‘கோரோனா’
சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் நிலை
முசிவகுருநாதன்
கோரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதா, மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து
பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.
கல்வியாளரும் நண்பருமான இரா.முருகப்பன் கடந்த
ஆறாண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களை எடுத்துக்காட்டி தேர்வை
ரத்து செய்து 100% தேர்ச்சியளித்துவிடலாம் என்று முகநூலில் பதிவு செய்துள்ளார். 94.5%
மாணவர்கள் தேர்ச்சியடையும் நிலையில் இது ஒன்றும் தவறல்ல என்பது அவரது வாதம்.
நேற்றைய ஊடகச் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி, “பத்தாம் வகுப்புத் தேர்வு மிக முக்கியமானது; அடுத்த கட்ட நகர்விற்கானது;
இதை எழுதுவது மாணவர் கடமை”, என்று கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தல்
என்பது இவ்வாண்டிற்கு என்பதாக இருந்தால் அது பல்வேறு சிக்கலுக்கு வழிவகுக்கும். இனி
10 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு இல்லை என்று செய்தால் உண்டு. மாவட்ட அளவிலான பள்ளித்
தேர்வுகளில் அவர்களுக்கு மதிப்பெண்களுக்குப் பதிலாக தரம் (grade) வழங்கப்படலாம்.
+1, +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வை ரத்து செய்யலாம் என்று பல்லாண்டாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அதை இந்த ஓராண்டிற்கு
மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
+1, +2 வகுப்புகளில் மொழி மற்றும் கலைப்பாடங்களுக்கு
அகமதிப்பீடாக 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதை 10 ஆம் வகுப்பிற்கு வழங்கவில்லை. பலரது
கோரிக்கைகளையும் அரசும் கல்வித்துறையும் கண்டுகொள்ளவில்லை. 10 ஆம் வகுப்புத் தேர்வெழுதும்
சுமார் 11 லட்சம் பேரில் சில லட்சங்களை கல்விப்புலத்தை விட்டு அகற்றும் வேலையை
(screening) கல்வித்துறை தமது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. அவர்கள் பள்ளியைவிட்டு நீங்கினால் மடிக்கணினி, மிதிவண்டி
போன்ற செலவீனங்கள் குறையும் என்று கணக்கு போடுவார்களோ என்னவோ!
ஆசிரியர்களின் அயராத முயற்சிகளினால் தேர்ச்சி விழுக்காடு
தொடர்ந்து அதிகரித்து 95% என்றளவில் உள்ளது. இந்தக் கல்வியாண்டு புதிய பாடநூல்; காலாண்டு,
அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளை ஒவ்வொரு மாதிரியாக நடத்தியும் Blue print இல்லை,
எப்படியும் வினாக்கள் கேட்போம் என்று குழந்தைகளை மிரட்டியும் வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசும் கல்வித்துறையும் தேர்வை ரத்து செய்யாது என்பது தெளிவான நிலையில் இன்றைய சிக்கலை
எவ்வாறு எதிர்கொள்வது பற்றியே யோசிக்க வேண்டும்.
- 10 ஆம் வகுப்பிற்கு 5 தேர்வுகள் (27/03/2020 முதல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படாதவை)
- +1 க்கு ஒரு தேர்வு (26/03/2020)
- +2 க்கு ஊரடங்கு அறிவிப்பால் (24/03/2020) தேர்வு எழுத முடியாத பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது.
இவற்றை ‘கோரோனா’ கட்டுக்கு வராத நிலையில் மே மாதத்தில்
நடத்துவது சரியாக இருக்காது. நிலைமை சீரடைவதைப் பொறுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில்
நடத்துவதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைய சூழலில் அதற்கான முடிவை இன்று எடுக்க இயலாது.
மே மாதத்தில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லி வைக்கலாம். சில தொழிற்சாலைகளைத்
திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உடன் திரும்பபெறப்பட்டதைப் போன்று குழந்தைகள்
தொடர்புடைய இச்சிக்கலிலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
ஆன்லைன் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் மாணவர்களை தயாரிப்பதாகச் சொல்வது
அபத்தம். இது பெரும்பாலானோரைச் சென்றடைய வாய்ப்பில்லை.
இனி வரும் வாரங்களில் சூழல் எப்படியுள்ளது? ஊரடங்கு
மொத்தமாக அல்லாமல் பகுதி வாரியாக அமல் செய்யப்பட்டால் என்ன செய்வது? போன்றவையும் கவனத்தில்
கொள்ளப்பட வேண்டும்.
நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்
உள்ள மாணவர்கள், தொலைதூர விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் நிலை; தற்போது அவர்கள் பெற்றோருடன் இருக்கக்கூடும் அவர்கள்
தேர்வு எழுவதற்காக சூழலும் உருவாக வேண்டும்.
இதில் அவசரம் தேவையில்லை. பொதுத்தேர்வுகளை விட
‘கொரோனா’ பரவலிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் முதன்மையானது. இவற்றைக்
கணக்கில் கொண்டு தமிழக அரசும் கல்விதுறையும் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேரா. அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் சில பரிந்துரைகளை
முன்வைத்துள்ளார். இவையனைத்தும் மிக முதன்மையானவை. அவற்றையும் பரிசீலிக்க வேண்டும்.
“1.தேர்வை நடத்தித்தான் ஆகவேண்டும்.
கோரோனா ஆபத்து கூடியவரையும் கட்டுப்படுத்தப்படுவது வரை காத்திருந்து நடத்த
வேண்டும்.
2.பள்ளியைத் திறந்தவுடன் தேர்வை
நடத்தக் கூடாது. குறைந்தபட்சம் 5 அல்லது 10 நாட்களாவது மீண்டும் வகுப்புகளை நடத்தி
மாணவர்களை மீண்டும் ‘மூடு’ க்குக் கொண்டுவந்து தேர்வை நடத்த வேண்டும்.
3.ஏற்கனவே தயாரித்துள்ள கேள்வித்
தாள்களைப் புறந்தள்ளிவிட்டு எளிமையாகக் கேள்வித் தாள்களை உருவாக்கித் தேர்வை நடத்த
வேண்டும்.
4.தேர்வு முடிந்த பதினைந்து
நாட்களுக்குள் தாள்களைத் திருத்தி பாஸ் / ஃபெயிலை அறிவிக்க வேண்டும்.
5.11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையைத்
தள்ளிப் போடுவதோடு 11ம் வகுப்புப் பாட அளவையும் குறைக்கலாம்.
6.எக்காரணம் கொண்டும் பள்ளி திறப்பு
நாளை அறிவித்து அன்றே தேர்வைத் தொடங்கி மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்வதை ஏற்கக்
கூடாது”.
(‘பத்தாம் வகுப்புத் தேர்வுகள் : என்ன செய்யலாம்?’,
எனும் தலைப்பில்… அ.மார்க்ஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக