ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

பாடநூல் ஓவியங்களின் தாக்கம்


பாடநூல் ஓவியங்களின் தாக்கம் 


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 77) 

  
      பல பக்கங்களில் சொல்ல வேண்டிய கருத்துகளை ஒரே ஓவியம் அல்லது படத்தால் தெரிவித்திட முடியும். அதுவும் குழந்தைகளிடம் பலமாக தாக்கத்தை இவற்றால் ஏற்படுத்த முடியும். எனவே இவற்றைச் சரியானப் புரிதலுடனும் திறம்படவும் கையாள வேண்டும். +2 தமிழில் பூமணி எழுதிய ‘உரிமைத்தாகம்’ சிறுகதைக்கு வரையப்பட்ட ஓவிய முரண்பாடுகளை முன்பே சுட்டியிருந்தேன். (தொடர் எண்: 01) 



  • அப்பா செய்தித்தாள் வாசிக்கிறார்.
  • அம்மா சமைக்கிறாள்.
  • அண்ணன் விளையாடுகிறான்.
  • தங்கை அம்மாவிற்கு உதவி செய்கிறாள்.


      என்ற கருத்துகளை வலியுறுத்தும் ஒரு பழைய பாடநூல் ஓவியம் புகழ் பெற்றது. இன்று எவ்வளவோ மாறிவிட்டது, அந்த பழமைவாதங்களை மாற்றிவிட்டோம் என்று பெருமையாகக் கூறிக்கொண்டாலும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை என்பதை ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் இடம் பெறும் பல்வேறு ஓவியங்கள் தெளிவு படுத்துகின்றன. 


   இதன் வேறுபக்கத்தில் ‘நிலா’ கராத்தே உடையில் இருப்பது போன்ற ஓவியம் இருப்பினும் (5 பருவம் II, பக்.96) அந்த முகப்புப்படம் (பக்.69) வலியுறுத்துவது பழம் மதிப்பீடுகளையே என்பதை எளிதில் புறந்தள்ள இயலாது. 

    

     பொதுவாகப் பறவைகள் தமக்கான இரையை ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்வதில்லை. மீன்களை உணவாக உண்ணும் மீன்கொத்தி நீர்நிலைக்கு வெளிப்புறத்தில் காத்திருந்து மீன் நீரின் மேற்பரப்பிற்கு வரும்போது திடிரென்று செயல்பட்டு மீனைக் கவ்விப் பிடிக்கும். நீர்க்காகம் நீரினுள் மூழ்கி (முங்கி) தனது இரையைப் பிடித்து உண்ணும். கொக்கு நீர்நிலைகளில் காத்திருந்து நீருக்குள்ள மீனை தனது அலகில் பிடிக்கும். அப்போது ஒளிவிலகலால் மீன் இரையின் குறி தவறாமலிருக்க அலகின் வளைந்த தகவமைப்பு கொக்கிற்கு உதவுகிறது. 


  ‘மூதுரை’ப் பாடல்,

“அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் 
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு”,  - ஔவையார்  (பக்.24, 5 தமிழ் பருவம் I)

      அவ்வையாரின் ‘மூதுரை’ப் பாடலுக்கான இடம்பெற்றுள்ள ஓவியம் ஆற்றங்கரையில் கொக்கு மீனுக்காக காத்திருப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அவ்வையின் பாடல் ‘மடைத்தலையில்’ என்கிறது; ஓவியத்திலிருப்பது போல் ஆற்றங்கரையில் கொக்கு இருந்தால் வேடிக்கை பார்க்கவே உதவும்; இது இரை தேடும் வழியில்லை.



     மேலும் “கொக்குக்கு ஏற்ற மீனைப் பிடித்துக் கூடையில் போடுக” (பக்.41) பயிற்சி உள்ளது (ஒரு சொல் பல் பொருள்). கொக்கு கூடையுடன் கரையில் காத்திருக்கிறது. கொக்குக்கு மீன்பிடித்துப் போட வேண்டுமாம்! மீனுக்கு யார் நீச்சல் கற்றுத் தருவது? இது நமது கல்விமுறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கொக்கு அதன் (மீன் பிடிக்கத் தெரியாத) விலங்கு நண்பர்களுக்குப் பிடித்துத் தருவதாக கொஞ்சம் கற்பனையை மாற்றியமைக்கலாம், என்ன! கொஞ்சம் யோசிக்க வேண்டும்! அவ்வளவுதான்! 



‘வறுமையிலும் நேர்மை’ கதை (பக்.33, 5 பருவம் I) 

     ‘வறுமையிலும் நேர்மை’ உள்ள ‘உம்’ விகுதி உணர்த்துவது என்ன? வறுமையில் நேர்மை இருக்கக்கூடாதா? இரண்டும் முரண்பட்டது என்றால் வறுமையில் வாடாத அனைவரும் நேர்மையாளர்களா? இது என்ன பாராட்டா? இழிவா? வழக்கமாக கதைகள் மூலமாக நன்னெறிகளைப் போதிப்பதாக ஒரு கற்பிதம் அதாவது மூடநம்பிக்கை உள்ளது. இக்கதை வலியுறுத்தும் நீதி என்ன? இக்கதை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்? 


    ஒருசிலர் மட்டும் பணக்காரர்களாகவும் பெரும்பகுதி மக்கள் ஏழைகளாகவும் இருப்பது ஏன்? ஏன் அந்தச் சிலரிடம் பலர் கையேந்தும் நிலை உருவாகிறது? செல்வம் எப்படி ஓரிடத்தில் குவிகிறது? இவர்களை அண்டி வாழ்வதுதான் பிறருக்கு கடமையா? 



‘தப்பிப் பிழைத்த மான்’ (பக்.53, 5 பருவம் I)

   விலங்குகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதற்கு நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு நாம் தெரிவு செய்வது ‘மநுநீதிச் சோழன்’ கதை என்பதை நாம் முன்பே கண்டோம். (தொடர் எண்: 59) எந்த நன்னெறிக்கதைகளை எடுத்துக்கொண்டாலும் நரி, காகம், எருமை போன்றவை மோசமாகவேச் சித்தரிக்கப்படும். கார்ட்டூன் ‘டோரா’ வில்கூட நரி திருடன்தான்! இந்த மொண்ணை வடிவத்தைப் பின்பற்றி ‘தப்பிப் பிழைத்த மான்’ கதையிலும் நரி சூழ்ச்சி, துரோகம் செய்வதாக சித்தரிக்கின்றனர். காகம் நல்லவராகக் காட்டப்பட்டிருப்பது மட்டும் ஒரு சின்ன ஆறுதல். (பக். 53-58) 


   5 ஆம் வகுப்பு ஆங்கிலத்தில்  ‘Farmers and his Daughters’ (page:129) என்றொரு கதை உள்ளது. ஒரு விவசாயியும் அவரது நான்கு மகள்களும் இக்கதை மாந்தர்கள். ஒரு படத்தில் மூன்று பெண்மணிகளும் விவசாயியும் உள்ள ஓவியத்தில் அவர் நெற்றியில் பட்டையுடன் சைவராகக் காட்டப்படுகிறார். கதையின் அவருக்கு பெயர்கூட இல்லை. பிறகு ஏனிந்த அடையாளம்? மூன்று பெண்மணிகளில் ஒரு பெண்மணியின் உடை வேறுவிதமாக (மடிசார்) உள்ளது. கதை ஒன்றைச் சொன்னால் ஓவியம் மற்றொன்றைச் சொல்கிறதே! இதே திருநீற்றுப்பட்டைப் பெரியவர் மாட்டுவண்டியில் வேற்றுக்கிரகவாசிகளை அழைத்துச் செல்லும் படமும் இடம் பெறுகிறது. (5 ஆங்கிலம் பருவம் I)


    ‘தலைமைப்பண்பு’ (பக். 10 & 12, தமிழ் பருவம் III) கதைக்கு இடம்பெறும் ஓவியங்களும் கிராம வாழ்வைச் சித்தரிக்கின்றனவாம்! கைகளைக் கட்டுதல், இடுப்பில் துண்டைக்கட்டுதல், தலையில் கட்டுதல் என்கிற பண்ணையடிமைச் சிந்தனைகளை இவைகள் விதைக்கின்றன. மேலும் யார் துண்டை தோளில் போடலாம், மேலாடை அணியலாம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்துகின்றன. 


    பண்ணையார்கள், பணக்காரர்கள் போன்றோர் முழு உடைகளையும் தோளில் துண்டையையும் மிடுக்காக அணிந்திருப்பர். வேலைக்காரர்கள் மற்றும் ஏழைகள் எப்போதும் மேலாடைகள் இன்றியே இருப்பர். பணிவைக் காட்டும் முகத்தான் கைகளைக் கட்டியும் துண்டை இடுப்பில் கட்டியும் தங்களது அடக்க உணர்வை வெளிக்காட்டுவர். பணியாளர்கள் வேலை செய்வதனால் தங்களது துண்டுகளை தலைகளில் கட்டியிருப்பர்; மரியாதை செலுத்தும் சமயங்களில் அத்துண்டு இடுப்பிற்கு மாற்றப்படும். இந்த வகையான சித்தரிப்பு மனிதர்களை இழிவுபடுத்தவும் உழைப்பாளர்களை அடிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட ஆதிக்க நடைமுறைகள். இடதுசாரி இயக்கங்களும் பெரியாரது சுயமரியாதை இயக்கமும் நீண்ட, நெடியப் போராட்டங்களுக்குப் பிறகு மனிதர்களுக்கு உரிய சுயமரியாதை ஓரளவுவாவது கிடைத்தது. அடிமை முறை ஒழிக்கப்பட்ட நிலையில் எங்கேனும் இந்நிலை யாருக்கும் ஏற்பட்டால் உடன் நடவடிக்கை எடுப்பதும் தடுப்பதும் அரசுகளின் பணி. ஆனால் 2019 இல் தமிழக அரசு வெளியிடும் பாடநூல் அடித்தட்டு மக்களை இவ்வாறு அவமதிக்கலாமா? 

  

      பழமொழி விளக்கங்கள் ஒரு பாடத்தில் சொல்லப்படுகிறது. அதில் “ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்”, என்ற பழமொழிக்கான படத்தில் அம்மியும் குழவியும் பறக்கிறது. இது நன்றாகவா இருக்கிறது? பழமொழிகளையெல்லாம் உண்மையாக்க நினைத்தால் அபத்தங்களுக்கு அளவிருக்காது. 


  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழிக்கு ‘வேல்’ என்பது கருவேல மரக்குச்சி; வேப்பங்குச்சி அல்ல என்கிற தெளிவு படத்தில் இல்லை (பக்.50). எனவே வழக்கமானச் சொல்லாடல் என்றே எண்ணத் தோன்றுகிறது. 



    பொதுப்புத்தியும் நமது சிந்தனைகளூம் எவ்வளவு மோசமாகவும் மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றன என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு மட்டுமே. பாடநூல் மட்டுமல்லாது கல்வியின் ஒவ்வொரு அசைவிலும் உள்ள இத்தகைய கழிவுகளை மடமைகளை அகற்றுவதுதான் இன்றைய முதன்மைப்பணி. இதைப் பாடநூல் உருவாக்கத்திலிருந்து தொடங்கினால் அவை குழந்தைகளை மிக எளிதாகச் சென்றடையும் என்கிற ஆதங்கமே இவற்றை வலியுறுத்தச் செய்கிறது. 


(அபத்தங்கள் தொடரும்…)

பின்குறிப்பு: 

   முகநூல் மற்றும் வலைப் பக்கங்களில் படங்களை இணைத்துப் பதிவிடுகிறேன். ‘வாட்ஸ் அப்’பில் இவற்றிற்கான படங்களைத் தனியே அனுப்புகிறேன். வேறு வழியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக