நீர் வாழ் பறவைகளின்
வாழ்க்கைப் போராட்டம்
(நூலறிமுகம்… தொடர்: 014)
மு.சிவகுருநாதன்
(திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய
‘இறகுதிர்காலம்’ என்ற நீர்வாழ் பறவைகள் பற்றிய
நூல் குறித்த பதிவு.)
இலையுதிர்க்காலம் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன
‘இறகுதிர்காலம்’? நீர் வாழ் பறவைகளின் வாழ்க்கைப் போராட்டமே இங்கு ‘இறகுதிர்காலம்’
ஆகிறது? நூலாசிரியர் கவிஞரல்லவா! அதான் இந்த கவித்துவத் தலைப்பு கிடைத்துள்ளது. என்ன
செய்வது? துயரத்தின் அழகியல்!
இந்நூலில் 20 கட்டுரைகள் உள்ளன. இவற்றில் நீர்வாழ்
பறவைகள், அவற்றின் வாழ்விடச் சிக்கல்கள், அதன் அழிவுகள், இதற்குக் காரணமானச் சூழலியல்
சீர்கேடுகள் எளிய மொழியில் விவாதிக்கப்படுகின்றன.
இந்நூலில் கீழ்க்கண்ட பல்வேறு பறவைகளின் நிலையும்
அதன் வாழ்விடச் சிக்கல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
- நீள வால் இலைக் கோழி
- நீலத்தாழைக் கோழி
- உண்ணிக் கொக்கு
- மஞ்சள் மூக்கு நாரை
- நத்தைக்குத்தி நாரை
- செங்கால் நாரை
- பூநாரை
- கூழைக்கடா
- பாம்புத்தாரா
- கல்பொருக்கி
- கிளிஞ்சல் கொத்தி
- சோளக் குருவி
- நண்டு தின்னி
- முக்குளிப்பான்
- கரைக் கொக்கு
- வரித்தலை வாத்து
இப்பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழவேற்காடு,
கூந்தங்குளம், சூலூர் குளம் (நொய்யலாற்று நீர்த்தேக்கம்), மதுரை மேலூர், கீழக்கரை,
இடிந்தகரை (கூடங்குளம்), திருப்பூர், ஒரத்துப்பாளையம், கொங்கூர் குளம், நல்லாறு, நஞ்சராயன்
குளம், தேனி (வைகை அணை) போன்ற பல்வேறு பகுதிகளில்
ஆசிரியரின் கள ஆய்வில் மூலம் உறுதிப்படுகின்றன.
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி, இவற்றில்
பல இடங்கள் அறிவிக்கப்பட்ட பறவைகள் புகலிடங்கள் அல்ல. இம்மாதிரி புகலிடங்களல்லாத நீர்நிலைகள்,
தாவரங்கள் போன்ற சாதகமான சூழல் உள்ள இடங்களில் பறவைகள் கூடுகின்றன. இவற்றையும் சூழலையும்
பாதுகாக்க நமது அரசுகளிடம் எவ்விதத் திட்டங்களும் இல்லை.
மன்னார் வளைகுடா பவளப்பாறைகள், பள்ளிக்கரணைச் சதுப்புநிலம்
போன்ற சூழலியல் தொகுதிகளின் பாதிப்புகள் நூலில் பேசப்படுகின்றன. “இராமர் பாலமாகவும்
வெறும் மணல் திட்டாகவும் தெரிந்த இரு தரப்பினருக்கும் இது உயிர்கள் வாழும் கருவறை என்று
தெரியாது போனதுதான் இயற்கையின் துயரம்”, (பக்.51) என்பதை நூலாசிரியர் வருத்தத்துடன்
பதிவு செய்கிறார்.
"பறவைகள் ஏன் குட்டி போடுவதில்லை?" என்று வினா
எழுப்பி கோழிகளின் உடலமைப்பும் கால்பந்து அளவில் இருக்கும் முட்டைகளுக்காக
நெருப்புகோழி வேட்டையாடப்படுவதும் நூலில் பதிவாகிறது.
கூடங்குளம் அணு உலைக்கெதிரான இடிந்தகரை போராட்டம்
மக்களுக்கானது மட்டுமல்ல; அங்குள்ள அனைத்து உயிர்களுக்குமானது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
ஒப்பீட்டளவில் வனவிலங்குகளைவிட மிக அதிகளவில் வேட்டையாடப்
படுவது பறவைகள் தான். கோழி போன்ற வளர்ப்புப் பறவைகளைப் போன்று மிக எளிதில் இவற்றை வேட்டையாடி
உண்பது வாடிக்கையாக உள்ளது. ‘ஆண்மை விருத்தி’ போன்ற பொய்யான காரணங்களைச் சொல்லியும்
பறவைகள் அழிக்கப்படுவது மற்றொரு வேதனை.
தொழிலகங்கள், நவீன வேளாண்மை, மனிதனது செயல்பாடுகள்
போன்றவற்றால் நீர்நிலைகள் மிகுதியாக மாசடைகின்றன.
இவற்றால் ஆகாயத்தாமரைகள் பல்கிப்பெருகி சூழல் மண்டலத்தையும் உணவுச் சங்கிலியையும் சிதைக்கின்றன.
நீர்நிலைகளை உயிராதாரமாகக் கொண்ட இப்பறவைகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றன.
கொல்லுப்பட்டி (சிவகங்கை), கூந்தன்குளம் (திருநெல்வேலி),
கிட்டாம் பாளையம் (கோவை) போன்ற பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக பட்டாசு
வெடிப்பத்தில்லை என்று மக்கள் முடிவெடுத்துச் செயல்படுத்துவது பாராட்டிற்குரியது. இதைப்போல
அனைத்து இடங்களிலும் நடைபெற வேண்டும், இயலுமா?
பட்டாசு வெடிப்பதால் பறவைகள் மட்டுமல்ல, வீட்டு
வளர்ப்பு நாய்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன. அந்நேரங்களில் அவைகள் எங்கோ ஓடி ஒளிவதும்
அல்லது வீட்டிற்குள்ளாக முடங்குவது நடக்கும். சீனப் பொருள்களைத் தவிர்க்கச் சொல்லி
நமது ‘நெட்டிசன்கள்’ அடிக்கடி பரப்புரையில் இறங்குவர். சீனப் பட்டாசை வேண்டாம் என்பர்.
இந்தியத் தயாரிப்புப் பட்டாசு என்றாலும் அவை சீனாவிலிருந்து வந்ததுதானே! எனவே எந்தப்
பட்டாசையும் பயன்படுத்தாமலிருப்பதே நல்லது. கோமியம், தீ ஆகியவற்றைப் போல பட்டு வைதீகத்தால்
தீட்டுகழிக்கும் பொருளாகப் பயன்படுகிறது. விலங்கு நலம் பேசும் மேட்டுக்குடிகள் இவற்றைச்
செய்வார்களா?
பசுமாடு
அல்லது காளை மாடு, வளர்ப்பு விலங்குகளை மட்டும் பேணவேண்டும் என்கிற ‘ப்ளு கிராஸ் (Blue
Cross) மற்றும் பீட்டா (PETA) சிந்தனைகள்’ மாறவேண்டும். பல்லுயிர்களுடன் சேர்ந்து இப்புவிகோளம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையே நம்மையும் எதிர்கால சந்ததியையும் வாழ வைக்கும்
என்பதை உணர்த்த வேண்டிய தருணமிது. இந்நூல் அதைத்தான் நமக்கு புலப்படுத்துகிறது.
(நண்பர் கோவை சதாசிவம் அவர்களின் 10 நூல்களின் அறிமுகம் நிறைவடைந்தது.)
இறகுதிர்காலம் (நீர்வாழ் பறவைகளின் சலனம்)
கோவை
சதாசிவம்
முதல்
பதிப்பு: பிப்ரவரி 2013
மூன்றாம் பதிப்பு: மார்ச்
2017
பக்கங்கள்: 128
விலை: ₹ 110
வெளியீடு:
குறிஞ்சி பதிப்பகம்,
4/610, குறிஞ்சி நகர்,
வீரபாண்டி – அஞ்சல்,
திருச்சி – 641605.
கைபேசி: 9965075221 9894777291
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக