வெள்ளி, ஏப்ரல் 03, 2020

அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும்


அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும்

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 69) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:

ஒரு முன் பதிவிலிருந்து…:

     இஸ்ரோ (ஏவூர்தி, செயற்கைக்கோள்), அணுசக்தித் துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இங்கு அறிவியல் அறிஞர்கள் என்ற பழங்கதையில் எவ்வித மாற்றமும் இல்லாதது வருத்தமளிப்பது. ‘அறிவியல் தொழில்நுட்பம்’ என்னும் ஆறாம் வகுப்பில் இயல் மூன்றும், ஒன்பதாம் வகுப்பில் இயல் நான்கும் இதை அடியொற்றி ஒரே மாதிரியாகவே உள்ளது. இன்னும் பிற வகுப்புகளில் திரும்பத் திரும்ப என்ன பாடங்கள் வரப்போகின்றனவோ! 

    தமிழில் பயின்ற அறிஞர்கள் பட்டியலில்கூட அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் (பக். 17, 6 –ம் வகுப்பு) ஆகிய இஸ்ரோ ஆட்களைத்தவிர வேறு அறிஞர்கள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதன்மூலம் தமிழ்வழிக் கல்வியைப்  பரப்புரை செய்யமுடியாது என்பது தெளிவு. 

       6 ஆம் வகுப்பு ‘அறிவியல் தொழில்நுட்ப’த்தில்  நெல்லை சு.முத்துவின் அறிவியல் ஆத்திச்சூடி உள்ளது. இதன் ஆசிரியர் குறிப்பிலும்  (நூல் வெளி) அப்துல்கலாம் கதைதான்! ‘அறிவியலால் ஆள்வோம்’ என்னும் பாடநூல் குழு எழுதிய பாடலிலும் விண்வெளி, செயற்கைக்கோள் மயமே! விரிவானம் பகுதியில் ‘ஒளி பிறந்தது’ என்னும் அப்துல்கலாம் நேர்காணல் உள்ளது. 

   9 ஆம் வகுப்பில் ‘ஓ, என் சமகாலத்தோழர்களே!’ என்னும் வைரமுத்துவின் பாடல் உள்ளது. இதிலும் செயற்கைக்கோள், ஏவூர்தி படமே இருக்கிறது. இதை கவிதைப்பேழை என்று வகையில் சேர்த்துள்ளனர். கவிதைக்கும் பாடலுக்கும் வேறுபாடுகள் உண்டன்றோ!  ‘விரிவானம்’ பகுதியில் ‘விண்ணைச் சாடுவோம்’  பகுதியில் இஸ்ரோ தலைவர் சிவனின் நேர்காணல் இடம்பெறுகிறது. இங்கு விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், வளர்மதி, அருணன் சுப்பையா, மயில்சாமி அண்ணாதுரை போன்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் பெட்டிச்செய்திகளில் அறிமுகம் ஆகின்றனர். இப்பாடத்தின் இறுதியில் வேதகாலத்தில் விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் இருந்தது என்பதற்கு நிகரான பாவலர் கருமலைத்தமிழாழன் பாட்டு ஒன்றும் உள்ளது. 

    விண்வெளி, அணுசக்தி ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் பூடகமாக இயங்கக்கூடியவை. இவற்றில் அறிவியல் உண்மைகள் எந்தளவிற்குச் செயல்படுகின்றன என்பது அய்யத்திற்குரியது. சந்திராயன் 1 இல் ஏற்பட்ட தவறுகள், தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, அணுசக்திக் குளறுபடிகளை மூடிமறைப்பது போன்றவற்றால் இவர்கள் உண்மையில் அறிவியலாளர்களா என்ற அய்யம் உண்டாகும். இவர்கள் தொழிற்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மட்டுமே! இவர்களை சர் சி.வி.ராமன், ராமானுஜம் அளவிற்கு இங்கு கற்பிதம் செய்து,  திருவுருக்களாகக் கட்டமைக்கப்படுவது இங்கு மோசமான அரசியல். பாடநூல்களும் தொடர்ந்து அதைச் செய்வது சரியல்ல. அறிவியலில் பன்மைத்துவம் காக்கப்படவேண்டும். 

    ‘ஒளி பிறந்தது’ நேர்காணலில் அப்துல்கலாம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படியிருக்கும் ? மூன்று அபத்தமான பதில்கள் கிடைக்கிறது. ("இந்தியா ஒளிர்கிறது" என்னும் வெற்று முழக்கமே நினைவுக்கு வருகிறது.) கற்பனை உரையாடலானாலும் உண்மையில் அவர் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்பதில் அய்யமில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற வலுவான கல்விமுறைக்கு அவர் குடியரசுத்தலைவராக இருக்கும்போதே குழி தோண்டியாயிற்றே! அது போகட்டும்.  இயற்கைவளங்கள் எல்லாம் தீர்ந்துபோனபிறகு இங்கு இருக்கும் எவருக்கு செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியை அளிக்கும்? அப்துல்கலாம் போன்ற 'சூப்பர்மேன்கள்' இங்கு வசிப்பதாகக் கொண்டாலும் சூரியசக்தி தீர்ந்தே போகாதா? 

    சூரிய வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்பட்டால் சூரியனைச் சென்றடையலாமாம்! இங்கு எல்லாவற்றிற்கும் 'சூப்பர்மேன்கள்' தேவைப்படுகின்றனர்! சூரியனின் ஒளிரும் தன்மை முடிந்தபிறகு அங்கு செல்லலாம் என்று வேண்டுமானால் சொல்லி வைக்கலாம். சூரியனின் அருகிலுள்ள புதனுக்கே செல்ல முடியாதபோது, இம்மாதிரி அபத்தங்களை குழந்தைகளிடம் விதைக்கலாமா? சுஜாதா போன்ற அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் தோற்றார், போங்கள்! 100 ஆண்டுகளில் செவ்வாயில் குடியேறுதல் என்று சொல்வதெல்லாம் பூமியை எப்படி வேண்டுமானாலும் சீரழியுங்கள் என்பதன் மறு வடிவமே. கேள்வி கேட்பதுதான் அறிவியலில் அடிப்படை என்றால் ஏன் இங்கு வினாக்கள் எழவில்லை. இங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரிடம் கூட கேள்வி கேட்க  வழியில்லை. இதில் அப்துல்கலாமிடம் எப்படி?  2020 க்கு இன்னும் 18 மாதங்களே உள்ளன. அவரின் கனவுகள் நனவாகிவிட்டனவா, என்று யாரேனும் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 

   ‘சூழலியல் மொழி’ என்று தமிழைப் பெருமையோடு பலர் குறிப்பிடும் நிலையில் ராணுவ வலிமையைப் பெருக்குவதும் செயற்கைக்கோள், ஏவூர்தித் தொழிற்நுட்பங்களை விரிவாக்குவதும் மட்டுமே அறிவியலாகப் பார்க்கப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தேவையின்றி அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், அதன் மூலம் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், விண்ணில் சேரும் குப்பைகள் பற்றியெல்லாம் “கடலில் வீணாகக் கலக்கும் நீர்”, என்று பேசும் இந்த ‘அறிஞர்கள்’ கண்டுகொள்வதில்லை. 

      அடுத்தடுத்த வகுப்புகளில் நாராயணமூர்த்தி, நாதெள்ளா, சுந்தர் பிச்சை, சந்திரசேகரன், போன்றோர் இடம்பெறலாம். இம்மாதிரியான நபர்கள் மூலம் எத்தகைய மதிப்பீடுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கப் போகிறோம் என்பதே நமது கேள்வி. (‘மொழிப் பாடநூல்களின் அரசியல்’ என்ற பாடநூல் விமர்சனக் கட்டுரையிலிருந்து…) 

     மேற்கண்ட பத்திகள் புதிய பாடநூல்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது எழுதியது. இந்நிலையில் எவ்வித மாற்றமின்றி, 7, 8 வகுப்புகளின் அறிவியல் மூன்றாம் பருவ பாடநூல்களில்  தொடர்வது கல்வியின் அவலமாகும்.

அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும்

    கொரோனா வைரஸ் (COVID -19) தாக்குதலுக்குப் பிறகாவது இந்தியாவும் உலக நாடுகளும் ராணுவத்திற்கும் மருத்துவத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்குகின்றன, ஆய்வுகளைச் செய்கின்றன என்கிற உண்மையை மக்கள் உணர்ந்துகொண்டால் நல்லது. இங்கு விண்வெளியும் அணுசக்தியுமே அறிவியல் என்பதான பாவனைகள் இன்னும் தொடர்வது நல்லதல்ல.   

     எட்டாம் வகுப்பில் அலகு 3 ‘அண்டமும் விண்வெளி இயற்பியலும்’ எனும் பாடமும், ஏழாம் வகுப்பில்   அலகு 2 ‘அண்டம் மற்றும் விண்வெளி’ பாடமும் உள்ளது.  

       Scientist, Technocrat ஆகிய இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர்தல் அவசியம். இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பதுவது தொடரும் இன்றைய கல்வியின் அலங்கோலங்களுள் ஒன்று. கல்வி புதிய சிந்தனைகளை விளைவிக்க வேண்டிய களம். இதில் பொய்யான நம்பிக்கைகளை விதைக்கக்கூடாது. இஸ்ரோ, அணுசக்தித் துறை இரண்டும் மக்களிடம் பொய்களைப் பரப்பிவரும் நிறுவனங்களாகும். பாதுகாப்பு என்ற போர்வையில் உரிய விளக்கமளிப்பதை இவை தவிர்த்து விடுகின்றன.

  “The word technocrat can refer to someone exercising governmental authority because of their knowledge, or ‘a member of a powerful technical elite’, or ‘someone who advocates the supremacy of technical experts’”.

   “A scientist is someone who conducts scientific research to advance knowledge in an area of interest. In classical antiquity, there was no real ancient analog of a modern scientist. Instead, philosophers engaged in the philosophical study of nature called natural philosophy, a precursor of natural science”. (இவர்களது விக்கிபீடியா கூட இவ்வாறுதான் சொல்கிறது.) 

  “இந்த அண்டமானது, எல்லோருக்கும் ஒரு  பெரிய புதிராக உள்ளது”. (பக்.28) அறிவியலில் புதிருக்கு என்ன வேலை? இவற்றை விடுவிப்பதுதானே அறிவியலின் பணி?  

   அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் சிவன் போன்றோர் இங்கு அறிவியல் அறிஞராக சித்தரிக்கப்படுகின்றன. இவர்களுடன் சுப்ரமணியன் சந்திரசேகரையும் இணைக்கின்றனர். நம்மூரில் சுப்பிரமணியன் சுவாமி பொருளியல் அறிஞர் என்று சொல்லப்படுவார். இவரையும் அமர்த்தியா சென் ஐயும் இணைத்தால் எப்படியிருக்கும்? அதைப்போலவே இங்கு அறிவியல் அறிஞரும் தொழிநுட்ப வல்லுநர்களும் இணைக்கப்படும் கூத்து நடக்கிறது.

   ‘அறிவியல் அறிஞரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ பகுதியில் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் கைலாசம் வடிவு சிவன், (வகுப்பு 8) சுப்ரமணியன் சந்திரசேகர் (வகுப்பு 7)  ஆகியோர் சொல்லப்படுகின்றனர். இவர்கள் மூவரும் அறிவியல் அறிஞர்களா?  மயில்சாமி அண்ணாதுரை பற்றிச் சொல்லும்போது உள்ளே ‘தொழில்நுட்ப வல்லுநர்’ என்று பதிவாகிறது.

    “இவர்  செயற்கைக்கோள் துறையில் முன்னணி  தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர்  சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும்  மங்கள்யான் திட்டங்களில் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.  குறைந்த செலவில் சந்திராயனை வடிவமைத்ததில் இவரது பங்கு  குறிப்பிடத்தக்கது”.

      குறைந்த செலவு என்றால்? அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் அளிக்கப்படும் ஊதியம் மிகக்குறைவு. இது ஒருவகையான உழைப்புச் சுரண்டல். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. நிபுணர்களுக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்வது அவசியம். 

   பொதுவாக ‘திட்டம்’ என்பது பலரது கூட்டுப் பங்களிப்பு. இதில் ஒருவரையோ அல்லது தலைமையேற்பவரையோ மட்டும் அந்தச் சாதனைகளுக்குப் பொறுப்பாக்குவது எப்படிச் சரியாகும்?

     டாக்டர் கைலாசம் வடிவு சிவன் பற்றிய பத்தியில்…

    “கடந்த 2018ம் ஆண்டு  ஜனவரி 10 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு  நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  இந்திய விண்வெளித் திட்டங்களில்  பயன்படுத்தப்படும், கிரையோஜெனிக் இயந்திர  தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இவர் அளித்த சிறந்த பங்களிப்பின் காரணமாக ராக்கெட் மனிதர்  என்று அழைக்கப்படுகிறார். ஒரு விண்வெளி  திட்டத்தின் போது, ஒற்றை ராக்கெட்டின் மூலம்  104 செயற்கை கோள்களை விண்ணில்  செலுத்தியது, இவரின் திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்”.

      விண்வெளியில் 104 குப்பைகளைக் கொட்டியதுதான் இவரது சாதனையா? இதெல்லாம் கூட்டு முயற்சி அல்லவா! இஸ்ரோவின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருவரது கண்டுபிடிப்பாகக் காட்டுவது அபத்தமில்லையா?

  ஏழாம் வகுப்பில் சுப்ரமணியன் சந்திரசேகர் குறித்த பத்தி இவ்வாறு சொல்கிறது.

    “இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித  ரீதியான செயல்பாடுகள்  நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின்  பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள்  பலவற்றை அளித்தது. சந்திரசேகர் தமது  வாழ்நாளில் பல்வேறு வகையான  இயற்பியல் ரீதியான பிரச்சனைகளுக்குத்  தீர்வு கண்டார்”. (பக்.44, VII அறிவியல், பருவம் III)

      இவர் சர் சி.வி.ராமனின் அண்ணன் மகன் என்று சொல்லித்தருவதில் என்ன தடையென்று தெரியவில்லை. முதல்வரி உங்களுக்குக் கொஞ்சமாவது விளங்குகிறதா? அறிவியல் அறிஞரை இவ்வாறு அறிமுகம் செய்வது தகுமா? ஏழாம் வகுப்புக் குழந்தைகளுக்கு இதில் என்ன விளங்கும்? இறுதிவரி சொல்லப்படும் தீர்வுகளில் ஒன்றையாவது குறிப்பிட்டிருக்கலாமே! கருந்துளை, சந்திரசேகர் எல்லை ஆகியவற்றைச் சொல்லாமல் இவரை எப்படி அறிமுகம் செய்ய இயலும்? வான் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியல் அறிஞரை உலக அமைதிக்குப் பரிசு பெற்றவரைப்போல்  பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார் என்று அறிமுகம் செய்வதேன்?

ராக்கெட்டின் பயன்கள் என்ன?

    “ராக்கெட் என்பது மனிதர்களை அல்லது  கருவிகளை பூமிக்கு அப்பால் விண்வெளிக்கு  கொண்டு செல்வதற்காக, சக்திவாய்ந்த இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு  விண்வெளி வாகனம் ஆகும்”. (பக்.28)

    “சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள,  விண்வெளிக் கலங்களை அனுப்ப ராக்கெட்டுகள்  உதவுகின்றன. அண்டத்தை ஆய்வு  செய்வதற்காக, விண்ணில் இருந்து செயல்படும்  வகையில் அமைக்கப்பட்ட தொலைநோக்கிகளை விண்ணில் செலுத்த ராக்கெட்டுகள்  உதவுகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக பல்வேறு வகைகளில் பயன்படும்  செயற்கைக்கோள்களை விண்ணில்  நிலைநிறுத்தவும் ராக்கெட்டுகள் உதவுகின்றன”. (பக்.28)

    “நமது நாடானது மிகச்சிறந்த ராக்கெட் தொழில்  நுட்பத்தைக் கொண்டுள்ளது”. (பக்.28)

   ராக்கெட்டின் பயன் செயற்கைக் கோள்களை அனுப்புவது மட்டுமா? Rocket, Missile (ஏவூர்தி, ஏவுகணை) என்பன ராணுவத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாகும். அவற்றை மறைத்து ஏதோ நல்ல காரியத்திற்கு மட்டும் பயன்படுவதாக ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இது ஒரு வகையில் போராயுதமே. கைவிடப்பட்ட செயற்கைக்கோள்கள், செயற்கைக் கோள்களின் பாகங்கள் என விண்வெளிக்கழிவுகள் (Space debris) விண்ணில் மிதக்கின்றன. இந்த விண்கழிவுகளைப் பற்றி பாடநூல்கள் எப்போதும் பேசியதில்லை.

  அன்றைய சோவியத் யூனியனால் 1957 அக்டோபர் 04 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) எனும் செயற்கைகோள் உலகில் முதலில் அனுப்பப்பட்டது. இதற்கு ரஷ்ய மொழியில் தோழன் என்ற பொருளுண்டு. உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக ஆர்-7 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னாளைய ரஷ்யா ஏவூர்தி வரிசைகளுக்கு இதுவே அடிப்படையாகும். கிரையோஜெனிக் (Cryogenic rocket engine) கடுங்குளிர் ஏவூர்தி வாகனம் தயாரிப்பில் நாம் அடைந்திருக்கும் வெற்றிக்குப் பின்னால் ரஷ்யாவின் உதவி இருக்கிறது. இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு அக்டோபர் 01, 1958 இல் தொடங்கப்பட்ட ‘நாசா’ பெருமையோடு ‘இஸ்ரோ’வின் சிறப்புகளும் சொல்லப்படுகின்றன. நாசா (NASA National  Aeronautics and Space  Administration) வின் பெருமைகளும் அதன் விண்வெளித் திட்டங்களையும் (எ.கா. அப்போலோ) விலாவாரியாக எடுத்துரைக்கிறது பாடநூல். (பக்.35) இதற்குப் பதிலாக ‘இஸ்ரோ’வின் வரலாற்றையாவது  விரிவாக எடுத்துக்காட்டியிருக்கலாம்.

‘சந்திரயான்-1 திட்டத்தின் நோக்கமாக’

“சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிதலும்”,

‘சந்திரயான்-1 திட்டத்தின் சாதனையாக’,

“சந்திரனின் மணற்பரப்பில் நீர்  மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது”, (பக்.32) சொல்லப்படுகிறது.

   சந்திரனின் நேரடியாக நீர் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வருங்காலங்களில் நீர் உருவாவதற்காக சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஆய்வுகளை இவ்வாறு எளிமைப்படுத்துவது சரியாகுமா?

     “இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)  என்பது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசாங்கத்தின்  விண்வெளி நிறுவனம் ஆகும். இதன்  நோக்கம் “விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி  மற்றும் கிரக ஆய்வின் மூலம் தேசிய  வளர்ச்சிக்காக விண்வெளி தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்துதல் ஆகும்.” (பக்.43, ஏழாம் வகுப்பு அறிவியல் பருவம் III)
   அது என்ன கிரக ஆய்வு? ரேகை, கிரகம் எல்லாம் மாறி எவ்வளவு ஆண்டுகளாகிறது? மாணவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் சொற்களுக்கு விடை கொடுத்து நவீன மொழியில் பாடம் எழுதப்படவேண்டும்.

    “இவ்வாறு இந்தியாவின் விண்வெளி  நடவடிக்கைகளுக்கான நிறுவனமாக  இஸ்ரோ நிறுவனமயமாக்கப்பட்டது. விண்வெளித்துறையால் நிருவகிக்கப்பட்டு,  இந்தியப் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது”.  (பக்.43)

    இஸ்ரோ ஏன் பிரதமருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்? பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை என்று சொல்வதை விடுத்து இவ்வாறு சுற்றி வளைப்பானேன்?
 
    “இஸ்ரோ 2008, அக்டோபர் 22 அன்று  சந்த்ரயான் -1 என்னும் சந்திரனைச் சுற்றும்  துணைக் கோளை ஏவியது. 2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தைச் சுற்றும்  மங்கள்யான் என்னும் துணைக்கோளையும்  ஏவியது. இது 2014, செப்டம்பர் 24 அன்று  செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்து  முதல் முயற்சியிலேயே செவ்வாயை அடைந்த நாடு என்னும் பெருமையை இந்தியாவிற்கும்,  செவ்வாயின் சுற்றுப்பாதையைத் தொடும்  உலகின் நான்காவது விண்வெளி  நிறுவனம் மற்றும் ஆசியாவின் முதல்  விண்வெளி நிறுவனம் என்னும் பெயரையும்  இஸ்ரோவிற்குப் பெற்றுத் தந்தது. 2016 ஜூன்  18 அன்று இஸ்ரோ ஒரே சுமைதாங்கியில்  20 துணைக்கோள்களை விண்ணிற்கு  அனுப்பி சாதனை படைத்தது. 2017 பிப்ரவரி  15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37)  104 துணைக்கோள்களை விண்ணில்  செலுத்தி உலக சாதனை புரிந்தது”.

    “விண்வெளித் திட்டங்களுக்கு ஊக்கம்  அளிக்கவும், சந்திரனை ஆராய்வதற்கு உரிய  தொழில்நுட்பத்தைச் சுயமாக உருவாக்கவும்  உதவியது. சந்திரயான்-1 திட்டமானது 312  நாட்கள் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை முடித்து,  திட்டத்தின் முக்கிய நோக்கங்களை நிறைவு  செய்தபின், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  28ஆம் நாள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு  அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது”. (பக்.32)
 
    இஸ்ரோ 2019, ஜூலை 22 அன்று  சந்த்ரயான் -2 என்னும் துணைக் கோளை ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள்  ஏவுதல் வாகனம்(GSLV-Mk III) மூலம்  சந்திரனுக்கு ஏவியது. இது 2019 ஆகஸ்ட் 20  அன்று சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து  செப்டம்பர் 7 அன்று அதன் லேண்டர் என்னும்  துணை வாகனம் நிலவில் தரையிறங்கியது”.

   மேற்கண்ட பத்திகள் இஸ்ரோவின் புகழை மட்டும் பாடுகின்றன. அணுசக்தி போன்று வெளிப்படைத்தன்மையில்லாத ஒரு துறை. அவர்கள் தங்களது தோல்விகளை என்றுமே ஒப்புக்கொண்டதில்லை. சந்திரயான்-1 குறிப்பிட்ட ஓராண்டு இலக்கிற்கு முன்பே செயலிழந்தாலும் 95% நோக்கங்கள் நிறைவேறிவிட்டது என்பார்கள். சந்திரயான்-2 இல் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தாலும் முழு வெற்றியே என்று பிதற்றுவார்கள். இதன் அண்மைக்காலச் செயல்பாடுகள் அறிவைவிட உணர்வு மேலோங்கிய நிலையில் இருப்பதை அறிய முடிகிறது. செயற்கைகோள்கள் என்றாலே இஸ்ரோ அனுப்புவது என்று விளக்கமளிப்பதும் நடக்கிறது.

    இஸ்ரோவைப் பற்றிய பாடங்கள் வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. 1 முதல் 12 வகுப்பு முடிய அனைத்து வகுப்புகளுக்கும் இஸ்ரோ, செயற்கைக்கோள், ஏவூர்தி, அப்துல்கலாம், சிவன், மயில்சாமி அண்ணாத்துரை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பது ஏன் என்றே கேட்கிறோம்? அறிவியலின்  பிற துறைகளையும் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்வதன் வாயிலாக மாணவர்களிடையே  பன்முக அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.   

   அறிவியல் என்பது இஸ்ரோ, அணுசக்தி மட்டுமல்ல என்பதை பாடநூல் எழுதுபவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லா வகுப்புகளிலும் இவர்களைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுவதால் எண்ணற்ற துறைகளும் உண்மையான அறிவியல் அறிஞர்களும் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர். தொழில்நுட்ப வல்லுநர்களை முதன்மைப்படுத்தி அறிவியல் அறிஞர்களை இழிவுபடுத்தும் போக்கும் உள்ளது. (பார்க்க: தொடர் எண்:19)  இவற்றைக் களைந்து அறிவியல் துறைகளுக்கு சம வாய்ப்பும் முக்கியத்துவமும் தரப்பட வேண்டும்.

(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக