், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி,

கவிஞர். இன்குலாப்,

பேரா. இரத்தினசபாபதி,

திரு. செல்வி, மக்கள்ஜனநாயகக் குடியரசுக் கட்சி,

திரு. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,

திரு.இனியன் சம்பத், தமிழ் தேசிய மக்கள் கட்சி,

திரு. தமிழ்நேயன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,

திரு. தடா ரஹீம்,  இந்திய தேசிய லீக்,

முனைவர். அரணமுறுவல், உலகத் தமிழின முன்னேற்றக்  கழகம்,


நாள் & நேரம்   
 

05.07.2011,
 

செவ்வாய், மாலை 6 மணி     
இடம்:-

 ICSA அரங்கம், எழும்பூர்
(மியூசியம் அருகில்)





சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் முயற்சியைக் கண்டிப்போம்!

        கல்வியாளர்களும் சமூக சமத்துவத்தில் அக்கறையுள்ளோரும் தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தங்களின் விளைவாக இந்தக் கல்வியாண்டிலிருந்து எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என முந்தைய தமிழக அரசு ஆணையிட்டிருந்தது.

      கல்வியாளர்கள் அனைவரும் பிற வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளது போல எல்லோருக்கும் பொதுப்பள்ளி, தாய்மொழியில் கல்வி, பொதுப்பாடத் திட்டம் ஆகிய மூன்றும் கூடிய உண்மையான சமச்சீர்க் கல்விக்காகவே போராடியபோதிலும், முதற்கட்டமாக பொதுப்பாடத்திட்டம் மட்டும் என்கிற அளவிலாவது இன்று இது நடைமுறையாகிறதே என்ற அளவில் வரவேற்றோம்.

     கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலமைந்த ஒன்பது பேர் குழு அளித்த அறிக்கை, பின் அதன் மீது அமைக்கப்பட்ட விஜயகுமார் குழு அறிக்கை ஆகியவற்றினடிப்படையில் தேர்ந்த கல்வியாளர்களைக் கொண்டு விரிவாக விவாதம் நடத்தி, பாடத்திட்டங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு கருத்துக்கோரி, வேறெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையாகச் செயற்பட்டு இதற்கான பாடத்திட்டங்களும் பாடநூல்களும் உருவாக்கப் பட்டன. 200 கோடி ரூபாய்களுக்கும் மேல் செலவிட்டு ஒன்பது கோடி பாடநூல்களும் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

       இதற்கிடையில் நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறை யிலுள்ளதைப் பயன்படுத்தி அதனடிப்படையில் தாங்கள் உயர்வான பாடத்திட்டத்தைச் சொல்லித் தருவதாக விளம்பரப்படுத்திப் பெருங் கல்விக்கொள்ளையை நடத்தி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர்கள் சமச்சீர்க் கல்வித் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். சென்ற ஏப்ரல் 2010ல் உயர் நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் அரசின் உரிமையை ஏற்றுக் கொண்டது. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் செப்டம்பர் 2010ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அங்கும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டது. வேறு வழியின்றி அவர்களும் இதை ஏற்க வேண்டியதாயிற்று. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சென்ற கல்வி ஆண்டில் இது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் பட்டது.

      இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளி முதலாளிகள் புதிய அரசிடம் சமச்சீர் கல்விக்குத் தடை கோரி அழுத்தம் கொடுத்ததால் புதிய அரசும் உரிய முறையில் ஆய்வு எதையும் செய்யாது அவசரக்கோலத்தில் சமச்சீர்க் கல்வி நடைமுறையாக்கத்தை இந்த ஆண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பின்னர் அதற்குரிய சட்டத்திருத்தத்தையும் செய்தது. இதற்கெதிரான கல்வியாளர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன.

      வேறு வழியின்றி பொதுக்கல்வியில் அக்கறையுள்ள எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்றோம். நமது வாதங்களை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் புதிய அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டதைக் கணக்கில் கொண்டு, மாணவர் நலனில் அக்கறை கொண்டு சமச்சீர்க் கல்வியை அரசு நடைமுறைப்படுத்தும் என நம்பினோம்.

     ஆனால் பிடிவாதமிக்க தமிழக அரசோ, மாணவர்களுக்கு மேலும் பல வாரங்கள் கல்வி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் 1, 6ம் வகுப்புகளுக்குச் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சமச்சீர்க்கல்வியைத் தொடர வேண்டும் எனவும் பிற வகுப்புகளைப் பொருத்தமட்டில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து பாடத்திட்டங்களையும் நூல்களையும் மூன்று வாரங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து இறுதித்  தீர்ப்பை அளிக்க வேண்டும் எனவும் கூறியது.

       குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருதியிருந்தால் அதுவே அதைச் செய்திருக்க வேண்டும். மாறாக சமச்சீர்க் கல்வியை ஒத்திவைக்க ஆணையிட்ட மனுதாரரிடமே அப்பொறுப்பை உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு ஒன்பது பேர் குழுவை நமது கருத்திற்கு ஆதரவானவர்களைக் கொண்டே நிறுவியுள்ளது. தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர் தவிர தமது பிரநிதிகள் என இருவர், கல்வியாளர்கள் என்கிற பெயரில் இரு பெரும் மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர்கள் முதலானோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசு அதிகாரிகள் மூவர், லேடி ஆண்டாள் பள்ளி, டி. ஏ. வி. பள்ளி, பத்மா சேஷாத்திரி பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த விஜயலஷ்மி சீனிவாசன், ஜெயதேவ் , திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோரடங்கிய இக் குழு சமச்சீர்க் கல்விக்கு நீதி செய்யாது என கல்வியாளார்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அன்பார்ந்த பொதுமக்களே, பெற்றோர்களே!

     சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைத்திருப்பதற்கு அரசியல் காழ்ப்பு காரணமல்ல, பாடத்திட்டம் மற்றும் பாடநூற்களின் தரக்குறைவே காரணம் எனத் தமிழக அரசு கூறுகிறது. ‘சோ’ போன்ற மெட்ரிகுலேஷன் பள்ளி ஊதுகுழல்களும் அதையே திருப்பிச் சொல்கின்றன.

   இது உண்மையன்று எனக் கல்வியில் பலகாலம் அனுபவமுள்ள கல்வியாளர்களாகிய நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்களும் கல்வி வல்லுனர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் இது. ஆசிய அளவில் புகழ்பெற்ற ‘மேட் சய்ன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ராமானுஜம், இந்திய அளவில் புகழ்பெற்ற ‘ராமானுஜம் கணித உயராய்வு ஆராய்ச்சி நிறுவன’த்தின் முனைவர் யுவராஜ், ஆங்கில மொழிப் பயிற்றுவிப்பில் அனுபவப்பட்ட முனைவர் நளினி, புகழ்பெற்ற கல்வியாளர்கள் முனைவர் மாடசாமி, வ.கீதா, முனைவர் வெற்றிச் செல்வன், பேரா. கருணானந்தன், எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் முதலான 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஓராண்டுக்கும் மேல் உழைத்துத் தயாரித்த நூல்கள் இவை. புகழ் பெற்ற கல்வியாளர் கிருஷ்ணகுமார் (என்.சி.இ.ஆர்.டி.) நேரடியாக வந்திருந்து இக்குழுவின் செயற்பாடுகளையும் உருவாகியுள்ள பாடத்திட்டத்தையும் பாராட்டிச் சென்றுள்ளார்.

     இத்தகைய வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் நூல்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளை வைத்து மதிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல.

      சென்ற திமுக அரசு இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடத்திட்டதில் தனது புகழைப் பாடிக் கொள்ள சில பகுதிகளைச் சேர்த்துள்ளதை நாங்களும் கண்டிக்கிறோம். இவற்றை நீக்கி நடைமுறைப்படுத்த நீதிமன்றம் வாய்ப்பளித்துள்ளது. தேவையானால் அப்பகுதிகளை நீக்கி இந்த அரசு இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தலாம்.  தரம் தொடர்பாக ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து தேவை எனக்கருதினால் வரும் ஆண்டுகளில் இதில் தேவையான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்து கொள்ளலாம். மாறாக எல்லாம் முடிந்த பின் இதனை ஒத்தி வைப்பதை மாணவர் நலனில் அக்கறையுள்ள யாரும் ஏற்க இயலாது. ஏற்கனவே மூன்று வாரங்கள் வீணாயிற்று. குறைந்தபட்சம் மேலும் மூன்று வாரங்கள் வீணாவது நிச்சயம். இதை அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

      உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க இன்று 1, 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்தும் அரசு பாடநூல்களில் வேண்டாத பகுதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது அரசின் திட்டங்கள் என வரும் பகுதிகளையெல்லாம் நீக்கச் சொல்லி இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘புதிய ஆத்திச்சூடி’, ‘ஒள’ வரிசை எழுத்துக்களை முதல் வகுப்புப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யும் பகுதி எல்லாம் நீக்கப்படுவதை யாராலும் விளக்க இயலவில்லை.
   
     சூரிய கிரகணத்தையும் பகல் இரவையும் விளக்கும் படங்களில் சூரியன் இடம் பெறுகிறது என்கிற காரணத்தாலும், காந்தத்தில் வடக்கு தெற்கு துருவங்கள் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் வேறுபடுத்தப் பட்டுள்ள காரணத்தாலும் அவையும் நீக்கப்படுகின்றன. ஆக சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமல்ல எனத் தமிழக அரசு சொல்வது முழுப் பொய் என விளங்குகிறது.

    இக்குழுவிடமிருந்து சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டமும், நூல்களும் தரமாக இல்லை என்று ஒரு அறிக்கையைப் பெற்று, அதனடிப்படையில் புதிய பாடத்தை உருவாக்கக் காலம் தேவை என நீதிமன்றத்தில் கூறி சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி வைக்க அரசு முயலும் என நாங்கள் அஞ்சுகிறோம்.

    ஒன்றை இந்த அரசுக்கும், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவிற்கும் சுட்டிக்காட்டுகிறோம். உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள ஆணையால், இக்குழு சமச்சீர்க் கல்வியை மாற்றி வேறுமுறைகளுக்குள் செல்கிற முயற்சிக்குள் நுழையக் கூடாது எனவும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான அம்சங்களையே கருத வேண்டும் எனவும் தெளிவாகக் கூறியுள்ளது. இதைப் புறக்கணித்து சமச்சீர்க் கல்வியை நிறுத்திவைக்கும் நோக்கில் பரிந்துரைகளைச் செய்வது நீதிமன்ற அவமதிப்பிற்குரியது.

அன்பார்ந்த பெற்றோர்களே!

    எல்லோர்க்கும் சம கல்வி என்பதை  சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்க வைக்க விரும்புவோரால் ஏற்க இயலாது. பள்ளிக் கல்வியில் நான்கு பாடத்திட்டங்கள் என்பது வேறு பல நாடுகளிலும் மாநிலங்களிலும் இல்லாத நடைமுறை.  மேற்தட்டினரும் அடித்தட்டினரும் ஒரே பாடத்தைப் படிப்பதா என ஆத்திரப் படுபவர்களால் உருவாக்கப்படது இது. குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த நாடல்லவா இது. அன்று அதை எல்லா மக்களும் இணைந்து நின்று எதிர்த்ததால் அரசு கைவிட்டது. இன்றும் கல்வியாளர்களாகிய நாங்கள் மட்டுமின்றி எல்லோரும் இணைந்து நின்று குரல் எழுப்பினால்தான் எல்லோருக்குமான பொதுக் கல்வியை உருவாக்க முடியும். அதற்கான திசையில் ஒன்றிணைவோம். உலகில் பல நாடுகளிலும் பொதுப்பள்ளி முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டமே கடைபிடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் நூற்களும் தரமானவை என நாங்கள் உறுதி கூறுகிறோம்.

தமிழக அரசே!

சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்காதே !
 

நீதி மன்றத் தீர்ப்புகளை அவமதிக்காதே !
 

பாடநூல் மதிப்பீட்டுக் குழுவைத் திருத்தி அமை !
 

இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை எல்லா வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்து !
 

அரசியல் காழ்ப்புணர்வுடன்  அவசியமான பகுதிகளை நீக்காதே !
 

பாரதிதாசனிலும் சங்கப்பாடல்களிலும் கைவைக்காதே  !
 

மாணவர்களுக்குப் பாடம் நடத்தாமல் காலத்தை வீணாக்காதே !

பெற்றோர்களே ! ஆசிரியர்களே ! மாணவர்களே !

கல்வியில் சமத்துவத்தை  நிலைநாட்டுவோம் !
 

சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தக் களம் காண்போம் !
 

ஒன்றிணைவோம் ! போராடுவோம் !

சமச்சீர்க் கல்விக்கான கல்வியாளர்கள் குழு
3/5, முதல் குறுக்குத்தெரு, 

சாஸ்திரி நகர், 
அடையாறு , 
சென்னை – 20 
செல்பேசி: 94441 20

வியாழன், ஜூன் 23, 2011

நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் ?

நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் ?

                                                                                      -மு.சிவகுருநாதன் 


         சமச்சீர் கல்விப் பிரச்சினையில்  தற்போதைய ஜெயலலிதா அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வெளிப்படையாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது. இக்கும்பல் தனியார் பள்ளிக் கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. ஜெயமோகன், பா.ராகவன், துக்ளக் சோ.ராமசாமி போன்றவர்களுடன் கல்வியாளர்கள் என்ற போர்வை யிலுள்ள  தனியார் பள்ளி ஆட்களும் இக்கும்பலில் அடக்கம். ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு என்றவகையில் இவற்றை  வரவேற்போம்.

          சமச்சீர் கல்வியை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைபோல இக்கல்வித்திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட பெரும்கூட்டம் கிளம்பியிருப்பதை  நாம் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் பா.ஜ.க., தினமணி, கிழக்கு பத்ரி  போன்ற சங் பரிவாரக்கும்பல்  தினமும் அரசுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் ஆதரவான கருத்துக்களை பரப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளது. இவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

                தினமணி இன்றைய (23 .06 .2011) தலையங்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான நச்சு விதைகளை தூவியுள்ளது. நிபுணர் குழு அறிக்கை, உயர்நீதிமன்ற விசாரணை, தமிழக அரசின் உச்சநீதிமன்ற மேல்முறையீடு என ஒருமாத காலதாமதம் ஆகுமென்பதால் இக்குழு இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடவேண்டுமென தினமணி எதிர்பார்க்கிறது. இந்த அறிக்கையில் காலாண்டுத்தேர்வு வரையிலான பாடப்பகுதிகளை வரையறை செய்யவேண்டுமாம்.

    
          மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எதோ மாணவர் நலன் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் இதற்குப் பின்னால் இருப்பது தனியார் பள்ளி முதலாளிகளின்  வர்க்க நலன்களே. பாடத்திட்டம் தரமாக இல்லை, பாடநூற்களில் தி.மு.க. சார்பான கருத்துகள் உள்ளன போன்ற தமிழக அரசின் ஆட்சேபம் நியாயமானதுதான் என்றும் சமச்சீர் கல்வி என்பது அரசுப்பள்ளிகளின் தரத்தை மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளின்  பாடத்திட்டத்தின் தரத்திற்கு உயர்த்தவேண்டுமே தவிர தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தை குறைக்கும் வகையில் அமைந்து விடக்கூடாதென  தமிழக அரசுக்கு தினமணி ஆலோசனை கூறுகிறது.

        மொத்தத்தில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இன்று தமிழக அரசும் தனியார் பள்ளிக் கல்விக் கொள்ளையர்களும் இதைத்தானே சொல்கின்றனர். இதில் எங்கிருந்து வந்தது மாணவர் நலன்? 11 மற்றும்  12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் அரசு பாடத்திட்டம்,பாடநூற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளி கல்விக் கொள்ளையர்கள் 1 முதல் 10 வகுப்பு வரை   உள்ள பாடங்கள் மட்டும் தரமற்றவை என்று சொல்வதேன்?  இங்கு மட்டும் இவர்களுடைய தர அளவுகோல்கள் எங்கே போயின? 

        மத்திய ஆட்சிப்பணித்தேர்வுகளில்  நமது மாணவர்கள் தேர்ச்சி பெற ஏதுவாக பாடத்திட்டம் உயர்வாக இருக்கவேண்டுமென்றும் சிலர் சொல்கிறார்கள். பத்தாம்வகுப்பைத் தாண்டியவுடன்  எவரும் இந்தத் தேர்வுகளை எழுதுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.மத்திய  ஆட்சிப்பணித்தேர்வுகள் எழுதும் வெகு சிலருக்காக ஏன் அனைவரும் பாரம்  சுமக்கவேண்டும்?

         சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடநூற்கள் ஆகியவற்றை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தமிழக அரசால் நேரடியாக அமைக்கப்பட்டதல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க அமைக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை உடன் நடைமுறைக்கு வந்துவிடப்போவதில்லை. இந்த அறிக்கையையொட்டி ஒருவாரம் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தித்தான் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இதில் இரு தரப்பும் மேல்முறையீடு  செய்ய வாய்ப்புண்டு. எனவே இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றந்தான் வழங்கமுடியும். 


            உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட இவ்வல்லுநர் குழுவிற்கான எல்லைகள் நீதிமன்றத்தால் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன . இக்குழு என்னமோ சர்வ வல்லமை படைத்த இறுதி முடிவெடுக்ககூடிய அமைப்பு என்கிற தொனியில் இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. சிகப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பதுபோல் அவாள்கள் முடிவு செய்தால் அது அகில உலகிற்கும் பொருந்தும் என்ற சாதீய மனோபாவத்தால்தான் இவ்வாறெல்லாம் எழுதமுடிகிறது. 


         இந்த வல்லுநர் குழு அறிக்கை அளிக்க இரண்டு வாரம்தான் காலக்கெடு. இதில் இடைக்கால அறிக்கை எங்கே வந்தது? பிறகு உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க ஒரு வாரம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருக்கும்போது  இவர்கள் இடைக்கால அறிக்கை கேட்பது  உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.


       இந்த வல்லுநர் குழுவின்  தகுதி குறித்து இன்று பல்வேறு தரப்பிலிருந்து  விமர்சனம் எழுந்துள்ளது. இக்குழுவின் மூலம் சமச்சீர்கல்வி பிரச்சினைக்கு நேர்மையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துபோயுள்ளது. இதெல்லாம் தினமணியின் கண்களுக்கு ஏன் தெரியாமல் போனது? 
 
      தற்போது நீதிமன்ற  விவகாரத்தால்  10 ஆம் வகுப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று  தமிழின் ஒரு முன்னணி நாளிதழில் எப்படி மடத்தனமாக  தலையங்கம் எழுதமுடிகிறது?  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாடநூற்களில் 10 ஆம் வகுப்பும்  அடக்கம் என்பதுகூடத் தெரியாமல் தலையங்கம் எழுதுபவர்களிடம் என்ன நேர்மையை எதிபார்க்கமுடியும்?

        மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது பற்றிய கவலையின்றி  தினமணி  உயர்சாதி மனோபாவத்துடன்  செயல்படுவது   மிகுந்த கண்டனத்திற்குரியது.  
  
    பா.ஜ.க. தன் பங்கிற்கு தமிழகத்தில்  சமச்சீர் கல்வியை அமல் செய்யவேண்டுமென்பதுதான் எங்கள் நிலைப்பாடு எனவும்  மூன்று மாத காலத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அரசை விமர்சிக்கமாட்டோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர்.  இவர்களுடைய முகமுடிகள் கழன்று விழுவது குறித்து யாரும் அதிர்ச்சியடைய தேவையில்லை.
  
        தினமணி, நமது எம்.ஜி.ஆர். போல  உள்ளதென எனக்கு நண்பரொருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரின் கருத்தோடு நான் ஒத்திசைகிறேன்.

புதன், ஜூன் 22, 2011

ஆசிரியர்கள் என்ன கொத்தடிமைகளா?

ஆசிரியர்கள் என்ன கொத்தடிமைகளா?   

                                                                                   -மு.சிவகுருநாதன் 

          சமச்சீர் கல்விக்கெதிராகவும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கு எதிராகவும்  தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழக அரசு தற்போது ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நினைத்து முதல் மற்றும் ஆறாம் வகுப்புப் பாடநூற்களில் கிழிக்கும்,ஒட்டும்,அடிக்கும்,திருத்தும் வேலைகளை வாங்கிவருகிறது. இது வன்மையாக கண்டிக்கவேண்டிய ஒன்றாகும்.

           ஆசிரியர் இயக்கங்கள் இதைப்பார்த்துக்கொண்டு வாய்மூடி மவுனமாக இருக்கின்றன. ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைகிறேன் என்று சொல்லிக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நபர் குழு (!?)  வின் பாதிப்புக்களை கண்டும் காணாததுபோல் இவ்வியக்கங்கள்  இருந்தன. அதற்குக் காரணம் அனைவரும் அறிந்ததுதான். வரப்போகும் சட்ட மேலவை உறுப்பினர் (MLC )பதவிக்காக சங்க உறுப்பினர்களை இவர்கள்  பணயம் வைத்தனர்.

        ஆனால் இப்போது சட்டமேலவை இல்லை என்றாகிவிட்டது .இனி எந்தப் பதவியும் கிடைக்காது என்பது உறுதியான நிலையிலும் பேசா மடந்தைகளாக இருப்பது கேவலமானதாகும்.   இதுவரை நடந்துவருகின்ற சமச்சீர்கல்வி விவகாரங்களில் எவ்வித கருத்தையும் கூறாமல் இவ்வியக்கங்கள் அமைதி காப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால்தான் அரசு இந்த கிழிக்கும் வேலைகளில்  ஆசிரியர்களையே ஈடுபடுத்திருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

        சமச்சீர்கல்விப் பாடபுத்தகங்கள் தரமற்றவை என்று அரசு சொல்லிவரும்  இவ்வேளையில் சில இயக்கங்கள் சந்தடிசாக்கில் செயல்வழிக்கற்றல் முறையை ரத்து செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  செயல்வழிக்கற்றல் முறையை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சமச்சீர்கல்வியே கேள்விக்குறியாகியுள்ள இந்நிலையில் அதைப்பற்றி பேசுவதில் பொருளில்லை. 

         முந்தைய கருணாநிதி அரசு மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்றார்கள். சமச்சீர்கல்வியை ஆதரிக்கிறோம் என்றும் சொன்னார்கள். பாடநூற்கள் உலகத்தரமாக இல்லை; எனவே அதை மாற்றவேண்டும் என்பதே எங்களது  நோக்கம் என்றுகூட சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன?
       கருணாநிதியின் பெயர் குறிப்பிடப்படும் பக்கங்கள்  மற்றும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையை நீக்குவது  என்ற பெயரில் அதை மட்டுமல்லாது, தான்தோன்றித்தனமாக அப்துல் ரகுமான் கவிதை, பாரதிதாசன் ஆத்திச்சூடி, ஔ -எழுத்து அறிமுகம், சூரிய கிரகணம், சட்டக்காந்தம், குழந்தைகளுக்காக வரையப்பட்ட படங்கள், தமிழ்நாடு வரைபடம், தமிழ் மாதங்களைச் சொல்லும் பாடல் என்று பல்வேறு பக்கங்கள், தாள்களை நீக்கும், கிழிக்கும், அழிக்கும் வேலைகளை தமிழக அரசு செய்துகொண்டுள்ளது.

             தமிழக அரசு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதற்கு நேரெதிராக முந்தைய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியும் சமச்சீர்கல்வியின் மீது கொண்டுள்ள வெறுப்பும் மேற்கண்ட பல்வேறு நடவடிக்கைகளிருந்து தெரியவருகிறது. தனியார் பள்ளி முதலாளிகளான கல்விக் கொள்ளயர்களுடன் தமிழக  அரசு ஏற்படுத்திக்கொண்டுள்ள கூட்டணியை  நிருபிக்க சமச்சீர்கல்வியை ஆராய அரசு நியமித்த குழுவே சான்று.

        சமூகத்தைப் பாதிக்கும் இந்நிகழ்வுகளை கண்டும் காணாததுபோல் இருப்பது அறியுடைமை ஆகாது. ஊடகங்களும் தமிழ் அறிவுலகமும் இந்த அநியாயத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கவேண்டும். 
11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் அரசு பாடத்திட்டம்,பாடநூற்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளி கல்விக்கொள்ளையர்கள் 1 முதல் 10 வகுப்பு வரை   உள்ள பாடங்கள் மட்டும் தரமற்றவை என்று சொல்லும் இரட்டைவேடத்தை அம்பலப் படுத்தவேண்டும். இதற்குத் துணைபோகும் ஜெயலலிதாவின் அரசையும் கண்டிக்கவேண்டியது சமூக உணர்வாளர்கள் அனைவரின் பொறுப்புமாகும்.

       தமிழக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்கும், பழிவாங்கும் என்று இனியும் அமைதி காக்காமல் மாணவர்கள் மற்றும் சமூகம் குறித்தான தங்களது அக்கறையை உடன் வெளிப்படுத்தவேண்டியது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் இன்றியமையாத கடமையாகும். 

திங்கள், ஜூன் 20, 2011

சாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழிஅனுபவித்ததுண்டா?

சாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழி அனுபவித்ததுண்டா?                    

                                                                           -மு.சிவகுருநாதன் 


         2 ஜி அலைக்கற்றை வழக்கில்  முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும் தி.மு.க. எம்பியுமான   கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி   நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஆகியோர் தாக்கல் செய்த பிணை  மனுவை உச்சநீதிமன்றம்   தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே அணுகி பிணை  கோரலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 




           இன்றைய விசாரணையில், கனிமொழி ஒரு எம்.பி.என்றும் , எனவே  அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பாரென்றும், சாட்சிகளை கலைப்பார் என்று  நீதிமன்றம் கருதினால் இவரது வீட்டில் ரகசிய காமிரா வேண்டுமானாலும் ‌பொருத்திக்கொள்ளட்டும் என்ற இவரது வழக்கறிஞர்  வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்ற நிலைக்கு கனிமொழியும் கருணாநிதியும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 
        கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். எனவே அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். ஆகவே அவர்களுக்கு பிணை  வழங்கக் கூடாது என்று சி.பி.அய்.தாக்கல் செய்த  மனுவில் கூறியது. 

         இருவரும் கூறுவதுபோல் கலைஞர் தொலைக்காட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தானே தவிர   கடன்தொகை அல்ல என்றும் சி.பி.அய். குற்றம் சுமத்தியது. இதை ஏற்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கனிமொழி,சரத்குமார் ஆகியோரின் பிணை மனுவை இன்று (20 .06 .2011)  விசாரித்து பிணை  வழங்க மறுத்து விட்டது.


        குற்றவியல் சட்டத்தின் 437 வது பிரிவின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களில் பெண் என்ற வகையில் பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை நாட நீதிபதி அறிவுறுத்திருக்கிறார்.
 
      முன்னதாக  இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக திடீரென அறிவித்தனர். இதற்கான காரணம் தெரியவில்லை.


        நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு ஏதோஒரு வகையில் வேண்டியவர் என்றாலோ இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கு என்ன நடந்ததென்பதை சம்மந்தப்பட்டவர்கள்தான் விளக்கவேண்டும்.

        அதனால்   2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும்  நீதிபதிகள் பி.எஸ். சவ்ஹான் , ஜி.எஸ். சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்து இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

     கனிமொழி பெண் என்பதால் பிணை வழங்கவேண்டுமெனவும் வாதிடப்பட்டதாக தெரிகிறது. ஊழல் வழக்கில் ஆண்-பெண் பேதம் பார்க்கச் சட்டத்தில் இடமில்லை. 
  
    ஒரு  சாதாரணப் பெண் படும் துன்பங்கள்,துயரங்களில் துளியளவாவது கனிமொழி அனுபவித்ததுண்டா? அவரது கவிதைகள் என்று சொல்லப்படும் எழுத்துக்களிலாவது அடித்தட்டுப் பெண்களின் வலிகளும் வாதைகளும் வெளிப்பட்டதுண்டா? இந்த மாதிரியான கற்பனையான ஒன்றை கனிமொழியால் எப்படி படைக்கமுடியும்? 


      சாரு நிவேதிதா போன்ற துதிபாடிக்கும்பல்கள் வேண்டுமானால் தனக்கு பின்னால் கிடைக்கப்போகும் சலுகைகளுக்காக கனிமொழியின் கவிதைகளில் ஏதேனும் இருப்பதாக உளறி வைக்கலாம். இன்று எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக்கக்கான பெண்ணியக் கவிஞர்களுடன் கனிமொழியை ஒப்பிடவேமுடியாது.

     அம்மா சாதியில் மணமகன் பார்த்து தொழிலதிபர் அதிபன் போசை திருமணம் செய்துகொண்டது, பிடிக்காதவுடன் மணமுறிவு பெற்றது உள்ளிட்டவைகள் சாதாரணப் பெண்ணின் வாழ்வில் நடைபெற்றிருக்க முடியுமா? பசி,பட்டினி கிடந்ததுண்டா? குளிரூட்டப்பட்ட அறை, வாகனங்கள் இன்றி இருக்கமுடியுமா? எனவேதான் திகார் சிறையை விட்டு  வெளியே வரத் துடிக்கிறீர்கள்.

        கனிமொழியை  அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை என்றும் சொல்லி நீதிபதியின் மனத்தை மாற்ற முயன்றிருக்கிறார்கள். அப்பாவியான வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ஒரு நியாயம், கனிமொழிக்கு ஒரு நியாயமா?   


        இரு பெண்குழந்தைகளை பராமரிக்கவேண்டிய பொறுப்பில் இருந்த 
முத்துலட்சுமி வீரப்பன் மீது போடப்பட்ட தடா வழக்குகளுக்காக பல ஆண்டுகள் மைசூரு  சிறையில் வாடியபோது இந்த கருணாநிதியும் கனிமொழியும் ஏதேனும் செய்ததுண்டா?


           உங்களுக்கு ஒரு பெண் இருந்து அந்தப்பெண் சிறையில் வாடினால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்ற கேள்வியே கருணாநிதியின் முன் நிற்கிறது. எல்லார் வீட்டுப்பெண்களும் கருணாநிதி சொல்வது உண்மை எனக்கொன்டாலும் ரூ 214 கோடி கடன் வாங்கும் அளவிற்கு இருந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கவேண்டிய தேவையிருக்குமா என கருணாநிதி யோசிக்கட்டும்.

            பெற்ற பாசம் கண்களை மறைக்க மு. கருணாநிதி நாளை (21.06.2011)   கனிமொழியை பார்க்க தில்லி  திகார் சிறைக்கு செல்லவிருக்கிறார். இந்த முறை சோனியாகாந்தியை சந்தித்து சி.பி.அய். நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயற்சி செய்யலாம். மிக விரைவில் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூடி கனிமொழி வழக்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

            கருணாநிதிக்கு தற்போது தேவை கனிமொழியின் விடுதலை மட்டுமே. ஆ.ராசா,சரத்குமார் ஆகியோரின் விடுதலை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்கள் இப்போதாவது அப்ரூவராக மாறினால் அவர்களுக்கு நல்லது. இருப்பினும் அவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெற்றேயாகவேண்டும். 

           ஆ.ராசா திகார் சிறையில் இருப்பதால் அவரது கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி நடிகை குஷ்புவுக்கு அளிக்கப்படலாமெனத் தெரிகிறது. கனிமொழி உள்ளிட்ட எந்த ஆங்கில  ஊடக விவாதங்களில் குஷ்பு  மட்டுமே பங்குபெறுகிறார். கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் பிணை மறுத்த விவகாரத்திலும் தி.மு.க.வின் குரல் அவர் மட்டுமே. தி.மு.க.விற்கு குடும்பங்களின் கொள்கையைத் தவிர வேறு கொள்கை இருக்கிறதா என்ன? எனவே யார் அந்தப் பதவியில் இருந்தாலென்ன? 
        
             தி.மு.க.என்ற அண்ணாவின் உழைப்பை அறுவடை செய்த மு.கருணாநிதி, தனது குடும்பங்களே கட்சி என்று மாற்றி குடும்ப உறுப்பினர்களை மட்டும் பதவி அளித்து கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்டினார். அதன் பலனை மு.கருணாநிதி தற்போது அனுபவிக்கிறாரென்றுதான் சொல்லவேண்டும்.

தமிழக அரசு நியமித்துள்ள சமச்சீர் கல்வி மதிப்பீட்டுக் குழு தகுதியானதல்ல: கல்வியாளர்கள் கண்டனம்

தமிழக அரசு நியமித்துள்ள  சமச்சீர் கல்வி மதிப்பீட்டுக் குழு
தகுதியானதல்ல: கல்வியாளர்கள் கண்டனம்

 
                                                                                                              சென்னை
                                                                                                        ஜூன் 20, 2011

 
     சமச்சீர் கல்வி அமலாக்கத்தைத் தமிழக அரசு இவ்வாண்டு நிறுத்திவைத்துச் சட்டம் இயற்றியதை ஒட்டிஅக்கறையுள்ள கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர் நீதி மன்றத்தை அணுக வேண்டியதாயிற்று. தலைமை
நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் எமது நியாயங்களை ஏற்று தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்குச் சென்ற 10ம் தேதியன்று இடைக்காலத்தடை வழங்கியது.
 
         அவசரக்கோலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சிக்கவும் செய்தது. தேவையானால் பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கிக் கொள்ளவும், குழு அமைத்து பாடத்திட்டத்தை ஆராய்ந்து செழுமைப்படுத்தவும் அரசுக்குள்ள உரிமையையும் தீர்ப்பு அங்கீகரித்தது.
 
      மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுதலைக் கணக்கில் கொண்டு அரசு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இந்தக் கல்வி ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் என நம்பினோம்.ஆனால் அரசு பிடிவாதமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. நீதிபதிகள்  பி.எஸ். சவ்ஹான், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வழக்கை அவசரமாக விசாரித்து சென்ற 14ந் தேதியன்று தீர்ப்பை வழங்கியது.
 
       அரசியல் மாற்றத்தின் விளைவாக நிர்வாக ரீதியாகவோ சட்டமன்றத்தைக் கூட்டியோ முடிவெடுக்கும்போது மாணவர் நலனே பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 
 
தீர்ப்பின் இதர முக்கிய அம்சங்களாவன:
 
1. முதல்  மற்றும் 6 -ம் வகுப்புகளுக்கு சென்ற ஆண்டைப் போலவே இந்தக் கல்வி ஆண்டிலும் சமச்சீர்  கல்வி தொடர வேண்டும்.
 
2. பிற வகுப்புகளைப் பொருத்தமட்டில் அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து சமச்சீர் கல்விப்பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் ஆராய வேண்டும். இக் குழு மூன்று வாரங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டும். இவ்வறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ரிட் மனுக்களை தினசரி
விசாரித்து விரைவாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
 
3. தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்படும் இவ் வல்லுனர் குழுவில் ஒன்பது பேர் இருப்பர்.தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர தனது பிரதிநிதிகளாகத் தமிழக அரசு வேறு இருவரையும் நியமித்துக் கொள்ளலாம். இரு கல்வியாளர்களையும் அரசு நியமித்துக்கொள்ளலாம். இவர்கள் தவிர ’தேசீயக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலிருந்து’ (NCERT )  இருவரை நியமிக்க வேண்டும்.
 
4. முந்தைய அரசு இயற்றிய சமச்சீர் கல்விச் சட்டம் சட்டபூர்வமானது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளதால், வல்லுனர் குழு சமச்சீர் கல்விமுறையை மாற்றிப் பழைய முறைக்குத் திரும்புதல் என்கிற பிரச்சினைக்குள் நுழையக் கூடாது. முந்தைய அரசின் சமச்சீர் கல்விச் சட்டத்தைநடைமுறைப்படுத்த வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் சென்ற ஏப்ரல் 30, 2010 அன்று வழங்கிய தீர்ப்பை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையே வல்லுனர் குழு ஆராய வேண்டும்.
 
   இந்தத் தீர்ப்பின் விளைவாக 2,3,4,5,7,8,9,10 வகுப்புகளுக்குப் பாடம் தொடங்குவது மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகிறது என்ற போதிலும் பொதுப்பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வழியே தராத வகையில்
அமைந்துள்ள அம்சத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது. 
 
     சென்ற செப்டம்பர் 10, 2010 அன்று சமச்சீர்க்கல்விக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றப் பெஞ்சில் இருந்த நீதிபதி பி.எஸ்.சவ்ஹான் அவர்கள் அடங்கிய பெஞ்சே இன்றைய தீர்ப்பையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் வல்லுனர் குழு அமைக்கும் அம்சத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள நெறிமுறை ஏற்கத்தக்கதாக இல்லை. 
 
        அப்படியான ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனில் அதை உச்ச நீதிமன்றமே செய்திருக்கவேண்டும். பாடத்திட்டம் தரமாக இல்லை எனச் சொல்லி சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்திவைக்கக் கோரும்  மனுதாரரிடமே தரத்தைப் பரிசோதிக்கும் குழுவை நியமிக்கும் பொறுப்பை அளித்தல் எப்படிச்சரியாக இருக்கும்? 
 
       தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மூவர் குழுவில் உள்ளபோது தமிழக அரசுக்கு மேலும் இரு பிரதிநிதிகள் ஏன்? கல்வியாளர்கள் இருவரைத் தேர்வு செய்யும் பொறுப்பையும் அதே மனுதாரரிடம் கொடுப்பதெப்படி? உச்சநீதிமன்றம் இவற்றைக் கருத்தில் கொள்ளாதது வருந்தத்தக்கது.
 
        இந்த வாய்ப்பைத் தமிழக அரசு மிக மோசமான வகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. கல்வியாளர்கள் என்ற போர்வையில் டி.ஏ.வி பள்ளிக் குழும உரிமையாளர் ஜெயதேவ், பத்மா
சேஷாத்ரி பள்ளிக் குழும உரிமையாளர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி தமிழக அரசுப் பிரதிநிதிகளில் ஒருவராக லேடி ஆண்டாள் பள்ளி முன்னாள் நிர்வாகி விஜயலக்ஷ்மி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
      ஆக, இக்குழுவில் சமச்சீர் கல்வியை ஒத்திப் போட ஆணையிட்ட தமிழக அரசு அதிகாரிகளும், மெட்ரிகுலேஷன் முதலான கல்வி வாரியங்கள் தொடருவதால் பயன்பெறும் தனியார் பள்ளி முதலாளிகளுமே நிறைந்துள்ளனர். இவர்கள்அளிக்கப் போகிற ‘மதிப்பீட்டு அறிக்கை’ நிச்சயமாக தமிழக அரசு முடிவுக்குச் சாதகமாகவே அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 
  
        கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை
முற்றிலுமாக இக்குழு நிராகரிக்கவும் பகுத்தறிவுக்கும் சமூகநீதிக்கும் பொருந்தாத கருத்துக்களைத் திணிக்கவும் இக்குழு முயற்சிக்கும் வாய்ப்புண்டு.தற்போது உருவாக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் பாடநூற்களும் தகுதிமிக்க ஆசிரியர்கள் மற்றும்  வல்லுனர்களால் ஓராண்டு உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு விரிவாக விவாதம் நடத்தப்பட்டவை. 
 
       ஆசியாவிலேயே தலைசிறந்த கணித ஆராய்ச்சி அமைப்பான  ‘மேட் சயின்ஸ்’  நிறுவனப் பேரசிரியர் முனைவர் ராமானுஜம், இந்திய அளவில் புகழ்பெற்ற ராமானுஜம் மேலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் யுவராஜ், மூத்த ஆங்கில ஆசிரியை நளினி மற்றும் கல்வியாளர்கள் முனைவர் மாடசாமி, முனைவர் தெ. வெற்றிச்செல்வன், வ. கீதா முதலான அறிஞர்கள் பங்குபெற்று உருவாக்கியவை.
 
    புகழ்பெற்ற கல்வியாளர் கிருஷ்ணகுமார் (சி.பி.எஸ்.ஈ) முதலான அறிஞர்கள் நேரில் வந்திருந்து இப்பாடத்திட்டத்தைப் பாராட்டியுள்ளனர். இப்படி உண்மையான கல்வியாளர்களாலும் வல்லுனர்களாலும் உருவாக்கப்பட்ட  ஒரு பாடத்திட்டத்தை அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மதிப்பீடு செய்வதை ஏற்க முடியாது. 
 
      அரசு அமைத்துள்ள இக்குழுவிற்கு வேறு எந்தத் தகுதிகள்  இருந்த போதும்
கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தையும், பாடநூல்களையும் மதிப்பிடும் தகுதி இதற்கு இல்லை என நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். பல அரசியல் கட்சிகளும்கூட இக்குழுவின் தகுதியின்மையைச்சுட்டிக்காடியுள்ளதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
 
      எனவே தமிழக அரசு உடனடியாக இக்குழுவில் உள்ள தனியார் கல்வி முதலாளிகள் முதலானோரை நீக்கி உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு இக்குழுவைத் திருத்தி அமைக்க வேண்டுகிறோம். தவிரவும்  இக்குழுவின் பணி சமச்சீர்  கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்வதுதான், சமச்சீர் கல்வியை மாற்றி அமைப்பதல்ல எனத் தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை இக்குழுவிற்கும் அரசுக்கும் நினைவூட்டுகிறோம். இதற்கு மாறாக இவர்களின் அறிக்கை அமையுமானால் அது நீதிமன்ற அவமதிப்பிற்கு உரியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
 
        சமச்சீர் கல்விப் பாடத்திட்டம், நூல்கள் முதலானவை தகுதிக் குறைவானவை என்பதான ஒரு அறிக்கையை இக்குழுவிடமிருந்து பெற்று அதனடிப்படையில் தரமான புதிய நூல்களை உருவாக்கக் காலமில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி சமச்சீர் கல்வி அமலாக்கத்தைத் தமிழக அரசு ஒத்திப் போட முயற்சிக்கும் என நாங்கள் அஞ்சுகிறோம். சமச்சீர்  கல்விக்கு முந்தைய பழைய பாடநூல்கள் அதி வேகமாக அச்சிடப்பட்டு வருவதாக இன்றைய பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியும் அரசின் நோக்கத்தை
வெளிப்படுத்துகிறது. 
 
       இது சென்ற ஆண்டிலும் (2010), இந்த ஆண்டிலும் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்புகளின் தொனிக்கு எதிரான செயல்பாடு என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். சமச்சீர் கல்வி தொடர்பான அரசு அணுகு முறைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு நிறுவியுள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை எல்லா வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை வற்புறுத்தி வேண்டுகிறோம்.
 
இறுதியாக 
 
       1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர்க்கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப தமிழக அரசு சமச்சீர் கல்விப் பாடநூல்களைத் திருத்தி பள்ளிகளுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. தமிழக அரசுக்கு ஒவ்வாத பகுதிகளை நீக்கிக் கொள்ளலாம் என நாங்களும் கூறினோம். நீதிமன்றங்களும் அந்த உரிமையை ஏற்று ஆணையிட்டன. அந்த அடிப்படையில் இன்று பாடநூல்களில் சில பகுதிகளை நீக்குவதை நாம் ஏற்றுக்கொண்டாலும் அவ்வாறு நீக்கப்படும் பகுதிகளில் பல எவ்வித தர்க்கங்களுக்கும் நியாயங்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
 
சில எடுத்துக்காட்டுகள்:
 
1. முதலாமாண்டு தமிழ்ப் பாட நூலில் 69,70, 79,80 ஆகிய பக்கங்களை முழுமையாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்பிள், மனித முகம் முதலான படம் வரையும் பயிற்சிகள், ‘ஒள’ வரிசை எழுத்துக்களின் அறிமுகம், பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி, ‘தை’யில் தொடங்கும் தமிழ் மாதங்கள் குறித்த பாடல் ஆகியன இதன் மூலம் நீக்கப்படுகின்றன. வரைபடப் பயிற்சி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, ஓள எழுத்து அறிமுகம் ஆகியவற்றை நீக்குவதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
 
2. ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் 56ம் பக்கம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பாடம் கவிஞர் அப்துல் ரஹ்மானின் ‘தாகம்’ என்னும் கவிதை. அது:
 
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே
வேலிக்குஅடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்? 
 
       அப்துல் ரஹ்மான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர்
என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இக்கவிதையை நீக்குவதற்குச் சொல்ல முடியாது.
 
3. ஆறாம் வகுப்புத் தமிழ் நூலில் உள்ள ‘தைத் தமிழ்ப் புத்தாண்டே’ எனும் பாடல், அறிவியல் பாடநூலில் உள்ள சட்டக்காந்தப் படம், சூரிய கிரகணத்தை விளக்கும் படம், பகல் இரவு படம் முதலியவற்றை நீக்க உத்தரவிடப் பட்டுள்ளது. சட்டக் காந்தத்தில் வட, தென் துருவங்களைக் குறிக்க கருப்பு, சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துவது வழக்கம். சூரிய கிரகணத்தை விளக்கவும், பகல் இரவை விளக்கவும் சூரியனின் படத்தைப் போடுவது தவிர்க்க இயலாது. கருப்பு சிவப்பு, சூரியன் ஆகியவை உள்ளன என்பதாலேயே
இவற்றை நீக்குவது என்ன நியாயம்?
 
      சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கு அரசியல் காழ்ப்பு காரணமல்ல. தரக்குறைவே காரணம் எனத் தமிழக அரசு கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
 
பேரா. அ.மார்க்ஸ்,
முனைவர் ப. சிவக்குமார்,
பேரா.அ. கருணானந்தம்,
பேரா. பா. கல்விமணி,
மக்கள் சக்திக் கட்சி சிவசங்கர்,
முனைவர்.வி. முருகன்,
வழக்குரைஞர் ரஜினி,
எழுத்தாளர் ராமாநுஜம்,
பேரா. இரத்தின சபாபதி,
புலவர் கி. த. பச்சியப்பன்,
பேரா. மு. திருமாவளவன்,
பேரா. யாழினி முனுசாமி,
முனைவர். ந. அரணமுறுவல்,
திரு. அ. அமல்,
பேரா. மணிகோ. பன்னீர்செல்வம்,
 
தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத்தெரு, 
சாஸ்திரி நகர், அடையாறு, 
சென்னை- 6000 020.
செல்: 94441 20582.

சனி, ஜூன் 18, 2011

சமச்சீர்கல்வியை ஆராய குழு :- திருடர்கள் கையில் சாவி

சமச்சீர்கல்வியை ஆராய குழு :-  திருடர்கள் கையில் சாவி    
               
                                                                                 -மு.சிவகுருநாதன் 

    

      நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோலவே   உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட   சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குழுவின் லட்சணம் பட்டியலை பார்த்ததும் புலனாகிறது. 

        தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில்  டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர்  கல்வியாளர்கள் என்ற போர்வையில் சேர்க்கப்பட்டிருப்பது அநியாயமானது.

       பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சி.பி.எம்.தமிழ் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் போன்றோரும் பல்வேறு தரப்பைச் சார்ந்த கல்வியாளர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


     அரசு அதிகாரிகளும் இந்த கல்வி வணிகர்களும் சேர்ந்து எப்படிப்பட்ட அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?  கல்வி வியாபாரிகளனைவரும் கல்வியாளர்கள் என்றால் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்! 


         நடுநிலையாக இருக்கவேண்டிய ஒரு மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் சமச்சீர்கல்விக்கு எதிராகவும் செயல்படுவது வருந்தத்தக்கது ; கண்டிக்கத்தக்கது. 


         இது ஒருவகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். இனி நீதிமன்றமே உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு புதிய நிபுணர் குழு அமைக்கப்படுவது அவசரத்தேவையாகும்.


       சமச்சீர் கல்விக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற முயன்று தோல்வியடைந்த தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர்கல்வியை ஆராயும் ஒரு குழுவில் அங்கம் வகிப்பது அபாயகரமானது.

      இன்றைய தமிழக அரசு முற்றிலும் சமச்சீர்கல்விக்கெதிராகவும் தனியார் பள்ளி கல்விக்கொள்ளை யர்களுக்கு அனுசரணையாகவும் நடந்து கொண்டிருப்பது பொதுமக்களால் நன்கு கவனிக்கப்படுகிறது. இதன் விளைவை உள்ளாட்சித்தேர்தலில்  கூட ஆளும்கட்சி எதிர்கொள்ள நேரிடலாம்.


        ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் வீண்பிடிவாதத்தால் இன்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுகூட ஜனநாயகத்தின் மீதான நெருக்கடியாகவும் உணரப்படலாம்.


        இந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது கண்டனத்திற்கு உள்ளாகாமல் இப்போதே நிபுணர் குழுவை உடனடியாக மாற்றியமைப்பது தமிழக அரசுக்கு நல்லது.  

வெள்ளி, ஜூன் 17, 2011

சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்

சமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்




சென்னை, ஜூன் 17:
 
       உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
       இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 
      சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.
 
       ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.
 
       சமச்சீர் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
 
       சமச்சீர் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒருசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். 
 
      மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:- தினமணி