தண்ணீரைப் புரிந்துகொள்ளுமா பாடநூல்கள்?
(எட்டாம் வகுப்பு அறிவியலின் ‘நீர்’ பாடம்
குறித்து…)
மு.சிவகுருநாதன்
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 67)
7,
8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:
பொதுவாகப்
பாடநூல்கள் அறிவியல் மனப்பான்மை வளர்க்கக் கூடியதாகவும் மாணவர்களின் சிந்தனையைத்
தூண்டும் வகையிலும் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அறிவியல் பாடநூலுக்கு
இன்னும் சற்று மேம்பட்ட எதிர்பார்ப்பு இருப்பது இயல்பு. ஆனால் நடைமுறையில்
பாடநூல்கள் எவ்விதம் அமைகின்றன என்பதற்குக் காட்டாக ஓர் அறிவியல் பாடத்தை இங்கு
கவனிப்போம்.
அணுக்களா அயனிகளா?
எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலில் ‘நீர்’
பாடத்தில் உள்ள கீழ்க்கண்ட இரு பத்திகளையும் வாசியுங்கள்.
“வேதியியலின் படி நீர் ஒரு நிலையான சேர்மம். ஆனால், மின்னாற்றலை செலுத்தும்போது ஹைட்ரஜன்(H2) மற்றும் ஆக்சிஜனாக(O2) பிரிகிறது. மின்னாற்றலின் மூலம்
நீர் மூலக்கூறுகளை பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல்
எனப்படும்”. (பக். 40)
“நீரின் கடினத்தன்மையை அகற்றுவதற்கான மற்றொரு
முறை அயனி பரிமாற்றம் ஆகும். நீரினை அயனி பரிமாற்றம் செய்யும்
பிசின்களுள் அனுப்பும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள்
சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன”. (பக். 50)
மின்னாற்பகுத்தலின்போது அணுக்காக (Atom) எப்படிப்
பிரிகிறது? பின்னதில் மட்டும் அயனிகளாகப் பிரிகிறது. இது எப்படி? முன்னதில்
அயனிகள் (Ions) உருவாவதில்லையா? மேலும் மின்னாற்பகுத்தலில் மின்பகுளி
தேவையில்லையா?
தூய நீரும் குடிநீரும் ஒன்றா?
தூயநீர் (Pure water), குடிநீர் (Drinking
water) இரண்டிற்குமான குழப்பம் தொடர்கிறது. இரண்டும் ஒன்றல்ல. தூயநீர் (H2O) என்பது ஒரு சேர்மம். இதுவே வாலை
வடிநீர் (Distilled water) எனப்படுகிறது.
இது ஆய்வகச் சோதனைகளுக்கும் சில குறிப்பிட்ட பணிகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும்
இது குடிப்பதற்கு ஏற்றதல்ல. வாலை வடிநீரை குடிக்கும்போது எந்தப் பிரச்சினையும்
இருக்காது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும். அணு உலைகளில்
பயன்படும் கனநீரை குளிக்கப் பயன்படுத்த கதை நமக்குத் தெரியுந்தானே!
குடிநீரின் தன்மைகளில், “நமது உடலுக்கு
தேவையான உப்புகள் மற்றும் தாதுக்கள் இருத்தல் அவசியம். மேலும் நீரில்
கலந்துள்ள வாயுக்களும் நீருக்கு சுவையுட்டுகின்றன”, (பக்.47) என்று
சொல்லப்படுகிறது.
“தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மை இரண்டையும்
வடிகட்டுதல் முறையால் அகற்றலாம். இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும்
காய்ச்சிய நீர் வாலை வடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும்
தூய்மையான நீராகும். வாலை வடிநீர் மற்றும் காய்ச்சிய நீர்
சுவையாக இருப்பதில்லை. காற்று, கார்பன் டை ஆக்சைடு மற்றும்
தாதுக்கள் கரைந்துள்ளதால் குடிநீர் இனிமையான சுவை பெற்றுள்ளது”.
(பக்.50)
காய்ச்சிய நீரும் வாலை வடிநீரும் ஒன்றா?
குடிநீருக்கு காய்ச்சிய நீரும் தூயநீருக்கு வாலை வடிநீரும் தேவை. கொதிக்க வைத்த காய்ச்சிய
நீரும் (Hot water) காய்ச்சி வடித்த
நீரும் (Distilled water) ஒன்றல்லவே!
“சாதாரண உப்பான சோடியம் குளோரைடை தவிர
சிறிதளவு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் துத்தநாக
உப்புகளும் நீரில் கலந்துள்ளன. இந்த தாது உப்புகள் நீருக்கு
சுவையுட்டுகின்றன. மனிதனின் வளர்சிதை மாற்றத்திற்கு இது இன்றியமையாதது.
மேலும், குடிநீரில் காற்றும் கலந்துள்ளது. (பக்.47)
கடல்நீரைக் குடிநீராக்கும் முறை
“எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis)
என்பது நீரிலிருந்து மாசு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படும்
முறையாகும். மேலும் இவை நீரின் சுவையையும் கூட்டுகிறது. RO என்பதன்
விரிவாக்கம் Reverse Osmosis ஆகும். மேலும் சில RO க்களில் கிருமிகளை அழிக்கக்
கூடிய புறஊதா (UV) அலகுகள் நீரை சுத்தப்படுத்துதலுக்காக இடம் பெற்றுள்ளன”.
(பக்.48)
எதிர் சவ்வூடு பரவல் என்பது கடல்நீரைக்
குடிநீராக்கும் ஒரு முறை. நீரிலுள்ள கனிம உப்புகளை இம்முறை வெளியேற்றுகிறது. முதல்பணி
உப்பு நீக்கம்; அடுத்ததே கிருமி’ மாசு நீக்கம் எல்லாம். சுவையை கூட்ட மீண்டும்
கனிமங்கள் சேர்க்கப்பட வேண்டும். அதில் என்ன சேர்க்கிறார்கள் என்று யாருக்கும்
தெரியாது. இம்முறையை தற்போது வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம். சூழலுக்குக் கேடு
செய்வதால் விரைவில் இம்முறை வீடுகளில் தடை செய்யப்படும் என செய்திகள் வருகின்றன. கடல்நீரைக்
குடிநீராக்கும் திட்டங்களுக்கு எவ்விதத் தடையுமில்லை.
சாக்கடல் பற்றிய தவறான செய்திகள்
சாக்கடலைப் பற்றிய ‘உங்களுக்குத் தெரியுமா?’
பின்வருமாறு உள்ளது.
“சாக்கடலில் (Dead Sea) நீரின் உப்புத்தன்மை
மிக அதிகம். இது உப்பு நிறைந்த ஒரு ஏரியாகும். ஏனெனில் இது ஒற்றை நீராதாரத்தை
மட்டுமே பெற்றுள்ளது மற்றும் பெருங்கடலுடன் இணைக்கப்படவில்லை. இது
நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் நீர் ஆவியாவதுடன் உப்புத்தன்மையின் அளவும் சீராக
அதிகரித்து வருகிறது. தற்போது உப்புத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் கடல்
வாழ் உயிரினங்கள் அதில் வாழ முடியாது. அதனால் தான் இது சாக்கடல் என்று
அழைக்கப்படுகிறது”. (பக்.47)
சாக்கடல் பிற நீர்ப்பரப்புடன் இணைக்கப்படாமல் உப்பு
ஏரியாகச் சுருங்கியுள்ளது. இதன் ஒற்றை நீராதாரம் எது? இஸ்ரேல், பாலஸ்தீனம்,
ஜோர்டான் பகுதியில் இருக்கும் சாக்கடலில் கலக்கும் ஒரே ஆறு ஜோர்டான் ஆறு. மழையும்
அங்கு உண்டுதானே! பிறகெப்படி ‘ஒற்றை நீராதாரம்’ என்று சொல்ல இயலும்? மனிதன்
மிதக்கக்கூடிய அளவிற்கு உவர்ப்பிய அளவு அதிகரிக்கக் காரணமென்ன?
இஸ்ரேல், ஜோர்டான் நாடுகள் வேளாண்மை மற்றும்
தொழில் பயன்பாட்டிற்காக ஜோர்டான் ஆற்றைத்
திருப்பிவிட்டதால் இக்கடலில் கலக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.
உஸ்பெகிஸ்தான், கஸக்கஸ்தான் நாடுகளுக்கு
இடையே உள்ள ஏரல் கடல் (ஏரி) வறண்டு போயுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கடற்பாலை
ஆகும். இதன் நீராதாரமான அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளும்
நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பப்பட்டதால் வந்த வினை.
‘வீணாகக் கடலில் கலக்கும் நீர்’ என்றொரு கற்பிதம்
நம்மூரிலும் ‘வீணாகக் கடலில் கலக்கும் நீர்’
என்றொரு கற்பிதம் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்படுவதை அறியலாம். இவ்வாறு எல்லா
ஆறுகளையும் திருப்பிவிட்டால் உலகில் பல சாக்கடல்களும் ஏரல் கடல்களும் உருவாகலாம்.
நமது நாட்டில் கடல்வளம் சீர்கெட்டு சூழல் பெரும் பாதிப்பிற்குள்ளாகும்.
“கடல் வாழ் உயிரினங்கள் அதில் வாழ முடியாது”,
என்று சொல்வதும் தவறு. சாக்கடலில் ஒருசில நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
மழைக்காலத்தில் மட்டும் உவர்ப்பிய அளவு குறைவதால் சில உயிரினங்கள் வாழ வழிவகை
ஏற்படுகிறது. இப்படி தப்பும் தவறுமாக ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதி தேவைதானா?
வேளாண் பயன்பாடு 70% அல்லது 90%?
“கிடைக்கக்கூடிய மேற்பரப்பு நீரில் 90% விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது”. (பக்.50)
“About 90% of the available surface water has already been tapped mainly for agriculture and
irrigation”. (Page: 44)
“Agriculture activities alone utilize 70% of the available fresh water resources”. (Page: 81)
விவசாயம், நீர்ப்பாசனம் இரண்டும் வேறுவேறு என
உணர்க! இதே பாடநூலின் வேறொரு பாடத்தில் “நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கு
பயன்படுகிறது”, (பக்.93, பயிர் பெருக்கம்
மற்றும் மேலாண்மை) என்றும் எழுதப்படுகிறது. (வல்லினம் மிகுதல் என்றால் என்ன? கதைதான்!
– பயிர்ப்பெருக்கம்)
சொல்லாக்கம்
சொல்லடைவுப்
பகுதியில் யூட்ரோஃபிகேஷன் (Eutrophication) என்றே சொல்லப்படுகிறது. இதை நக்கீரன்
தனது ‘நீர் எழுத்தில்’ ஊட்டச்சத்து மாசு என்கிறார். Aquifers ஐ நீர்படுகைகள்
என்கின்றனர். ‘நீர்ப்படுகைகள்’ என வல்லினம் மிகுவதெல்லாம் இவர்களுக்கு
அவசியமில்லை. நீர்த்தாங்கி, நீரகம் இவற்றில் பின்னது பொருத்தமானது என “நீரகம்
பொருந்திய ஊரகத்தே இரு”, என்ற கொன்றைவேந்தன் வரியை எடுத்துக்காட்டுகிறார்
நக்கீரன்.
‘நினைவில்
கொள்க’, பகுதியில் “காற்றுக்கு அடுத்தபடியாக, நாம் வாழ்வதற்கு நீர் மிக முக்கியமான
வளமாகும்”. (பக்.54) என்று சொல்கின்றனர். இன்றியமையாதத் தேவைகளை இவ்வாறு
வரிசைப்படுத்திட இயலுமா? காற்று, நீர், மண் ஆகியவற்றை ஒன்றையொன்று பிரித்து அணுக
முடியுமா?
இந்தியாவில் ஒருவருக்கு எவ்வளவு நீர் கிடைக்கிறது?
“இந்தியாவில் நீர மாசுபாட்டின்
மிகப்பெரிய ஆதாரம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர். ஒரு நபர் துணி
துவைத்தல், சமைத்தல், குளித்தல் போன்றவற்றுக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர்
நீ்ரை பயன்படுத்துகி்றார்”. (பக்.51)
“The largest source of water pollution in India is untreated sewage. On an average, a person
uses 180 litres of water per day for
washing clothes, cooking, bathing, etc. (Page:45)
இது எவ்வகைக் கணக்கு? இந்த அளவு நீர்
அனைவருக்கும் கிடைக்கிறதா? சராசரி வருமானத்தைப் போல இதை எடுத்துக் கொள்வதென்றால்
தமிழில் ‘சராசரி’ இல்லை. கிராமப்புற, அடித்தட்டு மக்களின் நீர்ப்பயன்பாடு இவ்வாறு
உள்ளதா? மேலும் ஆங்கில வழியில் 180 லிட்டர் என்கிறார்கள். எங்கிருந்து இந்தக்
கணக்கைப் பெறுகின்றனர்? தமிழ் வழியில் இந்தியக் கழிவறையை ஆங்கில வழியில்
மேற்கத்திய கழிவறையையும் பயன்படுத்துதாகக் கணக்கிடுகின்றனர் போலும்!
உலகில்
தனிநபர் நீர் நுகர்வு ஆஸ்திரியாவில்தான் அதிகமாம்; தலைக்கு 130 லி. என்று
செய்திகள் தெரிவிக்கின்றன. ஒர் மனிதருக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை
என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. ஆனால் 75% பேருக்கு ஒரு நாளைக்கு 260 முதல்
300 லிட்டர் நீர் என பெரும்பகுதி போய்விடுகிறது.
மீதமிருக்கும் 25% பேருக்கு 40 லி.க்கும் குறைவான நீரே கிடைக்கிறது. சிலருக்கு முற்றாக
கிடைப்பதே இல்லை. இந்நிலையில் இந்தியர்கள் ஒரு
நாளைக்கு
180 லி. பயன்படுத்துவதாக எழுதுவது அபத்தம்.
‘மறைநீர்’ கருத்தாக்கம் ‘நீர்’ பாடத்தில் எப்போது நுழையும்?
மாசுபாடுகளில் ஒளி மாசு (Light Pollution)
தற்போதுதான் இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்களின் மாசுபாடு,
விண்வெளிக்குப்பைகளைப் பற்றிப்பேச இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ? உண்மையான
‘மறைநீர்’ (Virtual Water) கருத்தாக்கமும் பாடநூலுக்கு எட்டாக்கனிதான்!
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல்
பகுதியில் மறைநீர் அறிமுகமாகிறது (பக்.333). ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்திக்கு
1.340 கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது என்றும் கோதுமை, சோளம், கம்பு,
கரும்பு, தேயிலை, காபி போன்ற வேளாண் பயிர் உதாரணங்கள் தரப்படுகின்றன.
வேளாண்மையில் நெல் உள்ளிட்ட அதிக நீர்
தேவைப்படும் பயிர் உற்பத்தியைக் குறைக்கவும் மரபான பாசன முறைகளுக்கு மாற்றாக
சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நவீன முறைகளைப் பரிந்துரைப்பது ஒருபுறமும் மறுபுறம்
தொழில்மயப் பெருமை பாடுவதும் நடக்கிறது. 1.1 டன் எடையுள்ள கார் தயாரிப்பிற்கு
4,00,000 லி. மறைநீர் தேவைப்படும் நிலையில் ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ பெருமை
சென்னைக்கு அவசியமா?
“இந்தியாவில் உள்ள சென்னை
மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில்
உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஜி.எம், போர்டு, மஹேந்திரா,
ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இவற்றைத்
தவிர இந்நகரம் நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் 60% பங்கினைக்
கொண்டுள்ளது”. (பக்.172, VIII சமூக அறிவியல்)
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கு 4,325 லி.;
ஒரு முட்டைக்கு 196 லி.; ஒரு கிலோகிராம் பன்றி இறைச்சிக்கு 5,988 லி.; ஒரு
கிலோகிராம் விலங்குத் தோலைப் பதனிட 17,000 லி. மறைநீர் தேவைப்படுகிறது. 250 கி
பருத்தி உற்பத்திக்கு 2,495 லி.; ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டரும்
தேவை.
‘Eris’ களும் தொட்டிகளும்
பாடமெழுதிகளின் மொழிபெயர்ப்புப் புலமைக்கு
அளவில்லை. அதுவும் குழந்தைகளுக்குப் புரியும்படி அழகுத் தமிழில் பெயர்க்கும்
இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மேலும் ஆங்கிலப் புலமையிலும் நம்மை வியக்க
வைக்கிறார்கள்! கீழ்க்கண்ட வரிகளைக் கவனிக்கவும்.
“ஆறுகள், நீர்த்தேக்கங்கள், எரிகள் மற்றும்
நீர்த்தொட்டிகள் மேற்பரப்பு நீரின் எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழ்நாட்டில்
61 நீர்த்தேக்கங்கள் 17 பெரிய ஆற்றுப் படுகைகள் மற்றும் தோராயமாக
41948 நீர்த்தொட்டிகள் உள்ளன. மழைநீரை சேகரிக்க எரிகள் மற்றும்
நீர்த்தொட்டிகள் பாரம்பரியமாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன”. (பக்.50)
“Examples of surface water include rivers, reservoirs, eris and tanks. There are 17 major river basins in Tamil Nadu with 61 reservoirs and approximately 41,948 tanks. Eris and tanks are traditionally used in Tamil Nadu to collect rainfall during the monsoon which can be used throughout the year”. (Page: 44)
‘Eris and tanks’ ஐ தமிழில், ‘ஏரிகள் மற்றும் நீர்த்தொட்டிகள்’ என்கின்றனர். ‘tanks’
ஐ குளங்கள் என்று சொல்லாமல் தவிர்ப்பது ஏன்? ஏரிகளை இனி ஆங்கிலத்தில் ‘lakes’
எனச்சொல்ல வேண்டாம். ‘ஏரிஸ்’ என்றே சொல்வோமாக! ஓரிடத்தில் ‘எரிகள்’ ஆகிறது?
நல்லவேளை ‘எரிகல்’ ஆகவில்லை! அருவியை
நீர்வீழ்ச்சி (water falls) என்றுதானே சொல்வோம் என்று அடம்பிடிப்பதைப்போல, ‘Reservoirs’
‘நீர்த்தேக்கங்கள்’ தான்; அணைகள் என்று சொல்ல மாட்டோம்! வேற்றுமொழிச் சொற்களை
அப்படியே ஆங்கிலத்தில் எழுதும்போது சாய்ந்த எழுத்துகளில் எழுதுவது மரபு. அதுவும்
கடைபிடிக்கப்படவில்லை.
‘ஏரிஸ்’ (Eris) என்றால் உங்களுக்கு வேறு
நினைவு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்து
குறுங்கோள்களுள் (dwarf planets) இதுவும் ஒன்று. இருந்துவிட்டுப் போகட்டுமே! ஆங்கிலத்தில்
புதிய சொல்லொன்றை நமது பாடமெழுதிகள் வழங்கியுள்ளனர்!
புளுட்டோ (Pluto), ஏரீஸ் (Eris), சியரீஸ் (Ceres),
மக்கேமெக்கே (Makemake), ஹவுமியா (Haumea) ஆகிய ஐந்தும் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட குறுங்கோள்களாகும்
என்பது கூடுதல் செய்தி.
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக